விதிகள் என்னென்று தெரியாத
விளையாட்டில்
அன்னை தாயமுருட்ட
தோல்வியுற்ற பரமன்
வெகுண்டெழுந்தார்
துணையற்று
பித்துற்று
தனிமையில்
தவித்திருந்தார்
இன்னும் தவிக்கட்டும்! –
புன்சிரிப்புடன்,
காத்திருக்காதவர் போன்று
அன்னை
நடித்திருந்தார்
தனிமைத்தீயின்
உக்கிரம் பொறுக்காது
தவத்திலாழ்ந்தார் சிவன்
நெடுநாள்
தவத்துள்ளிருந்தவருக்கு
ஒருநாள்
தானாக நகைப்பு
சற்று தூரத்தில்
இமவான் மகளாக
அன்னை
தம் தோழிகளுடன்
பூவனம் நோக்கி வந்து
கொண்டிருந்தார்
அன்னை இப்போது
மறந்து போயிருந்த
தாய விளையாட்டை
நினைவு கூர்ந்த பரமனின்
அகப்புன்முறுவல்
தொடர்ந்தது
“ஒவ்வொரு முறையும்
தாய விளையாட்டை மறந்துவிடுகிறாள் இவள்
எனினும்
ஒவ்வொரு முறையும்
இவளே வெல்கிறாள்”
அப்போது
அவர் மீது
எய்யப்பட
கரும்புவில்லொன்று
தயாராக இருந்தது