“எதற்காக எழுதுகிறேன்?”

“எதற்காக எழுதுகிறேன்?”

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார் சில முறை புலம்பி இருக்கிறார்.

“ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா ? என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.

“புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா? ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்! முப்பது வருடங்களாக கடும் உழைப்பின் உதவியால் எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும் போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த் தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்!) சில வாரங்களுக்கு சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும்  ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.

“நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம்?…இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது யாரேனும் ஒருவருக்கு சிரிப்பு வராவிடில் அவரின் தமிழ் அரைகுறை என்று அர்த்தம்!

பணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் தொன்மங்கள் மட்டுமே.

கவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும்  அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன்,  ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.

சலிப்பு அல்லது அலுப்பு? என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை  நான் சலிப்பு  என்று தான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குத்தனங்கள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குத்தனங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.

மொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள்! உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே  எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.

அபத்தங்கள், பாசாங்குத்தனங்கள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப்  புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.

அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும்  வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.

இதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின்  முடிவிலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.

நன்றி : பதாகை

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.