ஒரு நிலவைப் பார்த்து……

முதல் ஜென் போதனை : மலரை எடுத்தலும் பூடகப் புன்னகையும். புத்தர் எதுவும் பேசாமல் ஒரு தாமரை மலரை கையில் எடுத்து வைத்துக் கொண்டு புன்னகை புரிந்தார். அவர் சொல்ல வந்தது அங்கு குழுமியிருந்த ஒருவருக்கும் புரியவில்லை. மகாகஸ்ஸபர் மட்டும் புத்தரை நோக்கி மறு புன்னகை புரிந்தார். புத்தர் அன்று சொல்ல வந்ததை புரிந்து கொண்டவர் மகாகஸ்ஸபர் மட்டும் தான்.

முதல் ஜென் போதனை : மலரை எடுத்தலும் பூடகப் புன்னகையும்.
புத்தர் எதுவும் பேசாமல் ஒரு தாமரை மலரை கையில் எடுத்து வைத்துக் கொண்டு புன்னகை புரிந்தார். அவர் சொல்ல வந்தது அங்கு குழுமியிருந்த ஒருவருக்கும் புரியவில்லை. மகாகஸ்ஸபர் மட்டும் புத்தரை நோக்கி மறு புன்னகை புரிந்தார். புத்தர் அன்று சொல்ல வந்ததை புரிந்து கொண்டவர் மகாகஸ்ஸபர் மட்டும் தான்.

கோவன் (Koan) என்றால் ஒரு முரண்பாடான துணுக்குக் கதை அல்லது புதிர் அல்லது கூற்று. தர்க்கங்களின் போதாமையை செயல்விளக்கமளித்து அறிவொளியைத் தூண்டுவதற்கென ஜென் பௌத்தத்தில் கோவன்கள் பயன் படுத்தப்படுகின்றன. முரண்பாடு ஜென்னின் அங்கம். ஒரு முரண்பாடு வழக்கத்துக்கு மாறான திசையை நோக்கி  நம் மனதை செலுத்துகிறது. தர்க்க மனத்தின் பிடியிலிருந்து விடுபட உதவுகிறது. உள்ளுணர்வை விடுவிக்கிறது. தர்க்கஅறிவினால் பெறப்பட முடியாத வாய்மையைச் சுட்டுகிறது.

கோவன் பயிற்சிக்கு இலக்கியப் பயிற்சியே ஆதாரம். நேருக்கு நேர் நிகழும் உரையாடல்களை நன்கு திருத்தப்பட்ட வடிவில் சொற்சிக்கனத்தோடு சொல்லப்படும் இலக்கியக் கதை மரபில் இருந்து கோவன் வந்திருக்கலாம். பௌத்தத்துக்கு முன்னரான காலத்தில் சீனாவில் விளையாடப்பட்டு வந்த ஒரு வகை இலக்கிய விளையாட்டு வகையிலிருந்து சீன மொழியில் “gongan” எனப்படும் கோவன் வளர்ந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

++++++

ஜென் ஞானி ரியோகன் ஒரு மலையடிவாரத்தில் சிறு குடிசையொன்றில் எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் மாலை அவர் குடிசைக்குள் திருட வந்த ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு பொருளும் அங்கு இல்லாமல் இருப்பதைக் காண்கிறான். அதற்குள் ரியோகன் குடிசைக்கு திரும்பி விடுகிறார். “என்னைக் காண வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய் ; வெறுங்கையுடன் நீ திரும்பிச் செல்லக் கூடாது ; நான் அணிந்திருக்கும் உடைகளை என் பரிசாக எடுத்துச் செல்” என்று கூறித் தன் உடைகளைக் கழட்டி அத்திருடனிடம் கொடுக்கிறார். திருடன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான். எனினும், தனக்கு அளிக்கப்பட்ட துணிகளை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறான். ரியோகன் அம்மணமாக குடிசைக்குள் அமர்ந்து வானில் இருந்த நிலவைப் பார்க்கிறார். பின்னர் தனக்குத் தானே சத்தம் போட்டு சொல்லிக் கொள்கிறார். ”அவனுக்கு இந்த அழகான நிலவை என்னால் தர முடியாமல் போனது”

The thief left it behind— The moon At the window.

The thief left it behind—
The moon
At the window.

+++++

“ஜென்” என்பது “சான்” என்னும் சீன மொழிச் சொல்லின் ஜப்பானிய உச்சரிப்பு. “சான்” என்பது “தியானம்” என்னும் சமஸ்கிருதச் சொல்லின் சீன மொழிபெயர்ப்பு. தியானத்தையும் உள்ளுணர்வையும் வலியுறுத்தும் ஜென் பௌத்தம் சடங்குகளுக்கும் ஆகம வாசிப்புக்கும் அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

சோடோ ஜென் பௌத்தப் பிரிவின் நிறுவனர் பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த டோகென் (Dogen Zenji); கட்டுரையாளர் ; ஜென் கவிஞரும் கூட. அவரின் கோவன்கள் “ஷோபெகென்சோ” என்னும் நூலில் இருக்கின்றன. ரின்சாய் ஜென் பிரிவைப் போல் கோவன்களுக்கு அதிக முக்கியத்துவம் தராத சோடோ ஜென் பிரிவின் ஸ்தாபகராக இருந்தாலும் ஏறத்தாழ முன்னூறு ஜென் கோவன்களை டோகென் இயற்றியிருக்கிறார். அமர்ந்து கொண்டே புரியும் அமைதி தியானத்துக்கே (Zazen) அவர் நிறுவிய சோடோ ஜென் பிரிவு முக்கியத்துவம் கொடுக்கிறது.

