பவத்திறமறுத்தல் 2

 

Na hettha devo brahma va,
Samsarass-atthi karako,
Suddhadhamma pavattanti,
Hetusambharapaccaya ti.

No god, no Brahma, may be called,
The maker of this wheel of life,
Empty phenomena roll on,
Dependent on conditions all.”   (Visuddhimagga, XIX)

 

நிதானங்கள் யாவை, அவற்றின் வரையறைகள் – இவற்றை போன வலைப்பதிவில் கண்டோம். (காண்க : பவத்திறமறுத்தல்-2) நிதானங்களின் இயக்கத்தைப் பற்றி மணிமேகலை சொல்வதை இனி பார்ப்போம்.

+++++

பனிரெண்டு நிதானங்கள் ஒன்றையொன்று சார்ந்தவாறு எழுகின்றன.

பேதைமை சார்வாச் செய்கை யாகுஞ்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுருச் சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா வூறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே யேனை வழிமுறைத் தோற்றந்
தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா
டவல மரற்றுக் கவலைகை யாறெனத்
தவலில் துன்பந் தலைவரு மென்ப   (30 : 104 – 117)

பேதைமை முதலான நிதானங்கள் முடிவிலா மண்டலமாக வட்டமாய் சூழ்ந்து நிற்கின்றன. நிதானங்களிலிருந்து மீட்சியே கிடையாதா? பேதைமையை விட்டொழித்தலே மீட்சிக்கு முதற்படி.

பேதைமை மீளச் செய்கை மீளுஞ்
செய்கை மீள வுணர்ச்சி மீளூம்
உணர்ச்சி மீள வருவுரு மீளும்
அருவுரு மீள வாயின் மீளும்
வாயின் மீள வூறு மீளும்
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளுங் கருமத் தொகுதி மீளத்
தோற்ற மீளுந் தோற்ற மீளப்
பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச்
சாக்கா டவல மரற்றுக் கவலை
கையா றென்றிக் கடையில் துன்பம்
எல்லா மீளுமிவ் வகையான் மீட்சி   (30 : 118 – 133)

நம் புலன்களால் காணப்பட்டு உணரப்படும் சம்சாரவுலகம் நிதானங்கள் என்னும் தம்மத்தால் எழுவதும் விழுவதுமாக இருக்கின்றது. உலகியல் நிகழ்ச்சி அனைத்தும் காரண, காரிய இயைபால் நிகழ்வதன்றிப் பிறிதில்லையென்று மணிமேகலையின் மேற்கண்ட அடிகள் வலியுறுத்தி நிற்கின்றன. “தூய பாதை” என்று பொருள் படும் “விசுத்திமக்கா” எனும் பாலி மொழி நூலில் புத்தகோசர் (ஐந்தாம் நூற்றாண்டு) கூறுகிறார் ;

வாழ்க்கைச் சக்கரத்தைப் படைத்தவரென
கடவுளையோ, பிரம்மாவையோ கூறவியலாது
வெற்று நிகழ்வுகள் சுழலுகின்றன
ஏது நிலைகளைச் சார்ந்தவாறு

நிதானங்களை நான்கு கண்டங்களாகப் (குழுக்களாக) பிரிக்கலாம். பேதைமை மற்றும் செய்கையைத் தொடர்ந்தே மற்ற நிதானங்கள் எழுவதால், இவ்விரண்டும் முதற் கண்டமாகும்.

உணர்ச்சியும், அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியுமெனப்படும் நிதானங்கள் ஐந்தும் முதற் கண்டத்தில் சொல்லப்பட்ட இரண்டின் இயல்பினாலேயே உடலுள் எழுகின்றன ; ஆதலின் இவற்றை இரண்டாங் கண்டமென்பர்.

வேட்கையும் பற்றும் கருமத் தொகுதியுமெனப் பகுக்கப்படும் மூன்று நிதானங்களும் உணர்ச்சி முதலாக நுகர்ச்சியீறாக ஐந்தனால் நிகழும் நிகழ்ச்சிக்கண் விளையும் குற்றமும் அதற்குரிய விளைவுமாதலால் மூன்றாங் கண்டமெனப்படும். வேட்கை, பற்று என்னும் குற்றங்களால் விளையும் பலன் கருமத் தொகுதியாகும்.

பிறப்பு, பிணி மூப்பு சாவு என்று கூறப்படும் துன்பங்கள் பிறந்தவுடம்பின் கண் எய்தி வருந்தும் வினைப்பயனாதலால் நான்காம் கண்டமெனப்படும்.

