பட்டுப் போன அத்திமரம்[1]

Sulawesi Hanging Parrot, Salibu forest, Central Sulawesi, Indonesia

Sulawesi Hanging Parrot, Salibu forest, Central Sulawesi, Indonesia

பச்சுப்பன்ன வத்து

தனக்கு வாய்த்த நிலைமை மேல் அதிருப்தியுற்ற இளம் பிக்‌ஷுவின் கதையை ஜெத்தாவனத்தில் தங்கியிருந்த புத்தர் ஒருநாள் சொன்னார். 

புத்தரிடமிருந்து போதனை பெற்ற பின்னர் உடன் மழைக்காலம் தொடங்கிவிட்ட படியால் கோசல நாட்டின் எல்லையில் உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று தங்கினான் இளம் பிக்‌ஷு. கிராமத்தினர் அவனுக்கு வசதியான இடம் தந்து தங்க வைத்தனர். அவ்விடம் கிராமத்தின் முக்கியமான சாலைக்கு மிக அண்மையில் இருந்தது. கிராமத்தார் தாராள மனத்தினராய் அவனுக்கு நிறைய பிச்சைகளுமிட்டனர்.

மழைக்காலம் தொடங்கி ஒரு மாத காலம் கழிந்த போது. துரதிர்ஷ்டவசமாக கிராமத்தில் தீவிபத்து ஏற்பட்டு அனைத்தும் அழிந்தது. கிராமத்தினர் சேகரித்து வைத்திருந்த விதைச்சரக்கையும் சேர்ந்து, தம் உடைமைகளை இழந்து கிராமத்தினர் கடும் துயரத்துக்காளாகினர். இதன் காரணமாக முன்னர் போல் சுவையான திண்பண்டங்கள் பிக்‌ஷுவுக்கு பிச்சையாக இடப்படவில்லை. இது பிக்‌ஷுவினுள் மன உளைச்சலை உண்டு பண்ணியது ; தர்மப் பயிற்சிகளில் அவனால் முன்னேற்றம் காண முடியவில்லை.

மழைக்கால முடிவில் அவன் புத்தரை சந்திக்கச் சென்றான்.[2] பணிவான வணக்கமும் வாழ்த்தும் பரிமாறிக் கொண்டபிறகு புத்தர் அவனிடம் உறைவிடம் பற்றியும் பெற்ற தானங்கள் பற்றியும் விசாரித்தார். பிக்‌ஷு நிகழ்ந்த தீவிபத்து பற்றிச் சொன்னான். உறைவிடம் வசதியாக இருந்ததென்றும் ஆனால் பிச்சை தாராளமாக கிடைக்கவில்லையென்றும் குறைபட்டுக் கொண்டான்.

“பிக்‌ஷு, இத்தகைய நல்ல தங்குமிடம் தரப்பட்டது. நீ கிடைத்த சொற்பமான பிச்சையில் மனத்திருப்தியுடன் இருந்திருக்க வேண்டும். வெகுகாலம் முன், நன்றியுணர்வின் காரணமாக, புழுதிப்பொடியை மட்டும் உண்டு தான் நெடுங்காலமாய் வாசம் செய்த மரத்தின் பொந்தை விட்டு விலகாதிருந்தது ஓர் உயிர். கொஞ்சமாக, சுவையற்ற உணவு கிடைத்தது என்பதற்காக வசதியான இடத்தை விட்டு ஏன் நீங்கினாய்?” என்று புத்தர் கேட்டார். பிக்‌ஷு வேண்டிக்கொண்டதற்கிணங்கி, இறந்த காலத்தில் நடந்த ஒரு கதையை புத்தர் கூறினார்.

அதீத வத்து

இமயமலைப் பகுதியில் கங்கை நதிக்கருகே இருந்த அத்தி மரத்தில் கிளிக்கூட்டமொன்று வாழ்ந்து வந்தது. மரத்தில் பழங்களில்லாமல் போன போது, கிளிகளெல்லாம் அம்மரத்திலிருந்து பறந்து வேறெங்கோ சென்றுவிட்டன. ஆனால் கிளிகளின் ராஜா மட்டும் சுகமான உறைவிடத்தை ஏற்படுத்தித் தந்த மரத்தின் மேலிருந்த நன்றியுணர்வினால் வேறெங்கும் செல்லவில்லை. தளிர்கள், இலைகள், அல்லது மரப்பட்டைகள் என்று கிடைத்ததை உண்டது. கங்கை நதி அண்மையில் இருந்ததால், அதிகப்படியான நீரை அருந்தி திருப்தியுடன் அத்தி மரப்பொந்திலேயே தங்கியிருந்தது.