 +++++

அமைதி தியானம்
மனதில் பிரதிபலிக்கும்
தெளிந்த  நிலவு
அசையா நீரைப் போல்.
நீரை உடைக்கும் அலைகளும்
ஒளியைப் பிரதிபலிக்கும்

துளிக்குள் நிலவு
நனையா நிலவு
அழியா நீர்
ஓரங்குல
நீர்க்குட்டையில்
அகன்ற, பெரிய நிலா பிம்பம்
புல்லில் படிந்த
பனித்துளிக்குள்
முழு நிலவும்
மொத்த வானமும்

நிலையாமை
எதைப் போன்றதிந்த உலகு?
கொக்கொன்று அலகை அசைக்கையில்
உதிரும் ஒவ்வொரு பனித்துளியிலும்
பிரதிபலிக்கும் நிலவு

1-Zen1

+++++

தியானத்தின் அடிப்படையிலான ஜென் பௌத்த மரபை சீனாவில் பரப்பியவர் போதி தர்மர். இவர் தென்னிந்திய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சில தொன்மங்களிலும், வேறு சிலவற்றில் பர்சிய மொழியொன்றைப் பேசும் மத்திய ஆசியாவிலிருந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. சீனர்கள் “தமோ” என்று போதி தர்மரை குறிப்பார்கள். “தமோ” “தரும” என்பதின் மரூஉ. நான்காம் நூற்றாண்டின் இறுதியில் ஐந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுமார் ஐம்பது வருடங்களாக சீனாவெங்கும் பயணம் செய்த போதிதர்மர் ஷாவோலின் மடாலயத்தை நிறுவி அங்கு தற்காப்புக் கலைகளை பயில்வித்ததோடல்லாமல் சீனர்களுக்கு தியானம் செய்யவும் சொல்லிக்கொடுத்தார். போதி தர்மரின் வாழ்க்கையை ஒட்டி பல்வேறு தொன்மங்கள் உலவி வருகின்றன. வரலாற்று பூர்வமான போதிதர்மரின் வாழ்க்கைத் தகவல்கள் மிகக் குறைவே. பௌத்த ஓவியங்களில் அவர் கர்ண கடூரமான பார்வை கொண்டவராகவும் அடர்த்தியான தாடியுள்ளவராகவும் சித்தரிக்கப்படுகிறார். போதி தர்ம இலக்கியங்களில் “நீலக் கண் காட்டுமிராண்டி” என்றும் அவர் வர்ணிக்கப்படுகிறார். (காண்க : ஒரு கை)

பிற மகாயான பௌத்தப் பிரிவுகளுக்கு இருப்பது போன்று ஜென் பௌத்தத்துக்கென்று பிரத்யேகமான ஆகமம் இல்லை. லோட்டஸ் சூத்ரா, பிரஜ்ன பாரமிதா சூத்ரம், அவதாம்ஸக சூத்ரம் மற்றும் விமலகீர்த்தி சூத்ரம் போன்ற சூத்ரங்களை  வாசித்தல் பிரசித்தம். போதி தர்மர் தன் வாழ்நாள் முழுதும் “லங்காவதார சூத்ரத்தை” மட்டும் வாசித்ததாகச் சொல்வார்கள். (காண்க : மனம் – மகாயான பௌத்தப் பார்வை ) (காண்க : புத்தரும் ராவணனும் ) இதன் காரணமாக ஜென் பௌத்தத்தின் துவக்க காலங்களில் “லங்காவதார சூத்ரம்” வாசிப்பு பரவலாக இருந்தது. காலப்போக்கில் குறைந்துவிட்டது.

 +++++

சீனாவின் டாவோயிஸத்தைப் போன்றே, ஜென் சிந்தனையையும் சொற்களால் விவரிக்க இயலாது. ஜென் பற்றிய புரிதல் முழுக்க முழுக்க நாம் வளர்த்தெடுக்கும் உள்ளுணர்வைச் சார்ந்தது.

 போதி தர்மர் சொல்கிறார் :

”எழுதப்பட்ட சொல்லைச் சாராதது
ஆகமங்களுக்கு அப்பாற்பட்ட பரிமாற்றம்
ஒருவனின் இதயத்தை நேரடியாகச் சுட்டி
இயல்பினை உணர்ந்து புத்தனாகுதல்”

எழுதப்பட்ட சொல்லை நிராகரிக்கும் ஜென் பௌத்தத்தில் கோவனின் இடம் என்ன?

லங்காவதார சூத்ரம் சொல்கிறது : ”சொற்களுக்கும் அர்த்தத்துக்குமிடையிலான தொடர்பு அல்லது எழுத்துகளுக்கும் தத்துவத்திற்குமிடையிலான தொடர்பு அல்லது போதனைகளுக்கும் சித்தாந்தத்திற்குமிடையிலான தொடர்பு விரலுக்கும் நிலவுக்கும் இடையிலிருக்கும் தொடர்பு போன்றது ; விரல் நுனியின் மேலிருந்து கண்களை எடுக்காதவர்கள் விஷயங்களின் பரமார்த்தத்தை என்றும் புரிந்து கொள்ளப் போவதில்லை. நிலவைச் சுட்ட விரல்கள் தேவை தான் ; ஆனால் விரல்கள் நிலவாகாது”

Advertisements

2 thoughts on “ஒரு நிலவைப் பார்த்து……

  1. Pingback: பௌத்தத்தின் சீன நிறம் | இலைகள், மலர்கள், மரங்கள்

  2. Pingback: பௌத்தத்தின் சீன நிறம் | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s