லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம்

Gridhakuta Hill - Vulture's Peak - கழுகுக்குன்றம் - ராஜ்கிர், பீகார்

Gridhakuta Hill – Vulture’s Peak – கழுகுக்குன்றம் – ராஜ்கிர், பீகார்

1996-97. அகமதாபாத் நகரில் வசித்த காலம்.  லோட்டஸ் சூத்ரா எனக்கு அறிமுகமானது அப்போது தான். சிறு நண்பர்கள் குழாத்துடன் சேர்ந்து கொண்டு லோட்டஸ் சூத்ராவின் மூல மந்திரத்தை  (“ நம் ம்யோஹோ ரெங்கே க்யோ”) நாள் தவறாமல் உச்சரிப்பதும் (“டைமோகு”) தினமும் இருமுறை லோட்டஸ் சூத்ராவின் இரண்டு அத்தியாயங்களிலிருந்து சில பகுதிகளை படிப்பதும் (‘கோங்யோ’ ) என் வழக்கமாக இருந்தது.    நண்பர் ஒருவர் வீட்டில் ‘கொஹோன்சான்’ எனப்படும் மண்டலம் இருந்தது. அதன் முன்னால் உட்கார்ந்து ‘கோங்யோ’ பண்ணுவோம்.  பதிமூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானில் வாழ்ந்த நிசிரேன் தைஷோனின் என்ற பௌத்த சாது உருவாக்கிய மரபை பாமர மக்களிடையே (Laity) பரப்பும் மகத்தான பணியைச் செய்து வரும் Soka Gakkai International – இயக்கத்தின் உறுப்பினராக இருந்தேன். பின்னர், குழாம் கலைந்து நண்பர்கள் எல்லோரும்  ஆளுக்கொரு திசையில் சென்று விட்டனர். ‘டைமொகு’ சொல்வதும் ‘கோங்யோ’ படிப்பதும் நின்று போனது.

+++++

Soka Gakkai பரிந்துரைக்கும் ‘கோங்யோ’ அப்பியாசத்தில் செவ்வியல் ஜப்பானிய மொழியில் வாசிக்கப்படும் லோட்டஸ் சூத்ராவின் மூலம் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது. “சத் தர்ம புண்டரீக சூத்ரம்” என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்ட  நூலின் மிகப் பழமையான சீன மொழிபெயர்ப்பு கி பி 265-இல் நிகழ்ந்திருக்கலாம். மூல நூல் இதற்கு முன்னதாக முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். கி.பி 406 இல் குமாரஜீவரின் சீன மொழிபெயர்ப்பே மூலத்தின் விசுவாசமான மொழிபெயர்ப்பு என்று கருதப்படுகிறது. லோட்டஸ் சூத்ராவின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றுக்குமே குமாரஜீவரின் மொழிபெயர்ப்பே அடிப்படை. லோட்டஸ் சூத்ராவுக்கு ஆறுக்கும் மேற்பட்ட சீன மொழிபெயர்ப்புகள் இருக்கின்றனவாம். எண்ணற்ற பிற மகாயான சூத்திரங்களைப்  போல் லோட்டஸ் சூத்ராவின் மூலம் நமக்கு கிடைக்கவில்லை.

சீனா, ஜப்பான்  மட்டுமில்லாமல் மகாயான பௌத்தம் பின்பற்றப்படும் எல்லா நாடுகளிலுமே லோட்டஸ் சூத்ரா மிகவும் பிரசித்தம். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன சாது  சீ – இ (Chih -i) என்பவர் டியண்டாய் (tien-tai) என்ற மகாயான உட்பிரிவை நிறுவினார். அப்பிரிவுக்கு லோட்டஸ் சூத்ராவே முதன்மையான நூல். டியண்டாய் பின்னர் ஜப்பானிலும் பரவியது. ஜப்பானில் ‘டியண்டாய்’ ‘டென்டாய்’ என்று அழைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த நிசிரென் டைஷோனின் லோட்டஸ் சூத்ராவை முதன்மைப் படுத்தி “நிசிரென் பௌத்தத்தை” ஸ்தாபித்தார். ‘டென்டாய்’ மற்றும் ‘நிசிரேன்’ பௌத்தப்பிரிவுகளில்  லோட்டஸ் சூத்ராவின் பாராயணம் வலியுறுத்தப்படுகிறது.

