பவத்திறமறுத்தல் – 1

Dependent Origination

Dependent Origination

அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத்
துடித லோக மொழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி யிருந்து
மாரனை வென்று வீர னாகிக்
குற்ற மூன்று முற்ற வறுக்கும்
வாமன் வாய்மை யேமக் கட்டுரை
இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது

”பௌத்தத்தின் தனித்தனிக் கூறுகளை கட்டுரைகளாக எழுதுகிறீர்கள், சரி! ஆனால் பௌத்தம் பேசும் அடிப்படைக் கருத்துகளை சுருக்கமாக ஒரே கட்டுரையில் புரிந்து கொள்ளும் படி எழுதுங்கள்” என்று சமீபத்தில் ஒரு ஃபேஸ் புக் நண்பர் சொன்னார். “முடியுமா என்று தெரியவில்லை” என்று மென்று விழுங்கினேன்.

+++++

ஞாயிறு மதியம். உணவுண்ட களைப்பில் கண்கள் அசந்தன. அரைகுறை தூக்கத்தை கலைத்தது  வாசல் மணி. யார் வந்திருக்கிறார்கள்? என்று உள்ளுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டே வாசற்கதவைத் திறந்தேன். குரியர். பழுப்பு நிற அட்டைப்பெட்டிக்குள் அடைந்து கிடந்த புத்தகத்தை விடுதலை செய்தேன். ஒரு மாதத்துக்கு முன்னர் இணையத்தில் ஆர்டர் செய்த புத்தகம்! Alain Danielou’s Manimekhalai : The dancer with the Magic Bowl. மணிமேகலையின் முப்பதாம் அதிகாரத்தைப் புரிந்து கொள்ளும் என் தொடர் முயற்சியாக இப்புத்தகத்தை ஆர்டர் செய்திருந்தேன்.

காஞ்சி மாநகரை அடையும் மணிமேகலை அரவண அடிகளைக் கண்டு வஞ்சி மாநகரில் தாம் சந்தித்த பல்வேறு சமயக் கணக்கர்கள் தம்முடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் குறைபாடுள்ளதாகத் தோன்றுகிறது என்றும் உண்மையான சமயக் கருத்தை தமக்கு உரைக்குமாறு வேண்டுகிறாள். அரவண அடிகளின் போதனை 29ம் காதையிலேயே ( தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதை ) துவங்கி விடுகிறது. இருபத்தொன்பதாம் காதையில் அறிவுத்தோற்றவியலின் கூறுகள் விளக்கப்படுகின்றன. தருக்கங்களின் அடிப்படைகள் குறித்தான இலக்கணங்கள் விவரிக்கப்படுகின்றன.  (காண்க : சுட்டுணர்வும் அனுமானங்களும் ) இக்காதையில் விளக்கப்படுபவை திக்நாகரின் “நியாயப் பிரவேசம்” என்னும் வடமொழி நூலிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டவை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சில ஆய்வாளர்கள் 29ம் காதையை நியாயப்பிரவேசத்தின் இணைவாக்கம் என்றே கருத முடியும் என்று சொல்கிறார்கள்.

ஆங்கிலத்தில் எழுதப்படும் பௌத்தத் தத்துவக் கட்டுரைகளில் பயன் படுத்தப்படும் கலைச் சொற்களை எப்படி தமிழ்ப்படுத்துவது என்ற குழப்பம் தாளாமல் ஆங்கிலச் சொற்களையே என் கட்டுரைகளில் பயன்படுத்தி விடுவதுண்டு. என்னுடைய தமிழறிவின் குறைபாட்டையே இதற்கு குற்றம் சொல்ல வேண்டும். அரவண அடிகளின் உரை முப்பதாம் காதையிலும் தொடர்கிறது. Alain Danielou ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் முதலில் புரட்டிப் பார்த்தது முப்பதாம் காதை தான். ஆங்கிலத்தில் உரைநடையில் இருந்தபடியாலோ அல்லது நவீன மொழியில் எழுதப்பட்டதனாலோ கருத்துகள் புரிந்த மாதிரி இருந்தது. மணிமேகலை மூலத்தில் லாடின் மொழிச்சொற்கள் மாதிரி எனக்கு ஒலித்த பதங்களின் ஆங்கிலப் பிரயோகங்களைக் கூர்ந்து படித்தேன். உடன், மணிமேகலை மூலத்தின் வரிகளையும் ஒர் சேரப் படிக்க ஆரம்பித்தேன்.

