சமீபத்தில் ரசித்தவை

Taxi Driver

Taxi Driver

மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா? அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது! இதைச் சரி செய்தாக வேண்டும்! ஓர் ஆயுதக் கிடங்கையே உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கொண்டு உலவ வேண்டும். அந்த இளம் வயது விலை மாதுவின் ”பிம்ப்”பை, அவள் அடிக்கடி செல்லும் விடுதியின் முதலாளியை, அவளின் வாடிக்கையாளர்களை….எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும்….விடுதியில் நடக்கும் “ஷுட் அவுட்டில்” அவன் இறந்தானா பிழைத்தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் மீண்டும் டாக்ஸி ஓட்டும் காட்சி வருகிறது. இம்முறை டாக்ஸியின் முன் கண்ணாடி ஈரமாகாமல் சுத்தமாக இருக்கிறது. அவன் நீலப்படத்துக்கு அழைத்துச் சென்ற தோழி அவன் டாக்ஸியில் பயணிக்கிறாள். அவள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவன் டாக்ஸியை ஓட்டிச் செல்கிறான். அவன் இறந்திருந்தானென்றால் கடைசிக் காட்சி அவன் மனதின் கனவாக இருந்திருக்கும். அவன் விழைந்திருக்கக் கூடிய மீட்பின் காட்சிகளாக இருக்கலாம் அவை. அவன் இறக்காமல் இருந்திருந்தால் அவன் இப்போது “நார்மல்” ஆகி விட்டான். தனிமைவயப்படுதலின், பிறருடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறம் இல்லாமையின் விளைவுகள் மீண்டும் அவனுள் எழக்கூடும்.

Bridge on the River Kwai

The Bridge on the River Kwai

The Bridge on the River Kwai  திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரம் – கர்னல் நிக்கல்ஸன். ராணுவ ஆஃபீசர்கள் போர்க்கைதிகளாக இருக்கும்போது அவர்களை உடலுழைப்பில் ஈடுபடுத்தலாகாது என்ற ஜெனீவா மாநாட்டு விதிமுறைகளை மீற இடங்கொடுக்காதிருக்கும் பாத்திரம். ஜப்பானிய ராணுவ கர்னல் சைடோ கர்னல் நிக்கல்ஸனை ஓர் இரும்புக் குடிசைக்குள் அடைக்கிறார். பாலத்தை கட்டி முடித்தல் நிக்கல்ஸனின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்றறிந்த பின்னர் நிக்கல்ஸனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு எப்படியேனும் பாலத்தைக் கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகிறார் சைடோ. நிக்கல்ஸனின்  தலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்திறத்துடன் போர்க்கைதிகளால் பாலம் செவ்வனே கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கு நடுவே, பாலத்தை உடைப்பதற்காக ஓர் அணி கூட்டணிப் படைகளால் ரகசியமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. பாலத்தை உடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாலத்தை முதல் ரயில் கடந்து போகும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்குள், கர்னல் நிக்கல்ஸன் ஏதோ சதித்திட்டம் நடப்பதாக உணர்ந்து அதைக் கண்டுபிடிப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்க அவர் பின்னால் சைடோவும் பின் தொடர்ந்து வருகிறார். கட்டுப்பாடும், கடமையுணர்வும், பெருமிதமும் மிக்க நிக்கல்ஸன் தான் எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்தவராய் பாலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியவராய் சதித்திட்டத்தை கிட்டத்தட்ட வெளிப்படுத்திவிடும் படத்தின் உச்சகட்டம் பாத்திரங்களின் அவற்றின் நோக்கங்களின் ஊடாட்டமாக விரிகிறது. இறுதியில் பாத்திரங்கள் தத்தம் தன்மையில் நிலைத்தனவாய் வெறும் நிகழ்வுகளின் வரிசையாக படம் அபத்தமாக முடிவடையும் போது பால-உடைப்பை மறைந்திருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிளிப்டன் சொல்லும் வசனம் மிகப் பொருத்தம் – “Madness! … Madness!”

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.