இரு வாகனங்கள்

பர்மாவின் முன்னாள் தலைநகரம் – பகானில் இரண்டாயிரம் புத்த கோயில்கள் இருக்கின்றன. பகான் தலைநகரமாக இருந்த போது அங்கே பதிமூன்றாயிரம் கோயில்கள் இருந்தனவாம்.

முதல் பௌத்த சபை – மகாசங்கிகள் – அபிதர்மம் – தேரவாதம் – திரிபிடகம் – மகாயானம்

இதுவரை வந்த கட்டுரைகளைப் படித்து விட்டு வாசகரொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் (முதல் வாசகர் கடிதம்!) ; ”கட்டுரைகள் சுவையாக இருக்கின்றன ; தகவற் குவியல் என்றே சொல்ல வேண்டும். எனக்கு ஒரு சந்தேகம். மகாயானம், ஹீனயானம் என்ற பௌத்த சமயத்தின் இரு பிரிவுகளுக்கிடையிலுள்ள வித்தியாசங்கள் என்ன? இப்பிரிவுகளின் பின்னணி என்ன?”

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த சில மாதங்களில் முதல் பௌத்த சபை கூட்டப்பட்டது; மகா கஸ்ஸபர் தலைமை தாங்கினார் ; உபாலி என்பவர் பிக்ஷுக்களின் நடத்தை குறித்த விதிமுறைகளை (வினய) தொகுத்துரைத்தார். புத்தரின் உறவினரும், நெருங்கிய நண்பரும், இணைபிரியா துணையாகிய ஆனந்தர் புத்தர் போதித்த அனைத்து சுத்தங்களையும் மனப்பாடமாகச் சொன்னார். பிரமிப்பூட்டும் நினைவாற்றல் மிக்கவராக அவர் இருந்திருக்க வேண்டும்! ஐநூறு பிக்‌ஷுக்கள் கலந்து கொண்ட ஏழு மாத நிகழ்வில் எல்லா சுத்தங்களும் வினயங்களும் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் வழங்கப் பெற்றன. ஒவ்வொரு பிக்‌ஷுக்களும் அவற்றை மனனம் செய்து செய்து கொண்டனர். இந்த வாய்மொழி மரபு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.

அடுத்து வந்த நூற்றாண்டுகளில் ஆதி பௌத்த மரபில் நிலவிய கருத்தொற்றுமை கலையத் தொடங்கியது. முதல் பௌத்த சபை கூடி நூறாண்டுகள் கழிந்த பின் வைசாலி நகரில் இரண்டாம் சபை கூடிய போது பாரம்பரியவாதிகளுக்கும் பரந்த கொள்கையுடையவர்களுக்கும் இடையில் பெரும் கருத்து மாறுபாடு உண்டாகி ‘மகாசங்கிகள்’ என்ற புது பிரிவு ஏற்பட்டது. பிற்காலத்தில் வட ஆசியாவெங்கும் பரவிய மகாயானத்திற்கு வித்திட்டவர்கள் மகாசங்கிகள் தாம்.

ஸ்தாவிரவாதிகள் (பாலியில் தேரவாதி ) என்று அழைக்கப்பட்ட பாரம்பரியவாதிகள் புத்தர் சொன்னதையும் தாண்டிய சிக்கலான தத்துவக் கருத்துகளை உருவாக்கத் தொடங்கினர். அவைகள் ‘அபிதர்மா’ ‘உயர் போதனைகள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. ‘அபிதர்மா’ சங்கத்தினுள் வித்தியாசங்களை மேலும் அதிகப்படுத்தியது. தனித்தனி குழுக்களாக ஸ்தாவிரவாதிகள் பிரிந்து இறுதியில் 18 வேறுபட்ட பிரிவுகள் கிளைத்து இந்தியாவெங்கும் தென்கிழக்காசியாவெங்கும் பரவின. ஆனால் அப்பிரிவுகளில் இலங்கைத் தேரவாதத்திலிருந்து பெறப்பட்ட பௌத்த மரபு ஒன்றைத் தவிர ஒன்று கூட இன்று வழக்கில் இல்லை.

