ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்கள்

உலகப்புகழ் பெற்ற காந்தார சிற்பம் - புத்தர் ஸ்ராவஸ்தியில் புரிந்த இரட்டை அற்புதம் - 2 / 3ம் நூற்றாண்டு

உலகப்புகழ் பெற்ற காந்தார சிற்பம் – புத்தர் ஸ்ராவஸ்தியில் புரிந்த இரட்டை அற்புதம் –                 2 / 3ம் நூற்றாண்டு

பேசிப் பார், விவாதம் செய்து பார், மிரட்டிப் பார்…எல்லாம் பார்த்தாயிற்று. ஒன்றும் ஆகவில்லை. புத்தரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.  இரு வல்லரசுகளின் சக்கரவர்த்திகள் – மகத மன்னன் பிம்பிசாரன் மற்றும் கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தன் – இருவருமே புத்தரின் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தனர். புத்தருக்கும் சங்கத்திற்கும் நல்லாதரவை வழங்கி வந்தனர். புத்தர் காலத்தில் நிலவிய பிற ஆறு சமயத்தின் தலைவர்களுக்கும் இது பொறாமையை ஏற்படுத்தியது. எப்படியாவது இரண்டு தேசத்துப் பேரரசர்களின் முன்னால் ‘புத்தர் ஒரு சக்தியும் இல்லாதவர் ; அவரால் தத்துவங்களையும் நீதிகளையும் பற்றிப் பேச மட்டுமே இயலும் ; மந்திர சக்திகள் ஏதும் இல்லாதவர் அவர் ; எனவே அரசர்கள் ஆதரவு தருமளவுக்கு அவ்வளவு முக்கியமானவரல்லர்’ என்று காட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். மகத மன்னனிடம் சென்று புத்தரை மந்திர சக்திகளை நிரூபிக்கும் போட்டியில் பங்கு பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர். பிம்பிசாரன் முதலில் அவர்களைக் கேலி செய்து திருப்பியனுப்பிவிட்டான். சமய குருக்கள் விடுவதாயில்லை. தொடர்ந்து மன்னனிடம் விண்ணப்பம் செய்த வண்ணமிருந்தனர். கடைசியில் பிம்பிசாரன் புத்தரிடம் பேசினான். மன்னன் சொல்வதைக் கேட்ட புத்தர் மறுதளிக்கவில்லை ; மாறாக ‘மந்திர வித்தைகளைச் செய்து காட்டும் தருணத்தை நானே தீர்மானிப்பேன்’ என்று ஒரு நிபந்தைனையை மட்டும் வைத்தார். பிம்பிசாரன் மந்திரப் போட்டிகளுக்கென்றே பிரத்யேகமான ஒரு மேடையைக் கட்டினான். புத்தர் மந்திர ஜாலங்கள் செய்யும் நாளை சீக்கிரமே அறிவிப்பார் என்று நம்பினார். ஆனால் புத்தரோ விரைவிலேயே ராஜகிருகத்திலிருந்து நீங்கி அண்டை நாடுகளின் நகரங்களுக்கு விஜயம் செய்யலானார். எதிர் மதங்களின் தலைவர்கள் புத்தர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசர்களையெல்லாம் அணுகி பிம்பிசாரனிடன் சொன்னது போலவே சொல்லி புத்தரிடம் கேட்கச் சொல்லித் தொந்தரவு செய்தனர். அரசர்களும் சமயத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி புத்தரிடம் மந்திர வித்தைப் போட்டியைப் பற்றி பேசுவார்கள். பிம்பிசாரனிடம் சொன்னது போலவே புத்தர் “அதற்கான தருணத்தை நானே முடிவு செய்வேன்” என்று சொல்லிவிடுவார்.

