புத்தவசனம்

pali1

புத்தர் சொன்ன சொற்களிலேயே அவரின் அறவுரைகளைக் கேட்டால்….புத்தர் எந்த மொழியில் பேசியிருப்பார்? இக்கேள்விக்கான உறுதியான விடை பற்றிய முடிவை இன்னும் வரலாற்றாளர்கள் எட்டவில்லை. கிழக்கத்திய மகதி பிராகிருதமோ அல்லது கோசல நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியிலோ அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிராம நாகரீகங்களின் முடிவில், நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த புதிதில், ஆடு-மாடு மேய்த்து சிறிய அளவிலான தோட்டப்பயிர் செய்து வாழ்ந்த பழங்குடி மக்கள் வாழ்க்கையை விடுத்து செல்வச் செழிப்பான நகரங்களில் மக்கள் வசிக்கத் தொடங்கிய காலத்தில், வணிகத்தை மையப்படுத்திய முடியரசுகள் தோன்றத் தொடங்கியிருந்த சமயத்தில் புத்தர் தன் அறவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தார். கங்கைச் சமவெளியின் ஒவ்வொரு நகரங்களிலும் பல வருடங்களாக (புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது அவருடைய வயது எண்பது) உலவித் திரிந்து சாதுக்களுக்கு வினய வழிமுறைகளை அறிவுறுத்தினார் ; அவரை மொய்த்த வண்ணம் இருந்த இல்லறவாசிகளிடம்  பேசினார் ; ஆர்வமுள்ளோர் தொடுக்கும் வினாக்களுக்கு விடையளித்தார் ; பல்வேறு வர்க்க மக்களிடமும் உரையாடினார். நமக்கு கிடைத்திருக்கும் அவருடைய போதனைப் பதிவுகள் அவருடைய சொந்த எழுதுகோலிலினால் எழுதப்பட்டவை அல்ல ; அவருடைய பேச்சுகளைக் கேட்டவர்கள் அவர் பேசியதை பேசியவாறே படியெடுத்தவைகளுமல்ல. புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பிறகு நடந்த புத்தசபைகளில் தொகுக்கப்பட்ட புத்தரின் சொற்பொழிவுகளிலிருந்தே நம்மிடையே இன்றிருக்கும் புத்தவசனங்கள் பெறப்பட்டன. வாய் வழி மரபாக புத்தரின் வசனங்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. புத்த சபைகளில் தொகுக்கப்பட்ட போதனைகள் புத்தர் சொன்ன வார்த்தை மாறாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று எண்ண சாத்தியமில்லை. தம்மை அண்டிய மக்களின் மனப்பக்குவத்திற்கேற்றவாறு புத்தர் உரையாற்றியிருக்கக் கூடும். அவரின் சொற்பொழிவுகளை தரப்படுத்தப்பட்ட உரைகளாகப் பதிவு செய்யும் போது “edit” பண்ணப்படாமல் இருந்திருக்ககூடுமா? வாய் வழிப் பாரம்பரியம் வாயிலாக பாதுகாக்கப்படுவதற்கேற்ற பொருத்தமான முறையில் போதனைகளை வடிவமைப்பதற்கு, புத்தசபையில் கூடிய சாதுக்கள் போதனைகளை தொகுப்பாக்கம் செய்து, வாய் வழிப் பாரம்பரியத்தின் அடிப்படைக் கூறுகளான – கேட்டல், நினைவில் தக்கவைத்தல், ஓதுதல், மனனம் செய்தல், ஒப்பித்தல் – இவ்வைந்துக்கும் வழிவகை செய்யுமாறு “edit” செய்திருப்பார்கள். இந்த வழிவகையில் எளிமைப்படுத்துதலையும் தரப்படுத்துதலையும் அவர்கள் தவிர்த்திருக்க முடியாது.

