பிரம்ம விகாரம்

immeasurables
ஏலத்திற்கு வந்ததொரு முத்து
யாரிடமும் அதை வாங்கப் பணமில்லை
தன்னையே வாங்கிக் கொண்டதந்த முத்து
–    ரூமி

சமகாலத்து முண்ணனி யோக குருக்கள் பலருடன் சேர்ந்து யோகப்பயிற்சிகளில் புத்தர் ஈடுபட்டார். உடல்நலம் குன்றும்படியாக கடுமையான நோன்புகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் சிறு வயதில் நடந்த சம்பவம் ஒன்று அவர் நினைவுக்கு வருகிறது. அவர் சிறு குழந்தையாய் இருந்த போது அவரின் தந்தை வருடாந்திர விதைப்புத் திருவிழாவிற்குச் செல்கிறார். சித்தார்த்தரை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட தாதி குழந்தையை ஒரு பன்னீர் ஆப்பிள் மரத்தின் அடியில் கிடத்திவிட்டு திருவிழாவைப் பார்க்கச் சென்று விடுகிறாள். கண்களை சுழற்றி அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருந்த குழந்தை சித்தார்த்தர் கொஞ்ச நேரம் முன்னதாக உழப்பட்ட நிலத்தைக் காண்கிறார். புற்கள், களைகள் வெட்டப்பட்டு நிலம் கோதப்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட புல்லிழைகளின் ஓரத்தில் இறந்த புழுக்கள் படிந்திருப்பதை கண்ணுற்றதும் இறந்த புழுக்களெல்லாம் அவரின் உறவினர் போல அவர் நெஞ்சை தூய வருத்தம் நிறைக்கிறது.  துக்கமும் பச்சாதாபமும் கலந்த அவ்வுணர்ச்சி சில கணங்களில் பெரும் மகிழ்வுணர்வாக மாறுகிறது. அது வரை யோகப் பயிற்சியேதும் பெற்றிராதவராக இருந்தும் கூட, அந்தக் குழந்தை மெய்மறந்த சமாதி நிலையை எய்துகிறது.

சம்பவத்தை நினைவு கூர்ந்த புத்தர் எண்ணினார் :”அந்த நேர்மறை உணர்ச்சிகளை நான் பெருக்கிக் கொண்டால், – அந்த பச்சாதாபக் கணம், என் சொந்த தேவைகள், ஆசைகளுடன் தொடர்பிலாத வாழ்வின் அந்த தூய மகிழ்ச்சிப் பெருவெள்ளம் – அந்த நேர்மறை உணர்ச்சிகளை நான் வளர்த்துக் கொண்டு எந்நேரமும் என்னுள்ளில் வெடித்துக் கிளம்பும் எதிர்மறை தூண்டல்களை ஒதுக்கி வைத்தேன் என்றால், என்னுடைய மனிதவியல்புடன் சேர்ந்துழைத்து நிர்வாணத்தை எய்துபவனாக ஆவேன்.” அவ்வாறே அவர் நிர்வாணத்தை அடைந்தார்.

புத்தர் போதித்த முக்கியமான தியான வழிமுறைகளில் ஒன்று – அன்பெண்ண தியானம். இத்தியானம் ‘நான்கு அளவிடற்கரியவை’ ‘பிரம்ம விகாரம்’ ’நான்கு உன்னத நிலைகள்’ என்றும் அழைக்கப்படுகிறது. ’பிரம்ம விகாரம்’ என்றால் பிரம்மன் உறையும் இடம் என்று பொருள். பிரம்மம் என்ற சொல் தெய்வீகத்தன்மையை இங்கு குறிக்கிறது. இத்தியானத்தில் அன்பான பரிவு (‘மெத்தா’) கருணை (‘கருணா’), ஒத்துணர்வான மகிழ்ச்சி (’முதிதா’) மற்றும் உள்ளச்சமநிலை (’உபேக்கா’) ஆகிய உணர்வுகள் சுற்றளவு முழுமையிலும் உள்ள ஓருயிரும் தவிர்க்கப்படாமல், இவ்வுலகின் எல்லா திசைகளிலும் மானசீகமாக வெளியனுப்பப்படும். இப்பயிற்சி தொடர்ந்து செய்யப்பட்டு வந்தால், நம் மனதில் அடுத்தவர் நுழைய இடம் அமையும் ; நமக்கும் புறவுலகிற்கும் இடையிலிருக்கும் வேலிகள் மெதுவாக மறையத் துவங்கும். புத்தர் போதித்தவாறு, அன்பின் பிரம்மாண்ட உணர்வு மற்றும் மனதின் விடுதலையை நாம் அனுபவித்து இறுதியில் நிர்வாணத்தை அடைவோம்.

