நடக்கும் மலை பறக்கும் நதி

பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அஸ்திவாரமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதானும் தீர்வுகளை அளிக்க முனைகிறதா?. சூழல் பாதுகாப்பு முறைகள் மற்றும் சூழலியல் சீர்கேடு காரணமாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் – இவை ஒப்பீட்டளவில் புதிய பிரச்னைகள். சுற்றுப்புறம் மாசுபடுதல் பௌத்த சிந்தனை துவங்கிய காலத்தில் அறியப்படாத ஒரு பிரச்னை. எனவே சூழலியல் பிரச்னை குறித்த நேரடிக் குறிப்புகள் பாலி நெறிமுறையிலோ மகாயான சூத்திர இலக்கியங்களிலோ காணப்படுவதில்லை. சூழலியல் சீர்கேடு பற்றிய எதிர்வினைகள் அல்லது தீர்வுகள் மனித நேய அணுகுமுறையிலானதாக இருக்க வேண்டும். அல்லாது வெவ்வேறு மானிட நம்பிக்கைகளின் அடிப்படையில் அமையுமெனில் குழப்பமே மிஞ்சும் என்று கருதும் சூழலியல் வல்லுனர்கள் உண்டு. இருந்தாலும், இயல்புகளை, இன்னொரு விதமாகச் சொல்லப்போனால், இயற்கையின் அனைத்து அனுபவங்களை பிரதிபலிக்கும் முழுமையான தத்துவம் எனும் நோக்கில் பௌத்த இலக்கியங்களை வாசிக்கும்போது, பாலி நெறிமுறைகளிலும் மகாயான சூத்திரங்களிலும் இயற்கை சார்பான பௌத்த அணுகுமுறைகள், பௌத்தர்கள் கொள்ள வேண்டிய மனப்பான்மைகள் போன்றவை பற்றி போதுமான அளவுக்கு கருத்துமூலங்கள் இருப்பது தெளிவாகிறது.

வரலாற்றுப் புத்தர் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடத் தகுந்த வகையில் வட இந்தியா, குறிப்பாக அவர் புழங்கிய கங்கைச் சமவெளி – நகரங்களின் வளர்ச்சி மற்றும் அரசியல் அதிகாரக்குவிப்பு வாயிலாக – சுற்றுப்புறச் சூழல் சார்ந்த எழுச்சிக்காளாகிக் கொண்டிருந்தது. விவசாய விரிவாக்கத்துக்கும் நகரங்களை திட்டமிடவும் மனிதப் புழக்கமிராத காடுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. காண்டா மிருகங்கள், யானைகள், புலிகள், பெரும் பாம்புகள் இன்ன பிற மிருக வகைகள் வசிக்கும் வீடாக இருந்த காடுகள் அச்சுறுத்தும் இடங்களாகவும் விளிம்பு நிலப் பிரதேசங்களாகவும் நோக்கப்படலாயின. புத்தரும் அவருடைய சீடர்களும் இந்த விளிம்பு நிலப் பிரதேசங்களை பயன்படுத்திக் கொண்டனர். எனினும், விவசாய பருவங்களுக்கு இடமளிக்கும் வகையில் அவர்களின் தம்மபோதனை மற்றும் பின்வாங்கல் (retreat) நேரங்களை மாற்றியமைத்துக் கொண்டனர். உள்ளூர் சமூக ஆதரவைப் பெறுதலையும் பௌத்த சங்கத்தின் இன்றியமையாத அங்கமாக அமைத்துக் கொண்டனர். உள்ளூர் சமூகங்கள் சங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிப்புறாவண்ணம் பார்த்துக் கொண்டனர். உதாரணமாக பிக்குகளும் பிக்குணிகளும் நீரோடைகளுக்கருகே மலசலம் கழிக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், நீரோடைகளில் பொதுமக்கள் கை கால் கழுவிக் கொள்வர் அல்லது நீரருந்துவர். இதே போல, பிக்குகளும் பிக்குணிகளும் பிற உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்றும் வழிமுறைகள் இருந்தன. அனைத்து உயிர்களின் பாதுகாப்பு ஒரு பௌத்த கொள்கை. புத்த பிக்குவின் முதல் உறுதி மொழி – “வாழ்க்கையை அழிப்பதை நான் தவிர்க்கிறேன்.” – என்பது.

