சுகாவதி

காமகுராவின் பெரும் புத்தர் (Daibutsu) ; மத்திய 13-ஆம் நூற்றாண்டு ; 11.3 மீட்டர் உயரம் (பீடத்தை சேர்க்காமல்) ; 124 டன் எடை ; தலை முடியில் 656 சுருட்டைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது அமிதா புத்தாவின் மரபார்ந்த சித்தரிப்பு. அமிதா புத்தரின் ஈரிமைகளுக்கு நடுவிலிருந்து பிரபஞ்சத்தை பிரகாசப்படுத்தும் புள்ளியைக் குறிக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட புள்ளி - 30 பவுண்ட் எடை கொண்டது.  Thanks http://www.onmarkproductions.com/html/big-buddha-japan.shtml

காமகுராவின் பெரும் புத்தர் (Daibutsu) ; மத்திய 13-ஆம் நூற்றாண்டு ; 11.3 மீட்டர் உயரம் (பீடத்தை சேர்க்காமல்) ; 124 டன் எடை ; தலை முடியில் 656 சுருட்டைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது அமிதா புத்தாவின் மரபார்ந்த சித்தரிப்பு. அமிதா புத்தரின் ஈரிமைகளுக்கு நடுவிலிருந்து பிரபஞ்சத்தை பிரகாசப்படுத்தும் புள்ளியைக் குறிக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட புள்ளி – 30 பவுண்ட் எடை கொண்டது. Thanks http://www.onmarkproductions.com/html/big-buddha-japan.shtml

நிர்வாண முக்தியை இவ்வுலகில் வாழ்ந்து பெறுவது என்பது எளிதானதல்ல ; சாதாரண மானுடர்க்கு இது சாத்தியமா என்பது சந்தேகமே! மகாபுருஷனுக்குரிய முப்பத்திரெண்டு லட்சணங்களுடன் பிறந்து தர்மச்சக்கரத்தின் சுழற்சியைத் துவக்கிய சாக்கியமுனி புத்தராக ஆவது எல்லோராலும் இயலாது. சம்சார சுழலில் சிக்கி பிறவிகளை ஒவ்வொன்றாய்க் கடந்து வாழும் பாமரனுக்கு என்ன வழி? அணுக்களின் முழு அழிவை அவன் எய்துவது எப்போது? முழுக்க இல்லாமற் போகும் வண்ணம் கன்மங்களின் தொலைப்பு சாதாரண மக்களுக்கு சாத்தியப்படுமா? துறவு வாழ்க்கையில் ஈடுபடா எண்ணற்ற உலகத்தோர் உய்வுற வழி உண்டா? உலகத்தின் அனைத்து உயிரும் புத்தநிலையை அடையும் வரை தாமும் புத்தநிலை அடையாமல் ஒத்தி வைக்கும் கருணை வடிவான போதிசத்துவர்கள் கற்பனைக்கெட்டா உருவங்களில் எல்லா லோகங்களிலும் சஞ்சரிக்கிறார்கள்.

தாமரை மலரைக் கையில் ஏந்தியபடி கீழிருக்கும் பூமியை நோக்கியபடி இருக்கும் போதிசத்துவக்கடவுள் அவலோகிதேஸ்வரர் மண்ணுலகில் பல்வேறு உருவங்களில் தோன்றி உயிர்களின் கஷ்டங்களைப் போக்குகிறார், (சீன பௌத்தத்தில் அவலோகிதேஸ்வரர் குவான் – யின் என்கிற பெண்ணாக சித்தரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.)

