ஒரு முடிவிலாக் குறிப்பு

மே 14, 2018

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என் தோழர்கள் குறுகிய இடைவெளியில் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். நண்பர்கள் என்று அலுவலகத்தில் ஒருவரும் எஞ்சியிருக்கவில்லை. இருப்பவர்கள் யாரும் என் நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் நண்பர்கள் தேவையில்லை எனும் பண்பாடு எப்போது நுழைந்தது என்ற பிரக்ஞையற்று இருந்திருக்கிறேன். விற்பனை சரிய தொடங்கியது. ஒரு விற்பனை மேலாளரின் உழைப்பை யாரும் பார்க்கப் போவதில்லை. உழைப்பு விற்பனை எண்ணாக மாறாத வரை வில்லாக வளைந்து எலும்புகளை முறித்துக் கொண்டாலும் யாரும் சட்டை செய்யப் போவதில்லை.

இது ஒரு தற்காலிக நிலை. விரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பிக்கையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஏறிக்கொண்டு போகும் வயது, சராசரியை விட சற்று அதிகமாக ஈட்டும் ஊதியம் -இவற்றையெல்லாம் விட என்னைத் துன்பப்படுத்திய மிகப் பெருங்கவலை – சரிந்து கொண்டிருக்கும் என் தன்னம்பிக்கை. பயம் வந்தால் ஒருவனின் உழைப்பு பெருகும் என்று தான் நான் இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு வந்த நெருக்கடிகளின் போது பயம் பெருகும் போது உழைப்பையும் முயற்சியையும் பெருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் கற்று வைத்திருந்தேன். ஆனால் நம்பிக்கையின்மை இம்முறை என் உழைப்பை மந்தமாக்கியது.

ஒரு சனிக்கிழமை என் தொலைபேசி ஒலித்தது. விடுமுறை நாள். வீட்டில் தான் இருந்தேன். மனம் அமைதியாய் இல்லை. போன் செய்தவர் என் அதிகாரி. போனை எடுக்க நான் தயக்கம் காட்டினேன். இந்த தயக்கம் அசாதாரணமானது. அதிகாரி என்னை உரித்து சாப்பிட்டுவிடுவாரா? ஏன் பயப்படுகிறேன்? அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் இல்லாமல் போகாது என்ற அடிப்படை நம்பிக்கையைக் கூட இழந்திருக்கிறேன் என்ற புரிதல் என்னை தூக்கிவாரிப் போட்டது. ஏதாவது முடிவெடுக்கும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தேன். உதவியை நாடுவது என்று உடன் முடிவெடுத்தேன்.

நான் உதவியை நாடி ஆறு மாதமிருக்கும். புகை மூட்டம் விலகத் தொடங்கியிருந்தது. சிந்தனைக்குள் அதீத உணர்ச்சி புகும் வேகத்தை மட்டுப்படுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றிருந்தேன். நரம்புகளினூடே அதீதமாய் சுரக்கும் பய ரசாயனத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வேலை செய்யத் தொடங்கியிருந்தன. ஒரு நாள் என் மன நல மருத்துவரை கேட்டேன். “ஆறு மாதம் முன்னர் எனக்கு நடந்தது என்ன?” அதற்கு அவர் சொன்ன பதில் – “ஆறு மாதம் முன்னர் என்னை சந்திக்க வந்த போது நீங்கள் Acute Depression-இல் இருந்தீர்கள்’

