மச்ச ஜாதகம்

நிகழ்காலக் கதை – பச்சுப்பன்ன வத்து
ஜெத்தாவனத்தில் புத்தர் தங்கியிருந்த போது நிதானமிழக்க வைக்கும் காமம் பற்றிய கதையொன்று சொன்னார்.

பிக்ஷுவொருவர் தன் முன்னால் மனைவியின் மேலிருந்த காமம் தணியாமல் இருப்பதாகவும் அவள் மீது இன்னும் தனக்கு ஆசை இருப்பதாகவும் ஒத்துக்கொண்டார். அதைக் கேட்ட புத்தர் அவரை எச்சரித்தார்.

“உங்களின் முன்னாள் மனைவி உமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவள் ; பல ஜென்மங்களுக்கு முன் உங்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவள் ; அப்போது உங்களை நான் தான் காப்பாற்றினேன்” பிறகு இறந்த காலத்தின் கதையை அவர் கூறத் தொடங்கினார்.

இறந்தகாலக் கதை – அதீத வத்து
கங்கை நதியின் மடியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மீன்களுள் தனித்தன்மையான அழகுடன் திரிந்தது அது. சராசரி எலும்பு மீன்வகைகளின் எடையை விட அதிக பருமனான உடல். விரிந்த நீல வர்ணக் கண்கள். சுவாசிப்பதற்கென விரியும் சிறிய வாயின் மேல்புறம் முதல் பக்கவாட்டு மார்புப்புற மீன்துடுப்புகளின் மேல் பாகம் வரை மஞ்சட்சிவப்பு ;கீழ்ப்பாகத்தில் பச்சை. இரு நிறங்களுக்கும் நடுவில் ஒரு கோடாக வெள்ளை நிறம். வயிற்றுப் பாகத்திலிருந்து வால் பாகம் வரை தங்கநிறம்.

மீனின் இரு புறங்களிலும் இருந்த மார்புப் பகுதி துடுப்புகள் ஆடிக்கொண்டிருக்க நதியின் தரை மட்டத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது அந்த ஆண்மீன்.நீர்த்தாவரத்தின் கிளையொன்றை அதன் உதடுகள் உரசிக்கொண்டிருந்தன . தேடி வந்த ஒன்று கிடைக்காத ஏக்கத்தில் அதன் கண்கள் ஒளியற்று இருந்தன. சில அடிகள் தூரத்தில் இரண்டு டால்பின்களின் ஓரினச்சேர்க்கை. அதைப் பார்த்தும் பார்க்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டு இரு நாட்களுக்கு முன்னம் துணையுடன் கூடியிருந்த கணங்களை அசைபோடத் தொடங்கியவுடன் மீனின் ஏக்கம் இன்னும் அதிகமாயிற்று. அவளை முதன்முதல் சந்தித்தது இருவாரம் முன்னால். சந்தித்த முதல் நாளிலிருந்து ஒருவரையொருவர் ஒரு நிமிடம் கூட விட்டு விலகவில்லை. இரண்டு நாள் முன்னால் மேற்கிலிருந்து கூட்டமாக சென்று கொண்டிருந்த மீன்கூட்டத்துக்குள் சென்று கலந்து விட்டாள். விரைவில் சந்திக்கலாம் என்று சொன்னாள். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கையில் இது என்ன விளையாட்டு என்று புரியவில்லை.

டால்பின்கள் இரண்டும் இயக்கத்தை முடித்துக் கொண்டு இப்போது விலகியிருந்தன. சற்று தூரத்தில் மணற்மூட்டத்துக்கு நடுவே பெரிய மீன் கூட்டம் வந்து கொண்டிருப்பதை ஆண்மீன் கண்டதும் எதிர்பார்மேலிட்டு நூற்றுக்கணக்கான மீன்களுக்கு நடுவே ஒரு வித பதற்றத்துடன் தேடிற்று. மேற்கிலிருந்து திரும்பும் எல்லா மீன் கூட்டங்களுக்கு மத்தியிலும் அவள் கிடைப்பாளா என்று தேடித் தேடி அலுத்துப் போனது. நதியடிவார மணல் தரையில் தன் தலையை புதைத்துக் கொண்டது. பிறகு படுகையில் கிடந்த இரு சிறிய கற்களுக்கு நடுவில் நின்று தூங்கியது. தூக்கத்தில் கேட்ட சொப்பனம். பெயர் தெரியாத விசித்திர உருக் கொண்ட கடல் வாழ உயிரினத்தின் திறந்து கிடந்த வாயோன்றில் அதன் காதலி நுழைந்து விடுவது மாதிரியும் பின் அவள் வெளிவராத வகையில் ஜந்துவின் வாய் மூடிக்கொள்வது மாதிரியும் கனவு.

