குரங்கு ராஜன்*

சாஞ்சி ஸ்தூபத்தின் மேற்கு தோரண வாயிலில் “மகாகபி ஜாதகம்” சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தொடங்கி, பின்னர் கி மு முதலாம் நூற்றாண்டில் சுங்க வம்ச காலத்தில் தொடரப்பட்டு, இறுதியில் கி பி முதலாம் நூற்றாண்டில் ஆந்திர வம்ச காலம் வரை சாஞ்சி வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. சாஞ்வி வளாக நிர்மாணம் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது

சாஞ்சி ஸ்தூபத்தின் மேற்கு தோரண வாயிலில் “மகாகபி ஜாதகம்” சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தொடங்கி, பின்னர் கி மு முதலாம் நூற்றாண்டில் சுங்க வம்ச காலத்தில் தொடரப்பட்டு, இறுதியில் கி பி முதலாம் நூற்றாண்டில் ஆந்திர வம்ச காலம் வரை சாஞ்சி வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. சாஞ்சி வளாக நிர்மாணம் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது

ஒரு முறை ஜெதாவனத்தில் சில பிக்குகள் புத்தர் தம் உறவினர்களுக்குச் செய்த நன்மைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த புத்தர் அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். ”ததாகதர் தம் உறவினர்களுக்கு நன்மைகள் செய்வதொன்றும் இது முதல் முறையல்ல” என்று சொன்ன புத்தர் இறந்த காலக் கதையொன்றைச் சொல்லத் தொடங்கினார்.

+++++

பல வித தாவரவினங்களும் விலங்கினங்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் அடர்ந்த காட்டுப்பகுதியில் அற்புதக் கனி மரம் ஒன்று இருந்தது. பனங்கொட்டையைவிட அளவில் பெரிதான பழங்களைக் காய்த்தது அந்த மரம். பழத்தின் சுகந்தம் மிக அபூர்வம். அதன் சுவை அதி மதுரம். அம்மரத்தில் காய்த்த பழம் போன்று உலகில் யாரும் எங்கும் கண்டிருக்க முடியாது.

அதே மரத்தில் எண்ணற்ற குரங்குகள் வாசம் செய்துவந்தன. போதிசத்துவர் குரங்குகளின் ராஜாவாக அந்த மரத்தில் பிறந்தார். குரங்கு ராஜா அதன் குரங்குப் பிரஜைகளை விட வளர்ச்சியில் ஆஜானுபாகுவாக இருந்தது. தன் பிரஜைகளின் மேல் பாசமும் பரிவும் கொண்டிருந்தது.

