தம்மம் என்பது என்ன?

இலங்கையின் அனுராதாபுரத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ் மிக்க அபயகிரி விகாரம். ஆசாரமான தேரவாதம் பின்பற்றப்படும் இலங்கையில் மகாவதாரம் தழைத்த ஒரே விகாரம். ஏழாம் நூற்றாண்டில் இங்கு விஜயம் புரிந்த சீன யாத்திரிகர் எழுதுகிறார் : “மகாவிகாரவாசிகள் மகாயானத்தை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் ; அபயகிரிவிகாரவாசிகள் மகாயானம் மற்றும் தேரவாதம் இரண்டையும் வாசித்து திரிபிடகத்தைப் பரப்புகிறார்கள்”

இலங்கையின் அனுராதாபுரத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ் மிக்க அபயகிரி விகாரம். ஆசாரமான தேரவாதம் பின்பற்றப்படும் இலங்கையில் மகாயானம் தழைத்த ஒரே விகாரம். ஏழாம் நூற்றாண்டில் இங்கு விஜயம் புரிந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங் எழுதுகிறார் : “மகாவிகாரவாசிகள் மகாயானத்தை ஒதுக்கித் தள்ளுகிறார்கள் ; அபயகிரிவிகாரவாசிகள் மகாயானம் மற்றும் தேரவாதம் இரண்டையும் வாசித்து திரிபிடகத்தைப் பரப்புகிறார்கள்”

தம்மம் – தேரவாத தம்மம் – மகாயான தர்மம் – ஷூன்யதா – மகாயானம் ஒரு சதியா?

தர்மம் (சமஸ்கிருதம்) அல்லது தம்மம் (பாலி) என்ற சொல்லை பௌத்தர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். புத்தம், தம்மம், சங்கம் என்ற மும்மணிகளுள் ஒன்றான தம்மம் பொதுவாக “புத்தரின் போதனைகள்” என்று வரையறுக்கப்படுகிறது. தம்மம் என்பது புத்தரின் போதனைகளுக்கான சிட்டை மட்டும் அல்ல. அது ஒரு விரிவான சொல்.

பௌத்தத்துக்கும் முன்னதாக பாரதத்தின் பழங்காலத்திலிருந்தே “தர்மம்” என்ற சொல் வழக்கத்தில் இருந்தது. பௌத்தம் மட்டுமில்லாமல், இந்து மற்றும் சமண மதங்களிலும் “தர்மம்” ஒரு முக்கியச் சொல்லாக இருக்கிறது.

இதன் மூல அர்த்தம் – இயற்கை சட்டம் – என்பதாகும். “தம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல் தர்மம். “தம்” என்றால் ”ஒன்றைத் தாங்கிப்பிடிப்பது” என்று பொருள். அனைத்து மதங்களின் பொதுவான அர்த்தத்தில், பிரபஞ்சத்தின் இயற்கைச் சட்டத்தை நிலை நிறுத்துவது எதுவோ அதுவே தர்மம். பௌத்த சமயப் புரிதலின் படியும் கூட இவ்வர்த்தம் பொருந்தும்.

தேரவாத தம்மம்
தர்மத்துக்கிசைவாக அதைக் கடைப்பிடிக்கும் சாதனாவுக்கும் “தம்மம்” என்ற சொல் பொருந்தும். இந்த அளவில், தர்மம் நெறிமுறை சார் நடத்தையையும் நீதியையும் குறிக்கிறது. சில இந்து மரபுகளில் “தர்மம்” என்பது “புனித கடமை” என்ற அர்த்ததிலும் பிரயோகம் செய்யப்படுகிறது.

