தாரா தாரா தாரா

Green Tara - Tibetan Thangka Painting by Japanese artist Yoji Nishi

Green Tara – Tibetan Thangka Painting by Japanese artist Yoji Nishi

பௌத்தர்களின் வரலாற்றுக் கதைகளைப் பதிவு செய்த திபெத்திய வரலாற்றாளர் தாரநாதர் ஒரு கதை சொன்னார். பல யுகங்கட்கு முன்னர் பன்மடங்கு ஒளி என்னும் பிரபஞ்சத்தில் ஞானசந்திரா என்னும் இளவரசி வாழ்ந்து வந்தாள். புத்தர்களின் மேல் மிகுந்த பக்தியுடைவளாக விளங்கினாள். துந்துபிஸ்வர புத்தர் என்னும் புத்தருக்கு பல வருடங்களாக காணிக்கைகள் அளித்து வந்தாள். இதன் காரணமாக ஒரு நாள் அவளுள் கருணையின் அடிப்படையிலான போதிசித்தம் எழுந்தது. உலக உயிர்கள் அனைத்தையும் உய்விக்க வைக்கும் ஞானத்தைப் பெறும் எண்ணம் வெகுஆழமாக வேரூன்றியது. பிக்குக்களை அணுகினாள். அவர்களெல்லாம் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினர். அப்போது தான் அவள் ஒர் ஆணாக அவதரித்து போதிசத்துவ நிலையை அடைய இயலும் என்றும் அறிவுறுத்தினர். பௌத்த இலக்கியங்களில் நாம் இந்நிலைப்பாட்டை பரவலாக படிக்கலாம். ஒரு பெண் போதிசத்துவப் பாதையில் முன்னேறுவதற்கு ஒரு கட்டத்தில் ஆணாகப் பிறத்தல் அவசியம் என்றே பல்வேறு பௌத்த நூல்கள் வலியுறுத்தி வந்தன. ஞானசந்திராவுக்கு பிக்குக்கள் சொன்னது ஏற்றதாய்ப் படவில்லை. பிக்குக்கள் சொன்னதைக் கேட்ட ஞானசந்திரா பேசலுற்றாள் :

 ”இங்கு ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை
சுயமும் இல்லை, நபரும் இல்லை, பிரக்ஞை இல்லவேயில்லை.
ஆணென்றும் பெண்ணென்றும் வகைப்படுத்துதல் சாரமற்றது
தீயமனம் கொண்ட உலகை ஏமாற்றவல்லது”

பிறகு அவள் ஓர் உறுதிமொழி பூண்டாள்.

“ஆணுடலில் இருந்து
ஞானநிலையை விழைவோர் பலர் ;
பெண்ணுடலில் இருக்கும் உயிர்களின் உய்வுக்காக
உழைப்போர் யாருமிலை.
எனவே, சம்சாரவுலகம் இல்லாமல் போகும் வரை
பெண்ணுடலில் இருக்கும் உயிர்களின் உய்வுக்காக
அயராதுழைப்பேன்”

உயிர்களைக் காத்து ஆட்கொள்ளும் பணியில் வல்லமை பெற்றவளாக ஆனாள். துந்துபிஸ்வர ததாகதர் அவளுக்கு “தாரா” என்னும் புதுப்பெயர் சூட்டினார்.

தாராவின் தோற்றம் பற்றி மேலும் பல தொன்மக் கதைகள் உண்டு. சில தொன்மங்களின் படி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தின் துவக்கத்தில் அவலோகிதேஸ்வர போதிசத்துவர் தன் தலையைச் சாய்த்து மனிதவினத்தின் துக்கங்களை நோக்கலானார். சம்சாரவுலகமெங்கிலும் துக்கம் பரவிக் கிடந்தது. உயிர்கள் துக்கத்தில் பிறந்து, நோய்கள், போர், வறட்சி இவற்றால் பீடித்து துக்கத்தில் மடிந்த வண்ணம் இருந்தன. உயிர்கள் தாம் ஆசைப்பட்டதை அடையமுடியாமலும், ஆசைப்படாததை அடைந்தும் அல்லலுற்றன. எத்துணை உயிர்கள் பயனிலா சம்சார சுழற்சியிலிருந்து விடுபட அவலோகிதர் உதவி செய்தாலும், விடுபடா உயிர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதைக் கண்டு அவர் கண்ணில் நீர் துளிர்த்தது. கண்ணீர் அவர் முகத்தில் வழிந்தோடி அவர் காலுக்கருகே ஒரு குட்டை உருவானது. குட்டையின் ஆழத்திலிருந்து ஒரு நீலத் தாமரை பூத்தெழுந்தது. நீலத் தாமரையிலிருந்து பதினாறு வயது இளம் பெண் ஒருத்தி தோன்றினாள். அவள் மென்மையான உடலைக் கொண்டிருந்தாள். அவள் உடலை மேவிய ஒளி ஊடுருவும் பச்சை நிறம் யதார்த்தத்திற்கும் யதார்த்தமின்மைக்கும் இடையே வட்டமிடுவதாய் இருந்தது. அவளிள் குடிகொண்ட ஆற்றல் புலன்களால் காண, கேட்க, உணரத் தக்கதாய் இருந்தது. பட்டுடை உடுத்தியிருந்தாள். இளவரசிகள் அணியும் நகைகளைப் பூண்டிருந்தாள். அவளின் கை அழகான நீலத்தாமரையை ஏந்தியிருந்தது. அவலோகிதேஸ்வரரின் கருணக் கண்ணீரில் இருந்து உதித்தவளை கருணையின் வடிவம் என்றே கொள்ள வேண்டும். ஒளி மயமாக, அழகான கண்களுடன், நட்சத்திரவொளியின் மறுரூபமாய் தாரா இந்த யுகத்தில் மீண்டும் தோன்றினாள்.

