பொருத்தம் பார்த்த குருவி – யஸுனாரி கவாபாடா

—-

சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த உயிரமைப்பின் ஒரு சின்னத் தூண் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற எண்ணத்தின் மீதும், பிற விலங்குகள் மற்றும் தாவரங்களை விட அதிக விலைமதிப்பு ஏதும் அதற்கில்லை என்ற எண்ணத்தின் மீதுங்கூட அனுதாபங்கொள்ளத் தொடங்கினான்.

“சரி”

அவனுடைய மூத்த உறவினள் ஒரு வெள்ளி நாணயத்தைக் கண்ணாடி நிலையின் மேல் சுண்டினாள். பின், அதை தன் உள்ளங்கைக்குக் கீழ் அமிழ்த்திப் பிடித்துக் கொண்டு, தீவிரமான முகபாவத்துடன் அவனை உற்று நோக்கினாள். மந்தமான மனச்சோர்வான பார்வையை அவளின் வெள்ளைக் கரத்தின் மீது பதித்தான். “பூ” என்றான்.

“பூ? இதற்கு முன் முதலில் நீ முடிவெடுக்க வேண்டும். பூ விழுந்தால் அந்தப் பெண்ணை மணந்து கொள்வாயா?”

“மணக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்”

“ஆ….தலை!”

“அப்படியா”

“இது என்ன முட்டாள்தனமாக பதில்?”

அவனுடைய உறவினள் சத்தம் போட்டுச் சிரித்தாள். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கீழே எறிந்துவிட்டு அந்த அறையிலிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் அதிகம் சிரிக்கக் கூடியவள். அவளின் தெளிவான சிரிக்கும் குரல் வெகு நேரம் ஒலித்தது. இது அவ்வீட்டு ஆண்களினுள் ஒரு விசித்திரமான விதத்தில் செவிவழிப் பொறாமையைக் கிளப்பியது.

புகைப்படத்தை பொறுக்கியெடுத்து அவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான். இந்தப் பெண்ணை மணப்பது நல்லது என்று எண்ணினான். இந்த அளவு அவனால் நேசத்தை உணர முடிகிறதென்றால், தங்கள் தலைவிதியை மூத்த சகோதரர்களிடமும் தந்தைகளிடமும் ஒப்படைத்துவிட்டு அவனை மணக்க ஜப்பானில் நிறைய பெண்கள் தயாராக இருக்க வேண்டும். அது எத்தனை அழகான விஷயம் என்று அவன் எண்ணினான். அசிங்கம் என்பது தான் மட்டுமே…எண்ணத்திரியை இழந்தான், ஏனெனில் அற்பமான சுய பிரக்ஞை அவனுக்கு விழிப்புணர்வைத் தந்தது.

“சரியாகச் சொன்னால், திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு லாட்டரி மாதிரி. ஒரு நாணயத்தைச் சுண்டி முடிவெடுப்பது போன்றது” – அவனுடைய உறவுக்காரப் பெண் இதைச் சொன்னபோது, அவளுடைய உள்ளங்கைக்குள் இருக்கும் வெள்ளி நாணயத்திடம் தன் தலைவிதியை ஒப்படைப்பதில் அவன் உற்சாகமாகக் கூட உணர்ந்தான். ஆனால், அவள் அவனை வெறுமனே கேலி செய்கிறாள் என்பதை விளங்கிக்கொண்ட பின்னர், வராண்டாவின் விளிம்பில் இருந்த குட்டி ஏரியின் மீது அவன் தன் தனிமைப் பார்வையைத் திருப்பினான்.

என்னுடைய மனைவியாக வேண்டியவள் வேறொருத்தியாக இருப்பாளென்றால், அவளின் முகம் நீரில் பிரதிபலிக்கட்டும் என்று ஏரியிடம் பிரார்த்தித்தான். கால, வெளியூடாக காண முடியும் என்று அவன் நம்பினான். அந்த அளவுக்கு அவன் தனிமையில் இருந்தான்.

நீரின் மேற்பரப்பை உன்னிப்பாகப் பார்த்தபோது, கடவுள் எறிந்த கூர்மையான கருங்கல் ஒன்று அவனது பார்வைத் துறையில் சரிந்தது. இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஒரு ஜோடிக் குருவிகள் கூரையிலிருந்து நீரில் விழுந்தன.

“இது இப்படித்தானோ!” என்று முணுமுணுத்தான்.

நீரின் மேற்பரப்பில் சலசலப்பு பரவி மீண்டும் அமைதி படர்ந்தது. மிக ஆர்வத்துடன் ஏரியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். நீரின் அமைதியான மேற்பரப்பைப் போல அவனது இதயம் ஒரு கண்ணாடியாக ஆனது. திடீரென்று ஓர் ஒற்றைக் குருவியின் பிம்பம் அதில் தெரிந்தது. அந்தக் குருவி பாடியது. பாட்டின் அர்த்தம் இது தான்:

“குழப்பத்தில் தொலைந்திருக்கும் உங்களுக்கு உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் உருவத்தை நான் காட்டினாலும் ஒரு வேளை நீங்கள் நம்பாமல் போகலாம். அதனால், உங்களின் அடுத்த பிறப்பில் உங்களின் மனைவியாகப் போகும் பெண்ணின் பிம்பத்தைக் காட்டுகிறேன்.”

அவன் குருவியிடம் பேசினான், “குருவியே உனக்கு நன்றி. குருவியாக மறு பிறப்பெடுத்து அடுத்த ஜென்மத்தில் உன்னை நான் மணப்பேன் என்றால், இதோ இந்தப் பெண்ணையே இவ்வுலகில் மணந்துகொள்கிறேன். ஒருவன் அவனுடைய அடுத்த பிறப்பின் தலைவிதியைப் பார்த்துவிட்டான் என்றால், இப்பிறப்பின் இவ்வுலகில் அவன் இழக்கப்போவது எதுவுமில்லை. என் அடுத்த உலகின் அன்பான அழகான மனைவி எனக்கு இவ்வுலகில் எனக்கான திருமண முடிவை எடுத்திருக்கிறாள்”

புகைப்படத்தில் இருக்கும் பெண்ணுக்கு தெளிவான மனதின் வாழ்த்துகளுடன் அவன் கடவுளின் பெருந்தன்மையை உணர்ந்தான்.


யசுனாரி கவாபாடாவின் “உள்ளங்கைக் கதைகள்” தொகுப்பிலிருந்து

ஆங்கிலம் வழி தமிழாக்கம் – கணேஷ் வெங்கட்ராமன்