வாழ்க்கையைப் போற்றுதலிலிருந்து பௌத்தம் தொடங்குகிறது. வாழ்வின் ஒன்றுடன் ஒன்று சார்ந்த தன்மையை அது வலியுறுத்துகிறது. எல்லா உயிர்களும் நிர்வாணத்தை எய்தும் ; துக்கத்தை முடிக்கும் ; பிறப்பு – இறப்பு சக்கரத்திலிருந்து விடுதலை பெறும் என்னும் உயரிய லட்சியத்தை பறை சாற்றுகிறது. வாழும் உயிர்களின் ஒருமையை அது உறுதிப்படுத்துகிறது. அனைத்து உயிர்களும் புத்தவியல்பை கொண்டவையாயுள்ளன, எனவே ஒவ்வோர் உயிரும் புத்த நிலையை அடையும் சாத்தியக் கூறுள்ளவை. உயிர்களுக்கு நடுவே இரண்டாந்தர உயிர் என்று எதுவுமில்லை. பிற உயிர்களை விட மனிதனுக்கென்று இவ்வுலகில் சிறப்பான இடம் ஒன்றும் இல்லை.

ஜாதகக் கதைகளை எடுத்துக் கொள்வோம். புத்தரின் பல முன்பிறவிக் கதைகளில் குரங்காக, கிளியாக, மரமாக அவர் பிறவியெடுத்த கதைகள் வருகின்றன. அந்த பிறவிகளில் துயரப்படும் பிறரின் மேல் அவர் காட்டிய பெருங்கருணையை கதைகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. ஜாதகக் கதைகளில் சொல்லப்படும் நீதிகள் பலவும் சூழலியல் கவலைகளை நிவர்த்தி செய்யும் வழிவகைகளைச் சுட்டுகின்றதோ என்றெண்ண இடமுண்டு. பெரும்பாலான ஜாதகக் கதைகள் சுற்றுப்புறம் சார்ந்த நல்லொழுக்க நெறிமுறைகள் என்பதாக வாசிக்க முடியும்.

சுற்றுச் சூழல் மாசுபடுவதற்கு மானிட ஆணவம் ஒரு முக்கிய காரணி. ஆணவ குணத்தினால் இவ்வுலகின் மையமாக மனித இனம் தன்னைக் கருதிக் கொள்கிறது. அறிவுள்ள உயிர் என்பதினால் தம்மை ஆற்றல் படைத்தவர்களாக எண்ணுவது மட்டுமில்லாமல், விளைவுகளைச் சந்திக்காமல் எதையும் சாதித்து விடலாம் என்னும் தவறான மனப்பாங்குடையவர்களாகவும் மனித இனம் இயங்கிக் கொண்டுள்ளது. நியாயமற்ற அதிகாரம் குறித்த கேள்வியும் “மனித மையம்” என்னும் கருத்தியல் அதன் அங்கீகரிக்கப்பட்ட அம்சமாக இருப்பது பற்றியும் இன்றைய சுற்றுச்சூழல் விவாதங்கள் வலியுறுத்தியவாறுள்ளன. இதே கருத்தை பல ஜாதகக் கதைகள் பிரதிபலிக்கின்றன. கதையின் நாயகன் அளவு கடந்த அதிகாரத்தைக் கொண்டிருப்பதும் அவனின் செய்கைகள் அவனுக்கு கொடுமையான விளைவுகளைத் தருவதும் திரும்பத்திரும்ப பல கதைகளில் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.

இயற்கை நம்முள் ஏற்படுத்தும் வியப்புணர்ச்சியும் மலைப்பும் ஆன்மீக சாதனைகளுக்கான மதிப்பு மிக்க கருவி. இந்த கருத்தும் ஜாதகக் கதைகளில் பேசப்படுகிறது. இயற்கையில் காணும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பதன் வாயிலாக அனைத்துப் பொருட்களின் நிலையாமை பாடத்தை பிக்குகள் கற்கின்றனர்.

