புத்தகாயத்தின் எழுச்சி

Thich Nhat Hanh

சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின் பிரயத்தனத்தைப் புரிந்து கொண்ட தருணம் அது. விகாரங்களில், புத்த கோயில்களில் நடக்கும் தம்ம உரைகளைக் கேட்கத் தொடங்கினேன். முக்கால் வாசி நான் கேட்ட உரைகள் அனைத்துமே இணைய வழி. எந்தவொரு சமய நெறியானாலும் அதற்கு விளக்கம் மற்றும் மறு விளக்கம் தருவோர் அந்த சமய மரபை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தும் பணியை ஆற்றுகின்றனர்,

அசுவகோஸரும், நாகார்ஜுனரும், பின்னால் வந்த ஆச்சாரியர்களும் பௌத்த நெறியை விளக்கியும், காலத்துக்கும் சமூக மாற்றத்துக்கும் ஏற்ற மாதிரி மறு விளக்கங்களைத் தந்தும் பௌத்த மரபை உயிர்ப்புடன் வைப்பதில் அரும் பணியாற்றினர். நம்முடைய காலத்தில் அத்தகைய ஆசாரியர்களாக நான் கருதுவது  இருவரை. ஒருவர் வணக்கத்துக்குரிய தலாய் லாமா. இன்னொருவர் ஜனவரி 22 அன்று நம்மிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட வியட்நாமிய ஜென் சாது தீக் நியட் ஹான்.  

இருவரும் நெருங்கிய நண்பர்கள். திக் நியட் ஹான் இறந்த சில மணி நேரங்களில் தலாய் லாமா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில் “நான் என் நெருங்கிய நண்பனை இழந்துவிட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இருவருமே நல்ல பேச்சாளர்கள். பௌத்த கோட்பாடுகளை சம காலத்திய மொழியில் அதிகம் மேற்கோள்கள் காட்டாமல் எளிய விதத்தில் விளக்க வல்லவர்கள். பௌத்தத்தின் முதன்மைக் கோட்பாடான பிரதீத்ய சமுத்பாதம் ( சார்பியல் கோட்பாடு) பற்றி ஒரு மேலை நாட்டினர் கேட்ட கேள்விக்கு தலாய் லாமா அவர்கள் ஒரு மேசையை உதாரணம் காட்டி விளக்கினார். அவரின் பதில் எனக்களித்த புரிதலை அதற்கு முன்னர் நான் எட்டியிருக்கவில்லை. ஒரு முறை பிரஜ்ன பாரமித சூத்திரம் பற்றி ஒரு முக நூல் லைவ்-வில் அவர் உரையாற்றும் போது “சூன்யதா” கோட்பாடு என்பது எப்படி பிரதீத்ய சமுத்பாதக் கோட்பாட்டில் மையங் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுற விளக்கினார். தலாய் லாமாவின் இவ்விரு உரைகளைக் கேட்டு உள்வாங்கிக் கொண்டதனாலேயே தேரவாதம், மகாயானப் பிரிவை – வெறும் “அகடமிக்கான” “செயற்கையான” வகைப்படுத்தல் – என்று இலங்கைச் சாது வால்போலா எழுதியதை படித்தபோது அதனுடன் ஒத்துப் போக முடிந்தது. 

ஒரு காணொளியில் ஓர் இளம்பெண் “மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்கச் செய்வது எப்படி?” என தலாய் லாமாவைக் கேட்டாள். 

“எதிர் மறை உணர்ச்சிகள் இரண்டோடு தொடர்புடைத்து. ஒன்று, சுயத்தை மையப்படுத்திக் கொள்ளும் மனப்பான்மை. (Self-centred Attitude). இரண்டு, நம் கண் முன் தெரிவனவற்றை அவை தோன்றுவது மாதிரியே நிஜம் எனக் கருதிவிடல். (Grasping)”

அனாத்மன், சூன்யதா தத்துவங்களைச் சற்று லேசாக  விளக்கிவிட்டுத் தொடர்கிறார்.

