இரண்டு புற பாறைகள்
இடைவெளி குறைந்து கொண்டே
நடுவில் இருக்கும் என்னை
இறுக்கின.
மூசசுத் திணறி
இதயம் துடிதுடித்து
நசுங்கி மரணிப்பது போல் இருந்த நொடிகளிலும்
பாறைகள் சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்தது
ஒரு பாறை நேரம் ; இன்னொரு பாறை சூழல்
என்பதாக ஓர் உவமானத்தை யோசித்த போது
ஒன்று தெளிவானது
பாறைகளின் சிந்தனை
என் சிந்தனையன்றோ!
இல்லையில்லை…பாறைகளே என் சிந்தனையன்றி வேறில்லை
பலங்கொண்ட புஜங்கொண்டு
பாறைகளை தள்ளிப் பிளந்தெடுத்து
கற்களாகப் பிய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எறியும்
சிந்தனையைத் தொடங்கிய போது
பெருமீசை தத்துவாசிரியனின் உருவத்துடன்
நம்மைக் கொல்லாதிருக்கும் எதுவும்
நம்மை பலவானாக்கும்
என்கிற கூற்றைத் தாங்கிய சட்டகப்படம்
கால் பெருவிரல் மீது விழுந்து
வலி தாளாமல் நொண்டியடித்த தருணங்களில்
பாறைகள், புஜங்கள், கற்கள், எறிதல்கள்
அனைத்தும் மறைந்து
வலியுணர்வில் குவிந்தது கவனம்
கவனமும் ஒரு சிந்தனை
என்ற வாதத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம்.