புறக்காரணிகளில் ஒரு மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. அதே அலுவலகம். அதே சக ஊழியர்கள். அதே அதிகாரி. அதே சூழல். பயத்தின் தூண்டலில் பதற்றப்படுதலை நிறுத்தப் பழகியிருந்தேன். நகரும் தன்மை கொண்ட இலக்குகளின் இயல்பை என் அகவயமாக உற்று நோக்கத் தொடங்கியிருந்தேன். இது தான், இது மட்டும் தான் என் இலக்கு. இந்த இலக்கு மட்டும்தான் என்னை வரையறுக்கும் என்பதாக ஒற்றை இலக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வியர்த்தம். இலட்சியம் நல்ல விஷயம். ஆனால் அதன் மேல் முழு கனத்தையும் போட்டுப் பயனில்லை. வளைந்து செல்லும் ஒரு நதியைப் போன்று சூழலுக்கேற்றவாறு நம் ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் சற்று வளைந்து கொடுக்கட்டும். Physiologically, our body cannot be in perpetual state of anxiety. It has to return to its equilibrium. பிரக்ஞை பூர்வமாக சுய-அன்புடன் உணர்வு நிலைகளை manage செய்தால் கட்டுப்பாடின்றி பதற்றம், அச்சம் என்னும் உணர்ச்சிகள் பீறிடும் வாய்ப்பு குறையும். Let us Count our Blessings. முதலில் நம் மீது நாம் கருணை கொள்வோம். நம்மை பற்றிய அதிகமான எதிர்பார்ப்பின் காரணமாக நம்மை நாமே (மன ரீதியாக) வதைத்துக் கொள்வதை நிறுத்துவோம். ஆசைகள் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டால் நம் மீது நம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். நான் ஆசைப்படலாம். ஆனால் ஆசைகள் நம்மைக் கட்டுப்படுத்தலாகாது. தடைகள் இறுதி வரை தோன்றிக் கொண்டிருக்கும். வாழ்வில் இதுவரை தாண்டி வந்த தடைகளை நினைவுபடுத்திக் கொள்வோம். இதுவரை பெற்ற வெற்றிகளை எண்ணி மீண்டும் மகிழ்ச்சி கொள்வோம். நம்பிக்கைச் சுடரை இறுதி வரை அணையாமல் காப்போம்.

சென்ற வருடம் முழுதும் தன் பதற்றத்தை பாதுகாப்பின்மையை தாள முடியாமல் என்னை பந்தாடிய அதிகாரி இந்த வருடம் அமைதியாகிவிட்டார். வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாக அரசல் புரசலாக பேச்சு. விரைவில் அவர் வேலையை விட்டுச் சென்று விடலாம். சூழல் மாறலாம். புதுச் சூழல் வேறு வித மாற்றங்களுக்கு வித்திடலாம். மாற்றம் இப்படித்தானிருக்கும் எனற ஒற்றைப் பரிமாணத்தில் நான் நிச்சயம் யோசிக்கப் போவதில்லை. உறுதியளிக்கப்பட்ட elevation கிடைத்துவிடும் என்ற கண்மூடித்தனமான எதிர்பார்ப்பு சென்ற வருடம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட பின்னர் நடந்த அகநாடகம் எனக்கு ஆசானாக இருந்து வழி காட்டும். நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study.

+++++

மடிக்கணினியின் முகப்புத் திரையினுள் குப்பையைப் போல் குவிந்து கிடந்த மின்கோப்புகளில் ஒன்றைத் திறந்தபோது மூன்றரை வருடங்கள் முன்பு நான் எனக்காக எழுதிக் கொண்ட குறிப்பு கண்ணில் பட்டது. வாசிக்கையில் ஒரு கதை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது. எனக்கு நானே சிரித்துக் கொண்டேன்.

மூன்றரை வருடம் முன்னர் குறிப்பை எழுதியதற்குப் பிறகு இது என்னுடைய வாசிப்புக்கு மட்டும் என வைத்துக் கொண்டேன். வழக்கமாக அனுப்பும் இணைய இதழ்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனது வலைப்பக்கத்திலும் இடவில்லை. எழுதியதையெல்லாம் பொதுத் தளத்தில் பகிரும் வியாதி உச்சத்திலிருந்த போதும் இதை மட்டும் ஏன் பகிராமல் வைத்துக் கொண்டேன் என்று எனக்கு இன்று விளங்கவில்லை.