வேறோரு யுகத்தில் மேற்கு திசை சொர்க்கத்தில் இருக்கும் அமிதாபா புத்தரின் கண்களிலிருந்து ஒளிர்ந்த நீலக் கதிரொளியிலிருந்து தாரா தோன்றினாள்.

தாராவும் துர்க்காவும்
தாராவின் பல்வேறு அம்சங்களும் பண்புகளும் ஆரம்ப கால பிராமணிய பெண் கடவுளான துர்க்கையை ஒட்டியவாறு அமைந்திருக்கின்றன. எனவே, துர்க்கை வழிப்பாட்டிலிருந்து பௌத்தத்தின் தாரா வழிபாடு வளர்ந்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இது போன்ற இணைப்பை அவலோகிதேஸ்வரருக்கும் ஆரம்பகால சிவனுக்கும் இடையிலும் காணலாம். சுயாதீனமான பௌத்த கடவுளாக தாரா வழிபடப்பட்டதற்கு குப்தர்கள் காலத்துக்கு முந்தைய இலக்கியச் சான்றுகளோ தொல்லியல் சான்றுகளோ இல்லை. தாராவின் மிகப் பழைமையான சிற்பத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றார்கள். துர்க்கை மாதிரியான சில பெண் தெய்வங்களின் பெயர்கள் (அதிதி & ராத்ரி) வேத நூல்களில் வருகின்றன என்றாலும் வைதீக சமய பெண் தெய்வங்களின் கொள்கை ஒன்றிணைதல் (Principle Coalescence) முதன்முதலாக மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மகாத்மியத்தில் தான் நிகழ்கிறது. மார்க்கண்டேய புராணம் நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். சொற்பிறப்பியலின்படி (Etymologically) தாராவும் துர்காவும் ஒரே எண்ணத்தை வெளிப்படுத்தும் சொற்கள். ஒன்றுக்கிணையான இரு பெயர்கள் பரஸ்பர உறவை அர்த்தப்படுத்திக் கொள்ள இடமளிக்கிறது. தாராவின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்று பௌத்த நூல்களில் “துர்கோத்தரி நித்தரா” என்று வர்ணிக்கப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் மகாபாரதத்தில் ஒரு துர்க்கை ஸ்தோத்திரம் வருகிறது. அதில் துர்க்கை “தாரிணி” என்று துதிக்கப்படுகிறாள். “தாரிணி” என்றால் “கடக்கச் செய்பவள்” என்று பொருள். தாரா என்னும் பெயரின் பொருளும் அதுவே. தாராவின் 108 நாமங்களில் 44 நாமங்கள் துர்க்காவுக்கும் வழங்கப்படுகின்றன. மகாபாரதம் துர்கா என்ற பெயருக்கு “மக்கள் உன்னை துர்கா என்று துதிக்கிறார்கள் ஏனென்றால் நீயே அவர்களை கஷ்டந்தரும் வழிகளிலிருந்து மீட்கிறாய்” என்றொரு விளக்கம் அளிக்கிறது