மிக அழகாக, குறைவான சொற்களில் செறிவுடன் பௌத்த தத்துவங்கள் தமிழில் கூறப்பட்டிருக்கும் விதம் எனக்கு அப்போது தான் புலனானது. தமிழ்ச் சொற்களின் ஆழமும், வடமொழித் தற்பவங்களின், தற்சமங்களின் திறமான பயன்பாடுகளும் என்னை வியப்பிலாழ்த்தின. மணிமேகலையை வாசித்த போது தமிழ்த்தாத்தா உ வே சா அடைந்த உணர்வை நானும் அடைந்தேன். (காண்க : மணிமேகலா தெய்வமும் ஏதுநிகழ்ச்சியும் )

முப்பதாம் காதை பௌத்த சமயத்தின்  கோட்பாடான – Theory of Dependent Origination – ஐ சுருங்கச் சொல்லி விளக்குகிறது. Very Concise. பௌத்தத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ள நினைப்பவர் அனைவரும் மணிமேகலையின் முப்பதாம் காதையை (பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை) அவசியம் படிக்க வேண்டும்.  (காண்க : முடிவிலாச் சூழல் )

+++++

இருத்தலின் துயருக்குக் காரணம் நம்மைக் கயிறாகக் கட்டும் பனிரெண்டு நிதானங்கள். இந்த நிதானங்களின் வலிமை நம்முடைய பற்றுகளின் பலத்தைப் பொறுத்தது. நமது பிழைகள், நமது செயல்கள், மற்றும் விளைவுகள் – அனைத்தின் பின்ணனியிலும் அவைகளே இருக்கின்றன.

காரண, காரியச் சங்கிலி போன்று இந்நிதானங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. ஓர் இணைப்பு அறுபடும் போது, மற்றவைகளும் அறுபட்டு விடுகின்றன. ஒன்று மீளத் தோன்றும் போது, மற்றவைகளும் கூடவே தோன்றி விடுகின்றன.

நிதானச் சங்கிலியை மூன்று சந்தியுடன் நான்கு பிரிவுகளாகப் பகுக்கலாம். வேட்கையும் பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும், பவமும் செய்கையுமாகிய வினைகளும், இவையொழித்த ஏழுமாகிய பயனுமாக இப்பன்னிரெண்டும் நிலவுதலால் நிலையில்லாதனவென்றும், பயனில்லாதனவென்றும் துன்பமென்றும் இவற்றைக் கண்டுணர்கையில் கெடாத வீடு பேற்றிற்கு உறுதியாகிய நல் ஞானமுண்டாகும்.

நம்மை கட்டிப் போடும் பனிரெண்டு நிதானங்களின் இயல்பினை புரிந்து கொண்டு, அவற்றின் முக்கியத்துவத்தை, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மையை, அவைகள் ஏற்படுத்தும் துக்கத்தை அறிவதன் வாயிலாகவே ஒருவன் அவற்றின் பிடியிலிருந்து தப்பி, மாறாதிருக்கும் தன்மையை அடைந்து மோட்சத்தை இறுதியில் அடைய முடியும்.

நால்வகை வாய்மைக்கு[i]ச் சார்புடையதாய், ஐந்து வகை கந்தத்துள்[ii] அமைவுடையதாய், மெய்ம்மையுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளை[iii]யுடையதாகியும் இந்நிதானம் நிலவும்.