புத்தரின் வயது ஐம்பத்தியேழு ஆன போது மாற்று சமய ஆன்மீகத் தலைவர்களின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார். அந்த சமயம் அவர் கோசல நாட்டில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அரசன் பிரசேனஜித்தன் ஏழு சிம்மாசனங்கள் கொண்ட ஒரு பெரிய மண்டபத்தை எழுப்பினான். குறித்த நாளில் ஆறு சமய குருக்களும் தத்தம் இருக்கையில் வந்தமர்ந்த பின்னும் புத்தர் வருவதாகத் தெரியவில்லை. பார்வையாளர்களாக கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆறு சமயங்களைப் பின்பற்றுபவர்கள். அவர்களெல்லாம் பொறுமை இழந்து கொண்டிருந்தார்கள். ஆறு சமய குருக்களும் தம் மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்கள். புத்தர் வராமலேயே போய் விடுவார் என்று தப்புக் கணக்கு போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அக்கணம் அங்கே குழுமியிருந்தவர்கள் ஆகாயமார்க்கமாக தரையிறங்கிக் கொண்டிருந்த புத்தரைப் பார்த்தார்கள். ஒரு பறவையைப் போல அமைதியுடன் மண்டபத்துக்குள் நுழைந்தார் புத்தர். அவரின் அங்கவஸ்திரங்கள் அழகாக ஆடின. அவர் தம் இருக்கையில் வந்தமர்ந்தார். எல்லோரும் வாயடைத்துப் போயினர். குருமார்களின் முகத்தில் ஈயாடவில்லை. வாய் திறக்காமல் தன் பார்வையினாலேயே பூடகப் புன்னகையை வீசினார் புத்தர். சுற்றுமுற்றும் பார்த்தார். மண்டபத்துக்கருகில் மாஞ்செடியொன்று வாடிக் கிடந்தது. அதன் வேரை யாரோ பிடுங்கியெடுத்திருக்கிறார்கள். தன் ஆடையின் முடிச்சொன்றிலிருந்து பல் குத்தும் குச்சியொன்றை எடுத்தார். வாடிக்கிடந்த செடியின் ஓர் இலையைப் பிய்த்தெடுத்து பல் குத்தும் குச்சியில் குத்தினார். மாஞ்செடிக்கு மிக அருகில் மண்ணைத் தோண்டிக் குழி பறித்து இலை குத்திய குச்சியைப் புதைத்தார். மண்ணைப் போட்டு மூடினார். அங்கிருந்தோர் எல்லாரும் புத்தரை நோக்கியவாறு அமைதியாய் இருந்தனர். கண்ணை மூடி ஓரிரு நிமிடம் புத்தர் காத்திருந்தார். மண்ணைக் கீறிக் கொண்டு மாங்கன்று எழுந்தது, செடியாக மாறியது. தண்டுப் பாகம் வலுப்பெற்றது. கிளைகள் முளைத்தன. வேகவேகமாக இலைகள் தோன்றின. மாமரம் சில கணங்களில் ஆளுயரத்திற்கு வளர்ந்தது. மாம்பூக்கள் தோன்றின. மாங்கனிகள் தொங்கின. எல்லோரும் மரத்தைப் பார்த்து மலைத்து நின்றனர். ஒரு சிலர் “ஆஹா” என்று சத்தமெழுப்பினர். மரத்துக்கு மிக அருகே அது வரை நின்றிருந்த புத்தரைக் காணவில்லை. கண் அசைந்தவுடன் புத்தர் இருக்கையில் வீற்றிருப்பதைப் பார்த்தனர். அங்கே இருந்த மன்னன் பிரசேனஜித்தன் உள்பட யாருக்கும் ஒரு வார்த்தையும் எழவில்லை.

இருக்கையில் புத்தர் அமர்ந்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. உட்கார்ந்த படி விண்ணில் உயர்ந்தார். பிறகு இருக்கைக்குப் பின்னர் போய் நின்று கொண்டார். இல்லை. இல்லை. அங்கு ஒரு புத்தர் போய் நிற்கவில்லை. ஐந்து புத்தர்கள் அங்கே மண்டபத்தினுள் நின்றிருந்தனர். இருக்கையிலும் ஒரு புத்தர் இருந்தார். மக்கள் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் சந்தேகமெல்லாம் அங்கே கூடியிருக்கும் எல்லோரும் புத்தராக மாறிவிட்டனரோ என்பது. மண்டப இருக்கையில் இருந்த பிற சமய குருமார்கள் எல்லாம் வாய் பொத்தி அமர்ந்திருந்தனர். அவர்கள் தலை குனிந்திருந்தார்கள். அங்கிருந்த ஆறு புத்தர்களும் ஒருவர் பின் ஒருவராக தர்மத்தை போதிக்கத் துவங்கினர். ஆறு புத்தரும் பேசி முடித்ததும் ஐந்து புத்தர்கள் மறைந்து போய் இருக்கையில் அமர்ந்திருந்த புத்தர் மட்டும் இருந்தார்.

உட்கார்ந்திருந்த புத்தர் எழுந்து நின்றார். அவர் கால்கள் தரையிலிருந்து உயர்ந்தன. ஓரடி உயரத்தில் அந்தரத்தில் அவர் நின்றிருந்தார். அங்கே கூடியிருந்தோர் அப்போது அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். புத்தரின் உடலின் மேல் பாகத்திலிருந்து ஆயிரம் அக்னி ஜுவாலைகள் பொழிந்தன. அவரின் பாதங்களிலிருந்து நீர்த்தாரைகள் விழ ஆரம்பித்தன. சில கணத்துக்குப் பிறகு கீழ் பாகத்தில் அக்னியும் மேல் பாகத்தில் தண்ணீர்த் தாரைகளும் என்று மாறி மாறி பொழிந்தன. மண்டபம் நாசமானது. கூடியிருந்தவர்கள் தூரச் சென்றுவிட்டனர். உயரமான மரங்களில் ஏறி அமர்ந்து கொண்டனர். நாசமான மண்டபம் இப்போது நீர் மாளிகை போல ஒளிஊடுருவும் தன்மையதாய் அவர்கள் கண்களுக்கு தெரிந்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒர் அற்புதம் என புத்தர் அற்புதங்கள் நிகழ்த்தியவாறிருந்தார். அவர் நிகழ்த்திய பிற அற்புதங்களாவன :

இரண்டாம் நாள் – இரண்டு இரத்தின மலைகளைத் தோற்றுவித்தார்.

