அகந்தை அழிதல்-2

(திக்க நிகாயத்தின் மூன்றாம் அங்கமாக வரும் அம்பத்த சுத்தம்)

புத்தர் தன் குரலின் இனிமையை அதிகப்படுத்திக் கொண்டு கேள்வியை இன்னுமொருமுறை கேட்டார்.

”அம்பத்தா, நீ என்ன நினைக்கிறாய்? வணங்கத்தக்க, மூத்த பிராமணர்கள் யாராவது கன்ஹா கோத்திரக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற தகவலை உனக்குக் சொல்லியிருக்கிறார்களா?”

“ஆம் ஐயா, கன்ஹா கோத்திரக் காரர்கள் மூலம் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் ; நீங்கள் சொன்ன மாதிரி தான் எங்கள் கோத்திர வரலாறு”

அம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”

புத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.

“அம்பத்தனை யாரும் ஏளனமாகப் பேச வேண்டாம். கன்ஹா பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு பராக்கிரமசாலியான முனிவர். சாக்கிய நாட்டிற்கு தெற்கிலுள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பிராமணர்களிடமிருந்து மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின், சாக்கிய மன்னன் ஒக்காகனிடம் திரும்பச் சென்று அவனுடைய மகள் மத்தரூபியைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறு வேண்டினார். ஒக்காகனின் கோபம் எல்லை மீறியது. “அடிமைப் பெண்ணின் மகனுக்கு இளவரசி மனைவியாக கேட்கிறதா?” என்று கர்ச்சித்தான். அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனால் அவன் கையை இயக்க முடியவில்லை. அம்பையும் வில்லையும் பிடித்தபடியே நின்றான். அவன் எத்தனித்துப் பார்த்தும் அவன் கையை நகர்த்த முடியவில்லை. மந்திரிகளும் மற்ற மூத்தவர்களும் கன்ஹாவை அணுகி “அரசரைக் காப்பாற்றுங்கள்! மதிப்புக்குரியவரே, அரசரைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினர்.

“அரசர் பாதுகாப்பாக இருப்பார். ஆனால் அவர் நாணை கீழ்ப்புறமாக விட்டாரானால், இந்த சாம்ராஜ்யம் முழுதிலும் நிலம் அதிரும்.”

“வணக்கத்துக்குரியவரே! அரசரைக் காப்பாற்றுங்கள்! நிலத்தையும் காப்பாற்றுங்கள்”

“அரசனும் சரி, நிலமும் சரி – இருவரும் காக்கப்படுவார்கள். ஆனால் அரசரின் நாண் மேல் நோக்கிப் பாயுமானால், அவர் சாம்ராஜ்யம் முழுவதிலும் ஏழு வருடங்களுக்கு மழை பெய்யாத படி கடவுள் செய்துவிடுவார்”

“வணக்கத்துக்குரியவரே! அரசரைக் காப்பாற்றுங்கள்! நிலத்தையும் காப்பாற்றுங்கள்! கடவுளர் மழை பெய்ய வைக்கும் படி செய்யுங்கள்”

“அரசர் பாதுகாப்பாக இருப்பார் ; நிலமும் பாதுகாப்புடன் இருக்கும் ; கடவுளர் மழை அளிப்பர், ஆனால் அரசர் தன் நாணை இளவரசரை நோக்கி குறி வைத்தாரென்றால், இளவரசரும் வெகு பாதுகாப்பாக இருப்பார்”

மந்திரிகள் அரசனை இளவரசனை நோக்கி அம்பு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். இளவரசனுக்கு ஒன்றும் ஆகவில்லை. பயந்துபோயிருந்த அரசன், தெய்வபாவம் வந்து சேர்ந்துவிடக்கூடாது என்று இளவரசி மத்தரூபியை கன்ஹா முனிவருக்கே மணமுடித்து வைத்தார். எனவே மாணவர்களே அம்பத்தனை யாரும் இகழ வேண்டாம். பெருமை மிகு கன்ஹா முனிவரின் வழி வந்தவன் இந்த அம்பத்தன்”

புத்தர் அம்பத்தனுடனான உரையாடலைத் தொடர்ந்தார். “ஒரு க்‌ஷத்திரிய இளைஞன் ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டானெனின் அவர்களுக்குப் பிறக்கும் மகனுக்கு இருக்கையும் நீரும் பிராமணர்களால் அளிக்கப்படுமா?