“பிரஜ்னாவை வளர்த்துக் கொள்வதும், உபாயா-வை அதாவது கருணையை நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ளுதலுமே எதிர்மறை உணர்ச்சிகளை முழுமையாக அகற்றும் வழி”

திக் நியாட் ஹான் அவர்கள் Being Peace என்னும் தன்னுடைய நூலில் பிரஜ்னாவும் உபாயாவும் ஒன்றே என்கிறார். தெளிவாய் புரிந்து கொள்ளுதலும் பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் ஒன்றே என்கிறார். ஒருவரைத் தெளிவாக புரிந்து கொண்டால் அவர் மேல் அன்பு செலுத்துதலின்றி வேறொன்றும் செய்யத் தோன்றாது. நல்ல புரிதலை வளர்த்தெடுக்க அனைத்து உயிர்களையும் கருணை விழிகளுடன் நோக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புரிதல் நிபந்தனையற்ற அன்புக்கு வித்திடும். அன்பு நிலையில் இயல்பாகவே மக்களின் துன்பத்தை தணிக்கும் காரியங்களில் நம் மனமும் உடலும் ஈடுபடும். விழித்திருத்தல், அறிதல், புரிதல், அன்புடைத்தல்- இந்நான்கையும் தன்னிடத்தே கொண்டிருப்போன் புத்தன். புத்தன் நம் அனைவரிலும் இருக்கிறான். 

புத்தம் சரணம் கச்சாமி எனும் போது புத்தனும் என்னில் சரணடைகிறான் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் பாதியில்லாமல் முதல் பாதி பூர்த்தியாகாது அல்லவா? ஆனால், விழித்திருத்தல், புரிதல், அன்பு முதலானவற்றை கருத்தியல் ரீதியாக இல்லாமல் நம் பழக்கத்தில் உறையும் இயலபான குணங்களாக நாம் கொண்டிருக்க வேண்டும் என்று புத்தன் அவசியப்படுகிறான். நாம் அனைவருமே புத்தர்கள், ஏனெனில் நம் வாயிலாகவே புரிதலும் அன்பும்  உணரக் கூடியதாகவும் செயல்திறனுள்ளவையாகவும் மாறும். பௌத்தம் உண்மையாக இருக்க வேண்டுமானால் “புத்தகாயம்” இருத்தல் அவசியம் – விழிப்பு நிலையின் அடிப்படையில் எழும் செய்கையின்  உடலகம். புத்தகாயம் இல்லாவிடில் பௌத்தம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே இருக்கும்.

நடைமுறை ரீதியில் புத்தகாயம் என்னும் பௌத்த மீப்பொருண்மையியலின் கருத்தை இதை விட எளிதாக எவராலும் புரிய வைக்க முடியாது. எனவேதான் மறைந்த ஜென்குருவின் நூல்கள் பௌத்த பாதையின் உண்மையான வழிகாட்டிகளாக உள்ளன.

நூறுக்கும் மேலான பௌத்த நூல்களை ஆங்கிலத்தில் மேலை வாசகர்களுக்காக எழுதியவர் திக் நியாட் ஹான். அவர் எழுதிய “தி ஆர்ட் ஆப் மைண்ட்புல்னஸ்” ஒரு கிளாசிக். அதை படித்தது பல வருடங்களுக்கு முன்னால். பௌத்தத்தின் அடிப்படைப் புரிதல் இல்லாமலே கூட எளிதில் அணுகத் தக்க நூலாக அது இருந்தது. பின்னர் பௌத்த கோட்பாட்டுப் பரிச்சயம் வந்த பிறகு அந்நூலை மறு வாசிப்பு செய்த போது திக் நியாட் ஹான் பௌத்தத்துக்கு செய்யும் அரும்பணியின் ஆழமும் அகலமும் நன்கு புரிந்தது. 

புராதன பௌத்த கோட்பாடுகளைச் சம காலத்தில் மேற்கு நாட்டார் அணுகும் வண்ணம் எளிமையான அறிமுகம் செய்து வைக்கின்றன அவருடைய நூல்கள். அதே சமயம், சுய உதவி நூல்களைப் போல் ஒலிக்கும் நூல்களல்ல அவை. ஜென் பௌத்த மரபை, அவர் பிறந்து வளர்ந்த வியட்நாமில் புழங்கும் மகாயான பௌத்த மரபை நீர்க்கச் செய்யாமல் நூல்களை எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கடைசி நூல் மிகச் சமீபத்தில் அக்டோபர் 2021இல் வெளியாகியிருக்கிறது.