மூன்றாம் நாள் – ஒர் இரத்தின ஏரியை சிருஷ்டித்தார்

நான்காம் நாள் – ஏரியிலிருந்து குரல்கள் கேட்கச் செய்தார் ; அக்குரல்கள் தருமத்தைப் போதித்தன.

ஐந்தாம் நாள் – அவர் முகத்திலிருந்து கிளம்பிய பொன்னொளி உலகத்தை நிரப்பியது. அவ்வொளி உயிர்களின் விஷவுணர்ச்சிகளைப் போக்கிச் சுத்தப்படுத்தியது.

ஆறாம் நாள் – ஒருவர் மற்றவரின் சிந்தனைகளைப் படிக்கும் திறமையை புத்தர் அங்கிருந்தோருக்கு அளித்தார்.

ஏழாம் நாள் – தன்னுடைய புரவலர்களையெல்லாம் பூலோகச் சக்கரவர்த்திகளாக்கினார்.

எட்டாம் நாள் –  தன் வலது கை விரலால் சிம்மாசனத்தை தரையில் அழுத்தினார். அப்போது தரையிலிருந்து உக்கிரமான ஆங்காரத்துடன் வஜ்ரபாணி எழுந்தான். ஜுவாலை வீசும் வஜ்ராயுதத்தால் எதிர் சமயத் தலைவர்களை பயமுறுத்தினான். வஜ்ரபாணியின் பரிவாரத்தின் நான்கு உறுப்பினர்கள் தோன்றி சமயத் தலைவர்களினுடைய இருக்கைகளை அடித்து நொறுக்கின. பீதியடைந்த சமய குருக்கள் ஆற்றில் குதித்தனர். புத்தர் தன்னுடைய ஒவ்வொரு தோல் துளையிலிலிருந்தும் என எண்பத்திநான்காயிரம் ஒளிக்கதிர்களை அனைத்து திசைகளிலும் பரவச்செய்தார். ஒவ்வொரு கதிரின் நுனியிலும் ஒரு தாமரை ; ஒவ்வொரு தாமரையிலும் தர்மத்தைப் போதிக்கும் ஒரு புத்தர். வார்த்தையில் விவரிக்கவொண்ணா இந்த அற்புதக் காட்சியைக் கண்ணுற்ற ஆறு சமய குருமார்களின் தொண்ணூற்றாராயிரம் சீடர்களும் பௌத்தத்தைத் தழுவி அருகராயினர்.

காந்தாரத்தின் இந்த கற்பாறைச் சிற்பம் ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்களின் இரண்டு அம்சங்களைச் சித்தரிக்கிறது. புத்தர் மாயத்தில் தோற்றுவித்த இளமாமரம் வலப்புறத்தில் காணப்படுகிறது. தன்னைப் நான்கு உடல்களாகப் பெருக்கிக் கொண்ட புத்தர் பிற நான்கு புத்தர்களுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதை இச்சிற்பத்தில் காணலாம். முக்கியமான இந்தப் பாறைச்சிற்பத்தின் நீளம் 73 செண்டிமீட்டர் - 2 / 3ம் நூற்றாண்டு

காந்தாரத்தின் இந்த கற்பாறைச் சிற்பம் ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்களின் இரண்டு அம்சங்களைச் சித்தரிக்கிறது. புத்தர்  தோற்றுவித்த மாய மாமரம் வலப்புறத்தில் காணப்படுகிறது. தன்னை பல உடல்களாகப் பெருக்கிக் கொண்ட புத்தர் பிற புத்தர்களுடன் சேர்ந்து தர்ம சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதை இச்சிற்பத்தில் காணலாம். மிக முக்கியமான இந்தப் பாறைச்சிற்பத்தின் நீளம் 73 சென்டிமீட்டர் – 2 / 3ம் நூற்றாண்டு

லக்னௌ நகரிலிருந்து 150 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் சஹேத் மற்றும் மஹேத் என்றழைக்கப்படும் கிராமங்களே புத்தர் காலத்தில் ஸ்ராவஸ்தி (பாலி : சாவத்தி) என்றழைக்கப்பட்ட கோசல நாட்டுத் தலைநகரமாகும். புத்தர் இரட்டை அற்புதங்கள் நிகழ்த்தினார் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்தூபம். நன்றி : Wikipedia

லக்னௌ நகரிலிருந்து 150 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் இருக்கும் சஹேத் மற்றும் மஹேத் என்றழைக்கப்படும் கிராமங்களே புத்தர் காலத்தில் ஸ்ராவஸ்தி (பாலி : சாவத்தி) என்றழைக்கப்பட்ட கோசல நாட்டுத் தலைநகரமாகும். புத்தர் 24 சாதுர்மாஸ்யங்கள் தங்கியிருந்த ஜெதாவன மடாலயமும் இங்கு தான் உள்ளது. மேலே காணப்படும் படத்தில், புத்தர் இரட்டை அற்புதங்கள் நிகழ்த்தினார் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்தூபம். நன்றி : Wikipedia

Advertisements

One thought on “ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s