தாரா வழிபாடு – இந்தியாவிலும் பிற நாடுகளிலும்
கிழக்கிந்தியாவில் தொடங்கிய தாரா வழிபாடு ஆறாம் நூற்றாண்டு காலத்தில் முழு வடிவம் பெற்று தக்காணக் குகைகளுக்கு, குறிப்பாக அஜந்தா – எல்லோரா குகைகளுக்கு பரவியிருக்கலாம். தாராவின் முக்கியத்துவம் வளர்ந்து கொண்டே போய், கிட்டத்தட்ட நூறாண்டுகளில் பாரதமெங்கும் பரவியது. இந்தியா மட்டுமில்லாமல் நேபாளம், திபெத், மங்கோலியா, இந்தோனேசியாவெங்கும் தாரா வழிபாடு பிரசித்தமானது. இலங்கையிலும் தாரா வழிபாடு இருந்திருக்கலாம். (திரிகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட பனிரெண்டாம் நூற்றாண்டு தாரா சிற்பம் ஒன்று பிரிட்டிஷ் மியுசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது)  இந்தியாவில் பனிரெண்டாம் நூற்றாண்டு வரை தாரா பிரசித்தமாயிருந்தாள். முஸ்லீம் படையெடுப்புகளுக்குப் பிறகு தாரா இந்தியாவை விட்டு மறைந்து போனாள்.

திபெத்திலும் மங்கோலியாவிலும் தாரா வழிபாடு இன்றளவும் தொடர்கிறது. Stephen Beyer என்பவர் எழுதிய “The cult of Taaraa” என்ற கட்டுரையில் சொல்கிறார்: “தாராவின் வழிபாடு திபெத்திய சம்பிரதாயங்களில் பரவலாகக் காணப்படுகிறது. மற்ற தெய்வங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு திபெத்தியர்கள் தாராவுடன் தனிப்பட்ட, நீடித்த உறவைக் கொண்டிருக்கிறார்கள்”. சீனாவிலும் ஜப்பானிலும் தாரா ஒரு குட்டி தெய்வம் தான். குவான்-யின் அல்லது கன்னொன் என்ற பெயர் கொண்ட பெண் வடிவ அவலோகிதேஸ்வரர் தாராவின் இடத்தை அங்கே நிரப்பி விடுகிறாள். குவான்-யினின் முதன்மைத் தொடர்பு அவலோகிதேஸ்வரருடன் இருந்தாலும், குவான்–யின்னின் சித்தரிப்பு தாராவைப் போன்றே அமைந்திருக்கிறது.

பயங்களைப் போக்குபவள்
மகாபயங்கள் எனப்படும் எட்டு பயங்களைப் போக்குபவளாக தாரா திகழ்கிறாள். இவ்விஷயத்திலும் இந்து சமயத்தின் துர்க்கையோடு தாராவுக்கு ஒற்றுமையுண்டு. தேவி மகாத்மிய நூலில் தேவி பக்தரை எல்லா கஷ்டங்களிலிருந்தும் கரை சேர்க்கிறாள் என்று சொல்லப்படுகிறது. கஷ்டங்களில் மகாபயங்களும் கூட சேர்க்கப்படுகின்றன. பயங்களிலிருந்து மட்டுமில்லாமல் சம்சார சாகரத்திலிருந்து கரை சேர்ப்பவள் துர்கா. சம்சார சாகரம் என்பதைக் குறிக்கும் – பவசாகரா – என்னும் சம்ஸ்கிருதச் சொற்றொடர்  தாராவின் தொடர்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் அஜந்தா குகையில் அவலோகிதேஸ்வரர் மனிதர்களை மகாபயங்களிலிருந்து விடுவிக்கிறார் என்று சித்தரிக்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டிலோ, எல்லோரா குகையொன்றில் அவலோகிதேஸ்வரரின் இடத்தை தாரா எடுத்துக் கொண்டு விடுகிறாள்.

எட்டு பெரும் பயங்கள் என்று சொல்லப்படுபவை – சிங்கங்கள், யானைகள், தீ, பாம்புகள், கொள்ளைக்காரர்கள், சிறைவாசம், கப்பல் கடலில் மூழ்குதல், மனிதர்களைத் திண்ணும் பிசாசுகள். இது என்ன லிஸ்ட் என்று நமக்கு தற்போதைய காலத்தில் தோன்றலாம். ஆனால், பழைய காலத்தில் நாடு விட்டு இன்னொரு நாட்டுக்குப் போகும் பயணிகள் சந்தித்த பொதுவான இடர்களாக இவை இருந்திருக்கலாம். சாதுக்கள் மற்றும் யாத்திரிகள் மட்டுமில்லாமல் வணிகர்களும் வியாபாரிகளும் கடல் கடந்து தூர தேசப் பயணம் மேற்கொள்வது அதிகமாகத் தொடங்கியது. இத்தகையோராலேயே தாரா வழிபாடு எல்லா திசைகளிலும் பரவத்தொடங்கியது.