நான்காவது பௌத்த சபை முதலாம் நூற்றாண்டில் இலங்கையில் கூடியது. இச்சபையில் தான் பனையோலைகளில் பாலி மொழியில் புத்தரின் சுத்தங்கள் முதன்முறையாக எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இவையே தேரவாத பௌத்தத்தின் நெறிமுறையான ”த்ரிபீடகங்கள்” ; பிக்‌ஷுக்களின் நடைமுறை விதிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ’வினயபீடகா’ எனவும், புத்தரின் உரைகள் ‘சுத்த பீடகா’ எனவும் தத்துவ விளக்கங்கள் ‘அபிதம்ம பீடகா’ எனவும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. உண்மையாகச் சொல்லப் போனால், இந்தியாவிலிருந்து மறைந்து விட்ட தேரவாத பௌத்த மரபைப் பேணிக் காத்த பெருமை இலங்கையின் பௌத்த பிக்‌ஷுக்களையே சாரும். இலங்கை மட்டுமில்லாமல் பர்மா, தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளிலும் தேரவாத பௌத்தம் பின் பற்றப்படுகிறது.

அஜந்தா குகை எண் 1 ; இடது புறம் பத்மபாணி (அவலோகிதேஸ்வரா) ; வலது புறம் : வஜ்ரபாணி

அஜந்தா குகை எண் 1 ; இடது புறம் பத்மபாணி (அவலோகிதேஸ்வரா) ; வலது புறம் : வஜ்ரபாணி

மகாசங்கிகளின் கலகம் முதலாம் நூற்றாண்டில் மகாயானத்தின் துவக்கத்துக்கு காரணமாய் அமைந்தது. துறவு மரபின் மீது அவர்களுக்கிருந்த தாராளவாத அணுகுமுறை துறவியரல்லாத சாதாரண மக்களின் பங்கு பௌத்தத்தில் அங்கீகரிக்கப்பட அனுமதித்தது. மகாயானத்துக்கு முன்னதாக “பௌத்தம் துறவு வாழ்க்கை மேற்கொண்ட பிக்‌ஷுக்களுக்கானது ; நிர்வாண நிலையை பிக்‌ஷுக்கள் மட்டுமே அடைய முடியும் ; பௌத்த நெறிமுறைகள் எல்லாம் பிக்‌ஷுக்களுக்கே” என்பதான நிலைப்பாடுகள் நிலவின. இவற்றையெல்லாம் மகாயானம் மாற்றியமைத்தது. பாமர மக்களின் எளிய தேவைகளை அது ஏற்றுக் கொண்டது. உதாரணமாக, மக்களுக்கு கடவுளரும் ஆன்மீக நாயகர்களும் தேவைப் பட்டனர். எனவே, த்ரிகாயக் கோட்பாடு (மூன்று காயங்கள்) உருவானது. புத்தர் என்பவர் நிர்வாணம் அடைந்த மனிதர் மட்டுமல்லர் ; வெவ்வேறு சுவர்க்க லோகங்களில் இருக்கும் கடவுள் அனைய புத்தர்களாகவும் அவர் இருக்கிறார். சார்ந்திருக்கும் தத்துவ விளக்கங்களைப் பொறுத்து, தர்மம் அல்லது சூன்யதா அல்லது தர்மகாயம் அல்லது புத்த-மனம் போன்றவைகள் அவரே – கிட்டத்தட்ட கிறித்துவத்தின் பரம பிதா – மகன் – புனித ஆவி கோட்பாடு போன்றது இது.