என்னைப் பொறுத்த வரை முழுக்க முழுக்க நிஜம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த இந்தக் குறிப்பின் உள்ளடக்கம் ஒரு புனைவைப் போன்று ஒலித்தது என்பதுதான் இப்போதைய உண்மை. சுழலும் டைட்டில்கள் வந்த பின்னரும் ஒரு Bio-Pic திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரம் இறக்காத வரை அப்பாத்திரத்தின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள் நிகழ்ந்தவாறிருக்கும் எனும் பிரக்ஞையை இடைநீக்கம் செய்யும் போதுதான் படத்தின் முடிவை ரசிக்க முடியும். முடிவில்லாமல் ஒரு புனைகதை நீண்டு கொண்டிருந்தால் – எத்தனை வலிமையான எழுத்தென்றாலும் – ஓரு கட்டத்தில் வாசிப்பு சலிப்பு தட்டிப் போகும்.

ஐநூறு சொற்களில் எனக்கு நானே எழுதிக்கொண்ட குறிப்பு ஒரு சிறுகதை வடிவத்தைப் பூண்டிருந்தது. எனினும், மனவியல் சிக்கலுக்கு தீர்வைத் தேடிக் கொண்டதான பாவனையில் உற்சாகத்துடன் நான் எழுதிய அந்தக் குறிப்பு தரமான சிறுகதையாக அமையுமா எனும் ஆய்வுக்குள் நுழைவதல்ல என் நோக்கம்.

வாசித்து முடித்ததும் என்ன தோன்றியது? பயணித்த பாதையின் விவரிப்பு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்தக் குறிப்பு எழுதி முடித்த பிறகு வந்த நாட்களில் தொழில் வாழ்க்கை நான் முற்றிலும் ஊகித்திருக்க முடியாத திசையில் பயணப்பட்டது.

குறிப்பினில் கூறப்பட்டபடி அக நாடகத்தின் படிப்பினை உதவியாக இருந்தது என்று சொல்ல முடியாதெனினும் சுயத்துடனான உரையாடலில் சில தெளிவான அணுகுமுறையை சட்டகத்தை (தற்காலிகமாகவேனும்) எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பில் பதிவு செய்த சம்பவங்கள் – குறிப்பாக எந்த சம்பவங்களைப் பற்றியும் விரிவாக எழுதவில்லை ; வெறும் கொடி காட்டலோடு சரி – நடந்த பின்னரான தொழில் வாழ்க்கை பற்றி விவரமாகச் சொல்லுமளவுக்கு அது ஒன்றும் அதிசுவாரஸ்யமானதொன்றுமில்லை. தனியார் வேலையிலிருக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களின் வாழ்வில் வழக்கமாக நடப்பதுதான். சாகசமோ விறுவிறுப்போ அதிகம் இல்லாது அதிகாரம் மட்டுமே ஜெயிக்கும் அக்கப்போர்தான்.

  1. உயரதிகாரி வேலையிலிருந்து நீங்குதல்

  2. தற்காலிக மகிழ்ச்சி

  3. மீண்டும் பணிவுயர்வு பற்றிய எதிர்பார்ப்பு

  4. ஆனால், அயல் நாட்டுத் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றலாகிவந்த ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்படல்

  5. புதிய அதிகாரி என்னிடமிருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் பறித்துக் கொள்ளல்

  6. வேலை சார்ந்த சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்படல்

  7. வியாபாரக் கொள்முதல் சார்ந்த லஞ்சம் பற்றி உயர் மட்டத்துக்கு துப்புத் தரப்போக அது குறித்த அதிகார விசாரணையை என் மீதே ஏவினார் அயல் நாட்டு அதிகாரி. (பழைய அதிகாரி போலவே இவரும் தொடர்ந்து எரிச்சல் படுத்திவந்தார் ; நான் என் வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்ற பழைய அதிகாரியின் அதே எண்ணந்தான் இவருக்கும் இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.)