பிறப்புக்குக் காரணமாகும் செய்கையும் உணர்ச்சியும் பொருந்தும் இடம் முதற் சந்தியெனப்படும். நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி இரண்டாம் சந்தியாகும்.

கருமத்தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்லும் சந்தி மூன்றாம் சந்தி.

மனிதன், கடவுள், விலங்குகள் எனும் உயிர்களின் வகைகளில் ஏதேனும் ஒன்றாகப் பிறப்பெடுப்பது முந்தைய பிறவியின் உணர்வு நிலையையும் பேதைமையிலிருந்து தோன்றிய மனக்கட்டமைப்புகளையும் பொறுத்ததாகும். ஒரு வகை உயிராக ஜனிப்பது மட்டுமே வாழ்தலின் துவக்கம் என்றாகிவிடுவதில்லை ; வேறு வகை இருத்தலின் முடிவாகவும் அது ஆகி விடுவதில்லை. இருப்பின் தொடர்ச்சியெனத் தோன்றும் ஒரு மாற்றமே பிறப்பு. உள்ளுறைய ஒரு வடிவமோ உடம்போ இல்லாமல் உணர்வு வெளிப்படாது. மனிதனோ, விலங்கோ, தேவனோ எவ்வுயிராயினும் பிறந்தது முதல் உணர்வும் வடிவமும் ஒன்றிணைந்ததாகவே அமைகின்றன.

மறத்தலை ஏற்படுத்தும் பேதைமையும், செய்கையும் இறந்த காலம் எனக் கருதப்படும். உணர்ச்சியும், அருவுருவும், வாயிலும், ஊறும், நுகர்ச்சியும், வேட்கையும், பற்றும் பவமும், தோற்றமும் ஆகிய நிதானங்களை கால வகையிற் கூறு படுத்திச் சொல்லும் போது நிகழ் காலம் என அறியப்படும். பிறப்பும், பிணியும், முதுமையும், சாக்காடும் எதிர் காலம் என்றும் வகைப்படுத்தப்படும்.

நிதானங்களை பௌத்தம் வேறு வகையாகவும் பகுக்கிறது. வேட்கை, பற்று, பேதைமை – இவைகள் குற்றம் என்று கூறப்படுகிறது. உருப்படுத்தும் பவமும் செய்கையும் வினையெனக் கொள்ளப்படும். பிற ஏழு நிதானங்களும் பயன் என்று கருதப்படும். குற்றம், வினை, பயன் என்று பகுக்கப்படும் யாவுமே துன்பம் பயப்பனவே. குற்றம், வினை, பயன் – இவற்றால் பெறப்பட்ட பிறப்புடம்புகள் நிலையில்லாதனவாகும். உயர்தினை, அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பது கிடையாது. இவ்வுண்மைகளை உணரும் போது வீடுபேறு உறுதி.

உணர்ச்சியும், அருவுருவும், வாயிலும், ஊறும், நுகர்ச்சியும் பிறப்பும், பிணியும், மூப்பும், சாக்காடும் என்று சொல்லப்படும் நிதானங்களே துக்கமாகும்.[i] இந்த துக்கத்துக்கு பேதைமையும் செய்கையும், வேட்கையும், பற்றும், வினைப்பயன்களுமே காரணமாகும்.[ii] துன்பத்துக்கும் பிறப்பிற்கும் பற்றே காரணம்.[iii] இன்பத்திற்கும் பிறவாத வீடுபேற்றிற்கும் பற்றின்மையே காரணமாகும்.[iv]

உருவமும், வேதனையும், குறிப்பும், பாவனையும், விஞ்ஞானமும் என்ற இவைகள் ஐவகை கந்தங்கள் (Five Aggregates) எனப்படும்.

வழக்குகள் (The Experiences) என்று சொல்லப்படுபவை : தொகை (Conglomerates), தொடர்ச்சி (Continuity), தன்மை மிகுத்துரை (Evolution), இயைந்துரை (Entities circumscribed by a name) – என்ற நான்கினோடு சேர்ந்து வரும் உண்மை வழக்கென்றும், இன்மை வழக்கென்றும், உள்ளது சார்ந்த உண்மை வழக்கென்றும், இல்லாதது சார்ந்த உண்மை வழக்கென்றும், உள்ளது சார்ந்த இன்மை வழக்கென்றும், இல்லாதது சார்ந்த இன்மை வழக்கென்றும் என்றும் அறுவகைப்படும்.

