அனிச்சம்

anicca

புத்தம் புது இயந்திரம் செவ்வனே இயங்குகிறது. சில காலம் கழிந்த பின் அது அடிக்கடி பழுதடைகிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து மெக்கானிக் சொல்கிறார் “இனிமே இது காயலாங்கடைக்கு போகத்தான் லாயக்கு ; இத தூக்கிப் போட்டுட்டு வேற புது மெஷின் வாங்கிக்கிடுங்க”. இயந்திரத்தின் உரிமையாளர் விரைவில் அந்த இயந்திரத்தை கழித்து விடுகிறார். பாவம்! அதன் ஆயுள் அவ்வளவுதான் என்று எண்ணி யாரேனும் கண்ணீர் வடிக்கிறார்களா? அப்படி வடிப்பார்களானால் அவர்களை நோக்கி எள்ளி நகையாட பெருங்கூட்டம் கூடி விடும் அல்லவா?

இயந்திரம் ஒரு பணியைச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. அது பணியைச் செய்யும் வரை அது பேணப்படுகிறது. அந்தப் பணி செய்ய முடியாது போன பின்னர் அதைப் பேணுவதால் ஒரு பயனும் ஏற்படுவதில்லை.

நமக்கு தெரிந்த வயதான ஒருவர் இறந்து விடும் போது அப்படி நம்மால் எண்ண முடிவதில்லை. அவர் இறந்ததன் துக்கம் நம்முள் பெருக்கெடுத்து வாட்டுகிறது. அவருக்கு வயதாகிவிட்டது ; இயற்கை நியதிப்படி இறந்து விட்டார் என்று நம் மூளை நமக்கு எடுத்துச் சொன்னாலும் மனம் சோகவுணர்விலிருந்து மீளாமல் இருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அச்சோகவுணர்வு நீங்கி விடும் என்று தெரியும் இருந்தாலும், மரணச்செய்தி நம்முள் ஏற்படுத்தும் தாக்கத்தை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. இயந்திரம் உயிரற்றது ; மனிதன் உயிருள்ளவன். இயந்திரத்தை மனிதனோடு ஒப்புநோக்குதல் ஒரு மிகையான உதாரணமாக இருக்கலாம். மனிதன் உயிருள்ளவன் எனவே இயந்திரத்தின் முடிவுக்கிணையாக அவன் முடிவை எண்ணி விட முடியாது என்ற வாதம் வரலாம். மனிதன் வேறு ஜடங்களிலிருந்து வேறு பட்டிருக்கிறான் என்பது பொது நம்பிக்கை. ஆதி பௌத்தம் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இயந்திரம் தனிமங்களாலும் சில மென்பொருள் திறன்களாலும் ஆனது போல தனிமங்களின் மென்பொருள் திறன்களின் மொத்தமே மனிதன் என்று பௌத்தம் சொல்கிறது. தனிமங்கள் எல்லாம் “நாம-ரூபம்” என்னும் கலைச்சொல்லால் குறிக்கப்பட்டு, மென்பொருள் திறன்கள் நான்கு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன – தமிழ்ப்பெருங்காப்பியங்களூள் ஒன்றான மணிமேகலையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள் இங்கு பயன்படுத்தப் படுகின்றன – வேதனை (Sensation), குறிப்பு (perception), பாவனை (mental formations), விஞ்ஞானம் (consciousness). இவ்வைந்தும் ஐவகைக் கந்தங்கள் (Five Aggregates) என்று குறிப்பிடப்படுகின்றன. ( காண்க : மிலிந்தனின் கேள்விகள் ) இவ்வைந்தும் சேர்ந்ததே மனிதன் என்பவன்.