  8. பெருந்தொற்று ஊரடங்கின் போது அதிகாரி சொந்த நாடு சென்றுவிட தொழிற்சாலை முடங்கியது. தாய் நிறுவனத்திலிருந்து சம்பளப் பட்டுவாடாவுக்கான நிதி ஆதரவு கிடைக்கப் போவதில்லை எனும் சமிக்ஞை தெரிந்தவுடன் கடுமையான உழைப்பின் உதவியால் குறைந்த காலத்துள் வியாபாரத்தை மீட்டெடுத்து ஊழியர் அனைவருக்கும் தொடர்ந்து நேரத்தில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்தல். (அடுத்தவர்கள் இதை ஒரு சாதனையாக ஒப்புக் கொள்வார்களோ மாட்டார்களோ – “அதற்குத் தகுந்த கூலி உனக்கு வழங்கப்பட்டுவிட்டது” – என்னைப் பொறுத்த வரை எனது நலிந்த தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்குண்டு.)

  9. பெருந்தொற்று காரணமாக விமானங்கள் பறக்காததால் நிறுவனத்தை நிர்வகிக்க அயல் நாட்டிலிருந்து யாரையும் அனுப்ப முடியவில்லை என்ற சாக்கில் அதல பாதாள விலையில் முகந்தெரியாத முதலீட்டாளருக்கு இந்திய நிறுவனம் விற்கப்படல்.

  10. நிறுவனம் விற்கப்பட்ட அடுத்த நாள் கம்பீரமாக நடை போட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார் முதலீட்டாளர் அதாவது (குறிப்பில் நான் சொல்லியிருந்த) பழைய அதிகாரி. அவர் தான் இப்போது முதலாளி.

அதற்குப் பிறகு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இறங்குமுகந்தான். மனஅழுத்தம், மனச்சோர்வு, மனக்கவலை – இவற்றை தாற்காலிகமாகத் துறந்தேன். பகுப்பாய்வு செய்யும் அவசியம் இருக்கவில்லை. அவமதிப்புகளை அமைதியாய் சகித்துக் கொள்ளவில்லை. சொற்களைச் சொற்களால் எதிர் கொண்டேன். கேவலப்படுத்துதல்கள் மின்னஞ்சல்களில் தொடர்ந்த போது வழக்கமாக மௌனம் காக்கும் என் இயல்பில் மாற்றம் வந்தது. சரி சமமாக முதலாளியான அதிகாரிக்கு பதிலளித்தேன். நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் காரணமாக குறைந்த பட்சம் ஒரு வருடத்துக்கு யாரையும் வேலையை விட்டுக் கழித்து விட முடியாது என்பதால் பிடிக்காதவர்கள் எல்லாம் அவர்களாகவே வேலையை விடும் சூழலை உருவாக்கினார் அதிகாரி.

பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறு அறையில் கிட்டத்தட்ட முப்பது பேரை உட்கார வைத்து வியாபார தந்திரோபாயம் குறித்த உரையாடல் நடத்தியதுதான் அவர் புரிந்த ஈனச் செயல்களுக்கெல்லாம் திலகம். அந்தச் சந்திப்பிற்குப் பின் நிறுவனத்தில் பெரும்பாலானோர்க்கு கொரொனா தொற்று. இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். எனக்கும் கோரொனா வந்து மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது. நல்ல வேளை எனக்கு ஒன்றும் ஆகவில்லை. இதில் “விசித்திரம்” என்னவெனில் முன்னாள் அதிகாரி / இந்நாள் முதலாளியை மட்டும் கொரோனா அண்டவேயில்லை. சக ஊழியர்களின் மரணச் செய்தியைக் கேட்ட பிறகு “இது தான் அந்தக் கணம்” என்று தோன்ற மின்னஞ்சலில் என் ராஜிநாமாவை அனுப்பி வைத்தேன்.

ஏறிக்கொண்டு போகும் வயது பற்றி குறிப்பில் கூறியிருப்பேன். வாஸ்தவத்தில் அது அத்தனை பெரிய தடையாக இருக்கவில்லை. நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.