தொகை (Conglomerates) என்பதன் உதாரணங்கள் : உடம்பு, நீர், நாடு. குருதி, எலும்பு, தசை, நரம்புகள் முதலியவற்றின் தொகுதியே உடம்பு : நீர்த் துளிகளின் தொகுதி நீராகும். சிறிதும் பெரிதுமான ஊர்களின் தொகுதியே நாடாகும். நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குவதைப் போல காரண, காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி (Continuity) எனப்படும். தன்மை மிகுத்துரை (Evolution) என்பது ஒரு பொருள் அழிந்ததென்றும், பிறந்ததென்றும், முதுமையுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள் மூன்றில் ஒரு கூற்றின் தன்மையை மிகுதியாகக் கூறுதல். இயைந்துரை (Entities circumscribed by a name) என்பது எழுத்துகள் பல கூடி உருவாகும் சொல்லென்ற தொகை போலில்லாமல் பல நாட்கள் கூடிய காலவெல்லையை மாதம் என்று வழங்குவது போன்றது.

உள்ளதாகிய உணர்ச்சியை உள்ளதென்பதல் உண்மை வழக்காகும். இல்லாததாகியவொன்றை (உதாரணம் : முயலின் கொம்பு) இல்லை என்றல் இன்மை வழக்கு. உள்ளது சார்ந்த உண்மை வழக்கு என்பது உண்மையான ஒரு பொருளுடனான நுகர்ச்சியும் உண்டு என்பதாகும். கண நேர மின்னலைப் போன்று உணர்வாகிய உண்மைப் பொருள் தோன்றியது என்று கூறுதல் உள்ளதைச் சார்ந்து வரும் இன்மை வழக்காகும். இல்லாதது சார்ந்த உண்மை வழக்கென்பது கண்ணுக்குத் தெரியா காரணத்தை கண்ணுக்குத் தெரியும் விளைவைக் கொண்டு உரைத்தல் போலாகும். முயலுக்கு கொம்பு இல்லாமையால் அதற்குத் தோற்றமில்லை என்று கூறுதல் இல்லாததைச் சார்ந்த இன்மை வழக்கெனப்படும்.

நான்கு வகை நயங்கள் (Relations) எனத் தெளியவுணரப்படுபவை ஒற்றுமையும் (Unity) வேற்றுமையும் (Diversity) புரிவின்மையும் (The Unknowable) இயல்பும் (The evident) என்பனவாம். ஒற்றுமை நயமாவது காரணமும் காரியமுமாய் நிற்கும் பொருள்களை வேற்றுமை கருதாது ஒரே இயல்புடையவை என்று உணர்தலாகும். காரண காரியங்களை ஒன்றாக உணராது வேறுபடுத்தி உணர்தல் வேற்றுமை நயமென கொள்ளப்படும். என்றும் அழியா, நிரந்தரப் பொருள், அழிதலுக்குட்பட்ட காரண காரியப் பொருள் – இவைகளுக்கிடையே இருக்கும் புரிந்து கொள்ள முடியா நயத்தை புரிவின்மை நயம் என்று சொல்லலாம். நெல் விதையிலிருந்து நெல்லே விளையும் என்பது மாதிரியான நயத்தை இயல்பு என்று சொல்லலாம்.

நால் வகை நயங்களிலிருந்து பெறும் பாடங்கள் : எல்லாமே காரண, காரியத் தொகுதியின் ஒற்றுமை நயத்தால் காணப்படும் பொருள்களேயன்றி வேறில்லை. அப்பொருள்களிடத்தே பற்று தேவையில்லை. வினையோடு செய்யும் நபரைத் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளுதல் கூடாது. பொருந்தும் காரணத்தால் காரியம் பிறக்கும் ; அது காரண காரியமுமன்று அல்லாததுமன்று. நெற்பயிரின் விதை, முளை, தாள் என்பவை காரண காரியத் தொடர்ச்சிகளே, ஆனால் விதை முளையாகாது ; முளை தாளுமன்று.

