மோகமும் முக்தியும்

Rab2

ஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம்  என்று நான் பொருட்படுத்தாமல் விட்டுவிட்ட படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும்! நாயகிக்கு இரண்டு பேரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும்! காதுல பூ! என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின்  பாடல்கள் போன்றவையும்  அறியக் கிடைத்தன.

இரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த  rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

+++++

எதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும்? அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன்  பாபி (வினய் பாடக்). சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக  தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா? அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற  குழப்பம்! படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் வள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா? சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில்  தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.

அன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும் “மத்தபி இஷ்க்” என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள் – இஷ்க் – இ – ஹகிகி மற்றும் இஷ்க்-இ-மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள்.  கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ;  காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலி” என்று தானி பல இடங்களில்  கூறுவதை படத்தில் பார்க்கலாம்.     

தெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்”) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்ற “அவதாரம்” என்ற நோக்கில் அவர்கள்  பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை   நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.

புல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம்  சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக்  கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சீக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.

Rab ne bana di  jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன். சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில்  தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.

பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார்  :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)   

தெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம்  என்பதை படத்தை முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக  ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்!

Rab ne

1 Comment

  1. rprabha says:

    Interesting perspective

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.