2014இல் மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு முடங்கிய அவர் எத்தகைய முன்னேற்றமும் இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிரான்ஸில் ஒரு மருத்துவமனையில் இருந்தார். ஒரு நாள் தம்மை தென் பிரான்ஸில் இருக்கும் அவருடைய ப்ளம் கிராம மடாலயத்துக்கே எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். பிரான்ஸ் மடாலயத்துக்குத் திரும்பிய சில வாரங்களில் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. “தோட்டத்தில் உலாவவும், மரத்தடியில் அமரவும், பறவைகள் ஒலியைக் கேட்கவும்” தம்மால் முடிவதாக ஒரு பத்தியில் குறிப்பிட்டிருந்தார். ரத்தக்கசிவின் காரணமாக பேசும் சக்தியை இழந்திருந்த அவர் கடைசி வரை பேச முடியாமலேயே இருந்தார்.

2016இல் தாயகம் வியட்நாமுக்கு அருகில் இருக்கும் தாய்லாந்தில் உள்ள அவருடைய மடாலயத்தில் தங்க விருப்பப்பட்டார். 2016இல் அவர் தாய்லாந்துக்கு வந்தார். தாய்நாட்டில் அவர் துறவறம் பெற்ற ட்யூ (tueh) புத்த கோயிலில் வந்து தங்க வியட்நாம் அரசாங்கத்திடம் பல முறை  அனுமதி வேண்டினார். இறுதியில் 2018இல் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தன் பயணத்தை எங்கு 1951இல் துவக்கினாரோ அந்தப் புத்த கோயிலிலேயே  இறக்கும் வரை தங்கியிருந்தார்.

1966இல் அமெரிக்க பயணத்தில் இருந்த போது தாய் நாட்டுக்கு திரும்பும் அனுமதி மறுக்கப்பட்டது. போருக்கெதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தவர் – தென் வியட்நாமும் சரி வட வியட்நாமின் கம்யூனிஸ்ட் போராளிகளும் சரி – இரு சாராருக்கும் வேண்டாதவர் ஆனார். 1966 இல் அமெரிக்காவில் அவர் விட்ட ஓர் அறிக்கை வியட்நாமில் மட்டுமில்லை, வல்லரசான அமெரிக்க அரசிடமிருந்தும் அவரை தூரப்படுத்தியது. அந்த அறிக்கையில் அவர் சொன்னது : “நான் எவர் பக்கத்திலும் இல்லை. அமைதியின் பக்கம் இருக்கிறேன். போர் நிறுத்தமே நான் வேண்டுவது. எந்த அரசியல் நிலைப்பாட்டையும் நான் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை.” 1966 இலிருந்து 39 வருடங்கள் அவர் அகதியாக இருந்தார். பிரான்ஸ் அவருக்கு அடைக்கலம் தந்தது. 

கறுப்பினத் தலைவர் மார்டின் லூதர் கிங் அவர்களுடனான திக் நியாட் ஹானின் நட்பு அமெரிக்க மக்களிடையே வியட்நாம் ஆக்கிரமிப்புக்கெதிரான கருத்து வலுப்பெற காரணமாக அமைந்தது. துறவி கேட்டுக் கொண்டதற்கிணங்கி மார்டின் லூதர் கிங் தன் உரைகளில் வியட்நாம் போர் எதிர்ப்பையும் ஒர் அஜெண்டாவாக சேர்த்துக் கொண்டார். திக் நியாட் ஹானின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். எப்போதும் நடப்பது போல் போரில் ஈடுபட்ட இரு பக்கத்தைச் சார்ந்தவருக்கே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மார்டின் லூதர் கிங் தன் பரிந்துரையைப் பற்றி இரகசியமாக வைத்துக் கொள்ளாமல் ஒரு பேட்டியில் பகீரங்கமாகச் சொல்லிவிட்டார் என்பதால் நோபல் பரிசு இறுதிப்பட்டியலில் துறவியின் பெயர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று நோபல் கமிட்டி விளக்கம் அறிவித்தது. “மென்மையான உள்ளங்கொண்ட இந்த வியட்நாமியத் துறவியை விட (பரிசுக்கு) தகுதியானவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. அமைதிக்கான அவரது யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால் உலக சகோரத்துவத்துக்கும் மனித குலத்திற்கும் ஒரு அழியா நினைவுச்சின்னத்தை உருவாக்கும்” – இது மார்டின் லூதரின் சொற்கள்.

