அகந்தை அழிதல்-1

(திக்க நிகாயத்தின் மூன்றாம் அங்கமாக வரும் அம்பத்த சுத்தம்)
இந்தோ-கிரேக்கர்களின் காந்தாரச் சிற்பக்கலையில் கிரேக்கத் தொன்ம நாயகன் ஹெர்குலிஸீன் தோற்றத்திலேயே சித்தரிக்கப்பட்ட வஜ்ரபாணியை புத்தரின் வலப்புறம் காணலாம். - குஷானர்கள் காலம், மூன்றாம் நூற்றாண்டு - காந்தாரம் (தற்போதைய வடமேற்கு எல்லைப் பிராந்தியம், பாகிஸ்தான்)

இந்தோ-கிரேக்கர்களின் காந்தாரச் சிற்பக்கலையில் கிரேக்கத் தொன்ம நாயகன் ஹெர்குலிஸீன் தோற்றத்திலேயே சித்தரிக்கப்பட்ட வஜ்ரபாணியை புத்தரின் வலப்புறம் காணலாம். – குஷானர்கள் காலம், மூன்றாம் நூற்றாண்டு – காந்தாரம் (தற்போதைய வடமேற்கு எல்லைப் பிராந்தியம், பாகிஸ்தான்)

பெரும் எண்ணிக்கையிலான பிக்குக்களின் துணையுடன் கோசல நாட்டில் புத்தர் பயணம் செய்து கொண்டிருந்தார். பிராமணர்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமத்தருகே இருந்த காட்டுப் பகுதியில் ஓரிரு நாட்கள் தங்கியிருக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த கிராமத்தின் பெயர் இச்சனாங்கலா. கிராமத்தின் தொட்டருகே இருந்த அடர்வனப்பகுதியில் புத்தரும் மற்ற துறவிகளும் இளைப்பாறினார்கள்.

இச்சனாங்கலாவுக்கருகே இருந்த சற்று அதிக மக்கள் தொகையுள்ள பெரிய ஊர் உக்கர்தா. அங்கு பொக்காரசதி என்ற பிராமணப் பெரியவர் வாழ்ந்து வந்தார். மூங்கிலும், மக்காச் சோளமும், புற்களும் விளையும் நிலம் பிரம்மதேயமாக கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. பொக்காரசதி உக்கர்தாவில் இருக்கும் பிராமண இளைஞர்களுக்கெல்லாம் வேதங்கள் பயிற்றுவித்து வந்தார்.

இச்சனாங்கலாவில் கௌதம புத்தர் வந்திருக்கிறார் என்று பொக்காரசதி கேள்விப்பட்டார். புத்தர் வந்திருப்பதைப் பற்றிச் சொன்னவர்கள் அவரின் பெருமைகளையும் விரித்துச் சொன்னார்கள். அதைக் கேட்ட பொக்காரசதிக்கு அளவிலா ஆர்வம் எழுந்தது. தம்மத்தை உணர்வு பூர்வமாக அறிந்து, போதித்து, முழுமையும் தூய்மையும் கலந்த வாழ்முறையால் செயல் பூர்வமான தம்மத்தின் எடுத்துக்காட்டாக எலும்பும் சதையுமாக நடமாடும் ஒருவர் இருத்தல் சாத்தியமா என்ற வியப்புணர்ச்சி அவருள் மேலிட்டது.

தன்னுடைய பிரகாசமான மாணவன் அம்பத்தனை அழைத்தார். அம்பத்தன் அவரிடமிருந்து மூன்று வேதங்களைக் கற்று பாண்டித்தியம் பெற்றவன். வேள்விகளை நடத்தும் வழிமுறைகளை நன்கு அறிந்தவன். வாய் வழி மரபு பிறழாமல் ஸ்பஷ்டமான சொல்லுச்சரிப்புடன் மந்திரங்களை ஓதுவதில் நிபுணன். தத்துவ விசாரத்திலும் ஈடுபடுபவன். ஒரு வருடம் முன்னர் “நான் அறிந்ததை நீ அறிவாய் : நீ அறிவது எல்லாம் நான் அறிந்தது” என்ற வாக்கியங்களைச் சொல்லி மூன்று வேதங்களின் வித்தகன் அம்பத்தன் என்று ஊரார் முன்னிலையில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் அறிவித்திருந்தார்.