”ஆம்”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது விருந்துகளிலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

“ஆம்”

“அவனுக்கு மந்திரம் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“ஆம்”

”ஆனால், க்‌ஷத்திரியர்களுக்கான பட்டாபிஷேகத்தின் போது அவன் தலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?”

“இல்லை”

“ஏன் அப்படி?”

“ஏனென்றால், அன்னை வழி நல் குடிப்பிறப்பில் அவன் பிறக்கவில்லை”

புத்தரின் கேள்விகள் தொடர்ந்தன.

“ஒரு பிராமண இளைஞன் ஒரு க்‌ஷத்திரிய குலப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றானென்றால், அம்மகனுக்கு பிராமணர்கள் இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?”

“ஆம்”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது ஒரு விருந்துகளிலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

”ஆம்”

”மந்திரங்கள் அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“ஆம்”

”ஆனால், க்‌ஷத்திரியர்களுக்கான பட்டாபிஷேகத்தின் போது அவன் தலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?”

”இல்லை”

“ஏன் அப்படி?”

“தந்தை வழிப்படி நல்ல குடியில் அவன் பிறக்காததால்”

“ஒரு ஆண் பெண்ணை எடுத்துக் கொண்டதனாலுமோ அல்லது ஒரு பெண் ஆணை எடுத்துக் கொண்டதனாலுமோ அல்லது எப்படி வைத்துக் கொண்டாலும், க்‌ஷத்திரியர்களே பிராமணர்களை விட உயர் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு பிராமணனை எடுத்துக் கொள்வோம், அவன் செய்த செயலின் காரணமாக மற்ற பிராமணர்கள் அவன் தலையை மழித்து விடுகிறார்கள். ஒரு சாம்பல் மூட்டையை சுமக்கும் படி கொடுக்கப்பட்டு நகரிலிருந்தோ நாட்டிலிருந்தோ அவனைத் தள்ளி வைத்து விட்டார்கள். நீ என்ன நினைக்கிறாய்? பிராமணர்கள் அவனுக்கு இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?

“இல்லை”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது ஒரு விருந்திலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

”இல்லை”

”மந்திரங்கள் அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“இல்லை”

“அதே இடத்தில் ஒரு க்‌ஷத்திரியனை எடுத்துக் கொள்வோம். அவனையும் தலையை மழித்தெடுத்து நாட்டை விட்டோ நகரை விட்டோ தள்ளி வைத்து விடுகிறார்கள்! பிராமணர்கள் அவனுக்கு இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?”

“ஆம்”

“அவனுடைய மனைவியைப் பாதுகாப்புடன் தங்க வைப்பார்களா?”

“ஆம்”

“பார்த்தாயா, ஒரு க்‌ஷத்திரியன் ஒரு கேவலமான அந்தஸ்தைப் பெற்ற நிலையிலும், நாட்டிலிருந்தும் நகரிலிருந்தும் தள்ளி வைக்கப்பட்டு விட்ட நிலையிலும் அதே நிலையிலிருக்கும் இன்னொரு பிராமணனை விட உயர் நிலையானவனாகவே கருதப்படுகிறான்”

அம்பத்தா, பிரம்மனின் குமாரன் சனத்குமாரன் சொன்னான் :

“குலத்தை மதிப்பவர்களுக்கு க்‌ஷத்திரியர்களே சிறந்தவர்கள் :கடவுளர்க்கும் மனிதர்க்கும் அறிவும் நடத்தையும் கொண்டவர்களே உயர்ந்தவர்கள்”

மேற்சொன்ன செய்யுள் சொன்ன கருத்து முழுக்க முழுக்கச் சரி.”

“வணக்கத்துக்குரிய கௌதமரே, எது நடத்தை? எது அறிவு?”

“பிறப்பின் அடிப்படையில் குலத்தின் அடிப்படையில் பிரகடனம் செய்து கொள்ளப்படும் பெருமை மறுதலிக்கவியலா அறிவு மற்றும் நடத்தையை அடைந்த நோக்கு நிலையிலிருந்து பெறப்படுவதன்று. “நீ எனக்கு சரிசமம் ; நீ எனக்கு சரிசமமில்லை” என்ற இறுமாப்பும் அப்படித்தான். எங்கெல்லாம், கொடுக்கல் இருக்கிறதோ, வாங்கல் இருக்கிறதோ, கொடுக்கல்-வாங்கல் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதே பேச்சு இதே இறுமாப்பு….இது போன்ற விஷயங்களில் அடிமைப்பட்டோர் மறுதலிக்கவியலா அறிவு-மற்றும்-நடத்தையை அடைதலிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களைக் கைவிடுவதானால் பட்டுமே மேலே குறிப்பிட்ட அறிவையும் நடத்தையையும் அடைய இயலும்”

”ஆனால் மதிப்புக்குரிய கௌதமரே, எது அந்த அறிவு? எது அந்த நடத்தை?”