வினாக்களுக்கு நான்கு வித விடைகள் தரப்படலாம். அவை -> துணிந்து சொல்லல் (Definite Answer), கூறிட்டு மொழிதல் (Deferred Answer), வினாவினை விடுத்தல் (Dilatory Response), வாய் வாளாமை (Silence)

துணிந்து சொல்லல் -> “பிறந்தது இறக்க வேண்டுமா?” என்ற வினாவுக்கான விடை “பிறந்தது எல்லாம் மரித்தல் நிச்சயம்”

கூறிட்டு மொழிதல் -> “இந்த இறந்த மனிதன் திரும்பப் பிறப்பானா?” என்ற வினாவுக்கான முதல் விடை ஒரு வினாவாக இருக்க வேண்டும் “இவ்வுலகப் பொருட்களின் மேல் பற்றுடையோனாக அவன் இருந்தானா?” அதற்கான விடை “இல்லை”யென்று கிடைத்தால், அவசியம் அவன் திரும்பப் பிறக்க மாட்டான்.

வினாவினை விடுத்தல் -> “எது முதலில் வருகிறது – விதையா? பனை மரமா?” என்ற வினாவுக்கு விடை “எந்த விதை? எந்த பனை மரம்?”

வாய் வாளாமை : “வானில் பூத்த மலர் புதிதோ? பழையதோ?” என்ற கேள்விக்கு அளிக்கும் விடை மௌனமாயிருத்தலேயாகும்.

மறுபிறப்பு என்னும் அடிமைத்தனமா அல்லது வீடுபேறு என்னும் விடுதலையா என்னும் தெரிவே ஸ்கந்தங்களின், வாழ்வனுபவங்களின் இலக்கு. அனைத்து துக்கங்களுக்கும் காமம், வெகுளி, மயக்கம் – இவைகளே காரணம்.

பொருள்கள் நிலையில்லாதனவென்றும், துன்பந்தருவனவென்றும், அநான்மாவென்றும், அருவருப்புடையனவென்றும் ஆராய்ந்தறிந்து பற்றினை நீக்கும் போது காமமாகிய காரணம் இல்லாது போகும். (காண்க : அனிச்சம் )

மைத்திரி, கருணை, முதிதை என்று சொல்லப்படுகின்ற பாவனைகளையறிந்து அவற்றால் திருந்தப்படும் நல்லுணர்வு கொண்டு வெகுளியைப் போக்க வேண்டும்.[v]  (காண்க : பிரம்ம விகாரம் )

சுருதியும் சிந்தனையும் பாவனையும் தரிசனையுமாகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து மயக்கத்தை போக்க வேண்டும்.[vi]

சுருதி முதலிய நான்கு நெறியால் மனமயக்கும் கெடுவாயாக என்று முன்னுக்குப் பின் முரணிலாத சொற்களால் ஞானமாகிய விளக்கத்தை தெளியக் காட்டினாராதலின் பாவை போன்ற மணிமேகலை உண்மை ஞானத்திற்குரிய தவத்தின் கூறுகளை மேற்கொண்டு பல்வகை அறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு பிறப்புக்கேதுவாகிய குற்றங்களினின்று நீங்குவேனென நோற்கலுற்றாள்.

 

[i] நால்வகை வாய்மைகளில் முதல் வாய்மை – The truth of Dukkha (suffering)

[ii] இரண்டாம் வாய்மை – The truth of Origin of Dukkha

[iii] மூன்றாம் வாய்மை – The truth of cessation of Dukkha

[iv] நான்காம் வாய்மை – The truth of the path of liberation

[v] மைத்திரி (பாலியில் – மெத்தா) பாவனையென்பது எல்லாவுயிர்களையும் நட்புறவோடு நினைந்து அவையெல்லாம் துன்பம், நோய் முதலியவையில்லாமல் இன்பமுடையவாகுக என்று நினைத்தல். கருணை பாவனையாவது பிறவுயிர்களுக்கு உண்டாகும் துன்பம் கண்டு உள்ளமுருகி அதனை நீக்குதற்கு விரையும் விரைவுணர்வு. முதிதை பாவனை என்பது பிறவுயிர்கள் பெற்றிருக்கும் ஆக்கமும் இன்பமும் கண்டு மனமகிழ்வும் நிறைவும் அமைதியுங் கொண்டு அவை நீங்காதிருப்பனவாகுக என நினைத்தல்.

[vi] சுருதி – அறவுரை கேட்டல், சிந்தனை – சிந்தித்தல், பாவனை – கேட்டவாறு ஒழுகுதல், தரிசனை – உண்மை தெளிதல், இந்நான்கினையும் உபேக்‌ஷா பாவனையென்றும் கூறுவர்.

நூல்கள் : (1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வெங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை – சாரதா பதிப்பகம் (2) Manimekhalai (The Dancer with the Magic Bowl) – Translated by Alain Danielou – A New Directios Paperback

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s