நன்றியுணர்வைக் கைக்கொள்ளாதோர் மீது இயற்கை காட்டும் சினத்தை சித்திரிக்கும் கதைகளும் ஜாதகக் கதைகளில் உண்டு. நமக்கு நன்மை புரிந்தோர் மேல் நன்றி காட்டாமல் இருப்பது தண்டனைக்குரித்தாகும் பெரும் பிழை. இயற்கை மீது நன்றி பாராட்டாமல் இருப்பதனால் எழும் கேடு ஒரு குறியீட்டளவில் இல்லாமல் நியதி என்பதாகவே ஜாதகக் கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன.

தவறான அல்லது அதீத நுகர்வை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஜாதகக் கதைகள் பேசத் தயங்கவில்லை. சுற்றுப் புறச் சூழல் மாசுபடுதற்குப் பின்னர் இருக்கும் பெருந்தீங்கு – பேராசை. பல ஜாதகக் கதைகள் பேராசைக் குணம் பற்றி எச்சரிக்கின்றன.

பாலி வினய நூல்களின் முக்கிய வழிகாட்டல் கொல்லாமை. அஹிம்சை. பிற வாழும் உயிர்களுக்கு இம்சை விளைவிக்காதிருத்தல். கொல்லுதலை ஏன் தவிர்க்க வேண்டும்? ஏனெனில், எல்லா உயிர்களிலும் தம் வாழ்வை விரும்புகின்றன. இறக்க விரும்புவதில்லை. நம்மை கடிக்க வரும் கொசு கூட நம் உடலின் சிறு அசைவில் பறந்து போய் விடும். வாழ்க்கையை போற்றுதல் கருணைச் சிந்தனையை வளர்த்தெடுக்கும். வாழ்க்கையைப் போற்றுதலின் இன்னொரு பரிமாணம் இயற்கையுடன் ஒன்றுதல். இயற்கையுடன் ஒன்றுதலைப் பேசும் பழம் பெரும் பௌத்த இலக்கியங்களில் தேரகதாவும்[1] ஒன்று.

புத்தர் காலத்திலேயே இயற்கையுடன் ஒன்றி தம்ம சாதனையை இணைத்துக் கொண்ட ஓர் அருகர் இருந்திருக்கிறார். அவர் புத்தரின் பிரதான சீடர்களில் ஒருவர். மகாகஸ்ஸபர். புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பின் கூடிய முதல் பௌத்த சபையை தலைமையேற்று வழி நடத்தியவர் அவர் எனக் கூறப்படுகிறது. மகாகஸ்ஸபர் மற்ற சீடர்களைப் போன்று மடாலயங்களில் அதிகம் வசிக்க மாட்டார். சில முறை புத்தரே அவரிடம் கேட்டுக் கொள்ளும்போது கூட பிற பிக்குக்களுடன் சேர்ந்து மடாலயத்தில் தங்குவதை மறுத்து விடுகிறார். காடுகளிலும், மலைகளிலும் ஒரு வசதியுமில்லாமல் தங்கி தம்ம சாதனைகளில் ஈடுபடுவதை தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். இது ஏன் என அவரிடம் அடிக்கடி தொடுக்கப்பட்ட வினாவுக்கான விடையை தேரகதாவின் 1062-1071 எண் செய்யுட்களில் தருகிறார்.