ஓடும் நதியில் முதலில் தொட்ட நீரை மறுபடி தொட இயலாது. நதியில் புது வெள்ளம் வந்த வண்ணம் இருக்கிறது. நதி மட்டுமல்ல மாறிக் கொண்டிருப்பது. அதைத் தொடும் மனிதனும் தான். எனவே ஒரே மனிதன் நதியை இரண்டாம் முறை தொட இயலாது. ஏனெனில் மாறும் நதியைப் போல மனிதனின் உருவம் மற்றும் நான்கு பிற கந்தங்களும் மாறும் தன்மையன. நம் தசைகள், செல்கள், திசுக்கள் எல்லாம் மாறிக் கொண்டிருப்பன என்று நவீன அறிவியல் சொல்வதற்கு பல காலம் முன்னரே பௌத்தம் இதை வலியுறுத்தியது. உடலே மாறும் எனும் போது நம் மனதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. உடலும் மனமும் மாறும் போது மனிதன் ஒரே மனிதன் தான் என்று அறுதியிட்டு கூறி விட முடியுமா? மாறும் பொருள் நிலையற்றது. நிலையற்றிருப்பதாலேயே அது மாறுகிறது. அது மாறாத்தன்மை கொண்டிருந்தால் அவை நிலையுற்றிருக்கும். நிலையுற்றிருக்கும் பொருளில் அழியாத் தன்மை கொண்ட சுயம் இருந்தாக வேண்டும். வாழும் உயிர்கள், அணுக்கள் எதுவும் நிலையாக இருப்பனவல்ல எனும் போது அவற்றுக்குள் நிலையான சுயம் இருத்தல் சாத்தியமேயில்லை. நிலை மாறும் தன்மையை பாலி ஆகமங்கள் “அனிச்சா” என்றும் சமஸ்கிருதத்தில் “அநித்யா” என்றும் குறிக்கின்றனர். (“மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் வரும் அனிச்ச மலரின் பெயர் பாலி மொழியிலிருந்து பெறப்பட்டிருக்கலாமோ?) நிலையான சுயம் இல்லாத்தன்மையை “அனத்தா” என்று பாலியிலும் “அனாத்மன் (ஆன்மாயிலாத்தன்மை) என்று சமஸ்கிருதத்திலும் வழங்கப்படுகின்றது.

பொருட்களின் அநித்யத்தன்மையே மனிதருள் துக்கம் தோன்ற காரணம். அந்த துக்கம் விலக பொருட்களின் சுயமிலாத்தன்மையைப் பற்றிய புரிதல் அவசியம். அனிச்சா – அனத்தா – துக்கா – இம்மூன்றும் பௌத்த சிந்தனையின் மூன்று தூண்கள். பிற்காலத்தில் வளர்ந்த யோகாசார, மத்யமிக, மகாயான பௌத்த சிந்தனைகள் அனைத்துக்கும் அடிப்படை ஆதிபௌத்தத்தின் இம்மூன்றுமேயாகும். சாக்கியமுனி புத்தரின் நால் வகை வாய்மைகளின் புரிதலுக்கும் இம்மூன்றின் புரிதல் மிக அவசியம்.

நிலையற்று, திருப்திக்குட்படாது, சுயமில்லாமல் இருப்பவை ஐவகை கந்தங்கள் மட்டுமல்ல ; அவற்றை தோற்றுவிக்கும் காரணங்களும் சூழலும் கூட. காரணங்களும் சூழலும் கூட நிலையற்றவை, சுயத்தன்மையில்லாமல் இருப்பவை. காரணங்களின் விளைவாக எழுந்து, மேலும் பல விளைவுகளைத் தோற்றுவிக்கும் அனைத்தையும் ”அனிச்சை” என்னும் ஒற்றைச் சொல்லில் அடக்கலாம். எல்லா சத்தங்களுமே அனிச்சா-துக்க-அனத்தா என்னும் மூன்றினாலும் செய்யப்பட்ட கம்பியின் உராய்வுகளே.

உயர்ந்த அறிவொளி பெற்ற ஒருவர் தோன்றி உண்மை இயல்பை (true nature) விளக்கும் வரை இம்மூவியல்புகளும் உரு மறைந்து உலகின் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும். இம்மூவியல்புகளை அடையாளப்படுத்தி அவற்றின் இயல்புகளை விளக்கவும், இம்மூன்றின் முழுமையான புரிதல் வாயிலாக மனதிலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தை விவரிப்பதற்காகவுமே புத்தர் தோன்றினார். புத்தருடைய போதனையின் முழு சாரம் இதுவே.

”அனிச்சா” இயந்திரங்களையும் பீடித்தாலும் உயிர்களை பீடிக்கும் “அனிச்சா” பற்றியே புத்தர் பேசினார். ”அனிச்சா” உயிருள்ளவைகளைத் தான் பாதிக்கிறது. கண்ணீர் விட்டு அழும் இயந்திரத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை!

தசைகளை திசுக்களாகவும், திசுக்களை செல்களாகவும் பிரித்துப் பகுக்கும் ஓர் உடற்கூறு வல்லுனரைப் போன்று புத்தர் ‘சுயத்தை அல்லது ஆத்மாவை’ மனநிலைகளின் அல்லது செயல்முறைகளின் குவியல் என்று (”Sankhaara punja”) பார்த்தறிந்து, மாறும் தன்மையதான ஐந்து கந்தங்கள் என்று பகுத்துச் சொன்னார். மனநிலைகளின் செயல்பாட்டை அல்லது செயலாக்கங்களை அறியாமையே தீர்மானிக்கிறது. நிலையான வாழ்வு பற்றிய நம்பிக்கைகளைக் கைக்கொள்வதா அல்லது மனித ஆளுமையின் இருப்பை முழுக்கவும் மறுப்பதா என்ற கேள்விக்கான விடையும் அதைப் பொறுத்தே அமைகிறது.

