புல்லே ஷா எனும் மனிதநேயர்

புல்லே ஷாவைப் பற்றி அறியப்படும் தகவல்கள் தொன்மங்கள் போல தொனிக்கின்றன. அவர் பிறந்த துல்லியமான தேதி மற்றும் பிறந்த இடம் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே உடன்பாடு இல்லை. அவரது வாழ்க்கை பற்றிய சில “தகவல்கள்” அவரின் எழுத்துக்களிலிருந்தும் பிற “தகவல்கள்” வாய்வழி மரபுகள் வாயிலாகவும் பெறப்பட்டவை.

ஷா ஹுசைன் (1538 – 1599), சுல்தான் பாஹு (1629 – 1691), மற்றும் ஷா ஷரஃப் (1640 – 1724) போன்ற கவிஞர்களின் வரிசையில் பஞ்சாபி கவிதையின் சூஃபி பாரம்பரியத்தை செழுமைப்படுத்தியவர் புல்லே ஷா.

பிரபல சிந்தி சூஃபி கவிஞரான ஷா அப்துல் லத்தீப் பட்டாய் (1689-1752) வாழ்ந்த காலத்திலேயே புல்லே ஷா வாழ்ந்தார். அவரது ஆயுட்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பிற கவிஞர்கள் – ஹீர் ரஞ்சா காவியப் புகழ், பஞ்சாபி கவிஞர் வாரிஸ் ஷா (1722 – 1798), சாச்சல் சர்மஸ்த் எனும் புனைபெயரோடு புகழ்பெற்ற சிந்தி சூஃபி கவிஞர் அப்துல் வஹாத் (1739 – 1829). உருது கவிஞர்களில், புல்லே ஷா வாழ்ந்த காலத்திலேயே ஆக்ராவில் மிர் தாகி மிர் (1723 – 1810) வாழ்ந்தார்.

புல்லே ஷாவின் காலத்தில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையேயான வகுப்புவாத மோதல்கள் வலுத்தன. அந்த நேரங்களில் பாபா புல்லே ஷா பஞ்சாப் குடிமக்களுக்கு நம்பிக்கை மற்றும் அமைதியின் கலங்கரை விளக்கமாக இருந்தார். புல்லே ஷா பாண்டோக்கில் இருந்தபோது, ​​சீக்கியர்களால் சில முஸ்லிம்களைக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, தங்கள் கிராமத்தின் வழியாகச் சென்ற சீக்கிய இளைஞனை முஸ்லிம்கள் கொன்றனர். பாபா புல்லே ஷா அந்த அப்பாவி சீக்கியரின் கொலையைக் கண்டித்தார். அதனால் பாண்டோக்கின் முல்லாக்கள் மற்றும் முஃப்திகளால் கண்டிக்கப்பட்டார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல என்று சொன்னதோடு ஔரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய குரு தேக் பகதூர் ஒரு காஜி (இஸ்லாமிய மதப் போர்வீரர் என்பதற்கான சொல்) என்றும் புல்லே ஷா வர்ணித்தார்.

ஔரங்கசீப் இசை மற்றும் நடனத்தை தடைசெய்து இவை ​​இஸ்லாத்தில் ஹராம் என்று அறிவித்தார். தடையை மதிக்காது பஞ்சாபில் கிராமம் கிராமமாகச் சென்று தனது காஃபிகள்ளைப் பாடி நடனமாடினார் புல்லே ஷா.

சீக்கியர்களின் கடைசி குருவாகிய குரு கோவிந்த் சிங்கின் புரட்சிகர உணர்வைப் பாராட்டினார், அவரை மத சுதந்திரத்தின் ‘பாதுகாவலர்’ என்று அழைத்தார். அதை ஒரு நுட்பமான நையாண்டியில் கூறினார்:

நஹ் கரூன் அப் கீ,
நஹ் கரூன் பாத் தாப் கீ.
கர் நா ஹோத்தே குரு கோவிந்த் சிங்,
சுன்னத் ஹோதி சப் கீ.

