மூன்று நகரங்கள்

துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன்.

மீர்ப்பூர்

அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப் பெரிய அணை கட்டப்பட்டது. உலகின் ஏழாவது பெரிய அணையான மங்ளா டேம் கட்டப்பட்ட போது 1,10,000 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வேறு இடங்களுக்கு நகர வேண்டியிருந்தது. அவர்கள் வசித்துவந்த கிராமங்கள் நீருக்கடியில் மூழ்கின. பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக பாகிஸ்தானிய அரசு பிரிட்டிஷ் வேலை அனுமதியை (work permit) வழங்கியது. இன்று பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்களில் “மிர்ப்பூரிகள்” எழுபது விழுக்காடு. வடக்கு இங்கிலாந்தின் மேற்கு யார்க்‌ஷைரில் உள்ள ப்ராட்ஃபர்ட் நகரில் வசிக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாகிஸ்தானியரும் மிர்ப்பூரிகள். Smart Mirpuris. They knew how to negotiate.

சில்ஹேட்

மிர்ப்பூரிகள் போன்று பங்க்ளாதேஷின் சில்ஹேட் (Sylhet) நகர் பூர்வீக மக்களும் அதிகம் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். பங்க்ளாதேஷின் மூன்றாவது பெரிய நகரம் சில்ஹேட். ஈஸ்ட் இந்தியா கம்பெனி காலத்திலருந்தே கப்பல்களில் சிற்றேவலர்களாக ( lascars) பணியாற்ற சில்ஹேட்டியர்கள் மிகவும் விருப்பங்காட்டினார்கள். முதன் முதலாக லண்டனில் இந்திய உணவகத்தை 1810 இல் தொடங்கியவர் சில்ஹேட்டியிலிருந்து வந்த வங்க முஸ்லீம் ஷேக் தீன்மொஹமட். இன்றும் லண்டனின் புகழ் பெற்ற இந்திய உணவகங்களை சில்ஹேட்காரர்களே நடத்துகிறார்கள். இதற்காகவே உள்ளூர் சில்ஹேட்காரர்கள் வெளிநாட்டுக்கு குடியேறியவர்களை ‘லண்டனி’ என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் சில்ஹேட்டிலுருந்து பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் குடியேற்றம் தொடர்ந்தது. வங்க சுதந்திரப் போரின் போதும் அதற்கு முன்னரான 1970இன் பல உயிர்களை பலி வாங்கிய போலா சூறாவளியின் போதும் குடியேற்றம் உச்சத்தை தொட்டது.

நீர்க்கொழும்பு

கதுநாயக விமான நிலையத்தில் இறங்கி E3 வழியில் கொழும்பு செல்கையில் வலப்புறத்தில் மிக அழகான Lagoon தென்படும். Negombo Lagoon என்பது அதன் பெயர். கடலோர விடுதிகள், அழகான பல சர்ச்சுகள் என்று பயணிகளுக்கான பல கவர்ச்சிகளை கொண்டுள்ள Negombo-வை தமிழில் நீர்க்கொழும்பு என்று அழைக்கிறார்கள். இருபத்தியைந்துக்கும் மேலான சர்ச்சுகள் இருப்பதால் நீர்க்கொழும்பை குட்டி ரோம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஊரின் பெயர்க்காரணமாக இரண்டு தொன்மங்கள் வழங்குகின்றன. சிங்களர்கள் நிகம்போ என்ற பெயர் மீகமூவ எனும் பழைய பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். தமிழர்கள் நிகும்பள என்னும் பெயரிலிருந்து மருவியது என்கிறார்கள். நிகும்பளன் என்பவன் இராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். இவன் இராவணனின் மைத்துனன்.

இந்த தோரணம் இன்னும் முழுமையடையவில்லை. மீர்ப்பூருக்கும் சில்ஹேட்டுக்கும் இடையே மேலை நாட்டுக்குக் குடிபெயர்தல் எனும் பொதுப்புள்ளி இருக்கிறது. நீர்க்கொழும்பிற்கு? இத்தாலியில் டைரேனியன் கடலின் கரையில் அமைந்துள்ள Negombo எனும் ஊருடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

தொடர்பு படுத்தல் கற்பனையின், எழுத்தின் இன்றியமையா அங்கம். தொடர்புபடுத்தலின் நீட்சி புனைவின் ஆரம்பம் என்ற சொந்த தியரி ஒன்று என்னிடத்தில் உண்டு.

