இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது.
பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை.
—
மாகண்டிகர் சொல்வதைக் கேட்ட பகவான் சற்று யோசிக்கிறார். “ம்..இந்தப் பெண் அனுபமாவைப் பற்றி அன்பான வார்த்தைகளால் நான் பேசினால் காமத்தில் வியர்த்து விறுவிறுத்து இவள் இறந்துவிடக் கூடும். இவளைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசிவிடுகிறேன்” பிறகு மாகண்டிகரை நோக்கி ததாகதர் பேசத் தொடங்கினார்.
“பிராமணரே, மாரனின் புதல்விகளை சந்திக்கும் போதே நான் வேட்கை கொள்ளவில்லை. காமுறவில்லை. புலனின்பங்களில் சற்றும் விருப்பமில்லாதவன் நான். எனவே இந்தப் பெண்ணை கையால் தொடுவதை விடுங்கள், சிறுநீரும் மலமும் நிரம்பிய இவளின் உடலை என் பாதத்தால் கூடத் தொட முடியாது”
(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)
—
அம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”
புத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.
(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “அகந்தை அழிதல் 2”)
++++
ஜாதகக் கதைகள் வியப்பூட்டும் இலக்கியம். சக்கரவாளம் நூலில் நான்கு ஜாதகக் கதைகள் வருகின்றன. எந்தெந்த கதைகளை நூலில் இணைப்பதற்கு எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் எனக்கு ஏற்படவில்லை. விலங்குகள் அல்லது மீன்கள் அல்லது பறவைகள் – இவை முக்கியப்பாத்திரமாக உள்ள கதைகளையே சக்கரவாளம் நூலில் சேர்ப்பது என்பதில் தெளிவாக இருந்தேன். மச்ச ஜாதகம், மகாசுக ஜாதகம், மகாகபி ஜாதகம் மற்றும் ஜவசகுன ஜாதகம் – இந்த நான்கு கதைகள் சக்கரவாளத்தில் வருகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ள சில மிருகங்கள் தோன்றும் கதைகளை ஈசாப்புக் கதைகளில் இணைத்திருக்கிறார்கள் என்ற சேதி ஜவசகுன ஜாதகம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோதுதான் எனக்கு தெரிய வந்தது.
+++++
ஜாதகக்கதைகள் மற்றும் அவதான வகைமை கதைகள் – பௌத்தத்தின் மூல நூல்களின் வரிசையில் உள்ள இரண்டு வகை கதை நூல்களுக்கும் இடையில் இருக்கும் நுட்பமான வேறுபாடு – தேரவாத மற்றும் மகாயான அணுகுமுறைகளின் மாறுபாட்டை நிகழ்த்திக் காட்டுகிறது.
++++
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பௌத்த அறிஞர் J S Speyer இந்த வித்தியாசத்தைக் குறிப்பிட்டுக் காட்டினார். புத்தர் எனும் சிறப்பான ஒரு நாயகரின் முற்பிறவிகளில் போதிசத்துவராக அவர் செய்த தியாகங்களின் கதைகளை ஜாதகக் கதைகள் பதிவு செய்கின்றன. பசித்த புலிக்கு தன்னுடலை உணவாக கொடுக்கிறார்; பிச்சையெடுக்கும் பிராமணருக்கு தன் மனைவியையும் குழந்தைகளையும் கொடுத்து விடுகிறார்; தன் இனக்குரங்குகளை காக்க தன் உயிரை விடும் குரங்காகிறார். இது போல எத்தனையோ தியாகங்கள். இதை வாசித்த சாதாரண மக்களிடம் இத்தகைய தியாகச் செயல்கள் புத்தர் போன்ற ஆளுமைகளால் மட்டுமே சாத்தியம் என்பதான புரிதல் நிலவியிருக்கலாம். புத்தர் செய்த தியாகங்கள் சாதாரண மக்களாலும் செய்யப்படக்கூடும் என்பதான தெளிவை ஏற்படுத்தும் இலக்குடன் திவ்யாவதான இலக்கியம் படைக்கப்பட்டிருக்கலாம். அவதான இலக்கியத்தில் ஒரு போதிசத்துவர் தான் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த புனிதரும் அவதானக் கதையின் நாயகராயிருக்கலாம்.”
