இந்தியா மேற்கில் இருக்கிறது

journey-to-the-west-poster-1-600x339

”ஏழாம் நூற்றாண்டில் சீன யாத்திரிகர் ஒருவர் இந்தியாவெங்கும் பயணம் செய்தார்” என்று ஏழாம் வகுப்பு வரலாற்று பாட நூலில் நாம் படித்த யுவான் சுவாங்-ங்கை சாகசப் பாத்திரமாகக் கொண்ட சீனத் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் இணையத்தில் பார்த்தேன். கோடிக் கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டம் என்ற பெயரில் நம்மூரில் எடுக்கப்படும் அர்த்தமிலா மசாலாக்களைப் போலில்லாமல், சீனாவின் நான்கு அதிமுக்கிய செவ்வியல் நாவல்களுள் ஒன்றான – Journey to the West – என்னும் 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாவலின் சில பகுதிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். நடிகரும் நட்சத்திர இயக்குனருமான Stephen Chow இயக்கியிருக்கிறார். 2013 இல் ரிலீஸ் ஆகி சீனாவில் எட்டே நாட்களில் இருநூறு மில்லியன் டாலர்கள் வசூல் அள்ளிய திரைப்படம். ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் பிற மேலை நாடுகளிலும் கூட நல்ல வரவேற்பைப் பெற்ற படம்.

யுவான் சுவாங் சமயத்துறவியாவதற்கு முன்னர் வெறும் ஆன்மீக மாணவனாக இருந்த காலத்தில் நடந்ததாக கதையில் வரும் சம்பவங்களின் தொகுப்பே இத்திரைப்படம். காட்சிக்கு காட்சி அசத்தலான சாகசத் தொகுதிகள், வியக்க வைக்கும் கிராஃபிக்ஸ், Slapstick நகைச்சுவை நிரம்பிய வசனங்களுக்கு நடுவே ஆங்காங்கே ஆழமான கருத்து தெறிக்கும் வசனங்கள் (நாவலின் வரிகளே வசனங்களாக ஆங்காங்கே கையாளப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை), இனிமையான சீன மொழிப்பாடல்கள் (முழு நிலவின் ஒளியில் கவர்ச்சியாக நடனமிடும் கதையின் நாயகி ஷு-கி அந்த பாடலையும் பாடியிருக்கிறாராம்) என்று வெகுஜன பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

கதையின் மூலத்தில் அதிக ஈர்ப்பு கொண்ட ஒரு படைப்பாளியின் படம் என பார்வையாளர்களால் நன்கு உணர முடியக் கூடிய படம். மூலம் வேறொன்றாக இருந்தாலும் அதன் உணர்வை சேதப்படுத்தாமல் ஒரு சொந்த மறுவிளக்கத்தை தருவதிலும் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்,

Stephen Chow வின் திரைப்படம் யுவான் சுவாங் இந்தியா பயணம் செல்லத் தொடங்குவதற்கு முன் குரங்கு ராஜனை, நீர் பூதத்தை, பன்றி பூதத்தை எவ்விதம் சந்திக்கிறான் ; அவைகளை எப்படி தன் வழிக்கு கொண்டு வருகிறான் என்பது தான் கதை. மூல நாவலில் இல்லாத சில பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் புகுத்தி திரைப்படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் Stephen Chow. யுவான் சுவாங் சமயத்துறவு ஆவதற்கு முன்னரான கதை என்பதால் காதலும் இருக்கிறது. குங்ஃபூ நகைச்சுவை, சீனத்து தேவதைக் கதை, பௌத்த ஆக்ஷன் படம், மேலதிக தொடர் படங்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடிய மெகா காவியத்தின் முந்தைய பாகம் என்று ”அவதார்” இயக்குனர் ஜேம்ஸ் காமரோனின் திரைக்கனவுகளையே மிஞ்சிவிடக் கூடிய பெருங்கனவு Stephen Chow-வினுடையது.

journey-to-the-west03

+++++

திரைப்படம் கண்ட பிறகு சீன நாவல் – Journey to the West – பற்றி இணையத்தில் பல கட்டுரைகள் படித்தேன். ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பை தரவிறக்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். குரங்கு ராஜனின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து கதை தொடங்குகிறது. பெரிய நாவல். படித்து முடிக்க நாட்கள் பிடிக்கும்.

சீன மொழி நூல்களை ஆங்கிலத்தில் அளிக்கும் பிரசித்தமான மொழிபெயர்ப்பாளரான Julia Lovell  எழுதிய மதிப்புரையின் ஒரு பகுதியை தமிழ்ப்படுத்தி நூலறிமுகமாக இங்கு தந்திருக்கிறேன்.

