புதுசு – கொஞ்சம் பழசு – ரொம்ப பழசு

fan-6

ஃபேன்

பாலிவுட் தனம் கலந்திருந்தாலும் “Fan” ஒரு டெம்ப்லேட்-டில் அடங்கும் படமல்ல. படத்தின் பல்வேறு காட்சிகள் அற்புதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சுருக்கங்கள் தோன்றிய கண்ணுக்குக் கீழான சதைப்பகுதியை தடவிப்பார்த்துவிட்டு “நட்சத்திரம்” என்னும் கட்டுக்கதையை நிகழ்த்துவதற்காய் மேடையை அணுகுதல், இரசிகர்கள் ஒருவரும் இல்லா அரங்கை மேடையிலிருந்து காணும் காட்சி, மேடம் டூசாடில் ஆர்யனின் பொம்மைக்கருகே கௌரவ் செய்யும் குழப்பத்தை சல்மான் கான் பொம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக காட்டுதல் என்று பல உதாரணங்கள். கௌரவ் – ஆர்யன் பாத்திரங்களுக்கிடையிலான உடல் மொழி வித்தியாசத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தி மீண்டும் “ஃபார்முக்கு” வந்திருக்கிறார் ஷாருக். இரசிகனிடமிருந்து தள்ளி ஓடும் நட்சத்திரம் ; இறுதியில் இரசிகனுடன் கட்டிடத்தின் விளிம்பில் தொங்கும் நட்சத்திரம். இரசிகன் மரணமடைந்ததும் நட்சத்திரத்தின் தொழில் வாழ்க்கை முடிந்து போவதாக காட்டியிருந்தால் நட்சத்திரம் – இரசிகன் இடையிலான இயங்கியலை சித்தரிக்கும் உருவகமாக அமைந்திருக்கும்.  பாலிவுட் ரகத்திலான  லண்டன், டுப்ரோனிக் நிகழ்வுகளை மாற்றி திரைக்கதையை வேறு மாதிரி செய்திருந்தால் “Fan” சிறப்பான படமாக இருந்திருக்கும்.

1427865764_birdman-final-scene

பேர்ட் மேன்

நிக்கொலாய் கோகோல் 1836 இல் எழுதிய ரஷ்யச் சிறுகதை “மூக்கு” மிகப் பிரசித்தமானது. அரசாங்க அதிகாரி காவலோவ்-வுடைய மூக்கு ஒருநாள் காணாமல் போய் விடுகிறது. அது அவனுக்கு திரும்பக் கிடைத்தாலும் அவன் முகத்தில் பொருந்தாத அளவுக்கு அதன் அளவு பெரிதாகப் போய்விட்டது. பிறகு எப்படியோ மூக்கு அவன் முகத்தில் பொருந்திவிடுகிறது. இழந்து போன முக்கியத்துவம் திரும்பக் கிடைத்த நிம்மதி! கோகோலின் இந்தச் சிறுகதையின் பாதிப்பில் ஜப்பானிய சிறுகதை எழுத்தாளர் ர்யுனொசுகெ அகுடகவா “மூக்கு” என்ற தலைப்பில்  ஒரு சிறுகதை எழுதினார். அகுடகவா யார்?  இவர் எழுதிய இரண்டு சிறுகதைகளைப் பின்னிப் புனைந்து  திரைக்கதையாக்கித்  தான் அகிரா குரோசவா “ரஷமோனை” உருவாக்கி உலகப்புகழ் பெற்றுக் கொண்டார்.   கோகோலின் மூக்கு சிறுகதையில் வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜார் மன்னராட்சிக் கால அரசாங்க அதிகாரியின் இடத்தை அகுடகவாவின் கதையில் மத்திய கால ஜப்பானின் பௌத்த மடாலய பிக்கு ஒருவர் நிரப்பி இருப்பார். அவர் மூக்கு விகாரமாக மிக நீளமாய் வளர்ந்திருக்கும். அதிகாரமும் கருவமும் மிகுந்த பிக்கு தன் மூக்கை சரி செய்து விட மிகவும் பிரயத்தனப்படுவார். அவருடைய உதவியாளன் ஒருவன் அசுர சிகிச்சை ஒன்றை செய்யும் போதும் அதை பொறுத்துக் கொள்வார். சிகிச்சைக்குப் பின்னால் அவர் மூக்கு சுருங்கி சரியாகிவிடும். எனினும் பிக்கு விகாரமாக இருந்த மூக்கை “மிஸ்” செய்வார். நல்ல வேளையாக அவர் மூக்கு தானாகவே பழையது மாதிரி ஆகி விடும். அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்து – இவற்றின் அடையாளமாக இச்சிறுகதைகளில்குறிக்கப்படும் மூக்கு என்னும் படிமம் அலேஹான்றோ இன்யாரிட்டு இயக்கிய “Bird Man” படத்தின் இறுதியில் சுயமதிப்பின் குறியீடாக வருகிறது. தத்ருபமாக நடிக்கும் முயற்சியில் நாடகத்தின் இறுதிக்காட்சியில் உண்மை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு நடிக்கும் ரிக்கன் பாத்திரம் (நடிகர் மைக்கேல் கீட்டன் நடித்திருப்பார்) மூக்கை இழந்து விடும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவனுக்கு மூக்கு திரும்பக் கிடைத்துவிடும். முகக்கட்டை அவிழ்த்து விட்டு கண்ணாடியில் தன் மூக்கை நோக்குவான் ரிக்கன். புதிதாக முளைத்த மூக்கை நோக்குவது போல அவன் பார்வையில் ஒரு பெருமிதம். அறையின் ஜன்னல் வழியாக வெளிக்குதித்து பறவை மனிதனாக அவன் பறந்ததற்கு அவன் புது மூக்கு தான் காரணமோ! கருடன் மூக்கு என்று சிறுவயதில் என்னைக் கேலி செய்த நண்பர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.