புத்தர் வாழ்ந்த நாட்களிலேயே அவரின் உரைகள் இலக்கிய வகைமைகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டன :-

 1.  சுத்தா (Sutta) – உரைநடை வடிவிலான போதனை
 2.  கெய்யா (Geyya) – உரைநடையும் செய்யுளும் கலந்த வடிவம்
 3.  வெய்யாகரணா (Veyyakaranaa) – வினா-விடை வடிவம்
 4.  காதா (Gatha) – செய்யுள் வடிவம்
 5.  உதானா (Udana) – உரைநடை அல்லது செய்யுள் வடிவிலான புத்தரின்   சிறப்பு வாசகங்கள். (பாலி அமைப்பில் உள்ள குத்தக நிகாயத்தின் படைப்பு ஒன்றின் பெயரும் இதுவே).
 6.  இதிவுத்தகா (Itivuttaka) – “thus it is said” என்ற சொற்களின் அறிமுகத்துடன் தொடங்கும் போதனைகள். பாலி அமைப்பின் குத்தகநிகாயத்தின் இதே தலைப்பில் அமைந்திருக்கும் ஒரு படைப்பில் இவைகள் அடங்கியுள்ளன. சமஸ்கிருத அமைப்பில் சீடர்களின் முந்தைய ஜென்மங்களின் கதைகளைக் கொண்ட வகைமையாக இது “இதிவ்ரித்திகா” என்று வழங்கப்படுகிறது.
 7.  ஜாதகா (Jataka) – புத்தரின் முந்தைய ஜென்ம வாழ்க்கையைப் பேசும் வகைமை.
 8.  அப்புததம்மா (Abbhutadhamma) –  அற்புதங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் அடங்கிய கதைகள்.
 9. வேதல்ல (Vedalla) – “நுண்ணிய பகுப்பாய்வு” என்ற பொருள் கொண்ட இந்த வகைமை சமய இலக்கணம் மற்றும் மறைக்கல்வியை சம்பாஷணை வடிவில் அளிக்கிறது. சமஸ்கிருத அமைப்பில் இது “வைபுல்ய” என்று குறிக்கப்படுகிறது. முக்கியமான பல மகாயான சூத்திரங்கள் – லோட்டஸ் சூத்ரா, அஷ்டசஹஸ்ரிக-பிரஜ்னபாரமித சூத்திரம், லங்காவதார சூத்திரம் முதலானவை வைபுல்ய வகைமையைச் சார்ந்தவை.

மேற்கண்ட ஒன்பது வகையோடு மூன்று இதர வகைகளும் சமஸ்கிருத அமைப்பில் காணப்படுகின்றன.

 •  நிதானா (”Cause”) – அறிமுகப்பகுதி மற்றும் வரலாற்றுச் சொல்லாடலைக் குறிக்கும் வகைமை
 • அவதானா (”Noble Deeds”) – மக்களின் முந்தைய பிறப்புகளில் புத்தர் புரிந்த நல்வினைகளும் அதன் விளைவாக அவர்களின் நிகழ் பிறப்பில் நிகழும் நல்விளைவுகளும்
 •  உபதேசா (”instructions”)

புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பிறகு பழைய வகைகள் அடங்கிய அமைப்பு பெருந்தொகுதியாக ஒன்றிணைக்கப்பட்டு தேரவாத பாரம்பரியத்தில் நிகாயங்கள் என்று அழைக்கப்படலாயின.  மகாயான பௌத்தத்தின் சமஸ்கிருத அமைப்பில் பெருந்தொகுதி ஆகமங்கள் என்றழைக்கப்படுகின்றன.

பாலி நெறிமுறை
துரதிர்ஷ்டவசமாக, துவக்க கால மைய நீரோட்ட இந்திய பௌத்தப் பிரிவுகளின் நெறிமுறைத் தொகுதி நூல்கள் இன்று தொலைந்து போய்விட்டன. வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் பதினொன்றாம், பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த போது நடந்த அழிவுகளுக்குப் பிறகு பௌத்தம் தன் அன்னை நாட்டில் இல்லாமல் போயிற்று. ஆரம்ப கால பௌத்தப் பிரிவுகளின் தொகுதிகளில் இன்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒரே தொகுதி – பாலி என்று இன்று நாம் அறிந்திருக்கக் கூடிய மொழியில் இருக்கும் தொகுதியாகும். புராதன தேரவாத பௌத்தப் பிரிவுக்கான தொகுதியே அது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தேரவாத பௌத்தம் அதன் தாய்நாட்டில் பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட பேரழிவிலிருந்து தப்பித்தது. ஏறக்குறைய அதே சமயத்தில் தேரவாதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் பரவி, பிராந்தியத்தின் முக்கிய சமயமாகத் தழைக்கவும் பௌத்தத்தின் இலங்கை விஜயமே காரணமாய் அமைந்தது.