ஆளி மலர்களின் நீலநிற மொட்டுப் போன்று

மேகம் சூழ் இலையுதிர்கால வானம் போன்று

பலவகை பறவைக் கூட்டங்கள் வட்டமடிக்கும்

மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை

உபாசகர் வந்து அலை மோதுவதில்லை

ஆனால் மான் கூட்டம் வசிக்குமங்கே

பலவகை பறவைக் கூட்டங்கள் வட்டமடிக்கும்

மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை

தெளிவான நீரோடும் அகன்ற பள்ளத்தாக்கு

மான்களும் குரங்குகளும் நடமாடுமங்கே

ஈரப் பாசிக் கம்பளம் விரித்த

மலைச் சிகரங்கள் எனக்கு மகிழ்வைத் தருபவை

ஐந்து கருவிகளின் இசை சங்கமமும்

அத்துனை மகிழ்வை எனக்களிக்காது

ஒருமுகமாக மனதைக் குவித்து

பெறும் தம்மத்தின் நுண்ணறிவைப் போல

மகாகஸ்ஸபர் மறைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவிலும் ஜப்பானிலும் தோன்றி வளர்ந்த மகாயான ஜென் பௌத்த மரபில் அதன் முதல் ஆசாரியராக மகா கஸ்ஸபரைக் கருதுகிறார்கள். இதற்கான காரணம் சீன சான் / ஜென் மரபுகளில் கூறப்படும் ஒரு தொன்மத்தில் வருகிறது. ஒரு முறை சங்கத்தில் தன் பிரசங்கத்தை துவக்குமுன்னர் ஒற்றை மலரொன்றை ஏந்தி அமைதியாக சற்று நேரம் இருந்தார் புத்தர். அங்கு கூடியிருந்தோர் அனைவரும் புத்தரின் பிரசங்கம் துவங்க காத்திருந்தார்கள். மலரை புத்தர் கையில் ஏந்தியிருந்ததை அவர்கள் பார்த்தார்களே தவிர தாத்பர்யத்தை உணர்ந்தார்களில்லை. கூடியிருந்தவர்களில் கஸ்ஸபர் மட்டும் புத்தரைப் பார்த்து புன்னகைத்தார். புத்தர் மனதில் நினைத்ததை அவர் வாய் திறக்காமலேயே வாய்மொழியின் துணையின்றி உணர்ந்து தேருபவராக கஸ்ஸபர் இருந்தார் என்று ஜென் பௌத்த மரபு சொல்கிறது. மலர் பிரசங்கம் என்று குறிக்கப்படும் இந்த தொன்மம் வாய் மொழி அல்லது ஆகமங்களின் துணையின்றி அவற்றை மீறி நிற்கும் உண்மையின் இயல்பை நேரடியாக உணரும் ஜென் பௌத்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. புத்தரின் மலர் பிரசங்க மரபுக்கதையில் மகா கஸ்ஸபரின் இணைப்பு இயற்கைப் பின்னணியில் தம்மசாதனை புரியும் தொன்மத் தகவலிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மகா கஸ்ஸபரை ஜப்பானிய பௌத்தர்கள் மகாகஷோ என்று குறிப்பிடுகிறார்கள்.

சீனாவிலும் ஜப்பானிலும் மலைப்பகுதிகளிலும் வனப்பிரதேசங்களுக்குள்ளுமே அதிகமாக ஜென் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். ஹைகூ மற்றும் பிற செவ்வியல் கவிதை வடிவங்களிலும் இயற்கையுடன் ஒன்றும் தன்மை பிரதானக் கருப்பொருளாக உள்ளது.

மகாகஷோவை முதல் ஆசாரியராகக் கொண்டு வளர்ந்த ஜென் பௌத்த குருமார்கள் வரிசையில் அதிமுக்கியமானவர் தோகென்(1200 – 1253 CE). பதிமூன்றாம் நூற்றாண்டில் ஜென் பௌத்தம் ஜப்பானில் அடைந்த மறுமலர்ச்சிக்கு அவருடைய பங்கு மகத்தானது. சோடோ ஜென் பிரிவின் ஸ்தாபகராக அவர் கருதப்படுகிறார். அவர் தங்கியிருந்த eiheiji கோயில் சோடோ ஜென் உபாசகர்களின் முதன்மைக் கோயிலாக இன்றும் உள்ளது.

மகாயான சூத்ரங்கள் இந்தியாவிலிருந்து சீனா வழியாக இறக்குமதி செய்யப்பட்டு ஜப்பானிய ஆன்மிக மரபில் வேரூன்றியிருந்தது. தோகென் மகாயான சூத்திரங்களின் பாணியில் பௌத்த மெய்யியலையும் ஜப்பானிய கவிதையியல் கருப்பொருள்களையும் ஒன்றிணைத்து தொண்ணூற்றி மூன்று கட்டுரைகள் எழுதினார். இந்த கட்டுரைத் தொகுதியின் பெயர் ஷோபோகென்ஸொ.