பௌத்த சூத்திரங்கள்  புத்தரின்  அல்லது அவருடைய முக்கிய சீடர்களின் பிரசங்கங்களை கொண்டிருக்கும். பொதுவாக ஒவ்வொரு பௌத்த சூத்திரமும் “இவ்வாறு நான் கேட்டேன்” என்ற சொற்களோடு துவங்கும். முதல் பௌத்த சபையில் வரலாற்று சாக்கிய முனி புத்தரின் அனைத்து பிரசங்கங்களையும் மனப்பாடமாக சொல்லி நிகாய சூத்திரங்களின் தொகுப்புக்கு முக்கியப்பங்களித்த ஆனந்தரை நினைவு கூரவே இந்த ஐதீகம். (காண்க : இரு வாகனங்கள்) ஒவ்வொரு பிரசங்களையும் ஆனந்தர் ஒப்பிக்கத் தொடங்குகையில் இந்த சொற்றொடரை பயன்படுத்தினார் என்பது மரபு.

லோட்டஸ் சூத்ராவின் தொடக்க வரிகள் : “ இவ்வாறு நான் கேட்டேன். ஒரு முறை ராஜகிருகத்தில் உள்ள கழுகுக் குன்றத்தில் புத்தர் தங்கியிருந்தார்” இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் என்ற இடமே புத்தர் காலத்தில் இருந்த ராஜகிருகம் என்ற நகர். இதற்கருகில் தான் கழுகுக் குன்றம் இருக்கிறது.

வரலாற்று புத்தருடன் தொடர்புள்ள உண்மையான இடத்துடன் இணைத்துக் கூறித் தொடங்கும் லோட்டஸ் சூத்ரா, சில வரிகளிலேயே புலன்களால் உணரத்தக்க உலகத்தை கடந்து சென்று விடுகிறது. சாதாரண கால,வெளியைத்தாண்டிய ஓர் இடத்தில் காட்சி துவங்குகிறது.  கற்பனைக்கெட்டாத எண்ணிக்கையில் மனிதர்கள் மற்றும் மனிதரல்லாதவர்கள் – சாதுக்கள், பெண் துறவிகள், பாமர மக்கள், பெண்கள், தேவ லோகத்து மாந்தர், டிராகன்கள், கருடன்கள் – இன்னும் பலப்பலரும் – அருகர்கள் மற்றும் போதிசத்துவர்களும் –  புத்தரை சூழ்ந்திருக்கின்றனர்.  பதினெட்டாயிரம் உலகங்களெங்கும் பரவியிருக்கும் இப்பெருவெளி புத்தரின் கண்ணிமைகளுக்கு நடுவில் இருக்கும் முடியொன்று  பிரதிபலிக்கும் ஒளியால் பிரகாசமடைகிறது.  இது போன்று எண்ணற்றோர் கூடியிருப்பதையோ அல்லது எண்ண முடியா உலகங்களைச் சொல்லும் இடங்களிலோ அல்லது எண்ணிக்கைக்கடங்கா போதி சத்துவர்கள் ஓரிடத்தில் திரண்டிருப்பதை குறிக்கவோ பௌத்த இலக்கியங்களின் தனித்தான உவமை லோட்டஸ் சூத்ராவெங்கும் கையாளப்படுகிறது – ”கங்கைக் கரை மணலைப் போல”.

குமாரஜீவரின் மொழிபெயர்ப்பில் லோட்டஸ் சூத்ரா 28 அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றிலும் புத்தரோ அல்லது பிறரோ போதனைகளையோ , குட்டிக்கதைகளையோ வழங்கியவாறு இருக்கின்றனர். பாதி உரைநடை வடிவிலும், பாதி செய்யுள் வடிவிலும் இருக்கும் லோட்டஸ் சூத்ரா உலகத்தின் சிறந்த சமய இலக்கிய நூல்களுடன் ஒப்பிடத்தக்க  அழகான சில பத்திகளை உள்ளடக்கியுள்ளது.