“அம்பத்தா, சாக்கிய வம்சத்திலிருந்து வந்த துறவி கௌதமர் இச்சனாங்கலாவிற்கு வந்திருக்கிறாராம். அவர் பூரண நிர்வாணம் பெற்ற துறவி என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். முழுமையான ஞானமும் பரிபூரணமான நடத்தையும் மிக்கவராம் அவர். மூவுலகின் இயல்பையும் ஐயந்திரிபற உணர்ந்தவராம் அவர். கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் போதிக்கும் போதகருங்கூட. நீ அவரைச் சென்று சந்திக்க முடியுமா என்று பார்! முடிந்தால் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா என்பதைக் கண்டு பிடி”

“ஐயா, நீங்கள் கேள்விப்பட்டது உண்மை என்று நான் எப்படி கண்டு பிடிப்பது?”

“நம்முடைய மந்திரங்கள் சொல்லும் மரபுப்படி, முப்பத்திரெண்டு லக்ஷணங்களைக் கொண்டுள்ள ஒரு மாமனிதனுக்கு இரண்டு வழிகளே உள்ளன. அம்மனிதன் இல்லறத்தில் இருந்தால் அகிலம் போற்றும் சக்கரவர்த்தியாக உயர்வான். அவன் பார்க்கும் திசையில் உள்ள நாடுகள் எல்லாம் அவன் கைவசமாகும். ஏழு புதையல்களுக்கு அவன் சொந்தக்காரனாவான். அவனுக்குப் பிறக்கும் புத்திரர்கள் எல்லாம் வீரமிக்கவராக இருப்பார்கள். அவன் ஆட்சியில் இருக்கும் பிரதேசங்களையெல்லாம் கத்தி கொண்டும் தடியைக் கொண்டும் ஆள மாட்டான். தம்மத்தின் துணை கொண்டு ஆள்வான். அப்படி அவன் இல்லறவாசியாக இல்லாமல் துறவுப் பாதை வழி சென்றாலோ, அவன் அருகனாவான், முற்றும் உணர்ந்த புத்தனாவான். அம்பத்தா, நான் வெறும் மந்திரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்பவன் மட்டுமே ; நீ அம்மந்திரங்களைப் பெறுபவன் மட்டுமே”

பொக்காரசதி சொன்னதைக் கேட்டதும் அம்பத்தன் எழுந்தான். “நல்லது ஐயா” என்று சொல்லி வணங்கி, வலப்புறமாக பொக்காரசதியைத் தாண்டிச் சென்று வாசலை அடைந்தான். ஒற்றைக் குதிரை பூட்டிய இரதத்தில் ஏறினான். அவனோடு பொக்காரசதியின் இளம் மாணவர்கள் சிலரும் கூட ஏறிக் கொண்டார்கள். இச்சனாங்கலாவின் வனப்பகுதிக்குள் குதிரை வண்டி போகத்தக்க இடம் வரை வண்டியிலும் பிறகு கால்நடையாகவும் புத்தர் தங்கியிருந்த குடிசை வரை சென்றார்கள். குடிசைக்கு வெளியிலிருந்த மைதானத்தில் பிக்குக்கள் பலர் நின்றிருந்தனர். அவர்களை அம்பத்தன் அணுகி, புத்தரைக் காணும் விருப்பத்தைச் சொன்னான். அம்பத்தனைக் கண்களால் எடை போட்ட பிக்குக்கள் “நன்கு படித்தவனாகத் தெரிகிறான் இந்த பிராமண இளைஞன். நல்ல குடும்பத்துப் பையன் போலத் தெரிகிறான். பிரபு இவனுடன் உரையாட விரும்புவார்” என்று நினைத்தார்கள். புத்தரின் குடிலைக் காட்டினார்கள். குடிலுக்கு முன்னர் சென்று அம்பத்தன் அமைதியாக நின்றான், பிறகு மெதுவாக இருமினான். மூடியிருந்த கதவை லேசாகத் தட்டினான். புத்தர் கதவைத் திறந்தார். அம்பத்தன் உள்ளே சென்றான். அவனுடன் வந்த இளைஞர்களும் உள்ளே நுழைந்தார்கள். புத்தருக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்து புத்தர் உட்கார்ந்ததும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அம்பத்தன் சற்றுத் தள்ளி நின்றிருந்தான். மற்றவர்கள் எல்லாம் உட்கார்ந்த பின்னும் அவன் உட்கார்வதாகத் தெரியவில்லை. அந்தச் சிறு குடிலுக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். புத்தர் அவனைப் பார்த்து கைகளைக் கூப்பினார். அம்பத்தன் பதிலுக்கு கை கூப்பவில்லை. வெற்று வார்த்தைகளால் போலித்தனம் கலந்த குரலில் மரியாதை நிமித்தம் ஏதோ சொன்னான்.