நால்வகை நயங்களாலும்[iv] நால்வகைப் பயன்களை[v] உற்று, இவற்றுடன் ஒப்பு நோக்கக் கூடிய நான்கு வினாவிடைகளுடைதாய்[vi] இந்நிதானம் நிலவும்.

தொடர்ச்சியான, ஒன்றையொன்று சார்ந்த தனிமங்களாலான சங்கிலியாக உருக்கொண்ட நிதானம் அழிக்கப்பட முடியாதது. செய்பவர் இல்லாமல் அது செயல்படாதது (”பண்ணுநரின்றி பண்ணப் படாதாய்”)[vii]. அவற்றை செயல்படுத்துவோரின் மீதான விளைவுகளின்றி அவற்றின் இருப்பை உணர முடியாது.

இறந்த காலத்தைச் சார்ந்ததாகவோ எதிர் காலத்தைச் சார்ந்ததாகவோ நிதானங்கள் இருப்பதில்லை. அவைகள் பிறப்பதுமில்லை ; அழிவதுமில்லை. அவைகள் செய்கைகளின் காரணங்களாகவும் விளைவுகளாகவும் இருக்கின்றன. அவைகள் இருத்தலின் காரணமாகவும், இருத்தலின் இறுதியாகவும் இருக்கின்றன. வாழ்வின் மூலமும் அவைகளே.

பேதைமையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென[viii] வகுக்கப்பட்ட நிதானங்களின் இயல்பு பனிரெண்டையும் அறிந்தோர் பெரிய பேறாகிய வீடு பேற்றை எய்துவர். அறியாதொழுவாரின், கரையேற முடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து துன்பத்தைத் தான் அறிவர்.

பேதைமை (Ignorance) என்று சொல்லப்படுவது யாதெனின் நால்வகை வாய்மைகளை நிதானங்களை உணர்ந்து கொள்ளாமல் மயக்கமுற்று காட்சியாலும் கருத்தளவையாலும்[ix] அறிந்தவற்றை மறந்து முயலுக்கு கொம்பு உண்டா இல்லையா என்பதைப் பிறரைக் கேட்டு அவர்கள் உண்டு என்று சொன்னால் நம்புவதாம்.

மூவுலகங்களிலும் உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாகும். பலவாகிய உயிர்கள் : மக்கள், தேவர், பிரமர், நரகர் என்றும் புட்கள், விலங்குகள், பேய்கள் என்றும் அறுவகைப்படும். நற்செய்கை, தீச்செய்கையுமாகிய இருவகைச் செய்கைகளால் (Action) மக்கள், தேவர் முதலான பிறப்பை அடைவதும், அப்பிறப்புகளை இயைந்த காலத்தே அவற்றோடே தோன்றி செய்வினைப்பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில் மனத்தின் கண் பெரிய இன்பத்தையும் துன்பத்தையும் காட்டும். தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாக! கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய உடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும் ; பொய், புறங்கூரல், கடுஞ்சொற் சொல்லுதல், பயனில சொல்லல் என்று வாக்கினிலே உண்டாகும் தீவினைகள் நான்கும் ; பிறர் பொருளைக் கவர நினைத்தலும், கோபப்படுதலும், குற்றச்செயல் செய்ய நினைத்தலும் என்று மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றும் என பத்து வகைத் தீவினைகளை அவற்றின் இயல்பை அறிந்தோர் இப்பத்தினையும் ஒரு நாளும் நெஞ்சாலும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைப்பார்களேயானால் விலங்கு, பேய், நரகர் ஆகிய கதிகளில் பிறந்து கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்பவுடம்புற்று வருந்துவர்.

நல்வினையென்று சொல்லப்படுவது முன்பு சொல்லப்பட்ட பத்து வகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி, சீலத்தை மேற்கொண்டு, தானங்கள் பலவற்றையும் செய்து மேற்கதியென்று சான்றோரால் வகுத்துரைக்கப்பட்ட மூன்றாகிய மக்களென்றும் தேவரென்றும் பிரமரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர்.