மரத்தின் அருகில் ஓடும் ஆற்றின் மேலாக மரக்கிளை ஒன்று வளரத் தொடங்கியதை ஒரு நாள் குரங்கு ராஜா கவனித்தது. அது அவருள் ஜாக்கிரதை உணர்வை விழித்தெழ வைத்தது. கிளையிலிருந்து பழுத்து உதிரும் பழம் ஆற்றின் மேல் விழலாம். ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பழம் காசிமாநகரை அடையலாம். அப்பழத்தை உண்ணக் கிடைத்த மனிதர்கள் பழம் எங்கு விளைகிறது என்று கண்டு பிடிக்கும் ஆர்வத்தில் இங்கு வந்து விடுவார்கள். அவர்களால் மரம் அழிபட்டு குரங்குகள் பாதிப்புக்குள்ளாகும். அந்த குறிப்பிட்ட கிளையில் ஒரு கனியும் பழுக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு குரங்குகளுக்கு கட்டளையிட்டது குரங்கு ராஜா. ராஜாவின் ஆணையின் படி ஒரு அந்தக் கிளையில் ஒரு காயும் பழுக்கா வண்ணம் குரங்குகள் பார்த்துக் கொண்டன, எனினும் ஒரு பழம் மட்டும் அவற்றின் கண்களுக்குப் படவில்லை. சில நாட்களில் அந்த ஒற்றைக் கனிக்குள் நிறம், சுவை, மணம் மற்றும் மிருதுத்தன்மை கூடி  நன்கு பழுத்து, அதன் காம்பிலிருந்து விடுபட்டு ஆற்று நீரோட்டத்தில் விழுந்தது. அரசனின் ஆட்கள் மீன்களுக்காக விரித்து வைத்திருந்த வலைக்குள் சிக்கிக் கொண்டது. பழம் வலையில் சிக்கிக் கொண்ட இடத்துக்கு மிக அருகில் அரசன் பெண்டிருடன் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தான். பழத்தின் அசாதாரணமான வாசம் அவ்விடமெங்கும் பரவியது. பெண்கள் அணிந்திருந்த வாசனை திரவியங்கள் வாசனை போலில்லை அது. அவர்கள் சூடியிருந்த பூமாலைகளிலிருந்து கமழும் வாசனையல்ல அது. அரசன் அருந்தும் மதுபானங்களில் இருந்து எழும் வாசனையுமல்ல அது.  அங்கு குழுமியிருந்த அனைவரும் பழத்தின் வாசனையை முகர்ந்து மதி மயங்கிப் போயினர். அனைத்து வாசனையும் தம் நாசிக்குள் வர வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களும் சுவாசத்தை இழுத்தவண்ணம் இருந்தனர். அப்போது அவர்களின் பாதி கண்கள் மூடின. மன்னனும் பழவாசனையில் மயங்கிப் போனான். வாசனையின் மூலம் எதுவென அறியும் ஆவலில் அனைவரும் தம் விழிகளை உருட்டி நாலா திசையிலும் தேடினர். விரைவிலேயே வலையில் சிக்கிய பழத்தை கண்டு பிடித்தனர். அரசன் சில வல்லுனர்களை அழைத்து பரிசோதித்து அது விஷப்பழமல்ல என்று உறுதி செய்து கொண்டான்.  நிறம், வாசனை, அளவு, வடிவம் – எல்லா அம்சங்களிலும் வித்தியாசமானதாக இருந்த அந்த கனியை அரசனே புசித்தான். பிறகு, “உலகின் வேறெந்த வகைக் கனியும் சுவையில் இக்கனியுடன் போட்டி போட முடியாது” என்று அரசன் குறிப்பிட்டான். ஆற்று வழியே பயணம் செய்து இக்கனியின் மரத்தை கண்டு பிடிக்குமாறு காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மிக விரைவிலேயே தீஞ்சுவைக் கனிகள் பூத்துக் குலுங்கிய ஆற்றோர மரம் கண்டு பிடிக்கப்பட்டது. கனிகளைச் சுவைத்து மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குக் கூட்டத்தைக் கண்டதும் மனிதர்களால் பொறுக்க முடியவில்லை. குரங்களின் மேல் அம்புகளை எய்தனர்.

காவலர்கள் மரத்தை அணுகுவதை முன்னரே கவனித்து விட்ட குரங்கு ராஜா ஒரு குன்றின் உச்சியை அடைந்தது. பிற குரங்குகள் பாதுகாப்பான அந்த உச்சியை அடைய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட குரங்கு ராஜா, வேர்ப்பாகம் பலமாக இருந்த ஓர் உயரமான மூங்கிலைப் பிடித்துக் கொண்டு குரங்குகள் வசித்த மரத்தை நோக்கி குதித்தது. உச்சியை எளிதில் அடையும் படியாக மூங்கில் வில்லாக வளைந்தது. குரங்கு ராஜா பிற குரங்குகளை அழைத்து தன் உடலைப் பாலமாக பயன் படுத்தி மூங்கிலின் மேல் ஏறி குன்றின் உச்சியை அடைந்து விடுமாறு சொன்னது. உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குரங்குகளெல்லாம் குன்றின் மீது ஏறின. காவலர்களின் அம்புகள் வந்து விழாத குன்று உச்சியை சென்றடைந்தன. ஆனால் சகாக்களின் கால்கள் மிதித்து மோசமாக காயமுற்ற குரங்கு ராஜாவோ மூங்கிலை கை விட்டு சுருண்டு விழுந்தது. சற்றுத் தள்ளி நின்று குரங்குகள் தப்பித்த விதத்தையும் குரங்கு ராஜாவின் அவல நிலையையும் கண்ணுற்றவாறிருந்தான் அரசன். தனது குரங்குப் பிரஜைகளைக் காப்பதற்காக நுண்ணறிவு, தைரியம், வீரம் மற்றும் தியாகம் போன்ற குணங்களின் எடுத்துக்காட்டாய் குரங்கு ராஜா புரிந்த சாகசம் மன்னன் மனதை நெகிழ வைத்தது.

