பௌத்தத்தின் சீன நிறம்

Longmen Grottoes in Luoyang, Henan province, China

Longmen Grottoes in Luoyang, Henan province, China

சீன பௌத்தத்தின் வரலாறு பௌத்த ஆகமங்களின் சீன வரவில் இருந்து தொடங்குகிறது. ஆகப் பழைய சீன பௌத்த நூலாக “ஸூ-ஷிஹ்-எர்-சேங்-சிங்” (நாற்பத்திரெண்டு பிரிவுகளாக புத்தரால் பேசப்பட்ட சூத்ரா) கருதப்பட்டது, இது காஸ்யபமாதங்கர் என்பவரால் பிற்கால கீழை ஹான் வம்சத்தினரின் காலத்தில் (கி.பி 58-76) சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் நவீன வரலாற்றாய்வுகளின் வெளிச்சத்தில் இது வெறும் தொன்மத்தகவலாகிவிட்டது. உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தரவுகளின் படி சீனத்தின் ஆகப் பழைய பௌத்த நூல்களின் மொழிபெயர்ப்பாளர் லோ-யாங் நகரில் கி பி 148-171 காலகட்டத்தில் தங்கியிருந்த அன்–ஷிஹ்-காவொ. இவரின் காலத்திலிருந்து வடக்கு சுங் வம்சத்தினரின் காலம் (960-1129 கி.பி) வரை ஆயிரம் வருடங்களுக்கு பௌத்த நூல்களை சீனத்தில் மொழிபெயர்க்கும் பணி தொடர்ந்தது.

ஆரம்ப காலத்தில், ஆகமங்களின் அறிமுகத்திற்கும் மொழிபெயர்ப்புக்கும் முக்கியப் பங்காற்றியவர்கள் பெரும்பாலும் மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்கு வந்த பௌத்த ஆசாரியர்கள். உதாரணமாக மேலே கூறப்பட்ட அன்–ஷிஹ்-காவொ பார்த்தியா (வடகிழக்கு இரான்) விலிருந்து வந்தவர். “சுகாவதிவ்யூஹ” சூத்ராவை (காண்க : சுகாவதி ) மூன்றாம் நூற்றாண்டில் மொழிபெயர்த்த காங்-செங்-காய் சமர்கண்ட் பிராந்தியத்திலிருந்து (இன்றைய உஸ்பெகிஸ்தான்) லோ-யாங்-கிற்கு வந்தவர். “சத்தர்மபுண்டரீக சூத்ரத்தின்” மொழிபெயர்ப்பாளராக அறியப்படும் சு-ஃபா-ஹு அல்லது தர்மரக்‌ஷர் துகாரா (இன்றைய கிழக்கு ஆப்கானிஸ்தான்) பிராந்தியத்தில் இருந்து வந்தவர். மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் இவர் லோ-யாங்கில் தங்கியிருந்தார். ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் குசாவிலிருந்து (இன்றைய மேற்கு சீனாவில் இருக்கும் க்ஸிஞ்ஜியாங்) லோ-யாங்கிற்கு குமாரஜீவர் வந்த போது சீனாவில் பௌத்த நூல்களின் மொழிபெயர்ப்புப் பணி உச்ச கட்டத்தை எய்தியிருந்தது.

கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் சீனாவிலிருந்து யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்யத் தொடங்கியிருந்தனர். அத்தகைய யாத்திரிகர்களின் முன்னோடி ஃபாஹியான் (339-420 கி.பி). அவர் ச்ஹாங்-அன் நகரிலிருந்து 399 இல் இந்தியாவுக்கு கிளம்பினார். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார். மிகவும் சிறப்புப் பெற்ற மற்றொரு யாத்திரிகர் யுவான்-சுவாங் ; 627 இலிருந்து 645 வரை அவர் இந்தியாவெங்கும் பயணம் செய்தார். மேலும், இ-சிங் என்பவர் (இ-சிங் நூலுக்கும் இவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை) கடல் வழியாக 671இல் இந்தியாவுக்கு சென்றார். இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் மீண்டார்.

அந்த ஆசாரியர்கள் இந்தியா சென்று சமஸ்கிருதம் பயின்று, திரும்பி வரும் போது தேர்ந்தெடுத்த பௌத்தாகமங்களை எடுத்து வந்தனர். யுவான் – சுவாங் காட்டிய மொழியியல் வல்லமை வியப்புக்குரியது. அவரின் கடும் உழைப்பால், மொழி பெயர்ப்புப் பணி சிகரங்களை எட்டியது. குமாரஜீவர் போன்றோரால் செய்யப்பட்ட துவக்ககாலத்திய மொழிபெயர்ப்புகள் “பழைய மொழிபெயர்ப்புகள்” என்றும், யுவான்-சுவாங் போன்றோரின் பிற்காலத்திய மொழிபெயர்ப்புகள் “புது மொழிபெயர்ப்புகள்” என்றும் பௌத்த ஆய்வாளர்களால் குறிக்கப்படுகின்றன.

