சர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு பொய்யான அமைதியைப் பேணின. 1968முதல் 71 வரை மக்களின் அதிருப்தி நகரங்களையும் எட்டின. மாணவர்களும் இளைஞர்களும் அணி திரண்டு நடத்திய அமைதிப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றது அரசு. எண்ணற்றோர் காணாமல் போயினர். நூற்றுக் கணக்கானோர் சுட்டுத் தள்ளப்ப்ட்டனர். மெக்ஸிகன் திரைப்படம் ரோமாவில் இத்தகைய ஒரு மக்கள் போராட்டத்தை அரசு ராணுவத்தை ஏவி அடக்கிய காட்சி வரும்.
நாடக காட்சியின் திரைச்சீலையாக பின்னணியில் வரலாற்று நிகழ்வுகள் தொங்கிக் கொண்டிருக்க – காதலனால் கருவுற்று பின்னர் அவனால் கைவிடப்பட்டு அந்த குழந்தையை சுமக்கும் ஒரு வேலைக்காரி, அவள் வேலை பார்க்கும் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பம் – அந்த குடும்பமும் ஓர் அதிர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது ; குடும்பத் தலைவர் குடும்பத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார் – வேலைக்காரியும் அவள் வேலை பார்க்கும் குடும்பமும் தத்தம் பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்கள்? மாற்றங்களை எப்படி கடக்கிறார்கள்? – இதுதான் ரோமாவின் கரு.
எழுத்தாளர் பாப்ஸி சித்வா ice-candy man நாவலில் இந்தியப் பிரிவினையின் பின்னணியில் ஒரு பணக்கார வீட்டு ஆயாவின் வாழ்வில் நிகழ்ந்தவற்றை அந்தப் பணக்கார வீட்டுக் குழந்தையின் பார்வையில் சித்தரித்திருப்பார். கிட்டத்தட்ட அதே பாணியில் ரோமா கதை செல்கிறது. ஆனால் ஆயாவின் பார்வையில்.
மெக்ஸிகோ நகரில் மக்களின் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டு (Corpus Christi Massacre) நிகழ்வு, கிராமப்புறங்களில் பறிக்கப்பட்ட நிலங்களின் மரங்கள் தீயூட்டப்படுதல், சர்வாதிகார அரசின் நிலப் பங்கிட்டு முயற்சிகள் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வுகள் என்பன போன்ற சமூக அமைதியின்மையின் பின்னணியில் நகரும் தினசரி வாழ்க்கையை ரோமா படம் பிடிக்கிறது. சமூகத்தின் அடிப்படையான குடும்பம் என்னும் அலகை ஒன்றுபடுத்தும் வலுவான பெண்களின் கதையையும் ரோமா சொல்கிறது.
கருப்பு வெள்ளை காட்சிகளில் இத்தனை அழகியலை வெளிப்படுத்த முடியுமா? பின்னணி இசை இல்லாமல் வெறும் ஒலி வடிவமைப்பை பின்னணியாக வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரப் படத்தை எடுக்க அபரிமிதமான தைரியம் வேண்டும். படத்தின் இயக்குனர் – கதாசிரியர் – ஒளிப்பதிவாளர் அல்போன்ஸோ குவரோனிடம் தைரியத்துக்கு சற்றும் குறைவில்லை. ரோமாவின் இறுதிக் காட்சியில் காமிரா தெளிவான அகன்ற வானத்தை நோக்கும். வானில் விமானம் ஒன்று காமிராவின் ஒளி எல்லையைக் கடந்து செல்லும். தியானத்தை தூண்டக் கூடிய சித்திரத் துணுக்கு அந்த காட்சி. அந்த காட்சியினுள்ளிருந்து இன்னும் வெளியே வர முடியவில்லை.