மழையிடம் தோற்காதிரு

கென்ஜி மியாசவா நூற்றாண்டு ஞாபகார்த்த அஞ்சல் தலை

கென்ஜி மியாசவா நூற்றாண்டு ஞாபகார்த்த அஞ்சல் தலை

வேளாண் பொருளியலாளர், மண்ணியல் நிபுணர், பௌத்த சிந்தனையாளர், குழந்தைகள் இலக்கியவாதி, கவிஞர் – இவையனைத்துமாய் இருந்தார் மியாசாவா கென்ஜி. (1896-1933) அடகுத் தொழில் செய்து வசதியாக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர், எனினும் விவசாயிகளைச் சுரண்டும் தொழில் என்னும் வெறுப்பு அவருக்கு இருந்தது. இவ்வெறுப்பு அவருக்கு கடைசி வரை இருந்தது. பாரம்பரிய Pure Land பௌத்த குடும்பத்தில் பிறந்த மியாசாவா லோட்டஸ் சூத்ராவால் கவரப்பட்டு நிசிரேன் பௌத்தத்தை தழுவிய போது அவருக்கும் அவர் தந்தைக்கும் இருந்த கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியது. ”தனக்கு குடும்பச் சொத்து வேண்டாம்” என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறந்த ஊரை விட்டு டோக்கியோவுக்கு சென்றடைந்தார். அங்கு நிசிரேன் பௌத்தத்துக்கு மக்களை கொள்கை மாற்றம் (“ஷாகுபுகு”) செய்வதில் ஈடுபட்டார். அவர் சார்ந்திருந்த நிசிரேன் பௌத்த இயக்கம் தேசிய வாத இயக்கமாக மாறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் “தேசிய வாத எண்ணங்களுக்கு நான் ஆதரவாளன் இல்லை” என்று அறிவித்தார். கடும் நிமோனியா நோய் வந்து அவதிப்பட்ட போது தன் சொந்த ஊருக்கு திரும்பினார். அவர் இறந்து விடுவார் என்று எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் உயிர் பிழைத்தார். பிறகு சொந்த ஊரில் இருந்த வேளாண் கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்தார். அந்த கால கட்டத்தில் விவசாயிகள் சங்கம் ஒன்று துவக்கினார். இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி மகசூலைப் பெருக்கும் வழிமுறைகளைப் பரிந்துரைத்தார். ஏழை, எளிய விவசாயிகளுக்கு மேற்கத்திய இசை, இலக்கியம் – ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். ஜப்பானில் ராணுவ ஆட்சி அமைந்த போது மியாசாவாவின் விவசாயிகள் சங்கம் கலைக்கப்பட்டது. மியாசாவாவை நிமோனியா மீண்டும் தாக்கியது. உடல் மெலிந்த நாட்களிலும் வாழ்நாள் முழுதும் சைவ உணவு உட்கொள்ளும் விரதத்தை கைவிடவில்லை. ஒருமுறை அவருக்கு தெரியாமல் அவரை யாரோ மீன் குடலை சாப்பிட வைத்ததை அறிந்த போது உரத்த குரலில் அவர் ஓலமிட்டு அழுதிருக்கிறார். அதிசயமாக ஒரு நாள் அவர் புத்துணர்ச்சி பெற்று நோயிலிருந்து மீண்டதான உணர்வு வந்த போது தன் வீட்டு பால்கனியிலிருந்து வீதியில் சென்ற ஷிண்டோ ஊர்வலமொன்றைக் கண்டு களித்தார் ; பின்னர் ஒரு விவசாயிகள் குழுவொன்று அவரை வந்து சந்திக்க வந்தது. விவசாயிகளுடன்  நெடுநேரம் உரையாடினார். அடுத்த நாள் காலை மியாசாவா உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவேயில்லை.