தேரவாத பௌத்த பிக்‌ஷுவும் புகழ்பெற்ற பௌத்த சிந்தனையாளருமான ராஹுல வால்போல (Rahula Walpola) தன்னுடைய What Buddha Taught என்ற நூலில் எழுதுகிறார் :

“தம்மம் என்ற பௌத்த கலைச்சொல்லைப் போன்ற வேறொரு விரிவான சொல் இல்லை. நிபந்தைகட்குட்பட்டு எழும் பொருள்களை நிலைகளை மட்டும் குறிக்கும் சொல்லல்ல அது ; நிபந்தைக்குட்படா நிர்வாண நிலையையும் அது குறிக்கும். இப்பிரபஞ்சத்தினுள்ளே அல்லது வெளியே, சார்புடைத்த அல்லது முழுமையான, நிபந்தனைக்குட்பட்ட அல்லது உட்படாத என்று இச்சொல்லில் அடங்காதது எதுவும் இல்லை.”

இருக்கும் நிலையை குறிப்பது தம்மம். புத்தர் போதித்த உண்மையைக் குறிப்பது தம்மம். மேலே தந்த மேற்கோளில் வருவது போல, இருப்பின் அனைத்து காரணிகளைக் குறிக்கும் சொல்லாகவும் ’தம்மம்’ பயன்படுத்தப்படுகிறது.

தனிஸ்ஸாரோ பிக்கு சொல்கிறார் : “மேலோட்டமாக, புத்தர் தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு கற்பித்த சாதனாவை தம்மம் குறிக்கிறது” இதன்படி, தம்மம் மூன்று அர்த்த நிலைகளைக் குறிக்கிறது – புத்தரின் போதனைகள், போதனைகளின் படி நடத்தல், நிர்வாண நிலையை எய்துதல். எனவே, தம்மம் என்பது புத்தரின் போதனை மட்டுமில்லை ; இது போதனை + சாதனை + நிர்வாணம்.

மகாயான தர்மம்
மகாயானத்தில் புத்தரின் போதனை மற்றும் நிர்வாணத்தை எய்துதல் இரண்டையும் குறிப்பதற்கு ’தர்மம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இச்சொல்லின் பிரயோகம் இரண்டு அர்த்தங்களையும் ஒரு சேரவே குறிக்கிறது.

ஒருவன் தர்மம் பற்றிய புரிதலைப் பற்றிப் பேசுதல் அவன் எவ்வளவு நல்ல முறையில் பௌத்த போதனைகளை மனனம் செய்து ஒப்பிக்கிறான் என்பதை ஒப்புமை செய்து சொல்லுதல் அல்ல ; அவனுடைய மெய்யுணர்வு நிலையைப் பற்றிப் பேசுதல். உதாரணமாக, ஜென் மரபில், தர்மத்தை விவரித்தல் என்பது யதார்த்தத்தினுடைய உண்மை இயல்பின் சில அம்சங்களை விவரித்தலையே குறிக்கும்.

சில இடங்களில், மகாயான சூத்திரங்கள் தர்மம் எனும் சொல்லை “யதார்த்தத்தின் வெளிப்பாடு” என்னும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றன. பிரஜ்னபாரமித ஹ்ருதயம் என்று சமஸ்கிருதப் பெயர் கொண்ட “இதய சூத்திரத்தில் (Heart Sutra) வரும் வரிகள் – “இத சரிபுத்ர சர்வ தர்ம சூன்யத”. இதன் அர்த்தம் – ஓ! சரிபுத்ரரே, எல்லா தர்மங்களும் வெறுமையானவை”. அடிப்படையில், எல்லா நிகழ்வுகளும் (Phenomena) சாரமற்ற வெறுமை என்று சொல்லுதலேயாகும் இது.

லோட்டஸ் சூத்ராவின் (காண்க : லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம் ) முதல் அத்தியாயத்திலும் தர்மம் என்ற சொல்லின் பயன்பாடு வெறுமை என்ற அர்த்தத்தில் செய்யப்பட்டிருக்கும்.

