நேரம் சரியில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மனதை யாரோ படித்து விட்டார்கள். ‘களுக்’ என சிரிக்கும் ஓசை. மனம் துணுக்குற்றது.
‘யார் சிரித்தது’
‘நான் தான் நேரம்’
‘நான் நினைத்ததை எப்படி அறிவாய் நீ?’
‘உனக்குள்ளேயே இருக்கிறேன் ; உன்னை அறிய மாட்டேனா நான்?’
‘எனக்குள் இருக்கிறாயா? இது என்ன நகைச்சுவை?’
‘உனக்குள் தான் நான் இருக்கிறேன்…’
‘இது எப்படி சாத்தியம்?’
‘நடந்தவைகளை எண்ணி குற்றவுணர்வு அடைந்த போதெல்லாம் என்னுடைய நேற்றைய வடிவமாக உன்னுள் நான் இருந்திருக்கிறேன்’
‘ம்..’
‘வரப்போவனவற்றை எண்ணி நீ பதற்றப்படும் போதெல்லாம் நான் நாளைய வடிவமாக உன்னுள் இருந்திருக்கிறேன்’
‘இப்போது எந்த வடிவத்தில் நீ இருக்கிறாய்?’
‘இப்போது இருப்பின் வடிவத்தை எய்திக் கொண்டிருக்கிறேன்… …தன்நிலையமைதி உன்னை சூழத் தொடங்கியவுடன் நீ என்னில் கரைந்து இல்லாது போய்விடுவாய் ‘
சில கணங்களில் கேள்விகள் பதில்கள் எல்லாம் முடிந்து போய் மனமும் நேரமும் சங்கமித்து அடையாளங்களற்று இருப்பில் முழுவதுமாய் கரைந்து போயின.