மியாசாவாவின் இலக்கியப் படைப்புகள் அவரின் இறப்புக்குப் பிறகு மிகவும் பிரசித்தமாயின. குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதியிருக்கிறார். அவரின் மறைவுக்குப் பிறகு அவர் எழுதிய ஒரு டயரி கிடைத்தது. அதன் எல்லா பக்கங்களையும் நிசிரேன் பௌத்தத்தின் மூல மந்திரத்தால் (”நமு ம்யோஹோ ரெங்கே க்யோ” – காண்க : லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம்  ) நிரப்பியிருந்தார். டயரியின் நடுப் பக்கங்களில் அழகான, தெளிவான, தடித்த எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த “Ame ni mo Makezu” என்ற கவிதை காணப்பட்டது. மியாசாவாவின் வியாதிக்காலங்களில் அது எழுதப்பட்டிருக்கலாம். ஒரு வியாதிக்காரனின் சோகமோ துக்கமோ கவிதையில் இல்லை. தனிப்பட்ட இலட்சியத்தின் வரிசை அந்த கவிதை. “நின்னைச் சில வரங்கள் கேட்பேன்” போன்ற வரிகள் வரும் பாரதியின் கவிதைகளை நமக்கு ஞாபகப்படுத்தும் இக்கவிதையின் பௌத்த தரிசனம் மிக அழகானது. நவீன காலத்தில் பௌத்த அடிப்படைகளை கடைப்பிடிக்கும் வழிமுறையை தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது இக்கவிதை. அவரின் மிகப்பிரபலமான இக்கவிதை ஜப்பானில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

+++++

மழையிடம் தோற்காதிரு
========================

மழையிடம் தோற்காமல்
சுழற்காற்றிடம் தோற்காமல்
பனியிடமும் கோடையின் உஷ்ணத்திடமும் தோற்காமல்
வலுவான உடலுடன்
விருப்பங்களின் பிணைப்புக்காளாகாமல்
யாரையும் பாதிப்புக்குள்ளாக்காமல்
எப்போதும் புன்னகைத்தவாறு
தினம் நான்கு சிறு கிண்ணம் நிறைய சோறும்
மிசோவும் சிறிது காய்கறிகளும் என உண்ணல்
அனைத்திலும்
உன்னை இறுதியாகவும் மற்றோரை முதலிலும் வைத்தெண்ணுதல்
பார்த்தல் கவனித்தல் புரிந்து கொள்தல்
மறக்காதிருத்தல்
மூங்கிற்வயற் காட்டின் நிழலில்
ஒரு சிறு ஓலைக் குடிசையில் வசித்தல்
கிழக்கில் ஒரு நோய்ப்பட்ட குழந்தை இருந்தால்
சென்று சிகிச்சை புரிதல்
மேற்கில் களைப்படைந்ததொரு தாயார் இருந்தால்
சென்று அவளின் நெற்கதிர்க்கட்டைக்கு தோள் கொடுத்தல்
தெற்கில் மரணத்திற்கு மிக அண்மையில் யாரேனும் இருந்தால்
சென்று பயப்படாதிருக்குமாறு அறிவுறுத்தல்
வடக்கில் சண்டையோ வழக்காடோ நிகழ்ந்தால்
சென்று வீணடிக்கும் அம்சங்களை விட்டுத்தள்ளுமாறு இறைஞ்சுதல்
வறட்சியின் போது கருணைக் கண்ணீர் வார்த்தல்
கோடை குளிராயிருக்கும் போது வருத்தத்தில் அலைந்து திரிதல்
ஒன்றுமில்லாதவன் என்று எல்லோராலும் அழைக்கப்படுதல்
புகழப்படாமல்
இகழப்படாமல்
இவ்வாறிருத்தலே
நானிருக்க விழைவது

+++++

பௌத்த குட்டிக் கதை வடிவம். பௌத்த தொன்மங்களில் வரும் டிராகன் பாத்திரம். படிமங்கள் கலந்து கவித்துவத்துடன் சொல்லப்பட்ட கதை – “ட்ராகனும் கவிஞனும்”. கவிதைக்கும் பிரபஞ்ச விழிப்புணர்வுக்குமான (Cosmic Awareness) தொடர்பை விளக்கும் கதை இது. கவிதை வெளிப்படுத்தும் உத்வேகம் பிரபஞ்சத்தின் நீட்சியாக கவிஞனின் உள்ளுணர்விலிருந்து எழுகிறது என்ற கருத்தை இக்கதையில் முன் வைக்கிறார் மியாசாவா. இவ்வுலகமும் உலகில் இருப்பவைகளும் காலங்களினூடே மாறிய வண்ணம் இருக்கின்றன.  மாறிக்கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம், கென்ஜியின் பார்வையில், திசையும் நோக்கும் கொண்டதாய் இருக்கிறது ; மாற்றம் நன்மையை நோக்கியதாய் அமைகிறது. பிரபஞ்ச மனதின் எண்ணங்களைப் பாடும் கவிஞன் முன்னேற்றத்திற்கான குறியீடுகளையே பதிவு செய்கிறான்.

