அது புதிதாய் என் கண்ணில் பட்டது. வெற்றிடமாகத் தெரிந்த இடத்தின் மேல் எதுவோ பூசப்பட்டிருக்கிறது. ஒரு சில கணங்கள் என் புலனுக்கு உணவானது அந்த தோற்றம். அருகில் நின்றவரிடம் அது பற்றி கேட்டேன். அது ஒரு நிறம் என்றார். அதன் பெயர் நீலம் என்றார். பின்னொரு சமயம் அந்த தோற்றம் மீண்டும் என் கண் புலனின் கவனத்துக்கு வந்த போது அது நீலம் என்று சொன்ன நபர் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தார். இந்த நீல நிறத்தை தான் முன்னொரு நாள் பார்த்தேன் என்பதை அப்போது உணர்ந்தேன். அடுத்தடுத்த முறை நீல நிறத்தை காணும் சமயங்களில் எல்லாம் நீலம் என்று அதை சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தது. என் கண்களை மூடி நீலம் என்ற சொல்லை அசை போட்டவுடன் நீலம் என் மனத்திரையில் ஓடுகிறது. நிறத்தை அதற்களிக்கப்பட்ட பெயராகிய நீலத்துடன் இணைத்து நினைவுபடுத்திக் கொள்ளும் பழக்கம் தொடங்கிய பிறகு முதன்முதலாக கண்ட அந்த நிற அனுபவம் மறுபடி கிடைக்கவேயில்லை.
நீலம் என்ற பெயர் அந்த முதல் நீலப் புலன் அனுபவத்தை மீண்டும் பெற முடியாமல் தடுத்துவிட்டது. நீலத்தின் நிற பேத வகைமைகளின் அறிவையும் -வான்நீலம், கருநீலம், ஊதா என – அவற்றுக்கு பெயரிட்டு நிலைப்படுத்திக் கொண்டேன். பெயரிட்ட பிறகு அனுபவங்களுக்கு திரும்பும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை. வெற்றிடங்களில் காணப்படும் நீல வர்ணப்பூச்சு அனுபவங்கள் அனைத்தையும் ஒரே வகையாக ஒரே பெயரடையாளத்துக்குள் அடக்கிவிட்டால் நீலத்தன்மை எனும் பொது வரையறையை புலன்-மனம் தயார் செய்து வைத்துக் கொள்கின்றது. முதல் நீலத்தின் தூய சுட்டுணர்வு மனப்பழக்கத்தின் பெயரிடுதல் பண்பு வழியாக மன உணர்வாக மாற்றம் அடைந்து காலப்போக்கில் ஒரு பொதுமையாக கருதப்பட்டு விடுகிறது.
நீலம் போய் நீலத்தன்மை மட்டும் மனக்கருத்தியலாய் தங்கிவிடுகிறது. இதற்கு நடுவில் நீலம் என்னும் நிறம் ஒரு நாள் நம்முலகை விட்டு காணாமல் போய்விடுகிறது. நீல நிறத்தை தேடி எல்லாரும் செல்லலாயினர். நீலத்தன்மை பற்றிய அனைவரின் மனக்கருத்தியல்களின் உதவியுடன் நீல நிறத்தை தேடிக் கண்டு பிடிப்பதாகத் திட்டம். ஆனால் ஒவ்வொருவரின் நீலத்தன்மை பற்றிய எண்ணம் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. எது நீல நிறம் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியவில்லை. தப்பித்தவறி நீல நிறம் அதைத் தேடுபவர்களின் கண்ணில் தானாகவே பட்டால் தேவலை. முதன் முதலில் பார்த்த வெற்றிடத்தை தேடிச் செல்ல முனைந்தனர். வெற்றிடம் என்று ஓரிடமும் மிச்சமாக இல்லை. எல்லா வெற்றிடங்களுக்கும் வடிவம் அல்லது நிறங்களின் பெயரை வைத்தாகிவிட்டது. நீலத்தை எப்படி மறுபடியும் முதன்முதலாக கண்டு பிடிப்பது?
நன்றி : http://innaadhu.blogspot.in/2018/02/blog-post_24.html?m=1