முன்செல்லும் நம்பிக்கை

பௌத்தத்தில் பக்தி – தியான வகைமைகள் – புத்தானுஸ்ஸதி – மாத்ர்சேதர் – சதபஞ்சஸத்கா

ஒரு பௌத்த தெய்வம், காப்பிய நிகழ்வு, தத்துவ ஞானியொருவர் பற்றிய அறிமுகம், பௌத்தம் தழைக்க ஏதுவாயிருந்த மன்னர் எழுப்பிய நினைவுச்சின்னங்கள் – ஐந்து வாரங்களாக எழுதியாயிற்று. இந்த வாரம் என்ன எழுதுவது என்ற குழப்பம்! குழப்பம் என்பதை விட யாரேனும் இதை வாசிக்கின்றனரா? பயனுள்ள எதையும் இக்கட்டுரைகள் பேசுகின்றனவா? என்ற ஐயங்கள்! நெருங்கிய நண்பர்களிடம் வெட்கத்தை விட்டு ஒப்பீனியன் கேட்டும் ஒன்றும் பெயரவில்லை. வழக்கமாக முகநூலில் கிடைக்கும் ஒரு சில விருப்பக் குறிகளும் கிடைக்கவில்லை. காலத்துக்கு ஒவ்வா, உலர்ந்த விஷயங்களைப் பேசுவதால் என்ன பயன் கிட்டப்போகிறது என்ற எண்ணம் மேலிட விரக்தியில் வெறுமையுற்றது மனம். மனதில் நிரம்பிய நம்பிக்கையின்மையை ஓட்டுவதற்கு ஏதாவதொன்றில் பிடிப்பு ஏற்படுவது அவசியமாகிறது. வாட்ஸ்-அப்பில் நிகழ்ந்ததோர் உரையாடலில் புத்தர் வாழ்க்கை வரலாற்று நூலொன்றை பரிந்துரைக்குமாறு ஒரு நண்பர் கேட்டுக் கொள்ளவும் சிறு பொறி கிடைத்தது. இணையத்தில் இருந்து “புத்தசரிதத்தின்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை சிறிது நேரம் படித்தேன். E H Johnstone அவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த நூல்.

+++++

கடுமையான யோகப் பயிற்சிகளினால் உணவின்றி உடல் ஒட்டி எலும்புகள் வெளித்தெரியுமாறு கிட்டத்தட்ட இறந்து போகும் நிலையை அடைந்த சித்தார்த்தன் மாடு மேய்க்கும் பெண்ணொருத்தி கொடுத்த பால் பொங்கலை சாப்பிட்டு புத்துயிர் பெறுகிறான். சித்தார்த்தனுடன் சேர்ந்து நிர்வாணத்தை எட்டும் முயற்சியில் இருந்த ஐந்து துறவி நண்பர்களும் அவனை விட்டு நீங்கிச் சென்று விடுகின்றனர். உணவுண்டதால் சித்தார்த்தன் துறவு முயற்சியை கை விட்டு விட்டான் என்று அவர்கள் எண்ணினார்கள்.

பனிரெண்டாம் அத்தியாயத்தின் 115ஆம் பதத்தில் அசுவகோசர் இவ்வாறு சொல்கிறார் :

உறுதியான தீர்மானமே ஒற்றை துணையென்று அறிவொளி ஒன்றை மட்டும் மனதில் கொண்டு பச்சைப் புல் பாய் விரித்த அரச மரத்தடியில் அமர்ந்தார்” (புத்த சரிதம்)

+++++

தேரவாதத்தின் நிகாயங்களும், மகாயானத்தின் எண்ணற்ற சூத்திரங்களும் உபதேசங்களையும் கோட்பாடுகளையும் விரித்துரைக்கின்றன. இரு பிரிவுகளுக்கும் தனித்தனியான வினய நூல்கள் இருக்கின்றன. சூன்யத்தில் மனங்குவிந்த தியான முறைகளும், சீலப் பயிற்சிகளும், மனக்கவனப் பயிற்சிகளும் (mindfulness practices), மந்திர கோஷங்களும் என்று ஆன்மீகப் பயணம் செய்யும் பௌத்தர்கள் ’பக்தியை’ கைக் கொள்ள பௌத்தத்தில் வழி இருக்கிறதா? லௌகீக இலக்குகளை கைவிட்ட பிக்‌ஷுக்கள் ஏன் புத்தரைத் துதி பண்ண வேண்டும்?