+++++

ட்ராகனும் கவிஞனும்

அலை உயர்வின் காரணமாக குகைக்குள் எழுந்த நீர் மட்டத்துக்கு மேல் தன்னை உயர்த்திக் கொண்டது சனாடா என்ற பெயர் கொண்ட அந்த ட்ராகன். குகையின் சிறு துளைவாயில் வழியாக உள் நுழைந்து ஒளிர்ந்த காலைச் சூரியன், அடிக்கடலின் மேல் இருந்த பாறைகளின் கரடுமுரடான பரப்பை பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது. சிவப்பும் வெளுப்புமாய் பாறைகளில் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருந்த பிராணிகள் காணக் கூடியதாய் இருந்தன.

நீல நிற, குழம்பிய நீரை சோம்பற் பார்வை பார்த்தது ட்ராகன். குகை வாயிலின் வழியே மினுமினுக்கும் கடலையும் கடல் விளிம்பில் சூரியக்கடவுளின் இருக்கையான தகதகக்கும் மஞ்சள் ஒளிப்பந்தையும் பார்த்தது.

“நான் கட்டற்று இருந்திருந்தால், கடலுக்கப்பால் நீந்திச் சென்றிருப்பேன். நீல வானத்தின் மேல் பறந்திருப்பேன். என் தீப்பந்த சுவாசத்தினால் கரு மேகங்களை இயக்கத்திற்குள்ளாக்கியிருப்பேன்.

ஆனால் நான் இங்கு சிக்கிக் கொண்டிருக்கிறேன். குகையிலிருந்து கடலுக்கு இட்டுச் செல்லும் சிறு கீரலான துளை வாயில் குகைக்கு அப்பாலிருப்பவற்றின் சிறு துணுக்கை மட்டும் என் பார்வைக்களிக்கிறது. புனிதமான ட்ராகன் ராஜாவே! நான் செய்த குற்றங்களுக்காக என்னை மன்னித்தருள வேண்டும். இந்த சாபத்திலிருந்து என்னை விடுவியுங்கள்”

துயரம் தோய்ந்த முகத்துடன் சனாடா தன் பார்வையை குகையின் உட்புறத்துக்கு திருப்பிக் கொண்டது. நீரில் மூழ்கியிருந்த வாலில் படிந்த சூரிய ஒளியை பிரதிபலித்த அதன் கண்களில் நீலமும் வெண்மையும் மின்னின. திடீரென ஒர் இளைஞனின் குரல் குகைக்கு வெளியிருந்து கேட்டது. அது யாருடைய குரல்?.

“மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சனாடா, காலைச் சூரியனின் கட்டளைப்படி உன்னுடைய மன்னிப்பை கோரி நான் இங்கு வந்துள்ளேன்”

நன்கு உடையணிந்த ஓர் இளைஞன், கழுத்தில் நகை அணிந்து, கரத்தில் வாளேயேந்தி குகைக்கு வெளியே இருந்த பாசியால் மூடிய பாறை மேல் அமர்ந்திருந்தான்.

“என்னுடைய மன்னிப்பை ஏன் வேண்டுகிறாய்?”

”அன்புள்ள ட்ராகனே, நேற்று நான் ஒரு கவிதைப் போட்டியில் பங்கு கொண்டேன். எல்லோரும் என்னைப் புகழ்ந்து தள்ளினர். எல்லா கவிஞர்களையும் விட அதிக கீர்த்தி பெற்றவரான அல்டா தன் இருக்கையிலிருந்து இறங்கி, தலை தாழ்த்தி என்னை வணங்கி தன் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். விருதுகளை வழங்கி என்னை பெருமைப் படுத்தினார். என்னைப் புகழ்ந்து நான்கடி கவிதை படித்து விட்டு கிழக்கில் இருக்கும் ஒரு பனிமலையின் அடிவாரத்திற்குச் சென்று ஓய்வு பெற்றார். நான் இயற்றிய கவிதையின் அழகை நினைத்து நான் மதுவருந்தியவன் போல் போதை வயப்பட்டு நின்றேன். எல்லா திசைகளிலிருந்தும் என் மேல் விழுந்த புகழுரைகளின், மலர்கொத்துகளின் மழையில் நனையும் உணர்வில்லாமல் இருந்தேன்.

