இகீகை

அலுவலகத்தில் நடக்கவிருந்த டவுன்ஹால் நிகழ்வில் இகீகை என்னும் ஜப்பானிய காட்செப்ட் பற்றி உரையாற்றலாம் என்று அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். வாழ்நாள் முழுக்க சலித்துப்போகாமல் ஒரு வேலையை செய்வோமாயின் அது எந்த வேலையாய் இருக்கும்? இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன். அதிகாரியிடமிருந்து மிரட்டும் மின்னஞ்சல்கள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் விடுமுறை நாட்களில் மின்னஞ்சல்களை பார்க்காமல் இருந்திருக்கிறேன். க்ரோனிக் ஃபடீக் சின்ட்ரோம் மற்றும் அட்ரீனல் ஃபடீக் முதலான வியாதிகளை கற்பனை செய்து கற்பனை செய்து அவை நம்மை பீடித்துவிட்டதோ என்ற பீதியில் இருந்த எனக்கு இகீகை பற்றிய ஒரு நூலில் குகையில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் நவீன காலத்து மனிதனுக்குமிடையேயான ஒரு முக்கிய வித்தியாசம் பற்றி வாசித்தவுடன் என் கண்கள் திறந்தன. குகை வாழ் மனிதன் எந்நேரமும் உயர் ஆபத்து நிலையில் வாழ்ந்தான். குகைக்குள் வன விலங்குகளுக்கு எளிதில் இரையாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த ஆபத்து கணங்களைத் தவிர பிற கணங்களில் அவன் பதற்றங்கள் ஏதும் இல்லாமலேயே வாழ்ந்தான். ஆபத்துக் காலங்களில் மட்டும் அவன் உடலில் மிக அதிக அளவில் கார்டிசோல் சுரந்து அவனை ஆரோக்கியமாக வைத்திருந்தது. நவீன காலத்தில் மனிதன் எந்நேரமும் ஆன்-லைனில் இருக்கிறான். உள்ளே வரும் செய்திகளை அறிவிக்கும் ஓசைக்கான காத்திருப்பில் எந்நேரமும் இருக்க வேண்டியதாய் இருக்கிறது. தொலைபேசி அழைப்பையும் மின்னஞ்சல் வந்திருக்கும் அறிவிப்பு சமிக்ஞையையும் மூளையானது வேட்டையாடப்படப் போகும் அச்சுறுத்தலோடு தொடர்புபடுத்திக் கொண்டு விடுகிறது. சிறு அளவில் கார்டிசோல் எந்நேரமும் சுரந்த வண்ணமிருக்கிறது. மனோ ரீதியான பல நோய்களுக்கு இதுவே காரணமாகிறது. டவுன் ஹால் சந்திப்பு மிகவும் அறுவையாய் நடந்து முடிந்தது என சக ஊழியர்கள் சொன்னார்கள். ‘பாட்டுக்குப் பாட்டு, அந்தாக்ஷரி மாதிரியான நிகழ்வுகளால் டவுன்ஹாலை நிரம்பியிருக்கலாம். அது என்ன இகீகை…மரண போராக இருந்தது’ என்றார்கள். அவர்களின் இகீகை என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் போலும்! நான் தான் அதை புத்தக வரிகளிலோ அளைவுறும் சிந்தனைகளிலோ தேடிய வண்ணம் இருக்கிறேன்.

இகீகை என்றால் என்ன? https://medium.com/thrive-global/ikigai-the-japanese-secret-to-a-long-and-happy-life-might-just-help-you-live-a-more-fulfilling-9871d01992b7