ஒரே தொகுதியாக பாலி நெறிமுறையின் எல்லாப் படைப்புகளும் ஒன்றிணைந்திருக்கின்றன என்பதாலேயே எல்லா படைப்புகளும் ஒரே சமயத்தில் இயற்றப்பட்டன என்று கருதிவிட முடியாது. மிகப் பழைமையான மொழியில் பாலி நிகாயங்களின் சில பகுதிகள் இருக்கின்றன என்பதாலேயே பிற பௌத்தப் பிரிவுகளின் நெறிமுறைத் தொகுதிகளை விட பழைமையானவை என்றும் சொல்லிவிட முடியாது. பிற பௌத்த பிரிவுகளின் பெரும்பாலான ஆகமங்கள் சீன மொழிபெயர்ப்புகளிலும் திபெத்திய மொழிபெயர்ப்புகளிலும் இன்றும் காணப்படுகின்றன. ஆனாலும், பாலி நெறிமுறைத் தொகுதியை மூன்று காரணங்களின் அடிப்படையில் சிறப்பானது என்று நாம் சொல்லலாம்.

ஒன்று, ஒற்றை பௌத்தப் பிரிவுக்குச் சொந்தமான எல்லா நெறிமுறைகளின் முழுமைத் தொகுதி என்பதால் ; நெறிமுறையின் பகுதிகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் இயற்றப்பட்டவை என்று கொண்டாலும், ஒற்றைப் பிரிவுடனான ஒழுங்கமைவு நிகாயங்களுக்கு ஒரு சீரமைப்பை நல்குகிறது. வெவ்வேறு காலங்களில் எழுந்த பகுதிகளுக்கிடையிலும் ஒரே சீரான உள்ளடக்கத்தை நம்மால் காண முடியும். நான்கு நிகாயங்களுக்கிடையிலும், ஐந்தாவது நிகாயத்தின் பழைய பகுதிகளுக்கிடையே காணப்படும் சீரான உள்ளடக்கம் பௌத்த இலக்கியத்தின் மிகப் பழைமையான அடுக்கை நாம் கண்டடைந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை நமக்களிக்கிறது.

இரண்டு, முழுத் தொகுதியும் மத்திய இந்தோ-ஐரோப்பிய மொழியில் பேணிக் காக்கப்பட்டிருக்கிறது. இம்மொழி புத்தர் பேசியிருக்கக் கூடிய மொழி அல்லது பல்வேறு பிராந்திய வட்டார வழக்குகளுக்கு நெருக்கமானதாகக் கருதப்படக்கூடியது. நாம் இம்மொழியை பாலி என்றழைக்கிறோம். ஆனால் இப்பெயர் ஒரு தவறான புரிதலின் மூலமாக எழுந்திருக்கிறது. “பாலி” என்ற சொல்லின் அர்த்தம் “உரைமூலம்” என்பதாகும் ; இது “உரை” என்பதிலிருந்து வேறுபட்டது. உரைமூலம் பேணிக் காக்கப்பட்டு வந்த மொழியை “பாலிபாஷா” அதாவது “உரைமூலங்களின் மொழி” என்று குறிப்பிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இந்தச் சொற்றொடர் “பாலி மொழி” என்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டது. இந்த தவறான கருத்து காலப் போக்கில் நிலைத்துவிட்டது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பிராகிருத வட்டார மொழி வழக்குகளின் சிறப்பம்சங்களை கொண்ட அதே சமயம் ஒரு பகுதி சமஸ்கிருதமாக்கலுக்கு உள்ளாகி வந்த கலப்பு மொழி இதுவென்று அறிஞர்கள் கருதுகின்றனர். வாஸ்தவத்தில் புத்தர் பேசிய மொழியாக இது இல்லாமல் இருந்தாலும், அவர் பேசிய மொழியுடன் மிகவும் நெருங்கியதெனக் கருதப்படக் கூடிய மத்திய இந்திய-ஐரோப்பிய மொழியினத்தின் அம்சமாக “பாலிபாஷையை” நாம் கொள்ளலாம். எனவே, புத்தர் எண்ண-உலகத்தின்பாற் பட்ட சொற்கள் தாம் இவை ; அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய கருத்தியல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களை இப்பாலி நெறிமுறைகள் கொண்டிருக்கின்றன என்பது இவற்றின் இரண்டாவது சிறப்பம்சம்.