”வெற்றிடத்தைப் போன்று
இருமைகளற்ற அனைத்து தர்மங்களின்
அடிப்படை இயல்பைக் கண்டுணர்ந்த
போதிசத்துவர்களை நான் இங்கு சந்திக்கிறேன்”

இங்கு “அனைத்து தர்மங்கள்” என்பதை “அனைத்து நிகழ்வுகள்” (Phenomena) என்றே பொருள் கொள்ள வேண்டும்.

 ஷுன்யதா
பனிரெண்டு நிதானங்களைப் பகுத்துக் கூறிய பகவான் புத்தர் உலகியல் நிகழ்வுகளின் அடிப்படைகள் அந்த நிதானங்களே எனக் கூறினார். (காண்க : பவத்திறமறுத்தல் 1) நிதானங்களை தர்மங்கள் என்றும் கொள்ளலாம். உலகின் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தவை; நித்தியத்தன்மையற்றவை; கண நேர நிகழ்வுகள் ; நிரந்தரத்தன்மையில்லாதவை (காண்க : அனிச்சம் ) என்று போதித்த புத்தர் அடிப்படையில் கூற விழைந்தது “சார்பியல் தர்மங்கள் அனைத்துமே வெறுமையானவை ; அவற்றில் சாராம்சம் என்ற ஒன்று இருக்காது. அப்படி இருக்குமானால், அவைகள் நித்தியத்தன்மை கொண்டதாக இருக்கும்” என்று மகாயான சூத்திரங்கள் விளக்குகின்றன.

”வெறுமை” (சமஸ்கிருதத்தில் “ஷூன்யதா”) – மகாயான பௌத்தத்தின் அடிப்படை கொள்கை. தவறான புரிதலுக்குள்ளாகும் ஷூன்யதா கொள்கை சர்ச்சைக்குரிய கொள்கையுமாகும். “ஷுன்யதா” பொருள்களின் இருப்பை மறுக்கிறது என்று பலராலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. வணக்கத்துக்குரிய பதினாலாவது தலாய் லாமா சொல்கிறார் : “பொருட்களின், நிகழ்வுகளின் இருப்பு என்பது இங்கு சர்ச்சையில்லை ; அவைகள் எவ்விதம் இருக்கின்றன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்” பொருள்களுக்கும், நிகழ்வுகளுக்கும் உள்ளார்ந்த இருப்பு இல்லை ; நம் எண்ணங்களை மீறிய தனிப்பட்ட அடையாளம் ஏதும் அவைகளுக்கில்லை. தலாய் லாமா அவர்கள் சொல்வது போல “இருப்பு என்பது (பனிரெண்டு நிதானங்களினூடே எழும்) சார்புடை தோற்றங்கள் வாயிலாகவே புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.” நிரந்தர சுயம் கொண்ட சுயாதீனமான மனிதர்கள் நாம் என்ற கற்பிதத்திலிருந்து எழுவதே நம் துக்கங்கள் என்று புத்தர் நால்வகை வாய்மை வாயிலாக நமக்கு போதிக்கிறார். உள்ளார்ந்த சுயம் என்பது ஒரு மயக்கம் என்று தெளிவுற உணர்தலே நம் விடுதலைக்கு வழி வகுக்கும்.