பெரும் எண்ணிக்கையிலான சமஸ்கிருத மூலபௌத்த நூற்தொகுதிகளின் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்ட கற்றறிந்த சான்றோரின் சிந்தனைப் போக்கிலும் சமய நடவடிக்கைகளிலும் மெதுவாக சீனத்துவம் (Sinicism) கலக்கத் தொடங்கிற்று. இனம் சார் இயல்பு, தேவை மற்றும் நம்பிக்கைகள் உட்புகுந்து பௌத்தம் சீன நிறத்தை அடைந்தது. துவக்க கால சீன பௌத்தம் பிரஜ்னபாரமித சூத்திர வகைமைகளில் விளக்கப்பட்ட “வஸ்துவிலாத்தன்மை” (non-substantiality) குறித்தான சிந்தனைகளில் ஆழ்வதை அதிகம் வலியுறுத்தியது. காலப்போக்கில் “ஹீனயானம்” என்றழைக்கப்பட்ட கொள்கைத் தொகுதிகள் தவிர்க்கப்பட்டு முழுக்க முழுக்க “மகாயான”க் கொள்கைகள் பிரசித்தமாயின. இப்போக்கு டெண்டாய் பௌத்த உட்பிரிவில் படிநிலை மாறுதல்களாய் சிறிது சிறிதாகத் தொடங்கி, ஜென் பௌத்தம் தோன்றிய போது உச்ச நிலையை அடைந்தது எனலாம்.

மூன்றாவது குரு – சிஹ்-இ (Chih-i) யின் பரிபூரணப்படுத்தலுக்குப் பிறகு டெண்டாய் பிரிவு சீனாவில் நிறைவான வடிவத்தைப் பெற்றது. மிக உயர்ந்த பௌத்த சிந்தனையாளர்களுள் ஒருவர் சிஹ்-இ (538-597 கி.பி). புத்தரின் போதனைகளை ஐந்து காலங்கள் மற்றும் எட்டு கொள்கைகள் (Five Periods and Eight Doctrines) என்று வகைப்படுத்திய சிஹ்-இ சீன பௌத்தத்திலும் ஜப்பானிய பௌத்தத்திலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியவர். லோட்டஸ் சூத்ராவுக்கு உரை எழுதினார். (காண்க : லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம் ) “மொஹெ ஜிகுவான்” அவரின் தலை சிறந்த நூலாக போற்றப்படுகிறது. அவரின் தியான அனுபவங்களின், சொந்த புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் பெரும் தொகுப்பாக இந்நூல் கொண்டாடப் படுகிறது.

தோற்ற, கால வரிசைகளைக் கருதாமல் பல்வேறு பௌத்த சூத்திரங்கள் சீனாவுக்குள் கொண்டு வரப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு உள்வாங்கப்பட்டன. பிரமிப்பூட்டும் எண்ணிக்கையிலான சூத்திரங்களின் தோற்றம் பற்றிய புரிதலும் மதிப்பிடுதலும் சிக்கலானதாக இருந்தது. எனவே, பௌத்தத்தின் முழுமையான போற்றுதலும் சுய புரிதல்களுக்கேற்ற படி சமயத்தை ஒழுகுதலும் அவசியமானதாயிற்று. சூத்திரங்களின் மதிப்பீடுகள் அவ்வப்போது நிலவிய சீனாவின் பொது சிந்தனையை அடியொற்றியதாகவே இருந்தன. என்றாலும் சிஹ்-இ-யினுடைய பௌத்த தத்துவ நிலைப்பாடுகள் விமர்சன அணுகுமுறையையும் திட்டவட்டமான ஒழுங்கையும் வசப்படுத்தும் சொல்வன்மையையும் கொண்டிருந்தன. இந்திய மரபிலிருந்து விலகி சுதேச சீன பௌத்த தத்துவ அமைப்பை உருவாக்கிய பெருமை சிஹ்-இயையே சாரும்.

சீன பௌத்த வரலாற்றில் ’கடைசியாக’ நிகழ்ந்தது ஜென் பௌத்தத்தின் உதயம். (காண்க : ஒரு நிலவைப் பார்த்து… ) இதன் நிறுவனர் போதிதர்மர் ; சிஹ்-இயும் போதி தர்மரும் சம காலத்தில் இயங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போதி தர்மர் நட்ட விதை ஒளி மயமான பூவாக மலர்ந்தது ஜென் பௌத்தத்தின் ஆறாவது மூத்த குரு ஹூய்-நெங்-கின் காலத்தில் தான் (638-713 கி.பி). எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக திறம் மிக்க ஜென் குருக்கள் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு ஜென் பௌத்த சிந்தனையின் வளம் கூட்டினர்,

இவ்வாறே சீன சிந்தனையின் நிறம் பூசப்பட்டு பௌத்தம் தழைத்தது. சீன மக்களின் இயல்பையொத்த புது சிந்தனைகளால் சீன பௌத்தம் வளம் பெற்று மாற்றமடைந்திருக்கிறது. கௌதம புத்தரின் கொள்கைப் பெருக்குடன் சேர்ந்திணைந்த புது வெள்ளம் பெரும் நதியாகி கிழக்கு நாடுகளை பல நூற்றாண்டுகளுக்கு சிந்தனைச் செழிப்புள்ளதாக்கியது.

Shaolin Temple, Dengfeng county, Zhengzhou, Henan province, China

Shaolin Temple, Dengfeng county, Zhengzhou, Henan province, China

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s