முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள்.
மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி.
நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது.
நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.
தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்).
புத்தக கிரிக்கெட் விளையாடுபவன் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை குறிப்பின்றி திறந்தேன்.
+++++
ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம் – ஸ்ரீ சாயி சத் சரித்திரம் – ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர்.
+++++
ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.
“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”
+++++
நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.
உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன்.
உணர்ச்சி – நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.
நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்
கொஞ்சம் தெளிவாவது போலிருந்தது. இணையத்தில் மேலும் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.
உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை.
உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம்.
உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input
+++++
அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும்.
உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
+++++
நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.
+++++
சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது.