உணர்வு (Consciousness) என்று சொல்லப்படுவது பொருட்களை புலன்களால் அறிந்துணரும் அடிப்படைத் திறன். உறக்கத்தில் வரும் கனவு போல, இவ்வுணர்வு ஒருவரை செய்கைக்கோ அனுபவத்திற்கோ தூண்டுதலாக அமைவதில்லை.

அருவுரு (Name and Form) என்று சொல்லப்படுவது உணர்வைச் சார்ந்திருக்கும் உயிரும் உடம்பும் ஆகும்.

வாயில் (The sense organs) என்பது இந்திரியம் ஐந்தையும் மனத்தையும் குறிக்கும். உள்ளத்தின்கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு ஏற்றது வாயில்களாகும்.

ஊறு (Touch or Perception) என்று கூறப்படும் நிதானமாவது மனமும் இந்திரியங்களும் தம்மின் புறத்திருக்கும் பொருள்களில் பொருந்துவதாகும்.

நுகர்ச்சி (Sensation) எனப்படும் நிதானமாவது புலன்களால் பொருட்களை உணர்ந்து அவற்றின் பயனை அடைதல்.

வேட்கை (Desire or Thirst) என்னும் நிதானமாவது பயனை நுகர்ந்த படி அதன் மேல் செல்லும் ஆசை அடங்காமல் இருப்பதாகும்.

பற்று (Attachment) எனப்படுவது அடங்காதெழும் ஆசையால் அதனையே பற்றி நிற்பது.

பவம் (Development) என்பது தொடர்ந்து வரும் பல்வேறு பிறப்புகளினூடாக நாம் ஈட்டிய கருமத்தொகுதியாகும். தன் பயனை விளைத்துக் கொடுக்கும் முறைமையும் இது குறிக்கும்.

பிறப்பு (Birth) என்னும் நிதானமாவது செய்த வினைகளின் தன்மைக்கேற்ப ஏனையவற்றோடு மிகவும் சேர்ந்திருக்கும் விஞ்ஞானமானது முன்னும் பின்னுமாய்ச் சாரும் நிதானங்களுடன் பலவகைப் பிறப்புகளிலும் காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுதலாகும்.

பிணி, மூப்பு, சாக்காடு (Sickness, Old age, Death) : பிணி என்று சொல்லப்படுவது பேதைமை முதலாகச் சொல்லப்பட்டவற்றின் வேறான சார்பாய், உடம்பின் தன்மையைப் பொறுத்து வேறுபட்டு அதற்குத் துன்பத்தையுண்டு பண்ணுவதாகும். மூப்பென்று சொல்லப்படுவது சாகும் வரையில் வந்து மோதும் நிலையாமையால் உடம்பு தளர்ச்சியெய்துவதாகும். இறத்தல் என்று சொல்லப்படுவது சித்தமாகவும் காயமாகவும் இருக்கும் தன்மையுடைய உடம்பானது மேலைக்கடலில் வீழும் சூரியன் போல மறைவதாகும்.

                                                – (இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்)

நூல்கள் :

(1) மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வெங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை – சாரதா பதிப்பகம் (2) Manimekhalai (The Dancer with the Magic Bowl) – Translated by Alain Danielou – New Directions Publishing

[i] புத்தர் போதித்த நால்வகை வாய்மைகள் (Four Noble Truths) à துக்கம், துக்கநீக்கம், துக்கத்தோற்றம், துக்கநெறி

[ii] ஐவகை கந்தங்கள் à உருவம் (Body), வேதனை (Sensation), குறிப்பு (Perception), பாவனை (Mental Formations), விஞ்ஞானம் (Consciousness)

[iii] ஆறு வழக்குகள் (Forms of Experiences) à உண்மை, இன்மை, உள்ளது சார்ந்த உண்மை, உள்ளது சார்ந்த இன்மை, இல்லது சார்ந்த உண்மை, இல்லது சார்ந்த உணமை

