ஆகஸ்டு பத்து

தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன். காலை எட்டு மணிக்கே ஆட்டோவில் கிளம்பினோம். ஆடிட்டோரிய வாசலில் பெரும் வரிசை. அதிக கூட்டம் இராது என்று நினைத்துக்கொண்டு வந்த எனக்கு உரையாற்றப்போகிறவரின் பிரபலத்தன்மையை கண்ணால் காணும் சந்தர்ப்பம் இன்று கிட்டியது. அரசியல் பிரமுகர் இல்லை ; கலைத்துறையில் பணியாற்றுபவர் இல்லை ; எனினும் கூட்டம் குவிந்திருந்தது. பாதுகாப்பு பரிசோதனை சாவடிக்குள் நாங்கள் நுழைந்தவுடன் வாயிலை அடைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பின்னால் காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பர். திரைப்படக் காட்சி துவங்கிய பிறகு அரங்கிற்குள் நுழைவது போல் ஆடிட்டோரியத்துக்குள் போனோம். உட்கார ஓர் இருக்கையும் காலி இல்லை. மூன்று மட்ட பால்கனிகளும் நிரம்பி வழிந்தன. இருக்கைகளின் வரிசைகளுக்கு நடுவே தரையில் உட்கார்ந்து கொண்டோம். அவர் மேடைக்குள் மெல்ல நடந்து வந்தார். மேடையில் வேண்டியவர் வேண்டாதவர் என்று நிறைய குமிந்திருந்தனர். மேடைக்கு வந்தவரின் காலைத் தொடுவதே அவர்கள் குறிக்கோள் போல விழா அமைப்பாளர்கள் எல்லோரும் மேடையை விட்டு கீழிறங்கவில்லை. அரங்கே அவரை பரவசத்துடன் பார்த்தது. சிரித்தார். கை கூப்பினார். மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி பேசினார். அவர் பேசியவை எதுவும் என் மனதில் பதியவில்லை. ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரை போன்றும் அவர் முகத்தை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தேன். பேச்சு முடிந்து கேள்வி பதில்கள் பகுதி வந்தது ; நன்றியுரைக்கு முன்னம் “இங்கே வந்திருப்பவர்களில் எத்தனை பேர் திபெத் அகதிகள்?” என்று கேட்டார். பாதிக்கு மேற்பட்டோர் கை தூக்கினார்கள். அவர்களுக்காக சற்று நேரம் திபெத்திய மொழியில் பேசினார். திபெத்திய சகோதரர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் கை கூப்பிக்கொண்டு அவர் பேசியதைக் கேட்டார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த திபெத்திய சகோதரியின் கண்ணில் நீர் வழிந்தது. மேடையிலிருந்து கிளம்பும் முன் பல முறை நன்றி சொன்னார். புன்னகைத்தார். சுவர்க்கம் வேறெங்கும் இல்லை. கருணை ஒளியை தூவியவாறு புன்னகைக்கும் அவரின் பிரசன்னத்தில் தான் இருக்கிறது சுவர்க்கம். ஆகஸ்டு பத்து. இன்றுதான் நான் முதல் முறையாக டென்ஸின் க்யாட்ஸோவை ரத்தமும் சதையுமாக தரிசித்த நாள். அவலோகிதேஸ்வரரின் அவதாரம் என நம்பப்படுபவரே, நீர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, இவ்வுலகின் ஏழு பில்லியன் மனித உயிர்களும் புத்த நிலையில் உய்யும் வரை உயிர் தரித்திருப்பீராக! பொய்யான தலாய் லாமாவை உற்பத்தி செய்யும் வல்லரசு சீனாவின் திட்டத்தில் மண்ணைப் போடுவீராக!