இந்த நூலின் மிகப் பிரபலமான கட்டுரை – மலைகள் மற்றும் நதிகள் சூத்திரம். மகாயான சூத்திரங்களில் பொதுவாகக் காணப்படும் இந்து புராண பாணி அற்புதங்களை விலக்கி மலைகளை, நதிகளை சூத்திரங்களாக எழுதினார். இருமையற்ற (nondualistic) புரிதலை, தர்ம இயல்பின் (Dharma Nature) நேரடி அறிதலை, தியானத்தின் இலக்காக வலியுறுத்தும் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியது மலைகள் மற்றும் நதிகள் சூத்திரம். மலைகளை, நதிகளை தர்ம எழுச்சியின் அடையாளங்களாகப் பார்க்கிறார் தோகென். நால்வகை வாய்மையின் முதல் வாய்மையில் விவரிக்கப்பட்டுள்ள துக்கங்கள் இருமை வாதப் புரிதலின் அடிப்படையில் எழும் அகங்கார நோக்கில் எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்குகிறார் தோகென். இத்தகைய இருமைவாதப் பார்வைகளை நீக்கி தன்னையும் பிறரையும் ஒரே ஆற்றல் மிக்க நிகழ்வின் பாகங்களாக நோக்குதலின் வாயிலாகவே ஆன்ம விடுதலை சாத்தியம் என்கிறார் தோகென்.

ஆங்கில மொழிபெயர்ப்பில் மலைகள் – நதிகள் சூத்திரம் வாசிக்க பரமசுகம். அறிவொளி பெற்ற மனதின் யதார்த்தத்தை இயற்கை-கவிதை அழகியலாக வெளிப்படுத்தும் மலைகள் – நதிகள் சூத்திரம் ஓர் உன்னத ஆன்மீக இலக்கியம். ஜென் பௌத்த சாதனைக்கு இன்றும் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியமான சூத்திரம்.

தோகென் இயற்கையின் காதலர். மலைகளுக்கு நடுவே பாழ்படாத காட்டுச் சூழலினுள் பாய்ந்தோடும் நீரோடைச் சத்தங்களின் பின்னணியில் Eiheiji கோயிலை அவர் கட்டியது இதற்குச் சான்று. முதற்கண் அவர் ஒரு ஜென் ஞானி. எனவே அவர் எழுத்தில் வரும் மலைகளும் நதிகளும் கவிதைகளில் வரும் மலைகளோ நதிகளோ அல்ல. மலைகளும் நதிகளும் தர்மத்தின் கண் ; உணரப்பட்ட பிரபஞ்ச உண்மை. மலைகள் – நதிகள் சூத்திரம் மலைகள், நதிகளைப் பற்றியதன்று. மலைகள், நதிகளே சூத்திரங்கள். அவையே உண்மையான புத்ததர்மம்.

மலைகள் – நதிகள் சூத்திரத்திலிருந்து சில துளிகள் :-

“மலைக்குணத்துக்கு

குறைவா என்ன மலைக்கு?

எனவே அது

அமைதியில் உறைந்து

நடந்து கொண்டிருக்கும்

மலையின் நடையை நன்கு கவனி

மனிதரைப் போலவே நடக்கும் அது”

++++

“ஒரே வித

நீர்ப்பாய்ச்சலைக் காண்பது

குறைப்பார்வை

உண்மையில்

பல வித நீர்ப்பாய்ச்சல்கள் உள்ளன

நீர் பூமியில் பாயும்

வானிலும் பாயும்

ஒற்றை வளைவில் பாயும்

அடிமட்டமில்லா குழியினில் பாயும்

நீர் தன் பாதையில்மேலுயரும் போது மேகங்களாகும்

நீர் தன் பாதையில் கீழே விழும் போது நதிகளாகும்”