சம்சார உலகைக் கடந்து நிர்வாண நிலைக்கான பயிற்சிக்கு வசதியாக ஒரு லோகம் இருக்கிறது. அந்த லோகத்தை “சுகாவதி” என்று அழைப்பார்கள். அங்கு தான் ”அமிதாபா புத்தர்” இருக்கிறார். தன்னுடைய புத்தக்ஷேத்ரமான “சுகாவதி”யில் இருந்து தர்மத்தை போதித்துக்கொண்டிருக்கிறார். “சுகாவதி” லோகத்தில் கருமக் காரணியால் எழும் புனர்ஜென்மங்கள் இல்லை. அமிதாபாவின் சுத்தமான லோகமான சுகாவதியின் எழிலை மகாயான சூத்திரமான “சுகாவதிவியுஹ சூத்திரம்” விவரிக்கின்றது.

சுகாவதியில் நோய்களிலில்லை ; முதுமை இல்லை ; மரணம் இல்லை. துக்கங்களும் கஷ்டங்களும் அங்கில்லை. அங்கு பிறப்பவர்கள் கர்ப்பப்பைகளிலிருந்து வெளி வருவதில்லை. தாமரைப் பூக்களிலிருந்து வெளி வருகிறார்கள். அவர்கள் பிறந்ததும் அமிதாபா புத்தாவும் அவருடைய சீடர்களும் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்களுக்கு அழியா உடல்கள் கிடைக்கின்றன. கீழ்ப் பிறப்புகளை மீண்டும் எடுக்கும் அபாயம் அவர்களுக்கில்லை. அமிதாபா புத்தா, மற்றும் அவலோகிதேஸ்வரர் (குவான் – யின்), மகாஸ்தாமப்ராப்தர் (ஷி-சிஹ்) போன்ற போதிசத்துவர்களின் நேரடி முன்னிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

Pure Land-க்கு செல்கிறவர்கள் உயர் சீலங்களை கடைப்பிடிக்கும் மனிதர்களின் நடுவில் வாழ்கிறார்கள். எழிலான உடைகளும் சிறந்த உணவு வகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. உஷ்ணம், குளிர் என்கிற எதிரெதிர் உச்சங்கள் அங்கில்லை. சரியான மனக்குவியம் அங்கே எளிதில் சாத்தியமாகும். பேராசை, அறியாமை, சினம், போராட்டம் மற்றும் சோம்பல் ஆகிய விஷயங்கள் அங்கே முற்றிலும் இல்லை.

சுகாவதி உருவகபூர்வமாக எல்லா வித நகைகளால், மதிப்பு வாய்ந்த பொருட்களினால், இரத்தின கல் வகை கோபுரங்களினால், பச்சை மாணிக்க கற்களால் செய்யப்பட்ட அரண்மனைகளினால் ஒளி படைத்து பிரகாசமுடையதாக வர்ணிக்கப்படுகின்றது, முத்துகளால் இழையோடிய மிகப் பரந்து வளர்ந்த மரங்கள் மலர்களால் கனிகளால் சூழப்பட்டுள்ளன. இராட்சத தாமரை மலர்கள் தம் சுகந்தத்தை எல்லா திசைகளிலும் பரப்புகின்றன. ஏழு வித அணிமணிகளால் செய்யப்பட்ட குளங்கள் மிகச் சுத்தமான நீர் நிரப்பப்பட்டு நீராடுபவர்களின் விழைவுக்கேற்றபடி தன் சூட்டையும் ஆழத்தையும் தானாகவே சரி செய்து கொள்ளும். காலுக்குக் கீழுள்ள தரை தங்கத்தகட்டால் மூடப்பட்டிருக்கும். இரவுபகல் முழுதும் வானம் மலர்களைப் பொழிந்தவாறு இருக்கும். தேவ கானங்கள் சதா ஒலித்தபடி, சுகமான வாசனை கமழ்ந்து கொண்டு சுகாவதி என்னும் மேலைச் சொர்க்கம் (Western Paradise) இருக்கிறது.

சுகாவதியில், எல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தவர்களாக புத்தரும், அமிதாபாவும், போதிசத்துவர்களும் மாத்திரம் இல்லை ; தொடர்ந்து தர்மத்தை போதித்துக் கொண்டு பறவைகளும் மரங்களும் கூட அங்கே மதிப்பு வாய்ந்தவைகளாக இருக்கின்றன.   சுகாவதியின் அழகு மற்றெல்லா லோகங்களின் அழகையும் விஞ்சி நிற்பது.