கிளி ராஜாவின் ஆழமான திருப்தியுணர்வு வானுலகை எட்டி சக்கரனின்[3] அரியணை உஷ்ணமாயிற்று. அதன் காரணத்தை அறிந்தவுடன், தேவராஜன் கிளியின் குணத்தை சோதித்துப் பார்க்க முடிவு செய்தான். அமானுஷ்ய சக்தியின் துணை கொண்டு, அத்தி மரத்தை அடிமட்ட வேர்ப்பாகம் மட்டுமே கொண்ட பட்ட மரமாக்கினான். வெப்பக் காற்று வீசும் போது, பட்டுப் போன மரத்தின் துளைகளில் புழுதி பறந்தது. உண்ணுவதற்கு புழுதித்தூளும் குடிப்பதற்கு கங்கை நீரும் மட்டுமே கிளிக்கு கிடைத்தன. ஆயினும் கிளியின் திருப்தியுணர்வு விலகவில்லை. கதிரவனின், காற்றின் கடுமையைப் பொருட்படுத்தாமல், இறந்த மரத்தின் எஞ்சிய பாகத்தில் தன்னை இருத்திக்கொண்டது. வேறிடத்துக்குச் செல்வதைப் பற்றி யோசிக்கவுமில்லை.

அதன் திருப்தியுணர்வும் மரத்தின் மேலிருந்த உண்மையுணர்வும் சக்கரனை மிகவும் கவர்ந்தன. கிளியின் வாயிலிருந்தே அதன் சீலத்தை அறிவிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு வாத்து ரூபமெடுத்து, கூடவே மனைவி சுஜாவையும்[4] தன் ஜோடி வாத்தாக கூட்டிக்கொண்டு தாவதிம்சையிலிருந்து[5] பூலோகத்தில் இறங்கினான். உலர்ந்த அத்தி மரத்துக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு மரத்தில் உட்கார்ந்து கிளியுடன் பேச்சு கொடுத்தான்.

“நண்பனே, பழங்கள் நிறைந்த மரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பசித்திருக்கும் பறவைக் கூட்டத்தை காணலாம். ஆனால் பழங்கள் இல்லாமல் போன பின்னர் பறவைகள் வேறிடத்துக்குச் சென்று விடும். ஏன் நீ இன்னும் இங்கேயே தங்கியிருக்கிறாய் என்று நான் கேட்கலாமா? நீ பகற்கனவு காண்கிறாயா? இறந்து போன மரத்தின் வேர்க்குச்சி பாகம் உனக்கு எதையும் தரப்போவதில்லை! ஏன் அதனைப் பற்றிக் கொண்டிருக்கிறாய்?”

“வாத்து நண்பனே, இம்மரம் எப்போதுமே என் வீடு. ஒரு குஞ்சாக நான் இருந்த காலத்திலிருந்தே இம்மரத்தின் கிளைகளும் இலைகளும் என்னைக் காத்து வந்திருக்கின்றன. இந்த மரத்திற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வெகு நாளைய நண்பனான இம்மரத்திற்கு என்னுடைய முதுகை நான் எப்படி திருப்பிக் கொள்ள முடியும்? நட்பின் கோரிக்கைகளை புறக்கணித்தல் சரியாகுமா? எனவே தான் இறந்து போன இம்மரத்தை விட்டு விலக முடியாதவனாக இருக்கிறேன். எனக்கும் கனி விருந்தைப் புசிக்க ஆசைதான், ஆனால் இம்மரத்தை விட்டு விலக முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.” என்றது கிளி.

“உன் நன்றியுணர்வும் நட்புணர்வும் ஞானியர் பாராட்டும் சீலங்கள்! கிளி ராஜனே, நான் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன்! உனக்கு என்ன வேண்டுமோ கேள்! உன்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவதை நீ கேள்! அது உனதாகும்” என்றான் சக்கரன்.

“எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது எதுவென்றால் முந்தைய வீரியத்துடன் இம்மரம் மீண்டெழுதலேயாகும். இம்மரம் பழைய சக்தியைப் பெற்று, மீண்டும் காய்ப்பதை பார்க்க முடியுமானால் என் இதயம் அளவற்ற மகிழ்ச்சியெய்தும்.” நம்பிக்கையுடன் பதிலளித்தது கிளி.

சக்கரனும் சுஜாவும் தங்களின் மாறுவேடத்தை விடுத்து, புதரின் மேல் நடு வானத்தில் தம் சுய சொரூபத்தில் கிளி முன் தோன்றினர். சக்கரன் தன் உள்ளங்கையில் கங்கை நதி நீரை நிரப்பி அத்தி மரத்தின் உலர்ந்த வேர்க்குச்சியின் மேல் தூவினான். உடனடியாக குச்சி வலிமையான தண்டாக மாறியது. ஏராளமான கிளைகளும், தண்டுகளும் இலைகளும் முளைத்தன. ஒவ்வொரு கிளையிலும் தேன் நிறை பழங்கள் கொத்துகளாகத் தொங்கின.