அறுபதுகளில் போர் உச்சத்தில் இருந்தபோது திக் நியட் ஹான் மற்றும் அவருடைய சங்கத்துறவிகள் ஒரு தீர்மானம் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருந்தன. குண்டுகளால் மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கையில் துறவிகள் தம் போக்கில் தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டுமா? அல்லது மடாலயத்தை விட்டு வெளியே வந்து தெருக்களில் குண்டடி பட்டு வீழ்ந்துகிடக்கும் மக்களுக்கு உதவிகள் செய்து அவர்கள் உயிர் காக்க வேண்டுமா? அவர்கள் இரண்டையும் செய்ய முடிவெடுத்தனர். மக்களின் உயிரைக் காத்தல் மற்றும் அதை மனக்கவனப்பயிற்சிக்குள் (mindfulness practice) மக்கள் பணியை உள்ளடக்கியவாறு செய்தல் – இப்படிப் பிறந்தது தான் திக் நியட் ஹான் உருவாக்கிய பௌத்த சமயக் கொள்கை – Socially Engaged Buddhism. 

“சமூக ஈடுபாடு கொண்ட பௌத்தம் என்பது அனைத்து உயிர்களின் முழுமையான, சிக்கலான, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையைப் புரிந்துகொள்வதில் இருந்து எழும் ஒரு தர்ம நடைமுறையாகும். எல்லா உயிர்களையும் காப்போம் என்பது போதிசத்துவர் சபதம். நமது விடுதலையும் பிறர் விடுதலையும் பிரிக்க முடியாதவை என்பதை அறிவதும்,  தர்மத்தின் கண்ணால் உலகைப் பார்ப்பதும், கருணையுடன் உறுதியோடு தக்க செயல் புரிதலும் இதன் அம்சங்களாகும்.”  (Donald Rothberg and Hozan Alan Senauke, from the essay – Turning Wheel).

சமூக ஈடுபாடுள்ள பௌத்தம் குறித்த கோட்பாட்டு அடிப்படைகளை 1951இல் எழுதிய ஒரு கட்டுரை நூலில் விரிவாக எழுதியிருந்தார் திக் நியட் ஹான். வியட்நாம் போரின் போது கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வாய்ப்பு அமைந்தது. ஆசியாவிலும் மேற்கிலும் இருந்த பௌத்த அமைப்புகளுக்கிடையிலான தொடர்புகளை நிறுவி பௌத்த அறநெறிகளின் அடிப்படையிலான சமூக-அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வியட்நாம் போர் நல்ல கேஸ்-ஸ்டடியாக அமைந்தது. போருக்குப் பின்னர், அடிப்படைகளைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தியும் கிடைத்த அனுபவங்களின் பாடங்களை மேற்படி சேர்த்து செம்மைப் படுத்தியும் சமூக பௌத்தத்தை தான் இறக்கும் வரை முன்னெடுத்தவாறிருந்தார்.

மகாயான நூல்களில் போதிசத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி போலவே சமூக ஈடுபாட்டு பௌத்தத்திற்கென்று திக் நியட் ஹான் 1993இல் உருவாக்கிய பதினான்கு உறுதி மொழிகளில்  நான்காவது உறுதிமொழி இது – “ துன்பத்தை தவிர்க்கவோ, துன்பத்தைக் காண்கையில் கண்களை மூடிக் கொள்ளவோ வேண்டாம். உலக வாழ்க்கையில் துன்பத்தின் இருத்தலைப் பற்றிய விழிப்புணர்வை இழக்க வேண்டாம். சந்தித்தல்கள், உரையாடல்கள், இயங்குதல்கள் வாயிலாக துன்பப்படுபவர்களுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டாம். இத்தகைய வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல் மூலமாக உலகின் துன்ப வாழ்க்கைப் பற்றிய பிரக்ஞையை உம்மிலும் மற்றவர்களிலும் எழுப்புங்கள்”