+++++

Journey to the west book

பௌத்த வரலாற்றின் முக்கியமான ஆளுமையான யுவான் – சுவாங்-கின் இந்தியா பயணத்தையொற்றி சீனாவின் பல பகுதிகளில் புழங்கும் நாட்டார் கதைகளையும், நூலின் ஆசிரியரினுடைய கற்பனையும் கலந்து புனையப்பட்ட இந்நாவல் நூறு அத்தியாயங்களைக் கொண்டது ; நான்கு பாகங்களாக நாவல் பிரிந்து கிடக்கிறது. ஏறத்தாழ முன்னூறு வருடங்களுக்கு நூலின் ஆசிரியர் யார் என்ற விவரம் யாருக்கும் தெரியாதிருந்தது ; இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் வூ செங்ஹென் என்பவர் தான் இந்நாவலை எழுதியிருக்கக் கூடும் என்று கண்டு பிடிக்கப்பட்டது.

புத்தரின் ஆணைக்கிணங்கி யுவான் சுவாங் இந்தியா செல்லத் திட்டமிடுகிறான். அங்கு செல்லும் வழியில் கடுமையான சோதனைகளைச் சந்திக்கிறான். அவன் சந்திக்கும் ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காகவே அவன் தன்னுடைய சீடர்களாக மூன்று பேர் வருகின்றனர். முன்னாளில் குரங்கு பூதங்களின் ராஜாவாக இருந்து சுன் – வூகோங், பன்றி பூதமாக இருந்த பிக்ஸி மற்றும் நீர்ப்பூதமாக இருந்து பின்னர் சாதுவாக மாறிய சேண்டி. ஆபத்து நிறைந்த பட்டு சாலை வழியாக அவர்கள் செல்கிறார்கள். Xinjiang, திபெத், நேபாளம் வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள். பயணம் நெடுக அவர்கள் கொலைகார பௌத்தர்கள், நயவஞ்சக டாவோயிஸ்டுகள் (மாவோயிஸ்டுகள் என்று படித்து விட வேண்டாம்!), அழுகிய தக்காளிகளின் பள்ளத்தாக்குகள், பல வித வடிவங்களில் உருவங்களில் பேய்கள் (மோகினிகள், யானைகள், காண்டாமிருகங்கள், கால்பந்து விளையாடும் ஆவி லோக மாந்தர்கள்). அவர்கள் நால்வரும் பல இக்கட்டுகளில் சிக்குகிறார்கள் ; கிட்டத்தட்ட அவர்கள், முலாம் பூசுதல், வறுக்கப்படுதல், வேகவைக்கப்படுதல், உருக்கப்படுதல், ஊறவைக்கப்படுதல், கிள்ளாடிகளுடன் உறவில் ஈடுபடவைக்கப்படுதல் என பல வித இன்னல்களுக்குள்ளாகிறார்கள். இறுதியில். எண்பத்தியொன்று பேராபத்துகளை சந்தித்த பிறகு, யாத்திரிகர்கள் இந்தியாவிலுள்ள இடிமின்னல் மடாலயத்தை அடைகிறார்கள். எண்ணற்ற புத்த சூத்திர நூல்களும், புத்தரின் போதிசத்துவ அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன.

