விரியும் காட்சி

ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து

சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,  ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான்  மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.

இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வெட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன்  பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.

பஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மாடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார். பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே  முன்னும் பின்னுமாக  பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால்  வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு  முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில். வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன்  சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை. தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு  சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல  முதுகைத் திருப்பிக் கொண்டு  எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.

பஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும்? சிறுவனுக்கு என்ன ஆயிற்று? ரத்தக் காயம் பட்டிருக்குமா? ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா? ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா? அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும்? யார் அந்த ஆள்? அந்த சிறுவன் என்ன பண்ணினான்? அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா? வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன்  காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில்  காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும்  போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து  ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான  கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.           

காட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள்  தோன்றியவாறு  இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.

+++++

ஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை.   நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது.  “முழுமையான  புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ?

வாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை  கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது.  மிக்கேல்   தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும்  பாங்கில் அவனுக்கிருக்கும்   மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான்.  ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு  இளம் வாலிபனைப்   படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில்  அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான்.  இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு  திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.

மேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன? அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா? ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில்  மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா? “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை?

பெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில்  தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.

“புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த  ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய்  இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா  உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.

காட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா? அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில்  குழம்பிப் போன  மன நிலையா? மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம்  மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ? மிக்கேல் புகைப்படத்தினுள் பிரவேசிக்கிறான்.

அரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால்  தான்  வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ? அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார்? மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.

பார்க்கும் விழைவு  மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத்  துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான்? அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன? அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது? புறாக்கள் பறந்த வண்ணம்,  மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

பனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப்  பிரிவதைப் போன்று  காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம்? மிக்கேலின் மாறும் மனநிலையா? மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா? உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார்? புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா? அல்லது பெரிதாக்கப்பட்ட புகைப்படமா?

பலவித, இணையான யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள்   உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில்  சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம்  மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்!) மிக்கேல் நிறுவிவிடுகிறான்.  ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல,  “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில்  மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.

நன்றி : பதாகை

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.