பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன்.
நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன் இவ்வளவு மூச்சிறைக்கிறது உமக்கு?’ என்று பரிவுடன் வினவினாள்.
‘பாரத தேசத்தின் அனைத்துப் பாவிகளும் தம் பாவங்களை உன்னில் நீராடிக் களைகிறார்களாமே. உண்மையா?’
‘ஆம். இதிலென்ன சந்தேகம். பல யுகங்களாக நடப்பது தானேயிது?’
‘லோகத்தின் பாவங்கள் அனைத்தும் உம்மில் கரைந்தால் உங்கள் நிலை என்னாவது தாயே?’
‘எனக்கு என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. நான் சென்று சமுத்திரத்தில் கலக்கும் போது எல்லா பாவங்களும் அங்கேயே கலந்து கொள்கின்றன’
நாரத முனியின் வியப்புணர்ச்சி அதிகமானது. எல்லா பாவங்களும் கடலில் சென்று தேங்கிவிடுகின்றனவா? விடை காணும் ஆர்வம் அவரை உந்த சமுத்திர ராஜனைக் காணச் சென்றார்.
நாரதரின் கேள்வியைக் கேட்டு வயிறு புடைக்க சிரித்தான் சமுத்திர ராஜன்.
‘முனிவரே, யாராலும் கற்க முடியாத பிரம்ம சூத்திரங்களையெல்லாம் தம் விரல் நுனிக்குள் வைத்திருக்கும் நீங்களா இத்தனை எளிமையான விஷயத்தைக் கேட்க என்னிடம் வந்தீர்கள்? என்னில் வந்து கலந்த நீரெல்லாம் சூரிய வெளிச்சத்தில் ஆவியாக மேகக் கூட்டத்துக்கு செல்லுமே, அவற்றோடு பாவக் கூட்டங்களும் சென்று விடாதா?’
நாரதர் சற்று வெட்கப்பட்டார். பின்னர் ராஜனின் தொடரும் சிரிப்பொலியுடன் தன் சிரிப்பொலியை இணைத்துக் கொண்டார்.
அவரின் அடுத்த பயணம் இந்திர சபை நோக்கி. இந்திரனின் சிரிப்பொலி சமுத்திர ராஜனின் சிரிப்பொலியை விட பலமாக இருக்கும் எனத் தெரிந்தும் தொடங்கிய கேள்வித் தேடலை அதன் தர்க்க பூர்வ முடிவுக்கு எடுத்துச் செல்வதில் உறுதியாய் இருந்தார் நாரதர்.
கேள்வியை கேட்டதும் மேகங்களின் அதிபதி இந்திரன் சமுத்திர ராஜன் போலச் சிரிக்கவில்லை. கேள்விக்கான முகாந்திரம் அறிந்தவுடன் தீவிரமான பார்வையுடன் நாரதருக்குச் சொன்னான் :
‘மேகங்கள் மழை பொழியும் போது நீர்த்தாரைகளுடன் பாவங்களும் ஒட்டிக்கொண்டு மீண்டும் பூமிக்கே சென்றுவிடுகின்றன. சொல்லப் போனால் ஒவ்வொரு பாவமும் அதை செய்தவரின் தலையிலேயே மழைத் துளிகளுடன் போய் விழுகின்றன’
நாரதர் முதலில் சந்தித்த மானிடன் கங்கை நதியில் நீராடிவிட்டு ஊர் திரும்பும் வழியில் பெருமழை பெய்தது. எங்கும் ஒதுங்காமல் அதில் நனைந்து கொண்டே அந்த மானிடன் பயணம் செய்து கொண்டிருந்ததை ஒரு மேகத்தின் மேல் நின்று பார்த்துக் கொண்டிருந்த நாரதர் கன்னத்தில் நீர் வழிந்தது. நீர் உப்புக்கரித்தது.