கடவுளர்கள், பூதங்கள், பேரரசர்கள், பிரபுக்கள், சாதுக்கள், மிருகங்கள், விறகுவெட்டிகள், கொள்ளைக்காரர்கள், விவசாயிகள் என்று பல வித பாத்திரங்களை உலவவிட்டு சீனப் பேரரசின் காவிய தரிசனத்தை நாவல் நல்குகிறது. ஹாஸ்ய சாகசம் என்னும் சட்டகம் துணை கொண்டு சிக்கலான சீன சமுதாயத்தை அற்புதமாக படம் பிடிக்கிறது. ஒரு தன்னிறைவான, தனிமைப்படுத்தப்பட்ட, வெளிநாட்டாரை எளிதில் ஏற்றுக்கொள்ளாத, சொந்த கலாசாரத்தை மட்டுமே மேன்மையானதாகக் கருதக்கூடிய நாடு என்று கருதும் சீனா பற்றி பரவலாக நிலவும் எண்ணப்போக்கை சிதறடிக்கக் கூடிய நாவலாக Journey to the West திகழ்கிறது. பவித்திரமான, பணிவுமிக்க கன்ப்ஃயூசிய மதத்தைப் பின்பற்றி, படிநிலையையும் அதிகாரத்தையும் பூஜிக்கும் பேரரசாக எண்ணப்பட்டு வரும் சீனா பற்றிய ’ஸ்டீரியோடைப்’களையும் இந்த நாவல் உடைக்கிறது. யுவான் சுவாங்கின் பயணத்தில் அவனுடன் இணைபவர்கள் நல்லவர்களோ, பெருமை வாய்ந்தவர்களோ அல்லர் ; அற்பமான, அஞ்ஞான இருளில் சிக்கிய ஜந்துக்களே. அவைகளெல்லாம் புத்தகத்தின் முடிவில் அழியாத்தன்மை அடைந்து பௌத்த தரிசனத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன. பயணிகளின் தேடலை மேம்போக்காக ஆன்மீகத் தேடல் எனக் கருதினாலும், சமயம் மற்றும் ஒழுக்க அதிகாரத்தின் மீதான பயபக்தியற்ற பார்வையை நாவல் பிரதிபலிக்கிறது. மந்த புத்தி நவ-கன்ஃப்யூசியர்கள், பேராசை மிக்க பௌத்தர்கள், காமாந்தக டாவோயிஸ்டுகள் – அனைவரும் நாவலில் பரிகசிக்கப்படுகின்றனர். ஓரிடத்தில், குரங்கு ராஜா புத்தரின் கையின் மேல் சிறுநீர் கழிப்பதாகவும் வருகிறது. (நம் நாட்டில் இந்த நாவலை “பேன்” செய்யாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை என்னைத் தொற்றிக் கொண்டது!)

Journey to the west ஒரு தீவிரமான மனிதத்துவ புத்தகம். அமரத்தன்மை கொண்டவர்களும் அரக்கர்களும் நாவலெங்கும் நிரம்பி வழிகிறார்கள். அவர்களின் புறவுருவம் திகிலூட்டக் கூடியதாக இருந்தாலும், பலவிதங்களில் அவர்கள் நம்மையொத்தவராகவே இருக்கின்றனர். அவர்களின் அதிகாரத்துவமும் அரசாங்கங்களும் மனித உலகத்தை நகலெடுத்த மாதிரியே இருக்கின்றன. சரியான இயற்கைக்கப்பாற்பட்ட துறைகளுக்கு அவர்கள் தம் விண்ணப்பங்களை கவனத்துடன் பதிகிறார்கள். பாதாள லோகத்தில் பணி புரியும் எழுத்தன் தன்னுடைய ஜனனம் – மரணம் பற்றிய ஏட்டில் கணக்குகளைச் சரி பார்க்கும் வரை ஒரு மனிதனும் மரிக்க முடியாது. நம் காலத்து அதிகாரிகளைப் போலவே, இடிமின்னல் மடாலயத்தைக் காக்கும் காவலர்கள் யுவான் சுவாங்கையும் மற்றவர்களையும் சூத்திரங்களைப் படிக்க அனுமதிக்கும் முன்னர் லஞ்சம் கேட்கிறார்கள். நாவலில் வரும் பயணிகள் புனிதர்களல்லர் ; நிறைகுறையுள்ள மனிதர்கள். இயற்கை தருவதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்வேன் என்று பக்தி பூர்வமாக சொல்லும் புத்த துறவி யுவான் சுவாங், கதையில் பல இடங்களில் குளிர், பசி, வசதியின்மை பற்றிக் குறைபட்டுக் கொண்டே வருகிறான். நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் யுவான் சுவாங் தவறாமல் புலம்புகிறான். பிக்ஸி ஒரு சோம்பேறி ; பேராசைக்காரன் – ஃப்ரைடு ரைஸ் (இது அந்த காலத்திலும் சீனாவில் பாப்புலர் போல!) நிரம்பிய கிண்ணத்தைக் கண்டால் மெய்ம்மறந்து அடிக்கடி ஏதாவது பூதத்திடம் சிக்கிக் கொள்வான். குரங்கு ராஜனைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். மிகவும் துன்பியல் கட்டங்களிலும் கூட இளித்துக் கொண்டே இருப்பது அவன் இயல்பு. பயமுறுத்தும் கடவுள்களிடமும் பூதங்களிடமும் தந்திரமாக பேசும் அவன் திறமை ; விசித்திரமான பாணியில் அவன் யுத்தம் புரியும் உத்திகள்!.

Journey to the West – பல தலைமுறைகளாக உலகளாவிய வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற சீன நாவல்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s