Illustrated manuscript of the Lotus Sutra, Goryeo dynasty (918–1392), ca. 1340 / Unidentified artist (late 14th century) / Korea

Illustrated manuscript of the Lotus Sutra, Goryeo dynasty (918–1392), ca. 1340 / Unidentified artist (late 14th century) / Korea

லோட்டஸ் சூத்ராவில் பிரதானமாக  விவரிக்கப்படும் முக்கிய கருப்பொருள்கள் மூன்று :-

எல்லா வாகனங்களும் ஒரு வாகனமே
ஆரம்பப் பகுதிகளில், அவருடைய முந்தைய போதனைகள் எல்லாம் இடைக்காலத்தவையே என்று புத்தர் சொல்கிறார்  ; மேலும் அவர் சொல்வதாவது, அவரின் உயர் போதனைகளை ஏற்க மக்கள் தயாராகவில்லை ; Expedient Means வாயிலாக அவர்களை ஞான நிலைக்கு கொண்டு வர வேண்டியதாயிற்று ; ஆனால், இறுதியானதும், மிக உயர்ந்த போதனையும், அவரின் மற்றெல்லா போதனைகளையும் புறந்தள்ளி நிலைப்பதும் லோட்டஸ் சூத்ராவே.

த்ரியானா அல்லது நிர்வாணத்திற்கு “மூன்று வாகனங்கள்” என்ற கோட்பாட்டை விவரிக்கிறார். சுலபமாகக் சொன்னால், த்ரியானா புத்தரின் போதனைகளை காதால் கேட்டு ஞானமடைபவர்கள் (Voice Hearers), தம் சொந்த முயற்சியால் தமக்கு தாமே ஞான நிலையடைபவர்கள் (Pratyeka-Buddhas), போதிசத்துவர்கள் ஆகியோரைப் பற்றி பேசுகிறது. இம்மூன்று வாகனங்களுமே எல்லா உயிர்களும் பயன்படுத்தி புத்தர்களாகும் புத்தரின் வாகனம் என்னும் ஒரே வாகனமே என்கிறது  லோட்டஸ் சூத்ரா

எல்லா உயிர்களும் புத்தர்களாகலாம்
சூத்திரம் முழுதிலும் திரும்பத் திரும்ப சொல்லப்படும் கருத்து எல்லா உயிர்களும் புத்த நிலையை அடையலாம் என்பதும் நிர்வாணத்தை எய்தலாம் என்பதுமே ஆகும். முக்கியமானதென்னவெனில், இதில் புத்தர் நிறைய பெண்களுக்கு அவர்களெல்லாம் ஆணாக மறு பிறப்பெடுக்காமலேயே புத்த நிலையை அடைவார்கள் என்று உறுதியளிக்கிறார். பெண்களெல்லாம் நிர்வாண நிலையை அடைதல் சாத்தியமேயில்லை என்ற நிலைபாட்டை தேரவாத சூத்திரங்கள் கொண்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

லோட்டஸ் சூத்ராவில் புத்தர் – எல்லா பொருட்களின், உயிர்களின் ஒருமையாக; அகவயமாக; இருத்தல், இல்லாமை – இவைகளைக் கடந்தவராக; காலம் மற்றும்  வெளியால் கட்டப்படாத – தர்மகாயத்தில் வருகிறார். தர்மகாயம் என்பது எல்லா உயிர்களின் ஒன்றிணைதலை குறிக்கிறது ; எல்லா உயிர்களும் தம் உண்மை இயல்பில் விழித்தெழுந்து புத்தநிலையை  அடையத் திறம் கொண்டவை.