விடிந்த பிறகு மீனுக்கு இருப்பு கொள்ளவில்லை. கிழக்கு திசையாக நீந்தத் துவங்கியது. சிறு தொலைவில் இரண்டு நதிகள் சங்கமித்துக் கொண்டன. சுழல் அதிகமாக இருந்தது. குறிப்பிட்ட தூரவெல்லையைத் தாண்டி என்றும் சென்றிராத அம்மீன் அன்று பல மைல்கள் நீந்திச் சென்றது. அதனுள்ளில் நிலவிய பதற்றம் குறையவில்லை. தன் ஜோடியை சந்தித்தல் சாத்தியமா? எல்லா திசைகளிலும் பரந்து விரிந்திருக்கும் நீர்பூமியில் என் கண்ணில் படாமல் அவள் என் இருப்பிடம் நோக்கி சென்றிருக்கலாமோ? திரும்பிப் போய் வழக்கமான இடத்தில் அவளுக்காக காத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. நல்ல வேளை! தோன்றிய எண்ணத்தை அது செயற்படுத்தவில்லை.

இருட்டுக்கு நடுவே எரியும் அகலொளி போல் அவள் கண்ணின் ஒளி தூரத்தில் தெரிந்தது. அவளேதான். இன்னும் சில மீன் நண்பர்களுடன் அவள் மேற்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். வேகத்தை கூட்டி அவளருகே விரைந்தாள். அவர்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன, பெண் மீனின் கண்களில் மோகம் விலகாது இருந்ததை ஆண்மீன் புரிந்து கொண்டது. வாய் அகலத் திறந்து சுவாசத்தை நிரப்பிக் கொண்டு அதிவேகத்தில் நகர்ந்தது ஆண்.

பெண் மீன் திடீரென நகராமல் நின்றது. “அவள் என் நின்றுவிட்டாள்? நான் அவளருகில் வரவேண்டும் என்று எண்ணுகிறாள் போலிருக்கிறது” ஆணுக்கு பித்தம் தலைக்கேறி நிதானத்தை இழந்தது. மெலிதான நூல் திரை ஒன்று நடுவில் இருப்பதை உணர்ந்து ஜாக்கிரதையுடன் நகராமல் நின்ற பெண் மீனின் சமயோசிதம் ஆண் மீனினுள் இல்லாமல் போனது. புத்தியை மட்டுமல்லாமல் கண் பார்வையையும் இழக்க வைக்கும் சக்தி காமத்துக்கு உண்டு. பெண் மீன் நின்றிருந்த இடத்திலிருந்து நான்கடி தொலைவில் ராட்சத மீன் வலையில் சிக்குண்டது ஆண் மீன்.

+++++

வலையில் சிக்கிய பெரிய மீனை எடுத்து நதிக்கரை மணலில் தூக்கி எரிந்தார்கள். சந்தைக்கு எடுத்துச் செல்வதற்காக குவியலாக பொடப்பட்டிருந்த பிற மீன்களுடன் அதை சேர்க்கவில்லை. “இன்று நல்ல அதிர்ஷ்டம்! இந்த பெரிய மீனை இங்கேயே பொறித்துச் சாப்பிடலாம்” என்று ஒருவன் சொன்னதும் மற்ற மீனவர்கள் ஆமோதித்தார்கள். ஒருவன் கூரான கத்தியால் கட்டையை முள் கரண்டியாக செதுக்க ஆரம்பித்தான். இன்னொருவன் அடுப்பை பற்ற வைத்தான்.

