இறந்த காலத்தின் ஒரு துண்டு

நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். ஐந்தரைக்கு பாடல்கள் ஒலிப்பது நிற்கும். அதன் பின் ஐந்தரையிலிருந்து ஆறரை வரை ஸ்டடி-ஹவர். அதற்குப் பின் சூர்ய நமஸ்காரம். பின்னர் குளியல். அதன் பின்னர் இறை வழிபாடு (தினத்தில் மூன்று முறை வழிபாடு). இப்படி ஒரு கல்லூரி இருந்ததா என்று கேட்டீர்களானால், சத்தியமாக சொல்கிறேன். இத்தகைய ஒரு கல்லூரியில் தான் நான் மூன்று வருடம் படித்தேன். ஐந்து மணிக்கு ஸ்பீக்கரில் அலற விடப்படும் இறை பக்திப் பாடல்களின் மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இருபத்தியெட்டு வருடங்களாக மறந்துவிட்ட அந்த பாடலின் மீது கல்லூரி காலங்களில் அதிக ஈர்ப்பு இருந்தது. அது ஒலிக்கும் அந்த விடியற்காலத்தில் குருவாயூரப்பன் சுவாமிக்கு நடத்தப்படும் தைலாபிஷேகம், கும்பாபிஷேகம், விஸ்வரூப தரிசனம் முதலானவற்றை விவரித்து நாராயணனை வழிபடும் பாடல் ஏனோ என்னை மிகவும் ஈர்த்தது. ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்புவதற்காகவே ஸ்பீக்கரில் அதிக கனபரிமாணத்தில் அலற விடப்படும் எந்த பாடல் எந்த மாணவனுக்கு பிடித்தமாக இருக்கும்? ஆனால் அந்த குருவாயூரப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்குள்ளேயே (அதாவது எனக்கு மட்டும் கேட்கும்படியாக…மற்றவர்களுக்கு ஏன் துன்பம் தர வேண்டும்?) அந்த பாடலை நான் பாடிக் கொள்ளும் போது நெகிழ்ந்து போவேன்.

சரி மறந்து போன பாடலை திரும்ப ஏன் ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும்? மறந்துவிட்டதாகவே இருக்கட்டுமே? “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே” பாடல் மறந்து போகுமா என்ன? அந்த பக்திப் பாடல் தானே காலத்தை வென்ற பாடல்! இந்த குருவாயூரப்பன் பாடலுக்கு அல்பாயுசு என விட்டுவிட வேண்டியது தானே! ஓரிரு வாரங்களாக அந்த பழைய பாடலை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்கும் உந்துதல் அதிகமாகிவிட்டது. இறந்த காலத்திய நினைவுகளுடன் மீண்டும் தொடர்பேற்படுத்திக் கொள்ளும் ஆசையிது என்று நான் கருதவில்லை. இறந்த காலத்திலிருந்து ஒரு புதையல் வேட்டை என்று ஒரு விளையாட்டாகவே இதைக் கருதினேன்.

பாடலின் மெட்டு மனதில் இருந்தால் முதல் வரி ஞாபகமிருக்கும். மெட்டு ஞாபகமில்லை. இரண்டாவது வரியில் “குருவாயூரப்பா” எனும் சொல் வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் ஆயிரக்கணக்கில் பாடல்கள்- தமிழில் மலையாளத்தில். ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்பிபி, கே வீரமணி என்று பல பாடகரகள் குருவாயூரப்பன் மீது ஆல்பம் போட்டிருக்கிறார்கள். அந்த பாடலில் வரும் இன்னொரு சொல் ஞாபகத்தில் இருந்தது. “மயிற்பீலி கிரீடம்” எனும் சொல் முதலாம் சரணத்திலோ இரண்டாம் சரணத்திலோ வரும். அந்த சொல்லை வைத்து தேடினால் பல மலையாள பாடல்கள் வரிசையாக வந்தன. அநேகமாக எல்லா குருவாயூரப்பன் பாடல்களிலும் “மயிற்பீலி கிரீடத்தை” பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் தேடும் முயற்சியை சில மணி நேரம் நிறுத்தி வைத்தேன். ஆனால் உந்துதல் மேலும் அதிகமானது. இறந்த காலத்தின் ஒரு நினைவுத் துண்டு எப்படி நம்முடன் இல்லாமற்போகலாம்? ஓர் அவஸ்தையாக உருமாறத் தொடங்கிற்று அந்தத் தேடல். நேற்றிரவு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன். குருவாயூரப்பனும் மயிற்பீலி கிரீடமும் என் மனத்துடனான உரையாடலில் வந்தவாறிருந்தன. “இது என்ன பைத்தியக்காரத்தனம்” என்று என் மனத்தை கடிந்து கொண்டேன். சற்று அமைதி. ஓரிரு நிமிடங்களாகியிருக்கும். இறந்த காலத்திலிருந்தா அல்லது ஞாபக அடுக்கிலிருந்தா….மெட்டை முணுமுணுக்க ஆரம்பித்தேன்…இரண்டாம் வரியில் “குருவாயூரப்பா” சரியாகப் பொருந்தியது. இரண்டாம் முறையாக மெட்டை முணுமுணுக்கும் போது முதல் வரி கிடைத்துவிட்டது.

“வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது
குருவாயூரப்பா எனும் கோஷம் அழைக்கிறது”

பி சுசீலாவும் கே வீரமணியும் பாடியிருக்கிறார்கள். இப்போது கேட்கும்போது டிபிகல் டெவோஷனல் ட்யூனாக ஒலிக்கிறது. இருந்தாலுமென்ன இறந்த காலத்திலிருந்து மீட்டெடுத்த இந்த நினைவு விளையாட்டு உற்சாகம் கொடுத்தது. நினைவுக்கு முன்னால் இணையம் ஒன்றுமில்லை. கடவுச் சொல்லை நினைவுதான் தர வேண்டும்.

கரோனா

புது பிறப்பாக
இன்றைய நாட்களை உணர நினைக்கிறேன்
பெரும் நோயின் பிடியிலிருந்து
விலகிய பின்னர்
நான் எனக்களித்துக் கொள்ளும்
புது அனுபவமாக
இந்நாட்களை கடக்க நினைக்கிறேன்
ஆனால் கணினியில்
தினமும் காலைகளில் வரும்
அந்த பழைய முகம்
அதே பழைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறது
கணினியை மாற்றிவிட
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
கேட்கப்படும் கேள்விகளும்
மாறிவிடக் கூடும்
எனும் நம்பிக்கை
சற்று பூத்திருக்கிறது

#

மணமிழந்த
சுவையிழந்த
அனுபவம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
பசி குறைவில்லை
சுவை – மணம்
இல்லாமலும் இயங்கும்
இயந்திரம் இது
என யோசிக்கையில்
ஆட்டோ-மோட் வாழ்க்கையை
மறைக்கும் குணங்கள் தாமோ
மணமும் சுவையும்
எனும் கேள்வி வந்து போகிறது

#

நுரையீரல்
மீது அப்பிய ஜலதோஷம்
காய்ச்சலாய் உடல் வெப்பத்தை ஏற்றி
பின்னர் மூச்சை குறைக்க எத்தனிக்க
பிராண வாயு ரத்தத்தில்
உறையாமல்
மயக்கத்தில் தள்ளிய பிறகு
குளிர்ந்த பிராணம் மறுபடி நெஞ்சில் நிறைய
தொடங்கும் சில மணி நேரங்கட்கு
நடுவே
மரண வேதனை அனுபவித்தது நானில்லை
ஆக்ஸிஜன் படுக்கைக்காக
தேடித்தேடி அலைந்து திரிந்த என் வீட்டாரும் உற்ற நண்பர்களும்

#

தேவன் இருக்கின்றான்
ரொம்ப கஷ்டத்தில் இருக்கையில்
அவன் தோன்றுவான்
நேரிலல்ல
இணைய தள வரிகளாக
தொலைபேசி குரலாக
எது முடியாது என நாம் நினைப்பது
கஷ்டத்தின் போதே நமக்கு அருளப்படுகிறது
தேவன் இருக்கிறான் என்பதை உணரும் அனுபவம்
நெகிழ்ச்சி – அதிகாரம்
இரண்டையும் ஒருசேர உணரும் தருணம்