ஐந்து ஜென் கதைகள்

overflow

குதிரையில் செல்பவன்

வாயில் நுரை தள்ளியவாறு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்த குதிரையின் மேல் உட்கார்ந்திருந்தவனின் முகபாவம் முக்கியமான அலுவல் எதுவும் இல்லாதவன்  போல் இருந்தது.

சாலையின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த படி இன்னொருவன் கேட்டான்.

“எங்கே போகிறாய்?”

குதிரையிலிருந்தவன் சொன்னான் : “எனக்கு தெரியாது ; குதிரையைக் கேள்”

கரை சேர்தல்

தன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த இளம் பெளத்தனின் வழியில் அகண்டதோர் ஆறு வந்தது. ஆற்றின் வெள்ளத்தை நோக்கிய படி ‘எப்படி இந்நதியை கடக்கப் போகிறோம்?’ என்று  பல மணி நேரங்களாக யோசித்தவாறு நின்றிருந்தான்.

பயணத்தை கை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு அவன் வரும் தருணத்தில் ஆற்றின் எதிர் கரையில் ஒரு வயோதிகர் நின்று கொண்டிருப்பதை கவனித்தான்.

அவரை  நோக்கி  “அக்கரையை  எப்படி வந்தடைவது?” என்று சத்தம் போட்டு வினவினான்.

வயோதிகர் மேலும் கீழும் சில கணங்களுக்கு பார்த்து விட்டு கத்திச் சொன்னார் : “மகனே, நீ அக்கரையில் தான் நிற்கிறாய்”

எத்தனை காலம்?

தற்காப்புக் கலை பயின்று கொண்டிருந்த மாணவன் தன் ஆசானிடம் கேட்டான் “தற்காப்புக் கலையைப் பயின்று பாண்டித்தியம் பெறுவதையே என் நோக்கமாகக் கொண்டுள்ளேன் ; இதில் மேதமை அடைய எத்தனை காலம் பிடிக்கும்?

கொஞ்சமும் யோசிக்காமல் ஆசிரியர் “பத்து வருடங்கள்” என்று பதிலிறுத்தார் ; பொறுமையிழந்த குரலில் மாணவன் மீண்டும் கேட்டான் “ஆனால் நான் அதைவிட குறைந்த காலத்தில் பயில விரும்புகிறேன். அதற்காக கடும் உழைப்பைச் சிந்த சித்தமாயிருக்கிறேன். தேவைப்பட்டால் தினமும் பத்து பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பயிற்சி செய்யத் தயாராயிருக்கிறேன். அப்போது எத்தனை காலம் பிடிக்கும்?”

ஆசான் சில கணம் அமைதியாயிருந்து விட்டுச் சொன்னார் “இருபது வருடங்கள்”

நிரம்பி வழியும் தேநீர்க் கோப்பை

ஜப்பானின் மெய்ஜி காலத்தில் ஜென் ஞானியொருவரிடம் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக வந்தார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை ஊற்றினார் ஜென் ஞானி. கோப்பையின் விளிம்பைத் தாண்டி தேநீர் நிரம்பி வழிந்தது. ஆனாலும் ஊற்றுவதை நிறுத்தவில்லை. பேராசிரியரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“கோப்பை நிரம்பி விட்டது. மேலதிக தேநீர் அதற்குள் நிரம்பாது”

ஞானி புன்னகை வழியச் சொன்ன பதில் : “இந்த கோப்பையைப் போலவே, உங்களுள்ளிலும் கருத்துகளும் ஊகங்களும் நிரம்பியிருக்கின்றன. நீங்கள் உங்கள் கோப்பையைக் காலி செய்யாத வரையில் நான் எப்படி உங்களுக்கு ஜென்னைப் போதிக்க முடியும்?”

இனிப்பான ஸ்ட்ராபெர்ரி

காட்டுப் புறத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவனைப் பசித்த புலியொன்று துரத்த ஆரம்பிக்கிறது. அவன் வேகமாக ஓடுகிறான். புலி துரத்திக் கொண்டே வந்தது. உயர்ந்த குன்றின் விளிம்பு வரை வந்து விட்டான். வேறு வழியில்லை. செங்குத்தான குன்றின் விளிம்பில் படர்ந்திருந்த கொடியின் தண்டைப் பற்றியவாறு அபாயகரமாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் பார்த்து பாறையின் சிறு துளையிலிருந்து வெளிப்பட்ட இரு எலிகள் கொடியின் தண்டைத் தன் பற்களால் கடித்துத் துண்டாக்கத் தொடங்கின.

திடீரென அக்கொடியில் பூத்திருந்த தடிமனான காட்டு ஸ்ட்ராபெர்ரி அவன் கண்ணில் பட்டது. அதைப் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டான். அது மிக மிக இனிப்பாக இருந்தது.

 

 

Advertisements

3 thoughts on “ஐந்து ஜென் கதைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s