மூன்று, அழிந்து போன பிற பௌத்தப் பிரிவுகளின் (உதாரணம், சர்வாஸ்திவாத பௌத்தம்) இன்னும் மிஞ்சியிருக்கும் நெறிமுறைகள் கல்வி ஆர்வத்தின்பாற் பட்டதாக சுருங்கிவிட்டன. ஆனால் பாலி நெறிமுறை பல லட்சம் பேர் வணங்கிப் பின்பற்ற நினைக்கும் நெறிமுறையாக இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

பாலி நெறிமுறை பொதுவாக “திபிடகம்” என்று அழைக்கப்படுகிறது. திபிடகம் என்றால் “மூன்று கூடைகள்” அல்லது “மூன்று தொகுப்புகள்” என்று பொருள். இந்த மூவகைப்பாடு தேரவாதத்துக்கு மட்டுமே உரித்தான தனியம்சம் அல்ல. பௌத்த நெறிமுறை நூல்களை மூன்றாக தொகைப்படுத்துதல் இந்திய பௌத்தப் பிரிவுகளின் பொது அம்சமாக இருந்தது. சீன மொழிபெயர்ப்பாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வரும் ஆகமங்களை சீன திரிபீடகம் என்றே அழைக்கிறார்கள்.

பாலி நெறிமுறையின் மூன்று பிரிவுகள் :-

 1. வினய பிடகம் – சாதுக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் ; இவ்விதிமுறைகள் பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கானவை. ஒத்திசைவான மடாலய ஒழுங்கை பேணுவதற்கான விதிமுறைகள் இவை.
 2. சுத்த பிடகம் – புத்தரின் அவருடைய முக்கிய சீடர்களினுடைய உரைகளின் தொகுப்பு, உத்வேகமூட்டும் செய்யுள் வடிவ படைப்புகள். செய்யுள் வடிவக் கதைகள், மற்றும் விளக்கங்கள் தரும் இயல்பினதான படைப்புகள்.
 3. அபிதம்ம பிடகம் – பௌத்த தத்துவங்களின் தொகுப்பு. புத்தரின் போதனைகளை கடுமையான மெய்யியல் மற்றும் அமைப்பியல் தருக்கங்களுக்கு உள்ளாக்கும் ஏழு ஆய்வுப் படைப்புகளின் தொகுப்பு.

மற்ற இரு பிடகங்களுடன் ஒப்பு நோக்கும் போது, அபிதம்ம பிடகம் பௌத்த சிந்தனையின் பரிமாண வளர்ச்சியில் எழுந்த பிற்கால விளைவே. பழைய போதனைகளை ஒழுங்கு படுத்தும் தேரவாதத்தின் முயற்சியே பாலி பதிப்பு. பிற ஆரம்ப கால பௌத்தப் பிரிவுகளும் தமக்கேயான அபிதம்மத்தை கொண்டிருந்தன. பாலி பதிப்பைப் போல, சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நெறிமுறை நூல்கள் மட்டுமே இன்றளவும் முழுமையாக உள்ளன. அவற்றின் மூலம் சமஸ்கிருதம். ஆனால் இன்று அவைகள் சீன மொழிபெயர்ப்பாக நமக்கு கிடைக்கின்றன. தேரவாத பௌத்தத்தின் நெறிமுறையுடன் உருவாக்கத்திலும் மெய்யியலிலும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன.