தரையில் இடப்பட்ட மீன் குளிரில் சிக்கியவன் மாதிரி நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் உடலெங்கும் எரிவது போன்ற உணர்வும் சேர்ந்து கொண்டது. வலைக்கயிறு ஏற்படுத்திய காயத்தின் வலி நொடிக்குநொடி அதிகமாகிக்கொண்டே போனது. இன்னும் சில கணங்களில் நம்மை தீயிலிடுவார்கள். உயிர் விலகி, எரிக்கப்பட்ட சதைப் பிண்டங்களாக வெட்டப்பட்டு இம்மீனவர்களின் வயிற்றுக்கு உணவாகப் போகிறோம் என்ற பயமெல்லாம் அதற்கு ஏற்படவில்லை. அதன் நினைவெல்லாம் பெண்மீனைப் பற்றியதாகவே இருந்தது. ‘அவள் நம்மைத் தவறாக எண்ண இடம் கொடுத்துவிட்டோமே! அவளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை நோக்கி நான் சென்றுவிட்டேன் என்று அவள் நினைத்துவிடக் கூடாதே’ என்று எண்ணி துக்கப்பட்டது.

காசியை ஆண்ட மன்னன் பிரம்மதத்தனின் தலைமைப் புரோகிதன் தன் வேலைக்காரர்களுடன் நதியில் குளிக்க வந்திருந்தான். மணலில் உட்கார்ந்து தலைதுவட்டிக் கொண்டிருந்தவன் துடித்துக் கொண்டிருந்த மீனைப் பார்த்தான். அதன் தவிப்பும் அது மனதுக்குள் பேசிக் கொண்ட பேச்சும் அவனுக்கு புரிந்தது. மீன்கள் பேசும் மொழி அவனுக்கு நன்கு புரியும். குருட்டுக் காமத்தில் சிக்கி ஆபத்தில் மாட்டிக்கொண்ட மீனின் மேல் புரோகிதனுக்கு அளவற்ற கருணை பிறந்தது.

ஒரு குட்டி விருந்திற்காக தயாராகிக் கொண்டிருந்த மீனவர்களை அணுகி ”அரண்மனைக்கு மீன்கள் அளிக்கும் மீனவர்கள் குழு நீங்கள்தானா?” என்று கேட்டான்.

“ஆம் ஐயா”

“அரண்மனைக்கு ஒரு பெரிய மீன் வேண்டும் ; இதோ இங்கே தரையில் கிடக்கிற இம்மீனை தர முடியுமா?” என்று கேட்டான் புரோகிதன்.

“எங்கள் அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று மனமுவந்து சொன்னார்கள் மீனவர்கள்.

அந்த மீனை கவனமாக எடுத்து கையில் வைத்துக் கொண்டு நதிக்கரை விளிம்பு வரை சென்றான். அதற்கு மட்டும் கேட்கிற மாதிரி மீன் பாஷையில் புரோகிதன் அதனுடன் பேசினான். “உன் மனசுக்குள் நீ பேசிக்கொள்வதை நான் கேட்டிராவிட்டால் இந்நேரம் நீ குழப்பத்துடன் உயிரிழந்திருப்பாய் ; காமத்திற்கு அடிமையாவதை நிறுத்திக் கொள்” பின்னர் அம்மீனை சேறு கலந்திருந்த நீரில் விட்டான்.

இணைப்பு – சமோதன
கதையை சொல்லி முடித்த பிறகு புத்தர் தம்மத்தை போதித்தார். கதையை கேட்கத் தொடங்கும் வரை அதிருப்தியிற்றிருந்த பிக்ஷு கதை முடிந்ததும் முதல் பாதையை கடந்தார் ( Stream Enterer – பாலியில் ”சோடபன்னா” ). பின்னர் புத்தர் பிறப்புகளை அடையாளம் காட்டினார். “அந்த சமயம் இந்த பிக்ஷு ஆண்மீனாக இருந்தார் ; இவருடைய முன்னால் மனைவி பெண்மீனாகப் பிறந்தார். நான் ராஜாவின் புரோகிதனாக இருந்தேன்”

மகாகபி ஜாதகம் - பரூத் ஸ்தூபத்தின் நுழைவுவாயிலொன்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்தூபத்தின் உடைந்த வாயில்கள் மற்றும் பிடிமானங்கள் இன்று கல்கத்தா மியுசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மகாகபி ஜாதகம் – பரூத் ஸ்தூபத்தின் நுழைவுவாயிலொன்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகரால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்தூபத்தின் உடைந்த வாயில்கள் மற்றும் பிடிமானங்கள் இன்று கல்கத்தா மியுசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisements

One thought on “மச்ச ஜாதகம்

  1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s