மயக்கத்தில் இருந்த குரங்கு ராஜாவை பத்திரமாக மரத்திலிருந்து இறக்கி, ஒரு மெத்தையில்  படுக்க வைக்குமாறு தன் காவலர்களுக்கு அரசன் கட்டளையிட்டான். குரங்கு ராஜாவுக்கு முதலுதவி செய்ய மருத்துவரொருவர் அழைக்கப்பட்டார்.

குரங்கு ராஜா கண் விழித்தவுடன் அதனருகே நின்றிருந்த அரசன் தம்முடைய பிரஜைகளைக் காப்பதற்காக சொந்தவுயிரைப் பணயம் வைத்த காரணத்தை வினவினான்.  அவனைப் பொறுத்தவரை ஆபத்துக் காலத்தில் பிரஜைகள் தான் அரசனைக் காக்க வேண்டும் அல்லது தியாகம் செய்ய வேண்டும். அரசனுக்குப் பணிவிடைகள் செய்யத் தானே சாதாரண ஜனங்கள் இருக்கிறார்கள் என்று அரசன் எண்ணினான்.

ஞானம் ததும்ப குரங்கு ராஜா சொன்னது :

அரசனே! என் உடல் நொறுங்கிவிட்டது
ஆனால் என் மனம் தெளிவாயுள்ளது
வெகுநாட்களாய் யாரிடம் அரசதிகாரத்தை காட்டினேனோ
அவர்களைத் தான் நான் தூக்கி விட்டேன்

அரசன் புகழ்ந்து சில வார்த்தைகளைச் சொல்லு முன்னமே குரங்கு ராஜாவின் உயிர் பிரிந்தது. குரங்கிற்கு ராஜமரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அரசனின் அமைச்சர்கள் குரங்கு ராஜாவின் இறுதிச் சடங்கிற்கென நூறு மாட்டு வண்டி நிறைய மரக்கட்டைகள் அனுப்பி வைத்தார்கள். சடங்குகள் முடிந்த பின்னர் குரங்கு ராஜாவின் எலும்புக்கூட்டை அமைச்சர்கள் அரசனிடம் எடுத்துச் சென்றனர். குரங்கு ராஜாவை எரித்த இடத்தில் அரசன் ஒரு கோயில் எழுப்பினான் ; கோவிலில் தீபமும் தூபமும் ஏற்றப்பட்டன. குரங்கு ராஜாவின் தலையெலும்புக் கூட்டிற்கு தங்க முலாம் பூசி ஓர் ஈட்டியில் பதித்து ஊர்வலங்களில் ஏந்திச் சென்றான். அரண்மனை வாசலில் அதை வைத்து, குரங்கு ராஜாவுக்கு மலர்களால் ஊதுபத்திச் சுடரால் அஞ்சலி செலுத்தினான். தன் வாழ்நாள் முழுதும் எலும்புக் கூட்டை நினைவுச் சின்னமாகக் கருதி வணங்கினான். குரங்கு ராஜனின் வழிப்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்கி சுவர்க்க பதவிக்கு தகுதி பெற்றான்.

+++++

கதையைச் சொன்ன பிறகு புத்தர் கதையின் பாத்திரங்களை நிகழ் காலத்தில் அடையாளம் காட்டினார். “அந்தப் பிறப்பில் அரசனாக இருந்தவர் ஆனந்தர் ; இங்கு கூடியிருக்கும் பிக்குகளின் குழு குரங்குகளின் பரிவாரமாக இருந்தது. நான் குரங்கு ராஜாவாக இருந்தேன்”

* – பாலி மூலத்தில் இதன் தலைப்பு – மகாகபி ஜாதகம்

Advertisements

One thought on “குரங்கு ராஜன்*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s