“அதிசய பூர்வமாக இக்காட்சியைக் காணும் பேறு எனக்குக் கிடைத்தது போல், சக்கரனும் அவனால் நேசிக்கப்படும் அனைவரும் வாழ்த்தப்படட்டும்” கிளி ராஜன் அளவற்ற உவகையில் நெகிழ்ச்சியுடன் பேசினான்.

கிளி ராஜனின் நல்லொழுக்கத்தை இவ்வாறாக உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், சக்கரனும் சுஜாவும் தாவதிம்சைக்குத் திரும்பினர்.

சமோதனா

கதையை முடித்த பிறகு புத்தர் சொன்னார் : “பிக்‌ஷுவே நீயும் சதைப்பற்றுள்ள உணவுக்கான வேட்கையிலிருந்து விடுபட வேண்டும். நீ அந்த கிராமத்துக்கே திரும்பிச் சென்று, அங்கேயே தங்கியிரு” இளம் பிக்‌ஷு அவ்வாறே செய்தான் ; விரைவிலேயே அருக நிலையை எய்தினான். பின்னர் புத்தர் பிறப்புகளை அடையாளம் காட்டினார். “அப்பிறப்பில் அனுருத்தன்[6] சக்கரனாக இருந்தான் ; நான் கிளி ராஜனாக இருந்தேன்”

[1] பாலியில் : “மகாசுக ஜாதகம்

[2] புத்தரின் வழியில் பௌத்த பிக்‌ஷுக்கள் துவக்க காலத்தில் ஓரிடத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. கிராமம் கிராமமாக போதனை செய்தவாறு பயணம் செய்தவாறிருப்பார்கள். பிச்சை பெற்று உணவு பெறுவதும், மரத்தடியில் படுத்துறங்குவதுமாக இருந்தார்கள். ஆனால் மழைக்காலங்களில் வீடற்ற துறவிகளாக வலம் வருதல் மிகவும் சிரமம். எனவே, மழை நிற்கும் வரை பிக்‌ஷுக்கள் குழுவாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தார்கள். இதுவே பௌத்த சங்கத்திற்கு வித்திட்டது. சில பணக்கார சம்சாரிகள் மழைக்காலத்தில் தங்கவென் துறவிகளுக்கு தங்களுடைய இடத்தை அளிப்பதும் வழக்கமாக இருந்தது. காலப்போக்கில், இந்த தனவந்தர்கள் துறவிகளுக்கென நிரந்தரமான வாசஸ்தலத்தையும் கட்டிக் கொடுக்கத் தொடங்கினார்கள். இதுவே மடாலய மரபிற்கும் ஆரம்பமாக அமைந்தது.

[3] வேதங்களில் குறிப்பிடப்படும் இந்திரனே பாலி பௌத்த இலக்கியத்தில் சக்கரன் என்று அழைக்கப்படுபவன். இவன் சமண மதத் தொன்மங்களிலும் தோன்றுகிறான். பௌத்த தொன்மங்களின் படி, இவன் விபாசித்தி என்னும் அசுரர்களின் தலைவனை முறியடித்தவன். இந்து புராணங்கள் போலில்லாமல் பௌத்த தொன்மங்களில் இந்திர பதவி நிலையானதல்ல. ஜாதகக் கதைகளில் பலரும் சக்கரனாக வெவ்வேறு பிறப்புகளில் பிறந்ததாகக் கூறப்படுகிறது.

[4] விபாசித்தி என்னும் அசுரனை முறியடித்த பின்னர் அவன் மகள் சுஜாவை சக்கரன் மணந்து கொண்டான்.

[5] பாலியில் “தாவதிம்சா” என்றும் சமஸ்கிருதத்தில் ”த்ரயாத்ரிம்ஸா” என்றும் அழைக்கப்படும் இந்திரனின் லோகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வசிக்கின்றனர். பௌத்த மற்றும் இந்து அண்டவியலின் முக்கியமான தேவலோகம். இது சுமேரு என்னும் தொன்ம மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மற்ற லோகங்களுடன் நேரடித் தொடர்பிலும் இருக்கிறது.

[6] சாக்கியமுனி புத்தரின் பிரதம சீடர்களுள் ஒருவர். புத்தரின் தந்தை சுத்தோதனரின் தமையர் அமிதோதனரின் மகன். அனுருத்தர், தேவதத்தன் மற்றும் ஆனந்தர் – ஆகிய மூவருக்கும் புத்தர் ஒரே சமயத்தில் போதித்து சங்கத்தில் சேர்த்துக் கொண்டார் என்பது பௌத்த மரபு.

life-of-buddha-44

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s