குறிப்பை ஓர் இடத்தில் முடித்ததை போல இங்கேயே என் தொழில் வாழ்க்கைக் கதையையும் முடிக்கலாமா? சுப முடிவு போல தோற்றமளிக்கும் இதை முடிவு என்று எண்ணினால் ஒரு feel good திரைப்படம் அளிக்கும் சுகத்தை உணரலாம். இது ஒரு வளைவுதான் சாலையின் முடிவல்ல என்று எண்ணிக் கொண்டு…ஓடும் பேருந்தில் ஏறி இருக்கையில் அமரும்வரை ஏற்படும் அதிர்வைப் போல் புது வேலையில் சில மாதங்களாய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்.

“உன் பதவி உன் வேலை பற்றிய விவரணத்தைத் தருகிறது என்று எண்ணிவிடாதே” என்று நிறுவனத் தலைவர் முதல் நாளில் சொன்னதிலிருந்தே பிடித்தது கிலி. “மேலே உயர உயர நிறுவனத்திற்கிருக்கும் உன் மீதான எதிர்பார்ப்பும் உன்னுடைய வேலை விவரணமும் வேறு வேறாகத் தான் இருக்கும்” என்று கூடுதல் வியாக்கியானம் வேறு. நேர் முகத்தின்போது என் கீழ் நான்கு பேர் வேலை செய்வார்கள் என்று கூறப்பட்டது. அந்த நால்வரை இங்கு வந்து சேர்ந்தது முதல் தேடிக் கொண்டிருக்கிறேன். அலுவலகத்தின் எந்த மூலையில் அவர்கள் ஒளிந்திருக்கிறார்களென்று தெரியவில்லை. ஒன்றுக்கு இரண்டு உயரதிகாரிகள் எனக்கு. இருவருக்கும் நான் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் வாயே திறக்கமாட்டார். எதுவும் கேட்க மாட்டார். வேலை பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளிப்பது அவருடைய கடமையே இல்லை என்பது போல மௌனியாய் இருப்பதே அவர் வாடிக்கை. இன்னொரு அதிகாரியோ எப்போது பார்த்தாலும் “அது என்னாச்சு இது என்னாச்சு” ரகம். என்னைப் பேசவே விட மாட்டார். “உன் குதிரையைப் பிடித்து வைத்துக்கொள்” என்ற சொற்றொடரை அவரிடமிருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கிறது. கடிவாளம் மாட்டிக்கொண்ட உணர்வுதான் எனக்கு.

“நம் அனுபவங்கள் நமக்கான தொடரும் case-study” என்ற குறிப்பின் கடைசி வரியை மூன்றரை வருடங்களுக்குப் பிறகு இப்போது படித்துப் பார்க்கிறபோது பாசாங்கு எழுத்து என்று தான் என்னை விமர்சித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதை உண்மையாக உள் வாங்கிக் கொண்டவனாக இருந்தால் நான் ஏன் சென்ற வாரம் (புது வேலை காரணமாக எழும்) பதற்ற உணர்வுகளைத் தணிக்க உதவியை நாட வேண்டும்?. அரை மணி நேரம் நான் சொன்னதைக் கேட்ட ஆலோசகர் – “இப்போதைய அதிகாரிகளோ முந்தைய அதிகாரியோ – உங்களுள்ளிருக்கும் சின்னப்பையன் அவர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான் என்ற கேள்விக்கு பதில் காணாத வரை……” என்று சொல்லி நிறுத்தினார். அவர் என்ன சொல்லிவிடப்போகிறாரோ எனும் சிறு பதற்றத்தில் நான் அவரை நோக்கிக் கொண்டிருந்தேன். “வரப்போகும் சில வார அமர்வுகளில் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்று சொல்லி சிறு காகிதத்தில் ஆலோசனைக் கட்டணத்தை எழுதி என் கையில் திணித்தார்.

குறிப்பை அடக்கி வைத்திருந்த மின் கோப்பினை மின் மறுசுழற்சித் தொட்டிக்குள் தள்ளினேன். இந்தக் குறிப்பு இனிமேல் தேவைப்படாது. புதிதாக இன்னொரு குறிப்பெழுதும் வேளை வந்துவிட்டது.

நன்றி : சொல்வனம்

கனவுக்குள் புகுந்த சிங்கம்

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் கர்ஜனை, அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

நன்றி : பதாகை