+++++

பிரம்ம விகாரம் என்ற பெயர் ஏன் வந்தது? பிரம்மம் என்ற நித்திய கடவுள் என்ற கருப்பொருளை நிராகரித்தவரல்லவா புத்தர்? புத்தர் இதனைக் கற்பித்த சூழலின் அடிப்படையில் பிரம்ம விகாரம் என்ற பெயர் வந்திருக்கலாம். புத்தர் ஒரு முறை சுபா என்கிற ஓர் வேதிய இளைஞனை சந்திக்கிறார். வைதீக மதத்தை பின்பற்றும் இளைஞன் அவன். நித்திய கடவுள் (பிரம்மன்) மற்றும் அழியா ஆன்மா ஆகிய கருதுகோள்களைக் கொண்டது வைதீக மதம். வைதீக மதத்தினுடைய எல்லா ஆன்மீக சடங்குகளின் இலக்கும் ஆன்மாவைப் பக்குவப்படுத்தி பிரம்மத்தின் அண்மையில் சென்று அதனுடன் ஐக்கியமாகுதல்.

புத்தரைப் பற்றி அரைகுறையாக விஷயங்களைக் கேள்விப்பட்டிருந்தான் சுபா. பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களின் துணையின்றி புத்தர் அடைந்தது பிரம்ம நிலை என்று அவன் நம்பிக்கொண்டிருந்தான். பூவுலகத்தில் இருந்தவாறே அவர் பிரம்மலோகத்தில் சஞ்சரிக்கிறார் என்றும் மற்ற வைதீகர்கள் பேசிக் கொண்டிருந்ததையும்  அவன் கேட்டிருந்தான். ஆகையால், புத்தரை சந்தித்ததும் அவன் கேட்ட முதற் கேள்வி – ‘உங்களைப் போன்று நானும் பிரம்ம லோகத்தை விரைவில் அடைவது எப்படி?”

சுபாவின் கேள்வி ஒரு சுவாரசியமான தேர்வுக்கான சந்தர்ப்பத்தை புத்தருக்கு வழங்கியது. நலம் பயக்கும் தெய்வப் பிறவிகள் வெவ்வேறு லோகங்களில் சஞ்சரிப்பதை அவர் மறுக்கவில்லையென்றாலும் ஒற்றை உச்சக்கடவுளின் (single beneficent ultimate being) இருப்பையோ அல்லது நிரந்தரமாக நிலைத்திருக்கும் சுயத்தையோ (permanently abiding self) அவர் போதிக்கவில்லை. சுயமிலாத் தன்மை ‘அனாத்மன்’ (பாலியில், அனத்தா) என்ற கலைச்சொல்லால் பௌத்த நெறிகளில் சுட்டப்படுகிறது. சுபாவின் கேள்விக்கு வைதீக மரபின் நம்பிக்கைகள் தவறான கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டவை என்று புத்தர் சுலபமாக பதிலளித்திருக்கலாம்.

சுபாவின் இறையியல் நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்காமல், அதே சமயம், அவனுக்கு பரிச்சயமான கருத்துகளைக் கொண்டே மாற்று ஆன்மீக உலகை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். (மஜ்ஜிம நிகாயம் 99.24). நான்கு லோகங்கள் இருப்பதாக சுபாவுக்குச் சொன்னார். வெளிப்புற தெய்வத்தின் அனுக்கிரகத்தால் வெளிப்புறமாக அடையக்கூடிய லோகங்களல்ல அவை ; இந்த லோகங்களை அடையும் பாதைகள் நம்முள்ளில் நம்மை இட்டுச் செல்வன ; ஏனெனில் உண்மையில் இந்த லோகங்களெல்லாம் மனதின் நிலைகளே. தியானிப்பவரின் சொந்த நோக்கங்களின் முயற்சிகளின் வாயிலாக மனச்செறிவு-சார்ந்த அகப்பரிமாற்றச் செயல்முறையின் மூலம் இந்த நிலைகளுள் திளைத்து மனதின் விடுதலையை நாம் பெற்றுவிட முடியும். வேறொரு சூழலில் இதைப் பற்றி மேலும் புத்தர் விரித்துரைக்கிறார். இந்த மனநிலைகளை கண்டறிந்து வளர்த்தெடுத்த பின், அவைகள் இயல்பாகவே வெளிப்புறமாக பிரதிபலிக்கின்றன. சுற்றியுள்ள சூழல் மட்டுமில்லாமல் எல்லா புலனறிவுள்ள உயிர்களையும் இம்மனநிலைகள் வியாபிக்கின்றன.