தேவபூமி *

Rishikesh

சுரங்கங்களைத் தோண்டு
நதிகள் இடையில் வந்தால்
அவற்றின் பாதையை மாற்றி விடு
மரங்களை வெட்டு
அணைகளைக் கட்டு
பள்ளம் தோண்ட
குண்டுவெடிப்பு நிகழ்த்து
பிளவு பட்ட பாறைத் துகற்களை
நதிக்குள் தள்ளு
நிலச்சரிவினால் இழந்த
மோட்டார் சாலைகளை மீட்க
மலையின் பக்கங்களை மேலும் செதுக்கியெடு
நதியில் இன்னும் பாறைகள் வந்து விழ வை
பச்சைப் போர்வையை
எடுத்து மலைகளைக் குன்றுகளாக்கு
காடுகளைக் களைந்து
வரிசை மேல் வரிசைகளாக
ஓய்வு விடுதிகளை நிறுவு
வியாபாரம் செய்
முன்னேற்றமொன்றே உனது குறிக்கோள்
ஊர்கள் அழிந்துவிட்டால்
புராணக் கதைகளைக் காரணம் காட்டிக் கொள்ளலாம்

* – சார்தாம் என்று ஹிந்தியில் அழைக்கப்படும் புனிதத்தலங்களாகிய – பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி – உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளன. ரிஷிகேஷ், அரித்வார் போன்ற மேலும் பல புராதனமான திருத்தலங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தை தேவபூமி என்றும் அழைக்கின்றனர்.

தோற்றுப்போன கவிதை முயற்சி

என் கவிதைக்கான
கருப்பொருளாக
நீரைத் தேர்ந்தெடுத்தேன்.
பீய்ச்சியடித்த ஊற்று,
மணலில் சீறிப்பாய்ந்து
பாறைகளைத்தள்ளி
விரையும் காட்டாறு.
அதி உச்சியின் மேலிருந்து
கொட்டும் அருவி.
சமவெளிகளில்
நகரும் நதி.
கிளைக்கும் கால்வாய்கள்.
புனித நகரங்களின்
இரு மருங்கிலும்
படரும் ஜீவ நதி.
அணைகளால்
தடுக்கப்பட்ட ஒட்டத்தை
தன் மட்டத்தை உயர்த்தி
மீட்டெடுத்து
கடும் வேகத்தில் பயணமாகி,
பரந்து விரிந்த கடலுடன்
சங்கமமாகி
தன் அடையாளமிழக்கும்
ஆறு.
குழாயிலிருந்து
விடுபட்டு
கழுவியில் நிறைந்து,
குழிந்து,
வெளிச்செல்லும்குழாயின்
உள் புகும்
நகராட்சி நீர்.
துணியால் பிழியப்பட்டு
துணிக்கு ஈரத்தன்மையை ஈந்து
தன்னை அசுத்தமாக்கி
வாளியில் நிறைந்து
வாடிய செடியின் மேல்
கொட்டப்பட்டு
மண்ணுக்குள் ஐக்கியமாகி
மந்திரம் போல் செடியை துளிர வைத்து….
நீரை
சொற்களுக்குள் அடக்க
முடியவில்லை என்னால்.
காதுக்குள் நீர் நுழைந்த அவஸ்தை
என் சிந்தனையில்.
நீரின் எந்த வடிவங்களும்
என் கவிதைக்குள்
சிக்கவில்லை.
முழுமையோ
வடிவமோ பெறாமல்
நின்று போனது என் கவிதை முயற்சி.
களைப்பை போக்க
கண்ணாடிகோப்பையில்
நிரம்பியிருந்த தண்ணீரைப்பருகினேன்.
நான் பருகிய நீர்
என் உடல் உப்பை எடுத்துக்கொண்டு
வியர்வையாக
வெளிப்பட்டு
மண்ணில் சிந்தி
மறைந்து போனது.
சிந்திய இடத்தில்
முளைத்திருந்த
உலர்ந்த புற்களுக்கு
பச்சையம் வழங்கும் திட்டமோ?