நாகார்ஜுன பிக்‌ஷு சொல்கிறார் :-

”நம்பிக்கையினூடாகவே ஒருவன் தர்மத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கிறான். ஆயினும் புரிதலினூடாகவே ஒருவன் உண்மையான அறிதலை அடைகிறான். இரண்டினுள் புரிதல் முதன்மையானது. எனினும் நம்பிக்கை முன் செல்வது.” (இரத்னாவளி 5)

+++++

புத்தஸ்துதிகள் பெரும்பான்மையான புத்த நூல்களின் முதல் அங்கத்தில் வருவதுண்டு. ஸ்தோத்திரங்கள் நம்பிக்கையை வளர்ப்பதோடல்லாமல் தியானத்திலும் உதவி புரிகிறது. மனங்குவிப்பு தியானத்தில் (Concentration Meditation) எண்ணங்கள் அமைதிப்படுத்தப்படுகின்றன ; மனக்கவன தியானத்தில் (Mindfulness Meditation) பற்றிலாமல் எண்ணங்கள் நோக்கப் படுகின்றன ; நினைவு கூரப்படும் தியானத்தில் (recollection meditation) ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் மனங்குவிக்கப்பட்டு பின்னர் கவனத்துடன் சீராக அக்கருப்பொருள் பற்றி சிந்திக்கப்படுகிறது. நம் மனதில் பிரதானமாக இருக்கும் எந்த சிந்தனையும் நம் ஆளுமை மீதும் நடத்தை மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். வேண்டுமென்றே, உணர்ச்சி பூர்வமாக நேர்மறை எண்ணங்களை நாம் சிந்திக்கும் போது, காலப்போக்கில் இயற்கையாகவே அத்தகைய எண்ணங்கள் நம்முள் எழுவதை நாம் காண முடியும். இது அவ்வெண்ணங்களுக்குகந்த நற்செயல்களையும் துளிர்க்க வைக்கும். புத்தரை நினைவு கூரும் தியானப் பயிற்சியில் ஈடுபடுவோர் அமைதியுடன் அமர்ந்து மனதை ஏற்புத் திறமுடையதாக்கி புத்தரின் குணங்களையும் செயல்களையும் பற்றி சிந்திப்பர். புத்தரை நினைவு கூரும் தியானத்தை தேரவாதப் பௌத்தர்கள் பாலி மொழியில் ‘புத்தானுஸ்ஸதி’ (Buddhànussati) என்பார்கள். இதற்கிணையான சமஸ்கிருதக் கலைச்சொல் – ‘புத்தானுஸ்ம்ரிதி’. பயிற்சி சீராகும் போது, ஆன்மீகத்தின் முக்கியமான இரு அம்சங்களாகிய – பக்தியும் நம்பிக்கையும் வலுப்பெறுகின்றன ; பௌத்த சாதனாவின் ஆற்றலும் உற்சாகமும் கூடுகின்றன. புத்தரை நினைவு கூரும் தியானத்தில் புத்த ஸ்தோத்திரங்களை வாசித்தல் பயனுள்ள சாதனமாக இருக்கும்.

+++++

முதலாம் நூற்றாண்டில் பிறந்து ஆரிய தேவர் என்னும் பௌத்த ஞானியின் ஊக்குவிப்பில் பௌத்த சம்பிரதாயத்தை தழுவிய கவிஞர் மாத்ர்சேதர் (Matrceta என்று ஆங்கில கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறது. இப்பெயரின் சரியான உச்சரிப்பு என்ன என்று தெரியவில்லை. பெயரை அப்படியே transliterate செய்திருக்கிறேன். சரியான உச்சரிப்பை யாரேனும் அறியத் தந்தார்களென்றால் பிழையைத் திருத்த சித்தமாக இருக்கிறேன்.) அசுவகோசரைப் போன்று இவரும் கனிஷ்க மன்னரின் காலத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர் இயற்றிய ’சதபஞ்சஸ்த்கா’ (Satapañcasatka) என்னும் புத்த ஸ்தோத்ரம் மிகப் பிரசித்தமானது. ஏழாம் நூற்றாண்டில் இந்திய விஜயம் மேற்கொண்ட சீன யாத்திரிகர் – ஹியூண்ட்சாங் – இக்கவிஞரை மிகவும் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

“இவரின் அழகான பாடல்கள் தேவவனத்தில் பூத்த பூக்கள் போன்றவை ; இவர் சித்தரித்த உயர் நெறிகள் மலைகளின் சிகரங்களுடன் போட்டியிடுகின்றன. இலக்கியத்தின் தந்தை எனக் கருதி இந்தியாவில் உள்ளவர்கள் இவரின் பாணியைப் பின் பற்றியே பாடல் புனைகிறார்கள். போதிசத்துவர்களைப் போன்ற பெரு மனிதர்களாகிய அசாங்கரும் வசுபந்துவும் (இவர்களைப் பற்றி வரும் கட்டுரைகளில் எழுதுவேன்) இவரை மிகவும் போற்றுகிறார்கள். இந்தியா முழுமையும் பிக்‌ஷுவாக விழைவோர் பத்து கட்டளைகளை (ten precepts) மனனம் செய்து முடித்தவுடன் மாத்ர்சேதரின் பாடல்கள் அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன”