“பூரணஞானம் அடைந்த புத்தர்
அருகர்
ஞானமும் நடத்தையும் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்
உலகங்களை அறிந்தவர்
வசப்படுத்தப்பட வேண்டிய மனிதர்களின் ஒப்பிடமுடியா பயிற்சியாளர்
கடவுளர்களின், மனிதர்களின் ஆசான்
உள்ளோளி பெற்றவரும்
ஆசீர்வதிக்கப்பட்டவருமான
ததாகதர்
இவ்வுலகில் எழுகிறார்.
தன்னுடைய அதீத அறிவினால் ஞானநிலையை அடைந்தவர் அவர்
தேவர்களையும், மாரர்களையும், பிரம்மர்களையும்
இவ்வுலகுக்கு
இதன் இளவரசர்களுக்கு
மனிதர்களுக்கு
பறைசாற்றுகிறார்
அவர் போதிக்கும் தம்மம்
ஆரம்பத்திலும் அருமை
நடுவிலும் அருமை
முடிவிலும் அருமை
எழுத்திலும் அருமை
ஆன்மாவிலும் அருமை
முழுப்பூரணமான
தூய
வாழ்க்கையை
எடுத்துக்காட்டும்
அவரை அடையும் மாணவன்
அறப்பயிற்சி மேற்கொள்கிறான்
புலன்களின் கதவைக் காவல் காக்கிறான்
நான்கு தியானங்களைப் புரிகிறான்
அவற்றின் வாயிலாக நடத்தையை வளர்க்கிறான்
பல்வேறு உள்நிலைத் தெளிவுகளை
ஒழுக்கக்கேடுகளின் முடிவுகளை
அடைகிறான்
இதைத் தாண்டி
அவன் பெற வேண்டிய உயர்ந்த அறிவோ
பயில வேண்டிய நடத்தை வழிமுறைகளோ ஏதுமில்லை”

”அம்பத்தா, மறுதலிக்கவியலா அறிவின் நடத்தையின் அடைதலுக்கான தேடலில் நான்கு விதமான தோல்விப்பாதைகள் உள்ளன. மறுதலிக்கவியலா இந்த அடைதலைப் பெறாதவன் –  அவன் துறவியாகவோ அல்லது பிராமணனாக இருக்கலாம் – முதற்கண் அவன் ஒரு தண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வனப்பகுதியை சென்றடைந்து காற்றினால் கீழே விழுபவற்றை எடுத்துண்டு வாழ்வேன் என்ற பிரதிக்கினை மேற்கொள்வானாயின் இது தோல்விக்கான முதல் பாதையாக அமையும். ஏனெனில் இதன் வாயிலாக ஞானநிலையை சாதித்தவனின் ஊழியனாக மட்டுமே ஆகமுடியும். அந்தத் துறவி அல்லது பிராமணன் காற்றினால் விழுபவைகளை உண்டு வாழ முடியாமல், மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக் கொண்டு “நான் வேர்களையும் கிழங்குகளையும் உண்டிருப்பேன்” என்று முடிவெடுப்பானாயின் அது இரண்டாவது தோல்விப்பாதையாக இருக்கும். அந்தத் துறவி அல்லது பிராமணன் வேர்களை கிழங்குகளை உண்டு வாழ முடியாமல் ஒரு கிராமத்தின் அல்லது சிறு ஊரின் ஓரத்தில் தீயடுப்பை நிறுவி அதில் தீ வளர்க்கத் துவங்குவானாயின்…இது தோல்விக்கான மூன்றாவது பாதை. தீ வளர்க்க முடியாத அந்தத் துறவி அல்லது பிராமணன் சாலைகளின் சந்திப்புக்கருகே நான்கு கதவுகளைக் கொண்ட சிறு வீடைக் கட்டிக் கொண்டு “நான்கு திசைகளிலிருந்து இந்த சாலைச்சந்திப்புக்கு வரும் துறவி அல்லது பிராமணருக்கு என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்” என்று முடிவெடுப்பானாயின்  இது தோல்விக்கான நான்காவது பாதை.”