(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – “நம் மகளை காதலிக்கப்போகும் கணவன் இவரல்ல”)
++++
மிலரேபாவின் கவிதைகள் திபெத்திய பண்பாட்டின் சொத்து. யோகி – கவிஞரான மிலரேபாவின் வாழ்க்கைக் கதை ஒரு மந்திர யதார்த்தக் கதை போல. மிலரேபாவின் வாழ்க்கைக் குறிப்போடு சேர்த்து இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்து சக்கரவாளத்தில் சேர்த்திருக்கிறேன். அவரின் நூற்றுக்கணக்கான பாடல் – கவிதைகளில் இரண்டை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது என ஒரே குழப்பம். கடைசியில் random – ஆக இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டேன். ஒரு விமானப் பயணத்தில் விமானம் வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது அந்த இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்தேன் என்பது இன்னொரு சுவாரஸ்யம்!
++++
வயதான ஆண்களுக்கு தர்மம் தேவை
அதுவன்றி அவர்கள் பட்டுப்போகும் மரங்கள்
வளரும் இளைஞர்க்கு தர்மம் தேவை
அதுவன்றி அவர்கள் நுகத்தடி பூட்டிய காளைகள்
இளம் கன்னியர்க்கு தர்மம் தேவை
அதுவன்றி அவர்கள்அலங்கரிக்கப்பட்ட பசுக்கள்
எல்லா இளைஞர்க்கும் தர்மம் தேவை
அதுவன்றி அவர்கள் மூடிய அரும்புகள்
அனைத்து குழந்தைகட்கும் தர்மம் தேவை
அதுவன்றி அவர்கள் பேய் பிடித்த கொள்ளைக்காரர்கள்
தர்மமின்றி செய்யபடுபவை அனைத்தும்
அர்த்தமும் குறிக்கோளுமற்றவை
அர்த்தத்துடன் வாழ நினைப்போர்
புத்த தர்மத்தை பின்பற்ற வேண்டும்
(எனது சக்கரவாளம் நூலிலிருந்து – ‘மிலரேபா’)
++++
பயணக்கட்டுரை ஒன்றை சேர்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஏனோ, கை கூடவில்லை! கட்டுரைகளுக்கு நடுவே பயணங்கள் பற்றிய சிறு குறிப்பு ஆங்காங்கே வரும், ஆனால் அவற்றை விரித்து எழுதவில்லை. சக்கரவாளத்தில் வரும் பௌத்த சிறப்பிடங்கள் – லடாக், சாரநாத், அயுத்தயா (தாய்லாந்து), போரோபுதூர் (இந்தோனேசியா),
++++
கட்டுரைநூலை vet-செய்த நண்பர் கல்யாணராமன் பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கினார். அவர் சொன்ன பெரும்பான்மையான ஆலோசனைகளை ஏற்று உரிய திருத்தங்களைச் செய்த பிறகு இன்னும் முழுமையாக இந்த நூல் வாசகரைச் சென்றடையும் என்ற உணர்வு ஏற்பட்டது.
“நூலில் மகாயானம் உயர்ந்து ஒலிக்கிறதே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கல்யாணராமன். “அப்படியில்லை ; தத்துவப் பிரிவுகளைத் தாண்டிய பௌத்தத்தின் ஒருமைப்பார்வையை விரித்துரைப்பது தான் நூலின் நோக்கம்” என்று அடித்துச் சொன்னேன்.
++++
பிக்குகள் பணத்தைக் கையாளலாமா? என்பது பௌத்த சமூகங்களில் காலந்தோறும் இருந்து வரும் கேள்வி. இதற்கு மகாயான பௌத்தம் பின்பற்றப்படும் வடக்கு பௌத்த நாடுகளில் அளிக்கப்படும் வழக்கமான பதில் – தேரவாதம் எனப்படும் தெற்கு பௌத்தத்தில் தான் பிக்குகள் பணத்தைத் தொடக்கூடாது ; மகாயானத்தில் அப்படியில்லை; பிரயாணத்துக்குத் தேவையான பணத்தை மகாயான பிக்குகள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் – என்பது. பெய்ஜிங் நகரில் கட்டிட நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் சாம் லீ என்பவர் நடிகை செய்தது தவறு என்கிறார். அவரின் கருத்துப்படி தெற்கு பௌத்தத்தின் நியமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் வடக்கு பௌத்தத்தில் திணிக்கப்படக்கூடாது.
முன்னாள் நடிகை தான் செய்தது சரியென்பதில் மிக உறுதியாய் இருக்கிறார்.
“முக்தி நிலையை அடைய, பௌத்த சாதகர்கள் ஞானம், கருணை– இவ்விரண்டையும் கொண்டிருத்தலோடு பிரிவினை இதயம் இல்லாதவராய் இருத்தலும் அவசியம். உட்பிரிவுகள் இல்லாத மூல பௌத்தத்தை மீட்டெடுத்தலே எனது லட்சியம்” என்று முழங்குகிறார்.
(சக்கரவாளம் நூலிலிருந்து….”செய்திகளில் பௌத்தம்)