கோயில்களை உடைத்தல்

“இந்து கோயிலை உடைத்துவிட்டார்கள் ; அழித்துவிட்டார்கள்” என்று என்றோ நடந்த தாக்குதல்களை நினைத்து இன்றைய இந்துத்துவர்கள் வேற்று மதத்தவரின் மீது பகைமையுணர்வு கொள்வதும் வெறுப்பு காட்டுவதும் தினம் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. உடைந்த கோயில்களை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அந்த அழிப்பு நடந்த வரலாற்று காலத்தில் வன்முறை வாழ்வின் அம்சமாக இருந்தது. நில விஸ்தரிப்பை மட்டுமே இலக்காகக் கொண்ட பேரரசர்களின் அணுகுமுறைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. கைப்பற்றிய வேறு நாட்டின் பண்பாட்டுச் சின்னங்களை அழித்து தம் சமய, கலாசார சின்னங்களை நிறுவுவது நம் நாட்டில் நடந்ததைப் போலவே உலகெங்கிலும் நடந்தது. இது ஏதோ நமக்கு மட்டும் நடந்தது என்பதான பாவனையில் அன்றைய ஆக்கிரமிப்பாளர்கள் பின்பற்றிய சமயத்தை இன்று பின்பற்றுபவரின் மேல் வெறுப்பை காட்டுவது வேடிக்கையிலும் வேடிக்கை. இந்து சமய உயர் தத்துவங்களின் படி உருவம், வடிவம், பால் என்று எதிலும் அடங்காதது பரம்பொருள். அதனை தியானிக்குமுகமாக அமைக்கப்பட்ட வழிபாட்டு உருவம் அழிக்கப்பட்டால் சமய நம்பிக்கை அழிந்துவிடும் என்பதும் நம் இருப்பு அர்த்தமற்றாகிவிடும் என்பதும் உள்ளீடற்ற வெற்று நம்பிக்கையின் அடிப்படையிலான குறுகிய நோக்கில் சமயத்தை அணுகுவதன் விளைவாக எழுபவை.

+++++

இறைஆனந்தத்தின் மனித உருவமாக விளங்கிய ஶ்ரீ ஆனந்தமயி மா அவர்களின் ஆசிரமம் வெளியிட்டு வந்த காலாண்டு ஆன்மீக இதழ் ஆனந்தவர்த்தா. இதன் அனைத்து இதழ்களும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனந்தவர்த்தாவின் 1969 ஆன் ஆண்டின் மூன்றாம் இதழில் காஷ்மீரத்தின் இந்து புண்ணியத்தலங்கள் பற்றிய கட்டுரையொன்றை வாசித்தேன். இந்த கட்டுரையில் ஶ்ரீ நகரில் இருந்து 9 கி மீ தொலைவில் இருக்கும் பாழடைந்த க்‌ஷீர் பவானி கோயிலுக்கு சுவாமி விவேகானந்தர் சென்றது பற்றி வருகிறது. உள்ளூர் தல புராணத்தின் படி மாதா க்‌ஷீர் பவானி சிலையை இலங்கையில் ராவணன் வழிபட்டு வந்தான்; ராமனால் அவன் கொல்லப்பட்ட பின் விக்கிரகம் இந்த இடத்துக்கு அனுமனால் கொண்டு வரப்பட்டது என்பது ஐதீகம்.

“சுவாமி விவேகானந்தர் காஷ்மீரில் தங்கியிருந்த நாட்களில் இந்தப் புனிதத் தலத்துக்கு வந்தார். உடைந்த கோயில்களையும் விக்கிரகங்களையும் பார்த்த போது அவர் இதயமுழுதும் கவலையில் ஆழ்ந்தது. அவர் சிந்தனை இவ்வாறு ஓடியது. “நான் மட்டும் அப்போது இருந்திருந்தால் கயவர்கள் இந்தக் கோயில்களை அழிக்கவோ விக்கிரகங்களை உடைக்கவோ விட்டிருக்க மாட்டேன். உயிரைக் கொடுத்தாவது அவைகளை காத்திருப்பேன்” அவர் இவ்வாறு யோசித்த போது வானிலிருந்து ஓர் அசறீரி அவர் காதில் கேட்டது. “மகனே, வேறு சமய நம்பிக்கை கொண்டோர் என் கோயிலுள் நுழைந்து அழித்தனர் என்றால் அதனால் உனக்கென்ன? நான் உன்னை காக்கிறேனா அல்லது நீ என்னை காக்கிறாயா?” விவேகானந்தரின் சிந்தனை மேலும் தொடர்ந்தது. “என்னால் மட்டும் இந்த கோயிலை கட்ட முடியுமானால்…” மீண்டும் அதே குரல் இவ்வாறு சொன்னது “மகனே, நான் நினைத்தால் எண்ணற்ற கோயில்களையும் கோபுரங்களையும் நிறுவி விட முடியும். நான் எண்ணிய கணத்திலேயே ஏழடுக்கு தங்க கோயில் எழும்பிவிடும். எனவே நீ கவலைப்பட வேண்டியதில்லை” இந்த சம்பவத்துக்கு பிறகு வீரச்சாதுவுக்கு வாழ்வின் மீதான பார்வை முழுக்கவும் மாறிப்போனது. அன்று முதல் அன்னையின் மடியில் கிடக்கும் சிறு மழலையாக தம்மை உணரலானார்.”

பின்குறிப்பு : கல்ஹணரின் ராஜதரங்கிணி நூலில் க்‌ஷீர் பவானி கோயில் பற்றிய குறிப்பு உண்டு.