”அம்பத்தா சொல்! நீயோ அல்லது உனது குருவோ மறுதலிக்கவியலா அறிவு மற்றும் நடத்தையின் படி வாழ்கிறீர்களா?

“இல்லை கௌதமரே! நானும் என் குருவும் ஒப்பீட்டளவில் வெகு தொலைவில் இருக்கிறோம்”

“ஓ..அப்படியானால், நீயும் உனது குருவும் ஞானத்தை அடையாத பட்சத்தில்…தண்டத்தை எடுத்துக் கொண்டு காற்றினால் கீழே விழுபவற்றை உண்டு வாழும் எண்ணத்தில் ஆழ்ந்த வனப்பகுதிக்குச் சென்று வாழ முடியுமா?”

“கண்டிப்பாக முடியாது கௌதமரே”

“பின்….நீயோ அல்லது உனது குருவோ…கிழங்கையும் வேரையும் உண்டு வாழ்வீர்களா?….தீ வளர்ப்பீர்களா?….அல்லது வீடு கட்டிக் கொள்வீர்களா?….”

 ”இல்லை கௌதமரே”

”பார்…நீயோ அல்லது உன் குருவோ மறுதலிக்கவியலா ஞானத்தையும் நடத்தையையும் மட்டுமல்ல, நான்கு தோல்விப் பாதைகள் கூட உங்கள் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. எனினும் நீயும் உன் குரு பொக்காரசதி பிராமணரும் என்ன சொல்கிறீர்கள்? – முகச்சவரம் செய்து கொண்ட சின்ன சன்னியாசிகளும், சிற்றேவலர்களும், பிரம்ம தேவனின் காலடியில் படிந்திருக்கும் அழுக்கையொத்தவர்களும் மூன்று வேதங்களைக் கற்ற பிராமணர்களிடம் என்ன பேசி விட முடியும்? – தோல்வியுற்றவர்களின் கடமையைக் கூட செய்ய முடியாத நீங்கள் பேசும் பேச்சு இது! பார் அம்பத்தா, உன் குரு உன்னை எப்படி கை விட்டிருக்கிறாரென்று?”

”அம்பத்தா, பொக்காரசதி பிராமணர் கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தனின் தயையில் வாழ்ந்து வருபவர். இருந்தாலும் மன்னரை நேருக்கு நேர் பார்த்துப் பேச பொக்காரசதியால் முடியாது. மூடிய திரைக்குப் பின்னாலிருந்து தான் அவரால் மன்னனுடன் பேச முடியும். உத்தமமான, குற்றமிலா வாழ்வாதாரத்தை தந்தருளிய மன்னன் பிரசேனஜித்தன் நேருக்கு நேராக சந்திக்கும் அனுமதியை உன் குருவுக்கு ஏன் வழங்கக் கூடாது?”

”அம்பத்தா, முதல் துறவிகள் என்று நீங்கள் சொல்லும் ரிஷிகள் – மூல மந்திரங்களைப் பார்த்தவர்கள் – அவர்கள் பார்த்த மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டும். உச்சரிக்கப்பட்டும், இன்றளவும் பிராமணர்களால் தொகுக்கப்பட்டும் வருகின்றன. அத்ரி, வாமகர், வாமதேவர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, ஆங்கிரஸர், பாரத்வாஜர், வசிஷ்டர், காஸ்யபர், பிருகு – போன்றோர் கண்டுபிடித்த மந்திரங்களே உனக்கும் உன் குருவுக்கும் வழங்கப்பட்ட மந்திரங்கள். ஆனாலும் இம்மந்திரங்களின் ஜெபத்தாலும், உச்சரிப்பாலும் நீயும் உன் குருவும் முனிவர்களாக முடியாது – அப்படி ஒன்று சாத்தியமே இல்லை.”