போதிசத்துவர்களின் அதி-முக்கியத்துவம் மகாயானத்தின் அடிப்படைக் கூறாகும். போதிசத்துவன் என்பவன் நிர்வாணத்தை அடைந்து விட்டவன் என்றாலும் அவன் மற்றெல்லாரும் நிர்வாண நிலையை அடையும் வரை சம்சார உலகிலேயே இருப்பது என்று முடிவு செய்துவிட்டவன். அவன் அருட்தொண்டன் மட்டுமில்லை ; மக்களின் துதிக்கும் பிரார்த்தனைக்குமுரிய ஆன்மீக நாயகனும் கூட.

புது எண்ணங்களோடு மகாயான சூத்திர வகைமை ஆகமங்கள் உருவாகின. புத்தர் போதித்தாரெனும் பாவனையில் இச்சூத்ரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன. புத்தர் சொல்ல வந்தவற்றை கேட்டவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் புரிந்து கொள்வதற்கான சமயம் வரும் வரை இச்சூத்திரங்கள் மறைபொருளாக இருந்தன என்ற குறிப்பு பெரும்பாலான மகாயான சூத்திரங்களில் வரும். இச்சூத்திரங்களுக்கு முன்னர் புத்தர் போதித்ததாக அறியப்பட்டவையெல்லாம் Expedient Means அல்லது Skilful Means என்று மகாயான பௌத்தர்கள் நம்பினார்கள். (காண்க : புத்த பூர்ணிமா ).

தேரவாதத்தை ஹீனயானம் ( ‘சிறிய வாகனம்’ ) என்று அழைக்கலானார்கள். தேரவாதர்கள் ஹீனயானம் என்ற சொற்றொடரை இழிவுச் சொல்லாகக் கருதினார்கள். ஆனால் இரு சாராருக்கும் இடையில் பெரும் மோதல் எதுவும் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. ஆரம்ப காலங்களில் இரு பிரிவைச் சார்ந்த பிக்‌ஷுக்களும் ஒரே மடாலயக் கூரையைப் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரங்கள் பல உண்டு.

சமய ஒப்பீட்டியலுக்கான முக்கியமான அறிமுகப் புத்தகம் – ஹஸ்டன் ஸ்மித் என்பவர் எழுதிய The World Religions. 1958 இல் வெளிவந்த இப்புத்தகம் இருபத்தியைந்து இலட்சம் காப்பிக்கள் விற்றிருப்பதாக ஆசிரியரின் இணையப்பக்கம் சொல்கிறது. (http://www.hustonsmith.net/book.htm) அந்தப் புத்தகத்திலிருந்து பெறப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் தேரவாத பௌத்தத்துக்கும் மகாயான பௌத்தத்துக்குமிடையிலான வேறுபாடுகளை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

தேரவாதம் மகாயானம்
தனிப்பட்ட முயற்சி  ஞானத்திற்கு வழி வகுக்கிறது ஞானத்தை நோக்கிய உழைப்பு
தனக்கான நிர்வாணம் எல்லா உயிர்களுக்குமான நிர்வாணம்
ஞானமே முதல் இலக்கு கருணையே உயர்ந்த சீலம்
தியானத்தை மையப்படுத்தும் வழிமுறைகள் ; துறவியாகவோ அல்லது கன்னியாஸ்திரியாகவோ தனிப்பட்ட அர்ப்பணிப்பை கோருவது. உலகத்தை சமூகத்தை மையமாக வைத்த சமயப்பயிற்சி வழிமுறைகள்
ஒரு தத்துவமாக, கொள்கையாக பின்பற்றப்படுவது உயர் பிறவிகளின் ஒப்பீட்டுடன் ஒரு மதமாகப் பின்பற்றப்படுவது
ஆரம்ப ஆகங்கள் பாலி மொழியில் ஆரம்ப ஆகமங்கள் சமஸ்கிருதத்தில்

நேரடியான தனிப்பட்ட அனுபவத்துடன் காரணம் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை வலியுறுத்தியது தேரவாதம். இவ்வணுகுமுறையை குறுகலானது என்று சொல்லி காரண, பகுப்பாய்வுடன் ஆன்மீக உணர்ச்சியையும் சேர்த்துக் கொண்டது மகாயானம். போதிசத்துவரைப் போன்ற மெய்ஞ்ஞானப் பிறவிகளை மனக்கண் முன்னால் கொணர்ந்து தியானம் செய்தல் மற்றும் அப்பிறவிகளை பக்திப்பொருளாக எண்ணுதல் போன்ற வழக்கங்களை ஏற்றுக் கொண்டது மகாயானம்.