[iv] நயங்கள் (relations) à ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு

[v] நான்கு பயன்கள் à  (1) எல்லாம் காரண காரியமாய்த் தோன்றும் பொருள்களேயன்றித் தனியே ஒன்றும் கிடையாது (2) அப்பொருள்களிடத்தே பற்று வைத்தல் கூடாது (3) வினைகளின் கர்த்தாவுடன் வினைகளுக்கு இயைபு ஏதும் இல்லை (4) பொருந்தும் காரணத்தால் காரியம் பிறக்கும் : அது காரண காரியமுமன்று ; அது அல்லாததுமன்று –

[vi] நான்கு வினாவிடைகள் à துணிந்து சொல்லல் (Definite Answer), கூறிட்டு மொழிதல் (Deferred Answer), வினாவின் விடுத்தல் (Dilatory Answer), வாய்வாளாமை (Silence)

[vii] மணிமேகலையில் கூறப்படும் கோட்பாடுகள் பௌத்தத்தின் எந்த உட்பிரிவைச் சேர்ந்ததாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் பல ஊகங்களைச் செய்திருக்கிறார்கள். ” பண்ணுநரின்றி பண்ணப் படாதாய்” என்ற வரிகளை வாசிக்கையில் எனக்கு மிக ஆச்சரியமாயிருந்தது. தனிமங்களாலான நிதானங்கள் (தம்மா) அனித்யமானது என்றும் நிரந்தர சுயமற்றது என்றும் சொல்லும் மணிமேகலை நிதானங்களை இயக்க “பண்ணுநர்” என்ற ஒருவர் வேண்டியிருக்கிறார் என்று சொல்வது ஏன்? ஸ்தாவிர வாதத்திலிருந்து பிரிந்த புத்கலவாத (Pudgalavada) பௌத்தப் பிரிவு ஏதாவதொன்றைப் பின்பற்றுபவராக மணிமேகலை ஆசிரியர் இருந்திருக்கக் கூடுமா? பௌத்தத்தின் தேரவாதம் மற்றும் மகாயானம் என்னும் இரு பெரும் பிரிவுகளும் நிரந்தரமான வஸ்து அல்லது ஆத்மா என்னும் கருப்பொருளை ஏற்பதில்லை. தனிமங்களின் அழிவிற்குப் பிறகு “ஆத்மா” அல்லது “நபர்” அழிந்துவிடுவார் என்று இரு பிரிவுகளும் வலியுறுத்துகின்றன. ஆனால் புத்கலவாத பௌத்தர்களோ “ஆத்மா” என்ற ஒன்றில்லை ; ஆனால் கருமங்களைத் தாங்கிச் செல்கிற “நபர்” இருக்கிறார். அவர் ஐவகைக் கந்தங்களுடன் தொடர்புடையவராக இருக்கிறார் அல்லது தொடர்பற்று இருக்கிறார் என்று நம்பினார்கள். புத்கலவாத பௌத்தப் பிரிவுகள் பிற்காலத்தில் மறைந்து விட்டன.

[viii] ஏனைய புத்த நூல்களில் இப்பனிரெண்டும் – அவித்யை, சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதனம், ஸ்பரிசம், வேதனை, திருஷ்னை, உபாதானம், பவம், சாதி – என்று குறிப்பிடப்படுகின்றன.

[ix] காட்சி மற்றும் கருத்தளவைகள் பற்றி மணிமேகலையின் 29ம் காதை விளக்குகிறது.

618L1id6zvL

Advertisements

4 thoughts on “பவத்திறமறுத்தல் – 1

  1. rprabha

    Superb. After reading this, I have picked up Manimekalai again to read and understand its perspectives, hopefully, in a better way. Keep these coming.

    Reply
  2. Pingback: பவத்திறமறுத்தல் 2 | இலைகள், மலர்கள், மரங்கள்

  3. Pingback: தம்மம் என்பது என்ன? | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s