ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பாறைகள் ஏதும் கண்ணில் படவில்லை. அதிக சத்தமில்லாமல் சீரான நீரோட்டம். ஆழம் அதிகமாக இருக்கலாம்! ஆற்றை கடக்கும் வழியை ஆமை யோசித்துக் கொண்டிருக்கையில் அதன் முதுகில் படர்ந்திருந்த விருந்தினர் தன் கொடுக்கினால் ஒரு போடு போட்டார். தேளின் கொடுக்கினால் ஆமையின் ஓட்டை பிளக்க முடியவில்லையென்றாலும் ஆமையின் பரிதாபவுணர்வு சடக்கென இடம் மாறியது. “ஏய் தேளே! உன்னை பத்திரமாக மறு கரை சேர்க்க கஷ்டப்பட்டு இந்த காட்டாற்றை கடக்க முயல்கிறேன். நீயோ நன்றியுணர்வில்லாமல் என்னையே கொட்டுகிறாயே?” என்று கேட்டது ஆமை. “எனக்காக நீ படும் கஷ்டம் எனக்கு தெரியாமலில்லை. என்ன செய்ய! யாராயிருந்தாலும் கொட்டுவது என் இயல்பு. கொட்டாமல் என்னால் இருக்க முடியாது” – தேள் பதில் சொன்னது. இந்த தேளுக்கு உதவி செய்ய இந்த காட்டாற்றில் இறங்கினோம். இந்த நன்றி கெட்ட தேளோ நம்மைக் கொட்டுகிறதே! கழிவிரக்கம் அதன் கவனத்தை கலைத்த சமயத்தில் சற்று பெரிதான அலையொன்று ஆமையின் முதுகில் விசையுடன் பாய்ந்தடிக்க நதியின் ஆழங்களுக்குள் ஆமை தள்ளாடி மூழ்கியது. அதன் முதுகில் இருந்த தேள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அதிர்ஷ்டமிருந்தால் ஆமை தரை தட்டக்கூடும்!