ஆனால் இரவு நேரம், எனக்கு விருந்தளித்தவரின் வீட்டிலிருந்து நீங்கி ஜொலிக்கும் பனி படிந்த புற்களின் மேல் நடந்து என் ஏழை அன்னையின் வீட்டை நோக்கி நான் சென்று கொண்டிருந்த போது நிலா தெய்வத்தின் இருக்கை மேகங்களால் சூழப்பட்டு அந்தகாரம் கவிந்தது. நான் கண்ணைக் கசக்கிக் கொண்ட போது மிருடா காட்டில் இருந்து கனிவான ஒரு குரல் கேட்டது.

“இளம் சுரதத்தன் குகையில் சிறைப்பட்டிருக்கும் பழைய ட்ராகன் சனாடாவிடமிருந்து ஒரு பாடலைக் கவர்ந்து கொண்டான். இன்று கவிதைப் போட்டியில் அந்த கவிதையைப் பயன் படுத்தி போட்டியில் வென்று, முதிய கவி அல்டாவை கிழக்கிலிருக்கும் பனிமலை அடிவாரத்துக்கு துரத்தியடித்தான்”

திடீரென என் கால்கள் நடுங்கின. என்னால் நடக்க முடியவில்லை. இரவு முழுதும் புற்களின் மேல் உட்கார்ந்திருந்தேன். குழப்பத்தில் என் தலை சுற்றியது. அங்கே உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்த குகைக்கு மேலிருக்கும் குன்றின் உச்சிக்கு நான் அடிக்கடி வந்தது என் நினைவுக்கு வந்தது. அப்போது குன்றின் குகைக்குள் நீ இருக்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. களைப்பை போக்கிக் கொள்ள நான் அங்கு வந்து பலமுறை உறங்கியிருக்கிறேன். அப்படி தூங்கிக் கொண்டிருந்த, மப்பும் மந்தாரமுமான  ஓர் மதியத்தில் அக்கவிதையை நான் கேட்டிருக்கக் கூடும். பெருமதிப்பு மிக்க சனாடா! என் தலை மேல் சாம்பலை தூவிக் கொண்டு, நகர சதுக்கத்தில் நான் உன்னிடமும் அனைத்து மக்களிடமும் பொது மன்னிப்பு கேட்டுக் கொள்வேன்

என் குருவே, அற்புதமான பாடலைப் புனைந்த நீவிர் என்னை மன்னித்தருள்வீரா?”

“தனிமையை நோக்கி செல்லுமுன் உன்னைப் புகழ்ந்து அல்டா பாடிய செய்யுளின் வரிகளை எனக்குச் சொல்வாயா?”

”நேற்று எனக்கு நிகழ்ந்தவற்றை எண்ணி நான் மிகவும் குழம்பியிருக்கிறேன். அல்டா சொன்ன செய்யுள் வரிக்கு வரி எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவர் சொன்னது இப்படி போகும் :

“காற்று பாடி முடித்தவுடன், மேகங்கள் எதிரொலித்தன ; அலைகள் ஆமோதித்தன. பிறகு நீ பாடினாய். சுரதத்தா, நாளைய உலகுக்கான உண்மையை, அழகியலை உன் மனக்கண்ணில் வடிக்கும் தூதுவன் நீ. உன் பாடலைக் கேட்ட பிறகே நட்சத்திரங்கள் விரும்பி, நிலம் தன்னைத்தானே வடிவமைத்துக் கொள்ளும். சுரதத்தா, நீ ஒரு சிற்பி”

“மதிப்பு வாய்ந்த கவி அல்டா எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். சுரதத்தா, அந்தப் பாட்டு எனக்கும் சொந்தம் ; உனக்கும் சொந்தம். என் குகைக்கு மேலிருக்கும் குன்றின் உச்சியில் இளைப்பாறும் போது தான் இப்பாடலை நீ கேட்டாயென நம்புகிறாயா, சுரதத்தா?

