தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு
வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு
பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு
கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு….
+++++
தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை
இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை
குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது
தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா?
+++++
கல்லறையிலிருந்து எழுந்து
வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும்
இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து
குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும்
நடுவழியில் சந்தித்துக் கொண்டன
ஒன்றின் ஆவேசமும்
இன்னொன்றின் உவகையும்
ஒரு தெருவின் பெயர் மாற்றம் பற்றியதென
இரண்டும் புரிந்து கொண்டபோது
பெயரற்ற ஒரு காட்டுக்கிடையே இருந்த
ஓர் இடுகாட்டை அடைந்திருந்தன
திறந்திருந்த இரு குழிகளுக்குள் இறங்கி
இளைப்பாற கண் மூடியவை
பெயர் தெரியா காற்றடித்து
பெயர் தெரியா மணல் மூடி
பெயர் தெரியாமல் மறைந்து போயின