தாய் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் நெடுங்காலம் வசிக்கும் கட்டாயம். கடந்த நான்காண்டுகளாக அவர் ட்யூ கோயிலில் தங்கியிருந்து தன் இறுதி நாட்களை கழித்த சமயங்களிலும் உளவாளிகளைப் பக்தர் வேடத்தில் வேவு பார்க்க அரசு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். தலாய் லாமாவுக்கும் கிட்டத்தட்ட இதே மாதிரியான சிக்கல்கள். தாய்நாட்டிலிருந்து வேறு நாட்டில் தஞ்சம் கோர வேண்டிய சூழ்நிலை. சொந்த தேசத்துக்கு, அவர் வசித்த பொடாலா மாளிகைக்கு அவர் திரும்பிச் செல்வது நடக்காத காரியம் என்னும் கசப்பான உண்மையின் போதம். எனினும், இவ்விரு குருமார்களையும் காணும்போதும் அவர்களின் உரைகளைக் கேட்கும் போதும் பார்வையாளர்களின் மனதில் வந்தமரும் அமைதி அவ்விருவரின் “புத்தகாயங்களின்” நீட்சி என்பதாக எண்ண முடியும். தம் விடுதலை மற்றவர்களின் விடுதலையைச் சார்ந்திருக்கிறது என்பதை உள்வாங்கியவர்களாய், ஒவ்வோர் அடியையும் உள்வாங்கிய உண்மையின் வழி நடத்தலில் எடுத்துவைப்பதாகக் கொள்ளமுடியும். 

பிரஜ்னபாரமித சூத்திர விளக்கக் கட்டுரையொன்றில் இலை பற்றிய குட்டிக் கதையொன்றைக் கூறுவார் திக் நியாட் ஹான். – “இலையுதிர் காலத்தில் ஒரு நாள் ஒர் இலையுடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘இலையுதிர் காலம் என்பதாலும் மற்ற இலைகள் உதிர்ந்துவிட்டதாலும் பயமா என்று அந்த இலையிடம் கேட்டேன்.  இலை என்னிடம், ‘இல்லை. வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் நான் உயிருடன் இருந்தேன். நான் கடினமாக உழைத்து மரத்தை வளர்க்க உதவினேன், என்னில் பெரும்பகுதி இம்மரத்தில் உள்ளது. தயவு செய்து நான் இந்த வடிவம் மட்டுமே என்று சொல்லாதீர்கள், ஏனென்றால் இந்த இலை வடிவம் என்னில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நான் முழு மரம். நான் ஏற்கனவே மரத்தின் உள்ளே இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், நான் மீண்டும் மண்ணுக்குச் செல்லும்போது ​​மரத்தை தொடர்ந்து வளர்ப்பேன். அதனால்தான் நான் கவலைப்படவில்லை. நான் இந்த கிளையை விட்டு தரையில் கிடக்கும்போது ​​நான் மரத்தை கை அசைத்து அவளிடம், ‘நான் உங்களை விரைவில் சந்திப்பேன்’ என்று கூறுவேன்.”

புத்தகாயத்தை தட்டி எழுப்புதலைத் தன் வாழ்நாள் பணியாகச் செய்து கொண்டிருப்போர் மரணிப்பதில்லை. பிற உயிர்களின் விடுதலையைத் தன் விடுதலையாக எண்ணி வாழ்ந்தோர் இறந்தும் மற்றவர்களுடனேயே  உதிரத் தயாராக இருக்கும் இலை போல காற்றாக வெளியாக வானாக மேகமாக தங்கிவிடுகிறார்கள்.

இலை குட்டிக் கதை இடம் பெற்ற அதே கட்டுரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார் –

“நாளை, நான் தொடர்ந்து இருப்பேன். ஆனால் நீங்கள் என்னை மிகவும் கவனமாக தேடிப் பார்க்க வேண்டும். நான் பூவாகவோ, இலையாகவோ இருப்பேன். உங்களுக்கு வணக்கம் சொல்வேன். நீங்கள் போதுமான கவனத்துடன் இருந்தால் என்னை அடையாளம் கண்டுகொள்வீர்கள். வணக்கம் சொல்வீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.”

நன்றி : காலச்சுவடு

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.