“அம்பத்தா, நீ என்ன நினைக்கிறாய்? வணங்கத்தக்க, வயதில் மூத்த, குருக்களுக்கெல்லாம் குருவானவர்களிடமிருந்து நீ என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்? கிட்டத்தட்ட நீயும் உன் குருவும் இருப்பது மாதிரி அந்த முதல் ரிஷிகள் – அத்தகர் முதல் பிருகு வரை – அவர்களெல்லாம் நிறைய அனுபவித்தார்களா, நன்கு குளித்தார்களா, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டார்களா, முடியையும் தாடியையும் திருத்திக் கொண்டார்களா, மாலைகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்களா, வெண்ணிற ஆடைகளை அணிந்து கொண்டார்களா, ஐம்புல இன்பங்களை துய்த்து அவற்றுக்கு அடிமையானார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீயும் உன் குருவும் சாப்பிடுவது மாதிரி, கூட்டும், பொறியலும் சேர்த்து பட்டை தீட்டப்பட்ட அரிசியால் வடித்த சோறை அவர்கள் உண்டார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீயும் உன் குருவும் இப்போது இருப்பது மாதிரி, குட்டைப் பாவாடையும் பகட்டணிமணிகளும் அணிந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்தார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீளமான குச்சியால் லேசாக அடித்த வண்ணம், அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தில் அவர்கள் பயணம் செய்தார்களா?”

“இல்லை, கௌதமரே”

“வேலிகளாலும் தடுப்புகளாலும், வாளேந்திய வீரர்களால் காக்கப்படும் ஊர்களில் வசித்து அவர்கள் தம்மை காத்துக் கொண்டனரா?”

“இல்லை கௌதமரே”

“ஆகவே, அம்பத்தா, நீயோ உன் குருவோ முனிவர்களுமில்லை ; முனிவர்களாவதற்கான பயிற்சி பெற்றவர்களும் இல்லை. அது போகட்டும். இப்போது நீ என்ன சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இங்கு வந்தாயோ அவற்றை தீர்த்து வைக்கப் போகிறேன்”

புத்தர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து அம்பத்தனை நோக்கி நடந்தார். அம்பத்தனும் புத்தரை நோக்கி நடந்தான். அவர்களிருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் நடந்து வரும் போது, மாமனிதருக்கான முப்பத்திரெண்டு லட்சணங்களை புத்தரின் உடலில் அம்பத்தன் தேடினான். எல்லா லட்சணங்களையும் அவனால் காண முடிந்தது, இரண்டைத் தவிர. அவனுடைய ஐயம் தீர்ந்தபாடில்லை. முழுக்க மூடிய ஆண் குறியையும், நீளமான நாக்கையும் அவனால் காண முடியவில்லை.

ததாகதருக்கு அம்பத்தனின் குழப்பம் புரிந்தது. தன் மனோசக்தியால் தன்னுடைய மூடிய ஆண்குறியை (Sheathed Genitals) ஞானதிருஷ்டியில் அம்பத்தனுக்கு தெரிய வைத்தார். அதன் பின், தன் நாக்கை வெளியே நீட்டி இரண்டு மூக்கையும், இரண்டு காதுகளையும் நக்க வைத்தார். பின்னர் தன் நாக்கால் முன் நெற்றியை வட்ட வளைவை முழுக்க மூடும் படிச் செய்தார்.

“துறவி கௌதமர் மாமனிதனுக்கான முப்பத்திரெண்டு லட்சணங்களையும் கொண்டிருக்கிறார் ; ஒரு லட்சணமும் குறையவில்லை” என்று அம்பத்தன் தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

“வணக்கத்துக்குரிய கௌதமரே, நான் சென்று வரட்டுமா? எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது”

“நிச்சயமாக அம்பத்தா” என்றார் புத்தர்.

+++++

புத்தரை சந்தித்ததைப் பற்றி பொக்காரசதிக்கு அம்பத்தன் சொல்கிறான். அம்பத்தன் புத்தரை இழிவு செய்து பேசினான் என்று அறிந்தவுடன் மிகவும் வருத்தம் கொள்கிறார் பொக்காரசதி. உடனடியாக, புத்தரின் குடிலுக்குச் சென்று அம்பத்தன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். “அம்பத்தன் என்றும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று புத்தர் வாழ்த்துகிறார். புத்தர் பொக்காரசதிக்கும் தன் முப்பத்திரெண்டு லட்சணங்களைக் காட்டுகிறார். பொக்காரசதியின் இல்லம் வரும் புத்தர் தம்மத்தை எடுத்துரைக்கிறார். பொக்காரசதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரின் மாணவர்களும் தம்மத்தை தழுவுகிறார்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s