“சுகாவதி” பௌத்த மரபுகளில் (Pure Land Buddhist Traditions), சுகாவதி லோகத்துக்குள் நுழைதலே நிர்வாணத்துக்கு இணையாகக் கருதப்படுகிறது. சுகாவதியில் நுழைந்தவன் முழுமையான நிர்வாண நிலையை அடையும் வரை அமிதாபா புத்தரின் எண்ணற்ற பிற போதிசத்துவர்களின் போதனைகளை கேட்கிறான். அவன் எவ்வமயத்திலும் ஒரு போதிசத்துவனாக ஆறு லோகங்களாகிய தேவ, அசுர, மனுஷ்ய, மிருக, பிரேத, நரக லோகங்களுக்கு திரும்பி வந்து, சம்சாரத்தில் சிக்கி அல்லலுறும் உயிர்கள் தத்தம் கர்ம வினைகளிலிருந்து மீள்வதற்கு உதவலாம் அல்லது சுகாவதியிலேயே இருந்து, புத்தநிலையை அடைந்து, வரும் உயிர்களையெல்லாம் விடுதலைக்கரை சேர்க்கலாம்.

இந்த சுகாவதிக்கு சாதாரண மானிடர் எவ்விதம் வரவியலும்? அமிதாபா புத்தாவின் பெயரை தினசரி உச்சரித்தல் இதற்கு முதல் படி. உச்சரிப்பு பக்தியுடனும், சுகாவதியில் மறுபிறப்பெடுக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் செய்யப்பட வேண்டும்.

Pure Land-இல் பிறப்பெடுக்க வேண்டும் என்று உறுதி பூணுபவரின் உந்துதலிலும் சித்தத்திலும் ஓர் அடிப்படை மாற்றம் ஏற்படுகிறது. முரட்டுத்தனமான உயிர்பிழைப்போ, சமூகப் பங்கை பூர்த்தி செய்தல் மட்டுமோ, விரக்தி தரும் சூழலிலிருந்து திருப்தியைத் தேடும் போராட்டமோ அவர்களுக்கு வாழ்வின் நோக்கமாக இருப்பதில்லை. சுகாவதியில் பிறப்பெடுக்க உறுதி பூணுதல் வாயிலாக விசுவாசிகள் தம் கவனத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இவ்வுலகின் சந்தோஷமும் துக்கமும் தற்செயலாகவும், முக்கியமற்றவையுமாக ஆகி விடுகின்றன. அமிதாபா புத்தாவின் மீதான விழிப்புணர்வை அதிகரித்து, மனதை சுத்திகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாக நிகழ் வாழ்வு மதிப்பு பெற்று விடுகிறது.

+++++

sukhavati

sukhavati

Pure Land சூத்திரங்கள் கி.பி 150 வாக்கில் லோகக்‌ஷேமா என்னும் காந்தார நாட்டு பௌத்தத் துறவியால் சீனாவுக்கு கொண்டு வரப்பட்டன. இப்போது கிடைக்கும் சீன மொழிபெயர்ப்பின் மூலம் காந்தாரி என்னும் பிராகிருத மொழியில் இருந்திருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இரண்டாம் நூற்றாண்டில் காந்தாரத்தையும் அதைச் சுற்றியுள்ள பல பிரதேசங்களையும் குஷான வம்சம் ஆண்டது. குஷான வம்சத்துப் பேரரசர் கனிஷ்கர் பௌத்தம் தழைக்க உதவிய நான்கு முக்கியப் பேரரசர்களுள் ஒருவர் (மற்றவர்கள் : அசோகர், இரண்டாம் மினாந்தர் மற்றும் ஹர்ஷவர்த்தனர்).