+++++

ஆதி பௌத்தத்தின் அடிப்படை கொள்கைகளில் இருந்து முளைத்ததே மகாயான சிந்தனை. காலப் போக்கில் மக்களிடையே தோன்றிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதற்கென ‘கடவுளர்களை; மகாயான பௌத்தம் கண்டு பிடித்தது என்றும் அதன் காரணமாக சாக்கியமுனி புத்தர் போதித்த கொள்கைகள் நீர்த்துப் போக மகாயானம் காரணமாக இருந்தது என்று சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். சாதாரணர் பேசிய பாலி மொழியைக் கைவிட்டு சமஸ்கிருத மொழியில் மகாயான பௌத்தர்கள் சூத்திரம் எழுதி, பிராமணர்கள் சங்கத்துள் நுழைந்து கலகம் செய்து பௌத்தத்தை இந்தியாவில் இல்லாமல் செய்து விட்டனர் என்றெல்லாம் கூட சில “வரலாற்று வல்லுனர்கள்” பேசுவதைக் கேட்டிருக்கிறேன். (அசுவகோசரோ, அல்லது நாகார்ஜுனரோ அல்லது வசுபந்துவோ அல்லது திக்நாகரோ – இவர்களுள் யார் இந்த சதியில் ஈடுபட்டிருப்பார்கள்? என்ற கேலியான வினாவை நான் ஒருமுறை எழுப்பிய போது ஒரு ”வல்லுனர்” எனக்கு பதிலேதும் சொல்லாமல் உரையை முடித்துக் கொண்டார். நன்றியுரை முடிந்த பின் அவரை அணுகிப் பேசலாம் என்று பார்த்தால் அவருக்கு அதற்குள் அவசர அலுவல் இருப்பது ஞாபகம் வந்து விட்டது! ) இதற்கெல்லாம் தொடர்ந்து சான்றுகளைத் தேடி வருகிறேன். உட்பூசல்களில், கருத்து வேறுபாடுகளில் பௌத்த சமயம் பிற சமயங்களைப் போலவே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்னுடைய சிற்றறிவில் நான் புரிந்து கொண்ட படி, தேரவாதச் சிந்தனையின் Paradigm Shift – ஆகவே மகாயானத்தை கருத வேண்டும். மகாயானம் ஒரு populist and liberal பௌத்தப் பிரிவாக மலர்ந்து பல நூற்றாண்டுகளுக்கு பௌத்தத்தை பாரதத்தில் நிலைக்க வைத்தது ; வடமேற்கு இந்தியா வழியாக மத்திய ஆசியா, சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவெங்கும் பௌத்தம் பரவியதற்கு மகாயானமே காரணம். துறவிகள் மட்டுமே அருகராக முடியும் என்ற தேரவாத சிந்தனையை விடுத்து அனைத்து உயிர்களும் புத்த நிலையை அடைதல் சாத்தியம் என்ற தரிசனத்தை பாமர மக்களிடையே பரப்பியதன் வாயிலாகவே பௌத்தம் இன்றும் பல்கிப்பெருகும் சமய சிந்தனையாக நிலைத்து வருகிறது.

தேரவாத நாடுகள் என்று கருதப்படும் இலங்கை, பர்மா மற்றும் தாய்லாந்திலும் ஆசாரமான தேரவாதம் இன்று இல்லை. தேரவாத பௌத்தத்துக்கே உரித்தான பிக்குக்களின் அரசியல் செல்வாக்கைத் தவிர வேறெந்த தேரவாத எச்சங்களும் இன்று அந்த நாடுகளில் இல்லை. ”நாதா” என்று இலங்கையிலும், ”லோகநாட்” என்று பர்மாவிலும் ”லோகேஸ்வரா” என்று தாய்லாந்திலும் அவலோகிதேஸ்வர போதிசத்துவர் வழிபடப்படுதல் இதற்கு ஓர் உதாரணம். ஆதி பௌத்தம் என்ற ஒன்று வரலாற்றேடுகளில் படிக்கக் கிடைக்கும் விஷயமாக மட்டுமே இன்று அருகிவிட்டது.  பொருளோ, கருத்தோ, கருத்தியலோ – அனைத்தின் நிலையின்மைக்கு ”ஆதி பௌத்தமும்” ஓர் அருமையான உதாரணம்!

பர்மிய அவலோகிதேஸ்வரர் - பர்மியர்கள் இவரை ”லோகநாட்” என்று அழைக்கிறார்கள்

பர்மிய அவலோகிதேஸ்வரர் – பர்மியர்கள் இவரை ”லோகநாட்” என்று அழைக்கிறார்கள்

Advertisements

2 thoughts on “தம்மம் என்பது என்ன?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s