ஆசார ரீதியாக, தேரவாத பௌத்தர்கள் புத்தரை வணங்குவதில்லை ; ஆனால், அவருடைய நினைவைப் போற்றுவார்கள். உதாரணமாக, ஸ்தூபங்களை இடமிருந்து வலமாக சுற்றி வருதல் ; சில ஸ்தூபங்களில் புத்தர் வாழ்ந்த காலத்தைய நினைவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றைப் போற்றுவார்கள். மகாயானத்தைப் பின்பற்றும் நாடுகளில், கோயில்களிலும் வீடுகளிலும் புத்தரின் திருவுருவங்கள் பக்திப்பொருளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். இது ஒரு பொதுமைப்படுத்தல் தான் ; எல்லா பௌத்த நாடுகளிலும் பக்தி செலுத்தும் வழிமுறைகளில் சிற்சில வேறுபாடுகள் காணப்படும்.

உலகின் சமயங்கள் எல்லாவற்றிலும், மூலக் கொள்கையை தமக்கே புரிந்த வகையில் தனித்தனியாக பொருள்விளக்கம் செய்துகொள்ளும் குழுக்கள் இருக்கவே செய்கின்றன. கிறிஸ்துவத்தை எடுத்துக் கொண்டால் கேதலிக் மற்றும் ப்ரோடஸ்டண்ட் என்ற இரு பிரிவுகள் உண்டு. ப்ரோடஸ்டண்ட்டில் செவென்த் டே அட்வெண்டிஸ்ட், மர்மோன்கள், ஆங்லிகன்கள் என்று பல உட்பிரிவுகள் உண்டு. மற்ற சமயங்களைப் பின்பற்றுவோர் எல்லாம் தத்தம் உட்பிரிவின் சம்பிரதாயங்களை இன்னமும் இறுக்கப் பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள், ஆனால் பௌத்தத்தைப் பின்பற்றும் நவீன பௌத்தர்கள் யாரும் இப்பிரிவின் பரிணாமத்தை அறிந்திருப்பதுமில்லை ; ஒரு பௌத்தனாய் இருப்பதற்கு அது முக்கியமும் இல்லை.

Advertisements

5 thoughts on “இரு வாகனங்கள்

 1. Rakesh KanyaKumari

  Sir, very good blog…which tried to explain and explore more about Buddhism…am in hunt for this type page for last two years.. ..thanks for your work… at the same time pls try to write in little bit simple words. You are trying to write huge msg in single para. ..it may not help for the new comers in this page as well as for the guy’s who try to understand the Buddhism from basic… even though as a low knowledge person about Buddhism I am trying my level best to understand your each lines…sometime I also can’t understand some flow and lines… god bless you sir.. ..

  Reply
 2. gopi

  அருமையான பதிவு தொடர்ந்து எழுதுங்கள் பின் புத்தகமாக கூட வரலாம்.பௌத்தத்தை பற்றி தெரியாது இந்த கட்டுரைகள் மூலமாக அறிந்து கொள்கிறேன் நன்றி.

  Reply
 3. Theetharappan

  வஜ்ராயனம் பற்றி குறிப்புகள் தருக, தொடர்ந்து வாசித்து வருகிறேன்,புத்த ஜாத கதைகளையும் பற்றிய குறிப்புகள் தருக

  Reply
 4. Pingback: லோட்டஸ் சூத்ரா – ஓர் அறிமுகம் | இலைகள், மலர்கள், மரங்கள்

 5. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s