நிலைத்திருப்பதான ஒன்றென்று எதுவும் கந்தங்களின் சங்கமத்தில் இல்லையென்று புத்தர் தெளிவுற விளக்கினார்.

ஐந்து கந்தங்களின் நிரந்தரமில்லாத் தன்மையை மிக அழகான ஐந்து உவமைகளாக புத்தர் வர்ணிக்கிறார்,

நாம-ரூபம்  நுரையின் குவியல்
வேதனை  நீர்க்குமிழி
குறிப்பு  கானல்
பாவனை  (உள்ளீடான மரப்பொருளற்ற) வாழை மட்டை
விஞ்ஞானம்  மாயை

“சாதுக்களே, நுரையின் குவியலில், நீர்க்குமிழியில், கானலில், ஒரு வாழை மட்டையில், ஒரு பிரமையில் என்ன சாரம் இருக்க முடியும்?” என்று கேட்கிறார். (சம்யுத்த நிகாயம்)

புத்தர் மேலும் சொல்கிறார் :

”சாதுக்களே, ஐந்து கந்தங்களும் நிலையானவையல்ல ; எதுவெல்லாம் நிரந்தரமற்றவையோ அவையெல்லாம் துக்கம் தருபவை ; எதுவெல்லாம் துக்கம் தருமோ அவையெல்லாம் “அத்தா” (ஆத்மா) இல்லாதவை. எதுவெல்லாம் ஆத்மா இல்லாததோ அதுவெல்லாம் என்னுடையதில்லை ; அது நானல்ல. பூரண ஞானம் பெற்றோர் இவ்வாறே புரிந்து கொள்கின்றனர். பூரண ஞானத்தால் உள்ளதை உள்ளவாறே காண்பவன் பற்றைத் தவிர்த்து களங்கள் அற்றுப் போகிறான். அவனே நிர்வாணம் எய்துகிறான்” (சம்யுத்த நிகாயம் 22.45)

”ஆத்மன் என்னும் கருத்து அழியும் போது, ”எனது” என்னும் கருத்தும் அழிந்து, ஒருவர் “நான்” மற்றும் “எனது” என்னும் எண்ணங்களில் இருந்து விடுதலை பெற முடியும்” என்று நாகார்ஜுனர் சொல்லும் போது புத்தரின் வார்த்தைகளையே எதிரொலிக்கிறார். (மத்யமிக காரிகா xvii.2)

+++++

சில மாதங்கள் முன்னர் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா நகர சிதிலங்களைக் காணச் சென்றிருந்தேன். சுற்றுலாப் பேரூந்தில் தாய்லாந்து நாட்டுப் பெரியவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். சாவொ ஃப்ராயா நதியின் மேற்குக் கரையில் அயுத்தயா வரலாற்றுப் பூங்காவில் அமைந்துள்ள வாட் சைவத்தனாரம் என்ற புத்த கோயிலுக்கு சென்றோம். அங்கிருந்த ஒரு புத்தர் சிலையின் முன்னர் மலர்களை வைத்து. பயபக்தியுடன் மெழுகுவர்த்தியேற்றினார் பெரியவர். கையில் ஊதுபத்தியொன்றை ஏந்தி கண்ணை மூடி சிலையின் முன்னர் நின்று கொண்டிருந்தார். புத்தரை வணங்குவது பிற சமய தெய்வங்களைத் தொழுவது போலவா? படைப்புக் கடவுளோ, காக்கும் கடவுளர்களோ இல்லாத பௌத்தத்தில் புத்தர் சிலை முன்னர் மலர்கள் இடப்படுவதும், தீபங்கள் ஏற்றபடுவதும் எதற்கு? சீக்கிரமே வாடி விடப்போகிற மலர்களையும், எரிய எரிய உயரம் குறைந்து, விரைவில் அணைந்து விடப்போகிற மெழுகுவர்த்திச் சுடரையும் பார்த்தவாறு அந்தப் பெரியவர் தன் தியானத்தில் இருந்து மீள்வதற்காக காத்துக் கொண்டிருந்தேன்.

அயுத்தயா, தாய்லாந்து

அயுத்தயா, தாய்லாந்து

Advertisements

2 thoughts on “அனிச்சம்

  1. Pingback: பவத்திறமறுத்தல் 2 | இலைகள், மலர்கள், மரங்கள்

  2. Pingback: தம்மம் என்பது என்ன? | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s