சிங்கத்திடம் சிக்கியோர் அல்லது கடற்பிரயாணம் மேற்கொண்டு கடலில் மூழ்கியோர் தாராவின் நாமத்தை பக்தியுடன் உச்சரித்தலும் உடன் அவர்களெல்லாம் மின்னல் வேகத்தில் தாராவால் காக்கப்ப்டுவதும் என்று திபெத்தில் பல கதைகள் வழங்கப்படுகின்றன. திபெத்தில் சிங்கங்கள் இல்லை. திபெத்திய கலைஞர்கள் சித்தரிக்கும் சிங்கங்கள் இயற்கையான தோற்றம் கொண்டதாகக்கூட இருப்பதில்லை. திபெத்திய சிங்க ஓவியங்களைப் பார்த்தால் ஓவியர் சிங்கத்தைப் பார்த்ததேயில்லை என்று தான் நமக்குத் தோன்றும். திபெத்தில் யானைகளைப் பார்ப்பதும் அரிது. திபெத் கடலால் சூழப்பட்டிருக்கும் நாடல்ல. யாரந்தப் பிசாசுகள்? அவைகள் எதைக் குறிக்கின்றன? திபெத்திய ஓவியக்கலைகளில் இந்த பயங்கள் ஏன் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன? ஓவியர்களின் படைப்புகளில் ஏதேனும் குறிப்பு கிடைக்குமா? பிசாசுகள் சாதுக்களைத் தாக்குவது போலவே எல்லா ஓவியங்களிலும் சித்தரிக்கப்படுகின்றன. முழுநேரமும் உண்மையைத் தேடுவோரின் குறியீடாக சாதுவின் உருவத்தைக் கொள்ள வேண்டும். மற்ற பயங்கள் சாதுக்களையும் பாமரர்களையும் பீடிக்கும். ஆனால் பிசாசுகள் சாதுவையோ சாதுக்களின் குழுக்களையோ தாக்குவதாகவே அனைத்து கதைகளிலும் காட்டப்படுகிறது. முதலாம் தலாய் லாமா (இப்போதிருப்பவர் பதினான்காவது) தனது தாரா துதியில் தெளிவாக விளக்குகிறார் :

“இருண்ட அறியாமையின் வெளியில் திரியும் அவைகள்
வாய்மையைத் தேடுவோருக்கு கடுந்துன்பத்தை விளைவிக்கும்.
விடுதலைக்கிடையூறாக மரண ஆபத்தை தோற்றுவிக்கும்
சந்தேகம் எனும் பிசாசுகள் – இந்த பயத்திலிருந்து எம்மைக் காப்பாற்று”

சிங்கத்தின் கருவம், மயக்கமெனும் யானை, கோபத்தீ, பொறாமைப் பாம்புகள், பிழையான கருத்துகள் எனும் திருடர்கள், பேராசைச் சங்கிலி, பற்றின் வெள்ளம், சந்தேகப் பிசாசுகள் – எட்டு பெரும் பயங்கள் ஆன்மீக ஆபத்துகளையும் சாதனாவுக்கான தடைகளை குறிப்பதாக புரிந்து கொள்ள முடியும்.

+++++

துணுக்கு : (1) மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையின் முற்பிறப்பை மணிமேகலா தெய்வம் (தாரையின் ஒரு வடிவம்?) அறியத்தருகிறது. மணிமேகலை முற்பிறப்பில் இலக்குமி என்ற பெயருடன் பிறந்தாள். இலக்குமிக்கு இரு தமக்கையர் இருந்தனர். அவர்களின் பெயர் – தாரை & வீரை. தாரையே அடுத்த ஜென்மத்தில் மணிமேகலையின் தாயார் மாதவி ; வீரையே மணிமேகலையின் செவிலித்தாயாக அன்பு செலுத்தும் உற்ற தோழி சுதமதி (2) மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சிந்தா தேவி என்று பௌத்த பெண் தெய்வங்கள் போதிசத்துவப் பாதையின் வழி நடக்கும் மணிமேகலைக்கு உற்ற துணையாய் பாதுகாப்பாய் காப்பியம் நெடுக வருகின்றன.

(தர்மாசாரி பூர்ணா என்பவர் Western Buddhist Review என்ற பத்திரிக்கையில் எழுதிய Tara : Her Origins and Development என்ற கட்டுரையில் பதிந்த பல தகவல்களை இவ்விடுகையில் பயன்படுத்தியிருக்கிறேன். Thanks to Dharmachari Purna)

Khadiravani Tara (Green Tara) 2nd Regnal Year of Ramapala, Circa 10th Century AD, Bihar, (Indian_Museum, Kolkata)

Khadiravani Tara (Green Tara) 2nd Regnal Year of Ramapala, Circa 10th Century AD, Bihar (Indian Museum, Kolkata)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s