”அம்பத்தா, ஒரு மதிப்புக்குரிய, கல்விமானான பிராமணர் ஒருவர் முன்னால் நீ என்னுடன் இப்படி நடந்து கொண்டது போல் – நான் உட்கார்ந்திருக்கும்ப் போது நீ நடந்து கொண்டும், வெறுமையான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது மாதிரி தான் நடந்துகொள்வாயா?” என்று புத்தர் அம்பத்தனைக் கேட்டார்.

”இல்லை கௌதமரே, நடந்து கொண்டிருக்கும் பிராமணனுடன் இன்னொரு பிராமணன் நடந்த படியே பேச வேண்டும் ; உட்கார்ந்திருக்கும் பிராமணனுடன் உட்கார்ந்து கொண்டும், நிற்கும் பிராமணனிடம் நின்று கொண்டும் தான் பேச வேண்டும். ஆனால், முகச்சவரம் செய்து கொண்ட சின்ன சன்னியாசிகளிடம், சிற்றேவலர்களிடம், பிரம்ம தேவனின் காலடியில் படிந்திருக்கும் அழுக்கையொத்தவர்களிடம் – நான் உம்முடன் நடந்து கொண்டிருப்பதைப் போன்று நடந்து கொள்வதே சரி”

“அம்பத்தா, நீ எதையோ தேடி என்னிடம் வந்தாய். அதைத் தக்கமுறையில் கேட்டறிந்து கொள்வதை விடுத்து உன் சிறுமையை விளம்பரம் செய்து கொள்வது சரியன்று. நீ இன்னும் பக்குவப்படவில்லை. உன் இறுமாப்பு அனுபவமின்மையிலிருந்து எழுகிறது.”

புத்தரின் பேச்சு அம்பத்தனுள் கோபத்தைக் கிளப்பிற்று. பட்டறிவில்லாதவன் என்று தான் கணிக்கபடுவது அவனை அதிருப்திப்படுத்தியது. உரத்த குரலில் புத்தரிடம் கத்தினான். “கௌதமரே, சாக்கியர்கள் மூர்க்கர்கள் ; முரட்டுத் தனமாகப் பேசுபவர்கள் ; வன்மமிக்கவர்கள். சிற்றேவலர்கள் மரபில் பிறந்த அவர்களுக்கு பிராமணர்களை எப்படி மதிப்பது, வணங்குவது, நடத்துவது என்பதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வாராது.”

“உனக்கேன் சாக்கியர்கள் மீது இத்தனை கோபம்? அவர்கள் உனக்கு என்ன தீங்கிழைத்தார்கள்?

“கௌதமரே, ஒரு முறை கபிலவாத்துவில் என் குருவுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. அதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது, சாக்கியர்கள் நிறைந்திருந்த ஒரு மண்டபத்துள் செல்ல வேண்டியிருந்தது. அங்கேயிருந்த சாக்கியர்கள் நாகரீகமில்லாமல் சத்தம் போட்டுக் கொண்டும் அடுத்தவரை விரல்களால் சீண்டிக்கொண்டும் இருந்தனர். என்னைப் பார்த்து அவர்கள் கேலி செய்தது போலிருந்தது. நான் உட்கார அவர்கள் இருக்கை கூட தரவில்லை. ஒரு பிராமணரை எப்படி நடத்த வேண்டும் என்ற பிரக்ஞையோ அறிவோ  இல்லாத ஜென்மங்கள்”

“அம்பத்தா, ஒரு சின்ன பறவை கூட தன் சொந்த கூட்டில் தனக்கு விருப்பமானதைச் செய்து கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறது. கபிலவாஸ்து சாக்கியர்கள் சொந்தவூர். ஓர் அற்பமான விஷயத்துக்காக இவ்வளவு கண்டனம் தேவையா?”

“கௌதமரே, நான்கு வர்ணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். – க்ஷத்திரியர்கள், பிராமணர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். இந்த நான்கு ஜாதிகளுள், மூன்று – க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் – இவர்களெல்லோரும் பிராமணர்களைவிட மட்டமானவர்கள்”

புத்தர் சற்று மௌனமானார். “இந்த இளைஞன் அளவுக்கு மீறி சாக்கியர்களை மட்டமாகப் பேசுகிறான். இவனுடைய கோத்ரம் என்ன என்று இவனிடம் கேட்க வேண்டும்” என்று புத்தர் நினைத்தார். “அம்பத்தா, உன் கோத்திரம் என்ன? என்று கேட்டார்.