அந்த சமயம் நான் காற்றாகவும் மேகங்களாகவும் இருந்தேன். நீயும் அந்த சமயம் காற்றாகவும் மேகங்களாகவும் இருந்தாய். கவி அல்டாவும் அதே சமயத்தில் தியானித்திருந்தால், அதே கவிதையை புனைந்திருக்கக்கூடும் ஆனால், சுரதத்தா, அல்டாவின் மொழி உன்னுடைய மொழியிலிருந்து மாறுபட்டிருக்கும் ; வேறு மாதிரி இருந்திருக்கும். உன்னுடைய மொழி என்னுடையதிலிருந்து மாறுபட்டிருக்கும். ஆகையால், அந்த கவிதை உன்னுடையதே!”“ட்ராகனே, அப்படியென்றால் நீ என்னை மன்னித்து விட்டாயா?”

“யார் யாரை மன்னிப்பது? நாம் எல்லாரும், ஒவ்வொருவரும், காற்று, மேகங்கள், மற்றும் நீர். சுரதத்தா, நான் மட்டும் இப்போது இந்த குகையிலிருந்து வெளிவர முடியுமானால், நீ என் உருவத்தைக் கண்டு பயப்படாமல் இருப்பாயானால், உன் தோளைத் தட்டி ஆறுதலளிப்பேன். குறைந்த பட்சம் சிறு அன்பளிப்பையாவது கொடுக்கிறேன். உன் கையை என்னை நோக்கி நீட்டு”

ட்ராகன் ஒரு சின்ன செம்முத்தை நீட்டியது. மகத்தான சக்தி புதைந்த தீ போல முத்து மின்னியது.

“கடலுக்குள் மூழ்கிய புனித சூத்ரங்களைத் தேடி நீ போகும் போது இம்முத்தை உன்னோடு கொண்டு செல்”

சுரதத்தா மண்டியிட்டு முத்தைப் பெற்றுக்கொண்டான். “அன்புள்ள ட்ராகனே, வெகு காலமாக இம்முத்தை நான் வேண்டினேன். உனக்கு எவ்விதம் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. ஏன் ராட்சத ட்ராகனான நீயே இந்த பாறைக் குகையை விட்டுச் செல்ல முடியாது?”

”சுரதத்தா, ரொம்ப காலத்துக்கு முன்னால், பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால், காற்றையும் மேகங்களையும் ஆள்பவனாக நான் இருந்தேன். ஒரு முறை என் பலத்தை நான் சோதித்துப் பார்க்க நினைத்தேன். அப்படி செய்யப் போக, மனித இனத்தின் பேரிழப்புக்கு காரணமாக நான் இருந்து விட்டேன். ட்ராகன் ராஜா என்னை இந்த குகைக்குள் அடைத்து, நூறாயிரம் வருடங்களுக்கு இங்கேயே இருக்குமாறு விதித்து விட்டார். இந்த குகைக்குள்ளிருந்து கொண்டே நிலத்துக்கும் கடலுக்கும் இடையிலான எல்லையை நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் என் தவறுக்காக வருந்தி, ராஜாவின் மன்னிப்புக்காக காத்திருக்கிறேன்”

”ட்ராகனே, நான் கவனித்துக் கொள்ள என் அம்மா இன்னும் இருக்கிறாள். அவள் மறுபிறப்பெடுத்து சுவர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, நான் கடலுக்குள் சென்று சூத்ரங்களைத் தேடுவேன். அந்த நாள் வரும் வரை நீ இந்த குகைக்குள் காத்திருப்பாயா?”

”ஒரு ட்ராகனுக்கு ஆயிரம் மனித வருடங்கள் என்பது பத்து நாட்களை விட நீளமானதல்ல”

“அந்த நாள் வரும் வரை இம்முத்தை எனக்காக காப்பாற்றி வைத்திரு. நான் இங்கு தினம் வருவேன். வானத்தை உற்று நோக்குவேன். நீருக்குள் பார்வையிடுவேன். மேகங்களை கவனிப்பேன். அப்போது நீயும் நானும் புது உலகத்தின் சிருஷ்டி பற்றி பேசிக் கொண்டிருப்போம்”

“இதை நீ செய்தால், இந்த முதிய ட்ராகனை மகிழ்ச்சிக்குள்ளாக்குவாய்”

”சென்று வருகிறேன்”

“சென்று வா”

சந்தோஷமான இதயத்துடன் சுரதத்தன் பாறைகளின் மேல் தாவிச் சென்றான். சனாடா குகையின் மூலையில் நீருக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டு பிராயச்சித்தப் பிரார்த்தனையை ஜபிக்கத் தொடங்கிற்று.

spring&asura

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s