1
வரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை
இடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில்
கால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு
பிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன்
அடுத்த இலக்கை அடைவதற்கு
வரைபடத்தை காணவில்லை
பிரக்ஞையை பின்னுக்கு நகர்த்தி
தொடக்கத்துக்கு வந்தபோது
பழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன.
2
கால இயந்திரத்தில் பயணித்தேன்
வரைபடத்தை எடுக்க மறக்கவில்லை
எதிர்காலத்தில் இருந்த
வீட்டை அடைந்து உள்நுழையாமல்
வரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன்.
3
வரைபடத்தை பறக்கவிட்டேன்
வளைந்து வளைந்து
காற்றில் அளைந்து
தரையில் விழும் அழகை ரசித்தேன்