இந்த நான்கு மனநிலைகளில் மிகவும் அறியப்பட்டது ’மெத்தா’ (சம்ஸ்கிருதம் : ‘மைத்ரி’) ’அன்பான பரிவு’ மற்றும் ’ஆன்மீக நேயம்’ என்று இது மொழிபெயர்க்கப்படுகிறது. மெத்தா சுத்தத்தில் ( இதே தலைப்பில் இரண்டு சுத்தங்கள் உள்ளன. ‘கரணிய’ என்று தொடங்கும் மிகப்புகழ்பெற்ற சுத்தம் சுத்தநிபாதத்தில் (SN 1.8) உள்ளது – காண்க :கரணிய மெத்த சுத்தம்  – இன்னொரு மெத்த சுத்தம் அங்குத்தர நிகாயத்தில் (AN 11.15) வருவது ) புத்தர் அன்பான பரிவின் குணங்களை விவரித்துப் பேசுகிறார். அக்குணங்களை நம்முள் வருவிப்பதற்கான வழிமுறைகளையும் விரித்துரைக்கிறார். பிற மூன்று நிலைகள் ; ’முதிதா’ (சம்யுத்த நிகாயத்தில் – பொதுநலம் சார்ந்த மகிழ்ச்சி – என்ற பொருள்விளக்கம் இச்சொல்லுக்கு தரப்படுகிறது –  தன்னிலும் மற்றவர்களுக்காகவுமான மகிழ்ச்சியின் அதிர்வு); ‘கருணா’ (கருணை – தன்னில் மற்றவர்களுடைய துக்கங்களின் அதிர்வு); மற்றும் ‘உபெக்கா’ (சமஸ்கிருதம் : உபேக்‌ஷா, உள்ளச்சமநிலை – தன்னிலும் மற்றவர்களிலும் இருக்கும் அமைதியுணர்வின் அதிர்வு).

இந்த நான்கு மனநிலைகளும் எல்லா உயிர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவை என்கிற அகன்ற எண்ணத்தில் ஒன்றிணைவதால் தற்கால பௌத்த ஆசிரியர்கள் சில சமயங்களில் இந்த நான்கையும் ‘மெத்தா’ என்ற ஒற்றைச் சொல்லால் குறிக்கின்றனர்.

ஒவ்வொரு பிரம்ம விகாரத்திற்கும் ‘அண்மை எதிரி’ – ‘தூரத்து எதிரி’ எனப்படுபவை இருக்கின்றன. அண்மை எதிரி எனப்படுவது பிரம்ம விகாரத்துக்கு மிக அருகில் இருக்கும் ஒரு மனநிலை, ‘நல்ல மனநிலை’ என்று தவறாக எண்ணத்தக்க ஒரு மனநிலை. ஆனால் அது சரியான மனநிலையல்ல. தூரத்து எதிரி பிரம்ம விகாரத்துக்கு முழுதும் எதிரான மனநிலை. ’மெத்தா’ தியானத்தில் ஈடுபடும் போது எழும் உணர்வுகளை சரியாகக் கண்டறிய ‘எதிரி’ கட்டமைப்பு வசதியாக இருக்கிறது.

Brahmaviharas1

இக்கட்டுரை எழுத உதவியாய் இருந்த கட்டுரைகள் :

  1. The Golden Rule   – கரென் ஆர்ம்ஸ்ட்ராங்கின் கட்டுரையின் ஒரு பகுதியை அவருடைய அனுமதியுடன் மொழிபெயர்த்து இக்கட்டுரையில் சேர்த்திருக்கிறேன்.
  2. The Jhanas and Brahma Viharas –  by Lioyd Burton
  3. The Brahma Viharas – by DaeJa Napier
Advertisements

3 thoughts on “பிரம்ம விகாரம்

  1. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

  2. Pingback: பவத்திறமறுத்தல் 2 | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s