ஹதீஸ் பயில்விக்கும் சேல்ஸ் டெக்னிக்

“டஸாமுஹ்” என்றொரு அரபிச்சொல் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் மத, கலாச்சார வேறுபாடுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இஸ்லாம் குறித்து முஸ்லீம்கள் அல்லாதோரின் பொதுப்புத்தியில் நிலவும் எண்ணப்போக்கை இந்தக் கருத்தியல் உடைக்கிறது. நபிகள் தமது நம்பிக்கையை எப்படி மக்களிடையே பரப்பினார் என்பதை சில தினங்கள் முன்னர் எழுதிய குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை மற்றும் எளிமையின் மதம்; கருத்துச் சுதந்திரத்திற்கு போதுமான இடத்தை அது அளிக்கிறது. அல்லாஹ்வின் செய்தியை கண்ணியமான முறையில் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவும், உண்மையின் பாதையை நோக்கி மக்களை அழைக்கவும் இயன்றதைச் செய்ய இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. அதற்குப் பிறகு அவ்வழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்களிடமே உள்ளது. ஆனால் தமது எண்ணங்களை மக்கள் மீது திணிக்க முஸ்லீம்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

“(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்கவேண்டாம்; இன்னும், நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக. “நீங்கள் எவ்விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்” (22:67-69)

இன்னோர் இடத்தில் அல்லாஹ் சொல்கிறான் :-

“(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (16:125)

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்தே சகிப்புத்தன்மையின் பல பாடங்களைப் பெறலாம். அவரது முழு ஆளுமையும் வாழ்க்கை முறையும் ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதற்கு ஒருவர் கைக்கொள்ள வேண்டியவைகளென பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை நிரூபிக்கிறது. ஒருமுறை, ஒரே ஒரு உண்மையான மதத்தை நிரூபிப்பதற்காக அல்லாஹ் ஏன் கஷ்டங்களை உண்டுபண்ணி பொய்யான கடவுள்களை வலுக்கட்டாயமாக இடிப்பதில்லை என்று சிலர் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்ட தருணத்தில் எல்லாம் வல்ல இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அவருள் இறக்கினான் :

“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னம் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்பு உண்டா? (இல்லை) – 16:35

சகிப்புத்தன்மையும் பொறுமையும் இறைவனின் இயல்பு எனும்போது நம் முடிவுகளை மற்றவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க நாம் யார் ?

உழைப்பு வாழ்க்கையை விற்பனைத்துறையில் கழித்துக் கொண்டிருப்பவன் நான். விற்பனைப் பணியாளர்களுக்கு வேதாகமங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்னும் பொருளில் திரட்டப்பட்ட மேற்கோள் தொகுப்பில் ஓர் ஹதீஸ் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆம்! என்னைப் போன்ற விற்பனைப் பணியாளர்களும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார் நபிகள்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லா அறிவித்தார்: “விற்கும்போதும், வாங்கும்போதும், பணத்தைக் கேட்கும்போதும் சகிப்புத்தன்மையுள்ள ஒரு மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக.” (ஸஹீஹ் புகாரி).

இந்த மாதம் விற்பனை இலக்கை எட்ட அருளாளன் எனக்கு வகை செய்யட்டும்!

Advertisement

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.