Ugetsu

உகேட்சு

குரோசவாவின் சமகால இயக்குனர் மிசொகுச்சி. குரோசவாவின் “ரஷமோனைப்” போலவே மிசொகுச்சியின் “உகேட்சு”வும் மேலை நாட்டு திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஜப்பானிய திரைப்படங்களை பிரபலப்படுத்தியது. மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். அகினாரி என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் “உகேட்சு” எனும் நாவலின் ஒரு பகுதியே  உகேட்சு திரைப்படத்தின் அடிப்படை. மத்திய கால ஜப்பானில் நடப்பதாக சித்தரிக்கப்படும் நிகழ்வுகள் மக்கள் படும் அல்லலைப் பேசுவதாக இருக்கிறது ; வரலாற்று நிகழ்வுகளை மிகுபுனைவாக சித்தரிக்கும் பழக்கம் இல்லாதவர் மிசொகுச்சி. படத்தில் வரும் இரு ஆண் பாத்திரங்களின் பொறுப்பற்ற சாகசவுணர்வு அவர் தம் மனைவியருக்கு எத்தகைய கஷ்டங்களை ஏற்படுத்தின என்பது தான் கதை முடிச்சு. நிலப்பிரபுத்துவ உலகின் வாழ்க்கை எத்துனை துன்பகரமானது என்பதை உகேட்சு காட்சிப்படுத்துகிறது. அதனாலேயே கதையின் ஆண் பாத்திரங்கள்  சில்லறைத் தனமாக  கனவுகளில் தம்மை அமிழ்த்திக்கொண்டு துன்பகரமான வாழ்வில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் ஜாக்கிரதையுணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். போர்க்காலத்தில் வியாபாரம் செய்து பொருள் குவிப்பேன் என்று அடம் பிடிக்கும் கதையின் நாயகன் கென்ஜூரோ மனைவியை குழந்தையை கிராமத்தில் விட்டுவிட்டு நகர சந்தையில் கடை விரிக்கிறான். சந்தைக்கு வரும் ஒரு பணக்காரப் பெண்ணினால் கவரப்படுகிறான். அவளுடன் குடும்பம் நடத்துகிறான். பணக்கார மாது வகாஸா – வாக ரஷமோனில்  பெண் பாத்திரமாக நடித்த மச்சிகோ க்யோ நடித்திருக்கிறார். வகாஸா ஒர் ஆவி. இது புரிபட கென்ஜூரோவுக்கு சில காலம் ஆகிறது.  பேயிடமிருந்து தப்பி திரும்பி வரும் கென்ஜூரோவுக்கு கிராமத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிர்ச்சி வெளிப்படும்  கதையின் முடிவு கென்ஜூரோவின் பிராயச்சித்தமாக அமைந்து நம்மை நெகிழ்விக்கிறது.

டோபே எனும் பாத்திரம் சமுராய் ஆகும் கனவில் மனைவியை நட்டாற்றில் விட்டுவிட்டு, சிரிப்பு போலிஸ் கணக்காய் ஒரு விபத்தென சமுராய் அந்தஸ்தை அடைந்து, பெருமிதத்துடன் தன் பரிவாரம் புடை சூழ ஒரு கெய்ஷா வீட்டுக்கு செல்ல அங்கு தன்  மனைவியை ஒரு கெய்ஷாவாக சந்திக்கும் கட்டம் நம்மை நெகிழ்விக்கும் இன்னோர் உச்சம்.  இச்சம்பவம் மிசொகுச்சியின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.

தச்சராக வேலை பார்த்த மிசொகுச்சியின் தந்தையின் சில பொறுப்பற்ற வியாபார முயற்சிகளால் வறுமைக்கு தள்ளப்பட்டது  அவரின் குடும்பம். அதன் காரணமாக மிசொகுச்சியின் சகோதரியை மிசொகுச்சியின் தந்தை ஒரு கெய்ஷாவுக்கு “தத்து” கொடுத்துவிட்டார். அந்த வலி மிசொகுச்சியின் வாழ்நாள் முழுதும் அவரிடம் எஞ்சியிருந்தது. அவர் தன்னுடைய  பல படங்களில் கெய்ஷா ‘தீம்’ஐ சித்தரித்ததன் காரணம் இது தான் என்று சொல்லப்படுகிறது.

best-kenji-mizoguchi-films
கென்ஜி மிசொகுச்சி

 

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.