”கன்ஹா கோத்திரம்”

“மூதாதையர் வம்சாவளி சரித்திரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றபடி, முன்னாளில் சாக்கியர்கள் எஜமானர்களாக இருந்தார்கள். அவர்கள் பரம்பரையில் வந்த ஓர் அடிமைப் பெண்ணின் வம்சாவழியிலிருந்து வந்த குடும்பத்தில் பிறந்தவன் நீ. ஒக்காகன் எனும் ஓர் அரசன் தன் பிரியத்துக்குகந்த காதலிக்குப் பிறந்த மகனை இளவரசனாக்குவதற்காக பிற புத்திரர்களை – ஒக்கமுகன், கராண்டு, ஹத்தினியன், சினிபுரன்  என்பது அந்த புத்திரர்களின் பெயர்கள் – நாடு கடத்தினான். இமயமலைப் பிராந்தியத்தில் இருந்த, மூங்கில் மரங்கள் நெடிது வளர்ந்த காட்டுக்கு மிக அருகில் இருந்த தாமரைகள் பூத்துக் குலுங்கிய குளக்கரையில் அவர்கள் வசிக்கத் தொடங்கினர். தம் இனம் அசுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் சகோதரிகளையே புணர்ந்து வாழ்ந்தனர். ஒரு நாள் “தம் புத்திரர்கள் எங்கு இருக்கிறார்கள்?” என்று ஒக்காகன் தம் மந்திரிமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டான். ”சக (தேக்கு) மரங்களைப் போன்று வலிமையானவர்கள் என் பிள்ளைகள் ; அவர்கள் நிஜ சாக்கியர்கள்” என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டான். அன்றிலிருந்து தான் அவர்கள் குலத்தின் பெயர் சாக்கியர்கள் என்றானது. ஓக்காக மன்னனே சாக்கியர்களின் மூதாதையன்.”

புத்தர் மேலும் தொடர்ந்தார்.

“அரசன் ஒக்காகனின் அரண்மனையில் வேலை செய்த அடிமைப் பெண் ஒருத்தி ஒரு மகவை ஈன்றாள். அது கருப்பு நிறக் குழந்தை. அசிங்கமாக உருவம் கொண்ட அக்குழந்தை பிறந்த மறு கணமே பேச ஆரம்பித்தது. “அன்னையே, என்னைக் குளிப்பாட்டுங்கள். என்னுடைய அழுக்கைக் கழுவி ஓட்டுங்கள். அதனால் உங்களுக்கு நன்மையுண்டாகும்” என்றது. குழந்தை பேசுவதைக் கேட்டவர்கள் அடிமைப் பெண் ஒரு பிசாசைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்று புரளி பேசினார்கள். அந்தப் பிசாசின் பெயர் கன்ஹா (கருப்பன்) என்றும் சொன்னார்கள். ஏற்கெனவே சொன்ன படி, மூதாதையர் வம்சாவளி சரித்திர நிபுணர்கள் சாக்கியர்களைப் பற்றி சொன்ன சரித்திரம். சாக்கியர்களின் அடிமைப் பெண் ஒருத்தியின் குடும்பத்திலிருந்து வந்த குடும்பமே உன்னுடையது.”

அம்பத்தன் ஒன்றும் பேசாமல் ஒரு சிலை போல அசைவின்றி நின்றிருந்தான். அவனுடன் கூட வந்த இளம் மாணவர்கள் “மதிப்புக்குரிய கௌதமரே, அம்பத்தனை அவமதிக்காதீர்கள். அம்பத்தன் நல்குடிப்பிறப்பில் வந்தவன். மிகவும் படித்தவன், ஒரு கல்விமான், நன்கு உரையாற்றக் கூடியவன், உங்களுடனான வாதத்தில் உங்களுக்கு ஈடாக வாதம் செய்ய வல்லவன்” என்று கூறினார்கள்.