நான் நேற்று அல்லது நாளை பற்றி பேசவில்லை;
இன்று பற்றி பேசுகிறேன்.
கோவிந்த் சிங் மட்டும் இல்லாதிருந்தால்,
அவர்கள் அனைவரும் இஸ்லாமியராகியிருப்பர்

கடைசி வரியின் நகைச்சுவை தமிழ் பொழிபெயர்ப்பில் சரியாக வாராது. “இஸ்லாமைத் தழுவ கட்டாயப்படுத்தப்பட்டிருப்பர்” என்ற அர்த்தத்தைத் தரும் வகையில் சுன்னத் என்ற விருத்த சேதனத்துக்கான சொல்லைப் பயன்படுத்தினார்.

பண்டா சிங் பைராகி (கடைசி சீக்கிய குருவுக்குப் பின் வந்த சீக்கியப் படைகளின் தளபதி) புல்லே ஷாவின் சமகாலத்தவர். குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக, சாதாரண முஸ்லிம்களைக் கொன்று பழிவாங்கினார். அவர் தனது பழிவாங்கும் பிரச்சாரத்தை கைவிட பண்டா சிங் பைராகியை சமாதானப்படுத்த முயன்றார் பாபா புல்லே ஷா. குரு கோவிந்த் சிங்கின் மகன்கள் மீதும், அப்பாவி சீக்கியர்கள் மீது விழுந்த அதே வாள் அப்பாவி முஸ்லிம்கள் மீதும் விழுந்ததாக புல்லே ஷா அவரிடம் கூறினார். எனவே அப்பாவி முஸ்லீம்களைக் கொல்வது அவுரங்கசீப்பின் அடக்குமுறைக்கு தீர்வாகாது என அறிவுறுத்தினார்.

புல்லே ஷாவின் எழுத்துக்கள் அவரை ஒரு மனிதநேயவாதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன – அவரைச் சுற்றியுள்ள உலகின் சமூகவியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குபவராக, தாய்நாடான பஞ்சாப் கடந்து சென்று கொண்டிருக்கும் கொந்தளிப்பை விவரிப்பவராக, அதே நேரத்தில் கடவுளைத் தேடுபவராக. ஷரியாத் (பாதை), தரீகத் (கவனித்தல்), ஹகீகத் (உண்மை) மற்றும் மர்ஃபத் (ஒன்றுபடல்) ஆகிய நான்கு நிலைகளில் மூலம் அவரது சூஃபித்துவ ஆன்மீகப் பயணத்தை அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கை மற்றும் மனிதநேயம் குறித்த சிக்கலான அடிப்படைப் பிரச்சினைகளை தன் எழுத்தில் எளிமையுடன் அவர் கையாண்ட விதம் அவர் மேல் பஞ்சாபிகளுக்கு இருந்த ஈர்ப்பின் பெருங்காரணம். எனவேதான், அவரது காஃபிகளை (அவர் எழுதிய பஞ்சாபி கவிதையின் ஈரடி வடிவம்) பலர் இசைப்படுத்தயுள்ளனர் – சாதாரண தெருப் பாடகர்கள் முதல் புகழ்பெற்ற சூஃபி பாடகர்களான வடாலி சகோதரர்கள், அபிதா பர்வீன் மற்றும் பத்தனே கான், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிய கலைஞர்களின் ஒருங்கிணைந்த டெக்னோ கவாலி ரீமிக்ஸ்கள் முதல் ராக் இசைக்குழு ஜூனூன் வரை.

புல்லே ஷாவின் பிராபல்யம் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என சமச்சீராக அனைத்து வகுப்பினரிடையேயும் பரவியிருக்கிறது. இந்த சூஃபியைப்பற்றி நமக்கு கிடைக்கும் பெரும்பாலான எழுத்துகள் இந்து, சீக்கிய எழுத்தாளர்கள் அவரைப்பற்றி எழுதியவை.

ராபி ஷெர்கில் கிடாரை வைத்துக்கொண்டு பாடும் இசைவீடியோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் – புல்லா கீ ஜானா மேய்ன் கோன்! புல்லே ஷாவின் மிகப்பிரசித்தமான கவிதையின் இசைவடிவம் அது. மிகப்பிரபலமான பாடல். லின்க் கமென்டில்.

சூபி ஞானி புல்லே ஷாவின் தர்கா (கசூர், பாகிஸ்தான்)
Advertisement

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.