Clinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது…
என்னுள்ளில் நிகழும் உரையாடல்கள்
இரைச்சலாக ஒலிக்கின்றன
காதுகளை அடைத்துக் கொண்டாலும்
இரைச்சல் அடங்குவதில்லை
என்னைத் துரத்தும்
நிழல்களிலிருந்து
தப்பியோட முடிவதில்லை
விடியலை தவிர்க்க
தூங்காமல் இருத்தலும்
விடிந்த பின்
போர்வைக்குள் ஒளிந்து கிடப்பதுமாய்
என் தினங்கள் நகர்கின்றன
உண்மையில்
தினங்கள் நகர்கின்றனவா
துக்கம் என்றால்
அழுது அதனைத் துரத்திவிடலாம்
ஆனால் இது துக்கமன்று
தினசரி காரியங்களில்
ஈடுபடுதலை விட
சிறைவாசம் மகிழ்ச்சி தருமோ!
வீட்டில் ஒடுங்கிக் கிடத்தலில்
உணரும் சுக பாவனையை
எப்படி விவரிப்பது?
ஆனால் வரும் நாட்களின்
பயந்தோய்ந்த கற்பனைச் சித்திரங்கள்
தோற்றுவித்தவாரிருக்கும் மிரட்சி
முடிவதாகத் தெரியவில்லை
யாரோ என்னை ஏமாற்றுகிறார்கள்
என்று எண்ணவைத்தவாறே
என் உடல் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
உதவியை நாடுதல் பலவீனமில்லை ; இத்தனை நாட்கள் பலத்துடன் இருந்ததற்கான அத்தாட்சி. மன நலத்தை பேணுவோம்.
மே 13-19 – மன நல விழிப்புணர்வு வாரம்