+++++

“நீரைக் கோட்டைகளாகப்பார்க்கும்

டிராகன்களும் மீன்களும்

அவற்றிடம் சொல்லிப் பார்

நீர் பாய்ந்து கொண்டிருக்கிறதென

உன்னை ஆச்சரியமாய்ப் பார்க்கும் அவை

“மலைகள் நடக்கின்றன” எனக் கேட்டால்

நீ ஆச்சரியப்படுவது போலவே”

+++++

“நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஞானிகளும் துறவிகளும் மலைகளுக்குச் செல்கின்றனர். அதை தன் வசிப்பிடமாக ஆக்கிக் கொள்கின்றனர். வசிப்பிடமாக மட்டுமன்று. தன் மனமாகவும், காயமாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். வந்து சேர்ந்த ஞானிகளின் வாயிலாக மலைகளும் தம்மை உணர்ந்து கொள்கின்றன. ஆனால், மலைகளுக்குள் சென்ற ஆயிரமாயிரம் ஞானிகளையும் துறவிகளையும் அங்கு சென்று சேர்ந்த பிறகு அவர்களுள் ஒருவரைக் கூட யாரும் சந்திக்கவில்லை. மலைகளினுடைய வாழ்க்கையின் உணர்ந்தறிதல் மட்டுமே அங்குள்ளது ; அவர்கள் மலைகளினுள் நுழைந்ததன் ஒற்றைச் சின்னம் கூட எஞ்சியிருக்கவில்லை.”

+++++

மலைகளைத் தம்முடைய மனமாகவும் உடலாகவும் உணர்வது ஏன் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் கணமாகிறது?ஏனெனில் “மலைகள்” என்று சொல்லும் போது நாம் “மலைகளை” மட்டும் குறிக்கவில்லை. அனைத்து வடிவங்களையும்,அனைத்து – உணர்வுள்ள, உணர்வில்லாத – உயிர்களையும் குறிக்கிறோம். அனைத்து வடிவங்களும் நம் காயம் – மனம் எனும் பேருண்மையை உணர்ந்த பின்னர் நாம் வேறொர் உலகில் வசிக்கிறோம். இன்னும் பிறக்காத, அழிக்க முடியாத, ஆரம்பமும் முடிவும் இல்லாத பிரபஞ்சத்தில் வசிக்கிறோம். உனக்கும் முடிவோ தொடக்கமோ கிடையாது. மலைகளை, நதிகளை, உனது மனத்தை, உடலை, பிரபஞ்சத்தின் உடலை, மனதை எப்படி பேணிக் காப்பாய்? தோகென் சுட்டிக் காட்டும் பிணைப்பு நம் ஒவ்வொருவரிலும் புதைந்துள்ள வாழ்க்கை நிலையுடனானது. இதை நாம் உணரும் போது நமக்கு நாமே சக்தியளித்துக் கொண்டு இந்த உணர்வை மெய்யாக்குவோம். நாம் உணர்கிறோமோ இல்லையோ, அது நம்முள் என்றும் உறைந்திருக்கிறது.

“நாம் உண்மையாகவே மலைகளுக்குள் நுழையும் போது

பறவைகளும், பூச்சிகளும், விலங்குகளும், மலர்களும்

அமானுஷ்ய மேன்மையை கதிர்வீசுகின்றன

நம் பிரசன்னத்தில் பெரும் ஆனந்தம் எய்துகின்றன.”

________

நன்றி : கனலி

உதவி :-

(1) Dharmanet.org

(2) Great Disciple of Buddha – Their Lives, Their Works, Their Legacy – Nyanaponika Thera & Hellmuth Hecker

(3) Environmental Ethics in the Jatakas : Further reflections – an essay by Dr Pragati Sahni (published in the Book – Buddhist Approach to Environmental Crisis – UNDV Conference Volume)

(4) Mountains and Waters Discourse (Sansui Kyo) By Zen Master Dogen – Translated by Kazuaki Tanahashi

(5) Becoming the mountains and rivers – an essay by John Daido Loori – Published on Lion’s Roar

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.