’சதபஞ்சஸ்த்கா’ பௌத்தத்தின் எல்லாப் பிரிவுகளுக்கிடையிலும் மிகப் பிரசித்தமாயிருந்தது. பல்வேறு மொழிகளில் இச்செய்யுட்கள் மொழி மாற்றம் கண்டிருக்கின்றன. ”இந்தியாவுக்கு வெளியே பௌத்த சமயம் பரவியதில் இந்த ஸ்தோத்திரம் முக்கிய பங்கு வகித்தது” என்று தாரநாதர் ( கி.பி 1575 – 1634) எனும் புகழ் பெற்ற திபெத்திய வரலாற்றாசிரியர் சொல்கிறார்.

+++++

எவ்விதத்திலும் ஒரு குறையும் அவரிடம் காணப்படுதில்லை
எல்லா விதத்திலும் அனைத்து சீலங்களும் அவருள் அடக்கம்

சரணென்று அவரை அடைதல்
அவர் கீர்த்தியைப் பாடுதல்
அவருக்கு மரியாதை செய்தல்
அவரின் தர்மத்தை பின்பற்றுதல்
புரிந்துணர்வுடையோருக்கு தகுந்த செயல்கள்

ஒரே காப்பாளர்
அவர் குறைகள் மிச்சமின்றி நசிந்தன
அனைத்தும் அறிந்த ஒருவர்
அவரின் சீலங்கள் தோல்வியின்றி இருந்தன

மிகக் குரூரமான மனிதனும்
மகானின் எண்ணங்கள், சொற்கள், செயல்களில்
குற்றம் காண இயலாது

அழியக்கூடியதும் விரைவில் மாற்றமடையக் கூடியதுமான
என் குரலை ஒரு நற்பயனுக்கு உட்படுத்தாதிருப்பது எங்ஙனம்?

முனிவரின் குணங்கள்
மனிதக் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டதென்பதை அறிவேன்
எனினும் அவற்றின் ஒரு பகுதியை எடுத்துரைப்பேன்
எனது மகிழ்ச்சிக்காகவேனும்

சுயவளர்ச்சி பெற்றவரே! உமக்கு வந்தனங்கள்
உம்முடைய நற்செயல்கள் அளவற்றவை; அற்புதமானவை
உமது சீலங்கள் எண்ணற்றவை ; வரையறுக்கத்தகா பிரமிப்பூட்டுபவை

அவற்றின் எண்ணிக்கை? அவைகள் எண்ணிலடங்கா
அவற்றின் இயல்பு? சொற்கள் தோற்றுப் போகும்
ஆயினும், அவற்றைப் பற்றி பேசுதல் பெரும் நன்மையளிக்கும்
ஆகையால் அவற்றை அவசியம் பேசுவேன்

+++++

buddha-pada

Advertisements

6 thoughts on “முன்செல்லும் நம்பிக்கை

 1. Chitra

  உங்கள் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் விலை மதிப்பற்ற பணியை இந்த பரந்த உலகில் என்னைப் போன்ற ஓரிரண்டு உள்ளங்களாவது உணராமலா போகும். நான் மனத் தளர்ச்சி அடையும் நேரமெல்லாம் உங்கள் எழுதுக்களை நாடி வருவேன். புத்த பெருமானின் கருணை உங்கள் மூலமாக எனக்கு ஆறுதலளித்து அறிவொளி கூட்டும். எண்ணிறந்த அறிவுச் சுடர்கள் இப் பாரெங்கும், யாருடைய அபிப்பிராயங்களையும், ஏற்பையும் எதிர்பாராமல் ஞான விளக்குகளின் வரிசையை தொடரச் செய்கின்றன.

  எங்கோ காட்டில் எவருமறியாமல் பெயும் மழை, எங்கோவுள்ள சமவெளியை மேம்படுத்தவே செய்கிறது. அதுவே இயற்கை நீதி. உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டுமா என்ன. புத்தம் சரணம்.

  Reply
  1. hemgan Post author

   உற்சாகப்படுத்திய வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றி. மண்ணில் விழுந்த ஒவ்வொரு மழைத்துளியும் வருங்கால வனங்களுக்கான காப்பீடு.

   Reply
 2. Pingback: ஒரு தாமத பகிர்வு | புத்தம் புதிய காப்பி

 3. Pingback: சுகாவதி | இலைகள், மலர்கள், மரங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s