Pure Land Buddhism கி.பி 406 இல் சீனாவின் லுஷான் மலையில் வாழ்ந்த Hui Yuan என்பவரால் முக்கியத்துவம் பெற்றது. விரைவில் இது சீனாவெங்கும் பரவியது. இந்த மரபு ஜப்பானிலும் பரவி ஒரு பொதுவான நம்பிக்கையாக நிலவி வந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Honen-Shonin என்பவர் Pure Land பௌத்தத்தை சுயாதீன மதப்பிரிவாக நிறுவினார். அவர் காலத்திற்குப் பிறகு இப்பிரிவில் பிளவு ஏற்பட்டு ஜோடோ-ஷு மற்றும் ஜோடோ-ஷின்ஷு என்று இரண்டு குழுக்கள் உண்டாகின. ஏறத்தாழ 35% சதவிகிதம் மக்கள் பௌத்தராக இருக்கும் இன்றைய ஜப்பானில் மிக அதிகம் பேர் Pure Land பௌத்தத்தையே பின்பற்றுகிறார்கள்.

+++++

அமிதாபா புத்தாவின் நாமத்தை உச்சரிப்பதை (ஜப்பான் : “நமு அமிடொபுட்ஸு”, சீனா : “ “நமோ அமிதுஓஃபோ”) முக்கிய பயிற்சியாகக் கொண்டுள்ள Pure Land பௌத்தத்திற்கு “புத்தரை நினைவுகூர்தல்” என்பதே  அடிப்படையாக இருக்கிறது என்று வணக்கத்துக்குரிய டிக் ந்யாட் ஹான் (Thich Nhat Hanh) சொல்கிறார்.

”புத்தரை நினவு கூரும் சாதனா ”அனுஸ்ம்ரிதி” (காண்க : முன்செல்லும் நம்பிக்கை ) என்று சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டது. புத்தர் வாழ்ந்த நாட்களில் புத்தரை நினைவு கூர்வதை நித்யானுஷ்டானமாகக் கொண்டவர்கள் பலர் இருந்தனர். ஆயிரம் வருடங்களாக புத்தரை இவ்விதம் நினைவு கூர்ந்தவர்கள் தம்மை பலசாலிகளாக, சுதந்திரமானவர்களாக, அமைதி நிரம்பியவர்களாக, சந்தோஷமானவர்களாக உணர்ந்தார்கள். புத்தர் வாழ்ந்த காலத்திலிருந்தே புத்தரை நினைவு கூர்தல் பௌத்த மரபில் ஒப்புக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்து வந்திருக்கிறது”

அமிதாபா சூத்திரத்தில் புத்தர் ஷரிபுத்தரை நோக்கி சொல்கிறார் :

“ஒரு நல்ல ஆண் அல்லது பெண் அமிதா புத்தாவின்  பெயரை    ஒரு நாள், இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு அல்லது ஏழு நாட்களுக்கு மனங்குவிந்து  சிறு சிதறலுமின்றி பற்றிக்கொள்வாராயின்,  இறக்குந்தறுவாயில் அமிதா புத்தர் பிற பரிசுத்தவான்கள் புடை சூழ அவர் முன்னம் தோன்றுவார்”

டிக் ந்யாட் ஹான் இதை இவ்வாறு விளக்குவார் :

”சிதறலற்ற ஒற்றைப் புள்ளியில் குவிந்த மனத்துடன் மனக்கவனப் பயிற்சியில் ஈடுபடுதல் எனும் போது நாம் புத்தரை நினைவு கூருகையில், நம் மனம் வேறெதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது. அது புத்தரைப் பற்றி மட்டும் தான் சிந்திக்க வேண்டும். புத்தர் வாழ்ந்த காலத்தில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இது ”புத்தானுஸ்மிரிதி” என்றழைக்கப்பட்டது.”

Thich Nhat Hanh

Thich Nhat Hanh

Advertisements

One thought on “சுகாவதி

  1. Pingback: பௌத்தத்தின் சீன நிறம் | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s