நம்பிக்கையின் பக்தியின் முக்கியத்துவம்
புத்தநிலை புத்தி வாயிலாக மட்டும் அடையக் கூடியதன்று. பரிபூரணமான போதனையை சொற்களால் விளக்க முடியாதென்பதும் அது சாதாரண அறிவாற்றலால் புரிந்து கொள்ளத் தக்கதல்ல என்பதும் மகாயான பௌத்தப் பார்வையாகும். ஞானநிலையை அடைவதற்கு நம்பிக்கை மற்றும் பக்தியின் இன்றியமையாமையை லோட்டஸ் சூத்ரா வலியுறுத்துகிறது. நம்பிக்கைக்கும் பக்திக்கும் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம் துறவு வாழ்க்கையை தழுவாத பாமர மக்களும் (Laity) புத்தநிலையை அணுகத் தக்கதாக்குகிறது.

குட்டிக்கதைகள்
லோட்டஸ் சூத்ராவின் சிறப்பம்சம் அதில் வரும் அழகான குட்டிக்கதைகள். விதவிதமான விளக்கங்களுக்கு இடமளிக்கக்கூடிய பல அடுக்கு உருவகங்கள் சூத்திரம் நெடுகிலும் வந்து சுவை கூட்டுகின்றன.  சில முக்கியமான குட்டிக்கதைகளை மட்டும் இங்கு வரிசைப்படுத்துகிறேன்.

 •  எரியும் மாளிகை – காண்க புத்த பூர்ணிமா (மூன்றாம் அத்தியாயத்தில் வருவது)
 • ஓடிப்போன மகன் – தன்னைத் தானே வெறுத்துக் கொள்ளும் மகன் கொஞ்சம் கொஞ்சமாக எத்தனை பெரிய சொத்துக்கு தான் வாரிசு என்பதை அறியும் கதை. (அத்தியாயம் 4)
 • மருந்து மூலிகைகள் – ஒரே நிலத்தில் ஒரே அளவில் மழை பொழிகிறது ; ஆனால் ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு மாதிரி வளர்கிறது. (அத்தியாயம் 5)
 • மாய நகரம் – ஒரு கும்பலின் தலைவன்  கடினமானதோர்  பயணத்தில் தம் மக்களை அழைத்துச் செல்கையில் அவர்கள் மனம் சோர்வடையக் கூடாதென மனதை மயக்கும் ஓர் அழகான நகரமே இலக்கு என்ற கற்பனையை அவர்களுள் விதைக்கிறான். (அத்தியாயம் 7)
 • அங்கிக்குள் இரத்தினம் – ஒருவன் தன் நண்பனின் அங்கிக்குள் இரத்தினத்தை வைத்து தைத்து விடுகிறான். ஆனால் தாம் ஒரு விலை மதிப்பிலா இரத்தினத்தை தம்முடனேயே வைத்திருக்கிறோம் என்பதை அறியாமல் வறுமையில் வாடுகிறான். (அத்தியாயம் 8)
 • அரசனின் மேல் முடிச்சில் இரத்தினம் – ஓர் அரசன் பல பரிசுகளை பலருக்கும் வழங்குகிறான், ஆனால் மதிப்பு வாய்ந்த இரத்தினத்தை அபூர்வமான திறமை கொண்ட மனிதருக்கென ஒதுக்கி வைக்கிறான். (அத்தியாயம் 14)
 • சாலச் சிறந்த மருத்துவர் – ஒரு மருத்துவனின் குழந்தைகள் விஷத்தால் மடிந்து கொண்டிருக்கின்றன. அக்கணத்திலும் தந்தையார் தயாரித்து வைத்திருந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்ற அறிவில்லாமல் இருக்கின்றன. (அத்தியாயம் 16)

நூல்கள் :

 1. Burton Watson’s translation of The Lotus Sutra (Columbia University Press, 1993)
 2. The Stories of the Lotus Sutra – Gene Reeves (Wisdom Publications, Boston, 2010)
ராஜ்கிரில் இருக்கும் சாந்தி ஸ்தூபம்

ராஜ்கிரில் இருக்கும் சாந்தி ஸ்தூபம்

Advertisements

4 thoughts on “லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம்

 1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

 2. Pingback: பௌத்தத்தின் சீன நிறம் | இலைகள், மலர்கள், மரங்கள்

 3. Pingback: பௌத்தத்தின் சீன நிறம் | இலைகள், மலர்கள், மரங்கள்

 4. Pingback: தம்மம் என்பது என்ன? | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s