புத்தரின் சொற்பொழிவுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்யும் சுத்தபிடகம் நிகாயங்கள் எனப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. நிகாயங்களின் உரையாசிரியர்கள், வடக்கு பௌத்தத்தின் (”மகாயானம்”) சகாக்கள் போல,  அவற்றை ஆகமங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நான்கு முக்கிய நிகாயங்கள் :-

 1. திக்க நிகாயம் : நீண்ட உரைகளின் தொகுப்பு – மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட 34 சுத்தங்கள்
 2. மஜ்ஜிம நிகாயம் : நடு அளவினதான உரைகளின் தொகுப்பு – மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட 152 சுத்தங்கள்
 3. சம்யுத்த நிகாயம் : Connected Discourses – இன் தொகுப்பு. 56 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டு சம்யுத்தங்கள் என்றழைக்கப்படும் மூவாயிரம் குறுகிய சுத்தங்கள்.
 4. அங்குத்தர நிகாயம் : Numerical Discourses – நிபாதங்கள் எனும் பதினோரு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட 2400 குறுகிய சுத்தங்கள்.

மேற்சொன்ன நிகாயங்களைத் தவிர குத்தக நிகாயம் என்னும் ஐந்தாவது நிகாயத்தையும் சுத்த பிடகம் உள்ளடக்கியிருக்கிறது. இதன் அர்த்தம் சின்ன தொகுதி. பெயர் தான் சின்ன தொகுதி. ஆனால் பெரிய பெரிய படைப்புகளையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் நிகாயம் இது – முழுக்க செய்யுள் வடிவில் இருக்கும் தம்மபதம், தேரகாதா மற்றும் தேரிகாதா, உரைநடை மற்றும் செய்யுள் கலந்த சுத்தநிபாதம், உதானா, மற்றும் இதிவுத்தகா என்று முக்கிய, மிகப் பழமையான படைப்புகள் குத்தக நிகாயத்தில் உள்ளன.

நான்கு நிகாயங்களுக்கிணையான நான்கு ஆகமங்கள் சீன திரிபீடகத்திலும் உண்டு ; ஆரம்பப் பௌத்த பிரிவுகளிலிருந்து குறிப்பிடத் தக்க வேறுபாடுகள் சீன திரிபிடகத்தில் காணப்படுகிறது.

நான்கு நிகாயங்களுக்கிணையான நான்கு ஆகமங்கள் :-

தீர்க்காகமம் – தர்மகுப்தக பௌத்தப் பிரிவிலிருந்து முளைத்திருக்கலாம் ; பிராகிருத மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மத்யமாகமம் – சர்வாஸ்திவாத பௌத்தத்திலிருந்து முளைத்தது. சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

சம்யுக்தாகமம் – சர்வாஸ்திவாத பௌத்தத்திலிருந்து முளைத்தது. சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

எகோத்தராகமம் – மகாசங்கிக பௌத்தப் பள்ளியிலிருந்து கிளைத்தது. பிராகிருதமும் சமஸ்கிருதமும் கலந்து கலப்பு மொழியிலிருந்து சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நான்கு நிகாயங்களின் சூத்திரங்கள் சீன திரிபிடகத்திலும் காணப்படுகின்றன, சிலபல வித்தியாசங்களுடன். குத்தகநிகாயத்தின் தனிப்படைப்புகளின் மொழிபெயர்ப்பும் சீன திரிபிடகத்தில் உள்ளது. தம்மபதத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சீன திரிபிடகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தனிப்படைப்பாக சுத்தநிபாதம் சீன திரிபிடகத்தில் சேர்க்கப்படவில்லை.

நூல் : In the Buddha’s Words : an anthology of Discourses from the Pali Canon – Edited and introduced by Bhikku Bodhi – Wisdom Publications, Boston, 2005

CanonPicture

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s