புத்தர் சொன்னார் “அம்பத்தன் நல்குடியைச் சேர்ந்தவனில்லை. மிகவும் படித்தவனில்லை, அவன் கல்விமான் கிடையாது. நன்கு உரையாற்றத் தெரியாதவன். கௌதம புத்தருடன் வாதத்தில் ஈடுபடும் திறமை இல்லாதவன் என்று நீங்கள் கருதினீர்களேயானால், அம்பத்தன் வாய் திறவாதிருக்கட்டும். என்னுடன் நீங்கள் உரையாடுங்கள். ஆனால் அம்பத்தன் நல்குடிப்பிறப்பில் வந்தவன். மிகவும் படித்தவன், ஒரு கல்விமான், நன்கு உரையாற்றக் கூடியவன், என்னுடன் வாதத்தில் ஈடுபடத் தகுதியானவன் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் அமைதியாயிருங்கள். அம்பத்தன் என்னுடன் உரையாடட்டும்.”

மாணவர்கள் அமைதியானார்கள்.

புத்தர் அம்பத்தனை நோக்கிப் பேசலானார். “அம்பத்தா, நான் உன்னிடம் ஓர் அடிப்படைக் கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ பதிலளிக்க விரும்பமாட்டாய். அப்படி நீ பதிலளிக்காமல் இருந்தாலோ அல்லது சுற்றிவளைத்து பதில் சொன்னாலோ அல்லது அமைதியாய் இருந்தாலோ அல்லது இவ்விடத்திலிருந்து கிளம்பிப் போனாலோ, உன் தலை ஏழு துண்டுகளாக வெடித்துச் சிதறும். கன்ஹாவின் தாயைப் பற்றியோ அல்லது அவனின் மூதாதையர்கள் பற்றியோ மூத்த பிராமண ஆசிரியர்கள் யாரேனும் உன்னிடம் சொல்லியிருக்கிறார்களா? அம்பத்தா, பதில் சொல்”

அம்பத்தன் அமைதியாய் வாய் மூடி நின்றான்.

“பதில் சொல், அம்பத்தா. அமைதியாய் இருக்கும் தருணமல்ல. மீண்டுமொருமுறை சொல்கிறேன். ததாகதர் மூன்றாவது முறையாக கேட்ட அடிப்படை கேள்விக்கு பதில் தராதவர் யாராக இருந்தாலும் அவர் தலை ஏழு துண்டுகளாக வெடித்துச் சிதறும்.”

அப்போது, புத்தரின் தலைக்கு மேல் வஜ்ரபாணி என்ற யக்ஷன் தோன்றினான். அதை அங்கு குழுமியிருந்த மாணவர்கள் பார்க்கவில்லை. அவன் கையில் பெரும் இரும்பு கதை இருந்தது. கதையின் ஒளிர்வு அம்பத்தனின் கண்களைக் கூச வைத்தன. ததாகதர் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வஜ்ரபாணியின் எண்ணத்தில் “பிரபு எழுப்பிய வினாவுக்கு இவ்விளைஞன் பதிலளிக்காமல் போவானாயின், என் கதையால் அவன் தலையை ஏழு துண்டாக உடைத்தெடுப்பேன்” என்ற சிந்தனை ஓடியது. அம்பத்தனின் சர்வ நாடியும் ஒடுங்கியது. பயத்தில் அவன் கைகள் நடுங்கின. நெற்றி வியர்த்தது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பிரபுவின் காலடியில் வந்து தன் தலையை பதித்துக் கொண்டான். மெலிதான, நொறுங்கும் குரலில் “நீங்கள் கேட்டது என்னவென்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் கேட்ட வினாவை திரும்பக் கேட்க முடியுமா?” என்றான்.

அம்பத்த சுத்தத்தின் மீதிப்பகுதி அடுத்த இடுகையில்…..

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள போரோபுதூருக்கு அருகில் உள்ள புராதன மெந்துத் விகாரத்தினுள் காணப்படும் வஜ்ரபாணி - ஐந்தாம் நூற்றாண்டு

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள போரோபுதூருக்கு அருகிலிருக்கும் புராதன மெந்துத் விகாரத்தினுள் காணப்படும் வஜ்ரபாணி – ஐந்தாம் நூற்றாண்டு

Advertisements

One thought on “அகந்தை அழிதல்-1

  1. Thangamani

    வஜ்ரபாணியுடன் புத்தர் இருக்கும் சிற்பத்தின் படத்தை மிக அழகான சிற்பத்துணுக்கு என்று நினைத்து சேர்த்துவத்திருந்தேன். அதன் கதையை இப்போதே படிக்கிறேன். நன்றி

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s