அணு எடை

சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு.

ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே செய்து பார்ப்போம் என குருட்டு தைரியத்தில் துவங்கிவிட்டேன். டெம்ப்ளேட்டை பின்பற்றி முக்கால் கிணறு தாண்டிவிட்டேன். பொட்டாசியம் பைகார்பனேட்டில் பொட்டாசியத் தனிமத்தின் கன்டென்ட் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இணையத்தில் சல்லி போட்டுத் தேடியும் வழி கிடைக்கவில்லை. தலையை பிய்த்துக் கொண்டேன். வேலை பாதியிலேயே நின்றது. வாடிக்கையாளர் போன் வழியாக துரத்திக் கொண்டிருந்தார்.

கம்பெனியில் சில வருடம் முன்னர் வேலை பார்த்த ஒருவரை போனில் அழைத்தேன். தூக்கக்கலக்கத்தில் பேசினார். “KHCO3 தானே?” என்றார். கூகுள் சரி என்று சொன்னது. பொட்டாசியம் – ஹைட்ரஜன்-கார்பன்- மூன்று பங்கு ஆக்ஸிஜன் – இவற்றின் அணு எடையை கூட்டச்சொன்னார். கூகுள் இருக்க பயமேது!

K – 39.0983
H – 1.00784
C – 12.0107
O3 – 3 * 15.999 = 47.997

KHCO3 = 100.11384

K = 39.0983 / 100.11384 = 39%

யூரேகா என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். டெம்ப்ளேட்டை பின்பற்றாமல் மக்னீசியம் க்ளோரைடில் (mgcl2) மக்னீசியம், கால்சியம் அயோடைடில் (Cal2) அயோடின் என தேவையில்லாமலேயே கால்குலேஷன் போட்டு வேதியியல் வித்தகனாகிவிட்ட கற்பிதத்துடன் வாடிக்கையாளரிடம் பேசுகையில் ஸேல்ஸ் பிட்ச் உச்சஸ்தாயியை எட்டியது.

வீட்டுக்கு வந்ததும் புதல்விகளிடம் பெருமையடித்துக் கொள்ளுகையில் ஒரு ரியாலிடி செக்.

“ஒன்பதாம் கிளாஸ் அறிவியல் புத்தகத்தில் வரும் மேட்டர். இதுக்கு போயி இந்த புளிப்பு காட்டறே” என்றாள் சின்னவள்.

அழிவும் உருவாக்கமும்

நானூறு மெல்லிய கதிர்கள்
ஒருங்கிணைந்து
ஒற்றைக்கதிரானது.
திண்மை பெருகி
ஒளியின் உக்கிரம்
ஆயிரம் மடங்கானது.

நேர்க்கோட்டில் பயணித்தது கதிர்.
எதிர்வந்த திடப் பொருள்கள்
கிழிந்தன.
திரவப்பொருள்கள்
கொதித்தன.
ஏழைச்சுவர் ஒன்று
அதன் பாதையில் வந்தது.
சுவர் செங்குத்தாக
இரண்டு பட்டது.
சுவர் உடைந்ததில்
செங்கல் துகளோன்று
மண்ணில் வீழ்ந்தது.

சில நூறு வருடங்களில்
சுவரிருந்த இடத்தில்
ஆறொன்று ஓடத்துவங்கியது.
ஆற்று நீரின் அரிப்பில்
இரண்டாக உடைந்திருந்த சுவர்
முழுதும் அரிக்கப்பட்டு
அடித்துச்செல்லப்பட்டது.
செங்கல் துகள் மட்டும்
அரிப்புக்குள்ளாகாமல்
நீரால்
தள்ளிக்கொண்டு போகாமல்
தரையை இறுக்க பற்றிக்கொண்டு ஜீவித்திருந்தது.
தனிமைப்பட்டுப்போன துகளின்
வாழ்க்கை போல
ஆறும் ஒருநாள் வறண்டு போனது.
ஆறோடிய படுகை
பாலை போலானது.
நீர்த்தாவரங்களெல்லாம்
வாடி கருகின.
காட்டுப்பகுதியில்
எழுந்த தீயில்
வாடிய நீர்த்தாவரங்களும்
எரிந்து
ஒற்றை செங்கல்துகள்
நீறு பூத்தது.

அண்டவெளியிலிருந்து
இறங்கிய கதிர்க்கோடொன்று
சுவரிருந்த ஆற்றுபகுதியை
தாக்கியபோது
நீறு பூத்த துகள்
தீயாகி
பின்னர் துணை அணு
ரூபங்கொண்டு
கதிர்க்கோட்டின்
அங்கமானது.

ஒளி வடிவில்
புனர்ஜென்மம் பெற்ற
முன்னாள் செங்கல் துகள்
சென்றபாதையில்
தென்பட்டவற்றையெல்லாம் –
சில ஏழைச்சுவர்களையும் சேர்த்து –
கருக்கி, பஸ்மமாக்கி
காற்றின் வேகத்தில்
விரைந்தது.